இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுடைய தோழர்களின் பிரபலமான நூற்களிலிருந்து இத்தகைய சம்பவங்களை காழி இயாள் தமது நூலில் தொகுத்துத் தந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் பலவீனமான பற்பல அறிவிப்பாளர்களால் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தையும் தம் நூலில் எடுத்துக் கூறுகிறார்கள். அது வருமாறு: ‘மஸ்ஜிதுன் நபவியில் கலீபா அபூஜஃபருல் மன்ஸூர் அவர்கள் இமாம் மாலிக் அவர்களுடன் வாதிட்டுக் கொண்டிருந்தார்களாம். அந்நேரம் கலீபாவிடம் இமாம் அவர்கள் கூறினார்களாம்.
‘அமீருல் மூமினீனே! இப்புனித பள்ளிவாசலில் உமது குரலை உயர்த்தாதீர்! குரல் உயர்த்திப் பேசும் விஷயத்தில் இறைவன் சிலருக்கு மரியாதையைக் கற்றுக் கொடுத்திருக்கிறான் என்று இறைவன் கூறியிருக்கிறானல்லவா? (49:2). மேலும் இது விஷயத்தில் மற்றும் சிலரை அவன் பாராட்டியும் இருக்கிறான். “எவர் அல்லாஹ்வுடைய தூதர் முன்பாக (கண்ணியத்திற்காக) தம் சப்தத்தைத் தாழ்த்திக் கொள்கிறாரோ அவருக்கு மகத்தான கூலியுமுண்டு” (49:3) என்று கூறியுள்ளான். மற்றும் சில மக்களை இறைவன் இழிவு படுத்திக் கூறும்போது “நிச்சயமாக நபியே! எவர்கள் உம் அறைகளுக்குப் பின்புறமாக நின்று கொண்டு உரக்கக்கூவி உம்மை அழைக்கிறார்களோ அவர்களில் பெரும்பாலோர் அறிவில்லாதவர்களே!” (49:4) என்று இறைவன் கூறினான்.
அதன் பின்னர் இமாம் அவர்கள் ‘நபியவர்கள் மரணமடைந்த பின்னரும் கூட உயிருடன் வாழ்ந்திருப்பதைப் போன்று மதிப்புக்குரியவர்களாகவே இருக்கிறார்கள்’ என்று விளக்கினார்களாம். இதைச் செவியுற்ற கலீபா அபூஜஃபர் அல் மன்ஸூர் கொஞ்சம் அடங்கி விட்டார். பிறகு கலீபா ‘இமாமவர்களே! நான் பிரார்த்தனையின் போது கிப்லாவை முன்னோக்கி நிற்கவா? அல்லது நபிகளைப் பார்த்து முகம் திருப்பவா? என்று கேட்டார். இதற்கு நபிகளை விட்டு உமது முகத்தைத் திருப்ப என்ன நேர்ந்து விட்டது என்று இமாம் அவர்கள் அவரிடம் வினவினார்களாம். அதன் பிறகு இமாம் அவர்கள் இந்த நபிதான் மறுமைநாள் வரையிலும் உம்முடையவும், உம் பிதா ஆதமுடையவும் வஸீலாவாக இருக்கிறார்கள். எனவே இத்தகைய நபியை நோக்கி உமது முகத்தைத் திருப்புவீராக! அவர்களைக் கொண்டு சிபாரிசும் வேண்டுவீராக! அல்லாஹ் உமது சிபாரிசை ஏற்றுக் கொள்வான் என்று கூறிவிட்டு இந்த இறைவசனத்தை ஓதினார்களாம். “அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்தில் உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி தூதராகிய நீரும் பாவமன்னிப்புக் கோரியிருந்தால் அன்புடையவனாகவும், மன்னிப்புடையவனாகவுமே அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:24)
இது பலவீனமான அறிவிப்பாளர்களால் எடுத்துக் கூறப்பட்ட சம்பவமாகும். இச்சம்பவம் துண்டிக்கப்பட்ட சம்பவம் (முன்கதிஃ) என்று விளங்குதல் வேண்டும். இதை அறிவிப்பவர்களின் பட்டியலில் முஹம்மத் பின் ஹுமைதுர் ராஸி என்பவரும் இடம் பெற்றிருக்கிறார். இவர் இமாம் மாலிக்கை கலீபா அபூஜஃபர் அல் மன்ஸூரின் காலத்தில் சந்தித்திருக்க முடியாது. ஏனெனில் கலீபா அபூஜஃபர் ஹிஜ்ரி 158ல் மக்காவில் காலமானார். இமாம் மாலிக் அவர்களோ ஹிஜ்ரி 179ல் காலமானார். ஆனால் மேற்கூறப்பட்ட முஹம்மத் பின் ஹுமைதுர் ராஸி என்பவர் ஹிஜ்ரி 248ல் தான் மரணமடைந்திருக்கிறார்.
அத்துடன் முஹம்மத் பின் ஹுமைதுர் ராஸி என்பவர் கல்வி தேடுவதற்காக ஊரைவிட்டுக் கிளம்பியதேயில்லை. வயதேறிய காலத்தில் தான் கல்விக்காகத் தன் தந்தையாருடன் புறப்பட்டிருக்கிறார். ஹதீஸ் தொகுப்பாளர்கள் பலர் இவரை மிகப் பலவீனமான அறிவிப்பாளராக மதிக்கிறார்கள். அபூஸர்ஆ, இப்னு வாரா என்ற இருவரும் இந்த முஹம்மத் பின் ஹுமைதைப் பொய்யர் என கூறியுள்ளார்கள். மற்றும் ஹதீஸ் அறிஞர்கள் பலரும் இவரின் பற்பல தவறுகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஸாலிஹ் பின் முஹம்மத் அல் அஸத் என்பவர் இவரைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘இவரைவிட துணிச்சலாக அல்லாஹ்வின் மீது பொய் சொல்லக்கூடியவரை நான் கண்டதில்லை’ என்றார்கள். இவரைப்பற்றி யஃகூப் பின் ஷபீபா என்பவர் ‘ஏராளமான வெறுக்கத்தக்க ஹதீஸ்களைச் சொல்கிறவர்’ என்றார்கள். நஸாயீ இவரைப்பற்றி நம்பிக்கைக்குரியவர் அல்லர் என்றார்கள். இப்னு ஹிப்பான் இவரைப்பற்றி புரட்டியும், திருப்பியும் ஹதீஸ்களைக் கூறுவதில் தலைசிறந்தவர் என்றார்கள்.*
மேலும் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்கள் பட்டியலில் பற்பல பலவீனமானவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இமாம் மாலிக் (ரஹ்) அவர்களைப் பற்றிக் கூறுகின்ற இமாம் அவர்களின் பற்பல இதர தோழர்களில் எவரும் இந்தச் சம்பவத்தைச் சொன்னதில்லை. முஹம்மத் பின் ஹுமைத் வழியாகக் கிடைக்கப்பெற்ற இந்த சம்பவத்தைக் கொண்டு இமாம் அவர்களின் அபிப்பிராயத்தை நிரூபித்துக் காட்ட முடியாது என்று அவர்களுடைய சக நண்பர்களே கூறியிருக்கிறார்கள். அத்துடன் இச்சம்பவத்தில் இமாம் அவர்களின் மத்ஹபுக்கு முரண்பட்ட பல விதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. அது மட்டுமின்றி இந்த ஹதீஸின் நேருரையில் வந்திருக்கின்ற ‘நபி (ஸல்) அவர்கள் மறுமைநாள் வரையிலும் உம்முடையவும், பிதா ஆதம் (அலை) அவர்களுடையவும் வஸீலாவாக இருக்கிறார்கள்’ என்ற கருத்து நபிகளைக் கொண்டு ஆதமும், அவரின் சந்ததிகளும் மறுமைநாளில் வஸீலாத் தேடுவார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. மறுமையில் நபியின் சிபாரிசைக் கொண்டும் வஸீலாத் தேடுவார்கள் என்பதையே இந்த ஹதீஸ் விளக்குகிறது.
எனவே இந்த ஹதீஸின் நேருரையிலிருந்து நபிகள் இறந்த பின்னர் அவர்களிடம் சென்று ஷபாஅத் கேட்கலாம் என்பதை விளங்க முடியாது. நபியவர்களின் ஷபாஅத்தை ஆதமும், சந்ததிகளும் மறுமை நாளில் வேண்டி நிற்பார்கள் என்பது உண்மை என ஸஹீஹான ஹதீஸில் வருகிறது.
மக்கள் எல்லோரும் ஆதமிடம் சென்று தமக்காக அல்லாஹ்விடம் ஷபாஅத்துச் செய்ய கோரும்போது ஆதம் (அலை) அவர்கள் நபி நூஹ் (அலை) அவர்களிடம் சென்று வேண்டும்படி கூறுவார்கள். நூஹ் (அலை) அவர்கள் நபி இப்ராஹீமைச் சுட்டிக் காட்டுவார்கள். இப்ராஹீம் நபியவர்கள் நபி மூஸாவையும், நபி மூஸா அவர்கள் நபி ஈஸாவையும் நோக்கிச் செல்லுங்கள் என்று மக்களை பணிப்பார்கள். இறுதியாக நபி ஈஸா அவர்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கிப் புறப்படுங்கள் என்று மக்களை அனுப்புவார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஆதமுடைய சந்ததிகளுக்கெல்லாம் நான் தலைவராக இருக்கிறேன். இதனால் எனக்குப் பெருமையில்லை. ஆதமும், அவருக்குப் பின்னர் தோன்றிய அனைவரும் மறுமையில் எனது கொடியின் கீழ் ஒதுங்கி நிற்பார்கள். இதனால் எனக்கு ஒரு பெருமையுமில்லை’.
மேற்கூறப்பட்ட சம்பவத்தின் நேருரையில் முரணான பல கருத்துகள் இல்லையென்றாலும் இமாம் மாலிக்குடைய மத்ஹபுக்கு முரணான சில சட்டங்கள் அதிலே காண முடிகிறது. எனவே இச்சம்பவத்தை இமாம் அவர்கள் கூறியிருக்க முடியாது. கலீபா அபூஜஃபருல் மன்ஸூர் இமாமை நோக்கி துஆவின்போது கிப்லாவை முன்னோக்கவா அல்லது ரஸூலை முன்னோக்கி நின்று பிரார்த்திக்கவா என கேட்டதற்கு நபியை விட்டும் உன் முகத்தைத் திருப்பி விடுவதற்கு என்ன வந்து விட்டது என்று இமாம் அவர்கள் கேட்டதாகக் கூறப்படுவதிலிருந்தே அது இமாம் மாலிக்குடையவும் மற்றும் அனைத்து மத்ஹபின் இமாம்களுடையவும், ஸலபுஸ்ஸாலிஹீன்கள், தாபியீன்கள் அனைவரின் கொள்கைகளுக்கும், அபிப்பிராயங்களுக்கும் முரண் பட்டிருக்கிறது.
மஸ்ஜிதுன் நபவியைச் சந்திக்க முதன் முதலில் ஒருவர் சென்றால் தொழுது விட்டுப்பிறகு நபிகள் நாயகத்தின் மீது ஸலாம் கூறித் தமக்காகப் பிரார்த்திக்க விரும்புகிறவன் கிப்லாவை நோக்கி நின்று பிரார்த்திக்க வேண்டும். தமக்காகப் பிரார்த்திக்கும் வேளையில் நபிகளின் கப்றை நோக்கி நிற்க கூடாது. நபிகளுக்காகப் பிரார்த்தித்து அவர்களுக்காக ஸலவாத்துக் கூறும் வேளையில் மட்டுமே நபியின் கப்றை நோக்கி நிற்க வேண்டும். இது அனைத்து அறிஞர்களின் அபிப்பிராயமாகும். இதுதான் இமாம் மாலிக்கின் ஒரு அபிப்பிராயமும் கூட. இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) போன்றவர்களும் இவ்வாறே அபிப்பிராயப்படுகிறார்கள். ஆனால் இமாம் அபூ ஹனீபாவின் தோழர்கள் நபிகளின் மீது ஸலாம் கூறுகின்ற நேரத்தில் கூட அவர்களின் கப்றை முன்னோக்கி நிற்பதைக் காட்டிலும் கிப்லாவைத்தான் முன்னோக்கி நிற்க வேண்டும் என்று அபிப்பிராயப்படுகிறார்கள். நபிகளின் அறையை இடது பக்கமாக ஆக்கியவண்ணம் ஸலாம் கூற வேண்டும் என்றும் இமாம் அபூ ஹனீபாவின் தோழர்களில் சிலர் அபிப்பிராயப் படுகின்றனர். அவர்களின் அறையை பின்புறமாக ஆக்கியவண்ணம் ஸலாம் கூற வேண்டும் என்று அபிப்பிராயப்படும் அறிஞர்களும் இவர்களில் உண்டு.
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் நீண்ட நேரம் மனிதன் கப்றருகில் நின்று கொண்டிருப்பதை வெறுத்திருக்கிறார்கள். அறிஞர் காழி இயாள் ‘மப்ஸூத்’ என்ற தமது நூலில் இமாம் மாலிக்கைப் பற்றி ‘மனிதன் நபிகளின் கப்றருகில் நின்று கொண்டிருப்பதை அவர்கள் விரும்பவில்லை’ என்றும், நபிகளின் மீது ஸலாம் கூறிவிட்டுச் சென்று விட வேண்டும் என்றும் கூறியிருப்பதாக அறிவித்துள்ளார்கள். மேலும் அறிஞர் நாபிஃ அவர்கள் கூறியதாக காழி இயாள் கீழ்வருமாறு கூறுகிறார்கள். கலீபா உமரின் மகன் நபியின் கப்றருகில் வந்து ஸலாம் சொல்வதை நூற்றுக்கும் அதிகமான விடுத்தம் நான் கண்டிருக்கிறேன். அதன் பின்னர் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்கள் மீதும் தம் தந்தை உமர் மீதும் ஸலாம் கூறிவிட்டுத் திரும்புவார்கள். இந்நேரம் அவர்கள் ‘அஸ்ஸலாமு அலன் நபீ, அஸ்ஸலாமு அலா அபீபக்ரின், அஸ்ஸலாமு அலாஅபீ’ (நபிக்கும், அபூபக்கர் (ரலி) அவர்களுக்கும், என் தந்தைக்கும் ஸலாம் உண்டாவதாக!) என்று கூறுவார்கள். இப்படியாக ஒருநாள் நபியவர்கள் உட்காருகின்ற மிம்பரில் தம் கரத்தை வைத்துப் பிறகு அக்கரத்தை முகத்தில் ஒத்திக் கொண்டார்கள். இப்னு அபீ கஸீத், கஃனபீ போன்றவர்களைப் பற்றி காழி இயாள் அறிவிக்கின்ற மற்றொரு குறிப்பில் நபித்தோழர்கள் பள்ளிவாசலை விட்டு வெளியேறுகின்ற நேரத்தில் கப்றுக்கு எதிரிலுள்ள மிம்பரின் மீது பதிக்கப் பட்டிருக்கின்ற மாதுளம்பழ வடிவத்திலான உருளையைத் தம் வலக்கரத்தால் தொட்டுப்பார்த்து விட்டு பிறகு அல்லாஹ்விடம் கிப்லாவை முன்னோக்கி நின்று பிரார்த்திப்பார்கள் என்று கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் நபியவர்களின் கப்றருகில் நின்று நபியவர்களுக்கும், அபூபக்கர் ஸித்தீக், உமர் (ரலி) ஆகியோருக்கும் ஸலாம் சொல்வதை இமாம் மாலிக் அவர்கள் முவத்தா என்னும் நூலில் குறித்துள்ளதை அறிஞர் காழி இயாள் கூறுகிறார். அதே சம்பவத்தை இப்னுல் காஸிம் அல் கஃனபீ போன்ற வேறு சில அறிவிப்பாளர்கள் ‘உமருடைய மகன் அப்துல்லாஹ், அபூபக்கர், உமர் (ரலி) இவ்விருவருக்காகவும் பிரார்த்தனை செய்து விட்டுத் திரும்புவார்கள் என்று சொல்லியுள்ளார்கள்.
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் மற்றுமொரு இடத்தில் கூறுகிறார்கள்: ‘நபிகளின் மீது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு என்று ஸலாம் கூறிய பின்னர் அபூபக்கர், உமர் (ரலி) இவர்கள் மீதும் ஸலாம் கூற வேண்டும். அதன் பின்னர் இமாம் மாலிக் அவர்கள் விளக்கம் தருகிறார்கள். நபிகளின் மீது ஸலாம் கூறி அவர்கள் மீது பிரார்த்தித்தால் தமது முகத்தை கப்றை நோக்கி திருப்பிச் சற்று நேரம் கப்றோடு நெருங்கி நின்று கப்றைத் தொடாமல் பிரார்த்திக்க வேண்டும். மதீனாவாசிகளாக இருப்பின் அவர்கள் மஸ்ஜிதுன் நபவியை விட்டு வெளியேறும் போதெல்லாம் நபியவர்களின் கப்றருகில் நின்று விட்டு போக வேண்டும் என்பதில்லை. வெளியூர்களிலிருந்து வருகிறவர்கள் மட்டுமே இச்சட்டத்திற்கு உட்படுவார்கள். பிரயாணமாகிச் செல்கிறவனும், பிரயாணத்திலிருந்து திரும்புகிறவனும் நபியவர்களின் கப்றருகில் கொஞ்சநேரம் நின்று அவர்கள் மீது ஸலவாத்துகள் கூறி அபூபக்கர், உமர் (ரலி) அனைவருக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்வதும் பரவாயில்லை.
ஒருமுறை இமாம் மாலிக்கிடம் சொல்லப்பட்டது. பிரயாணம் செய்ய முடியாது மதீனாவிலேயே தங்கியிருப்பவர்கள் நபியவர்களின் கப்றருகில் நின்று ஒவ்வொரு நாளும் ஸலாம் சொல்கிறார்கள். சில வெள்ளிக்கிழமை ஜும்ஆ தினத்திலும் அவர்கள் மீது ஸலாம் கூறி நீண்ட நேரம் துஆச் செய்துக் கொண்டே இருப்பார்கள். இதைக் கேட்ட இமாம் மாலிக் (ரஹ்) மதீனாவிலுள்ள நமது அறிஞர்கள் (புகஹாக்கள்) வழியாக இதை நான் கேட்கவேயில்லை என்று கூறி விட்டு நம் சமூகத்தின் முன்னோர்கள் என்னென்ன காரணங்களினால் அபிமானிகளாக வாழ்ந்தார்களோ அக்காரணங்களை வைத்துத்தான் பின்னோர்கள் அபிமானிகளாக முடியும். எனவே நம் சமூகத்தின் முன்னோர்கள் (ஸஹாபாக்கள்) அதற்குப் பிறகு தோன்றியவர்கள் (தாபியீன்கள்) இப்படிச் செய்தார்கள் என்று எனக்குத் தகவல் கிடைக்கவில்லை. பிரயாணத்திலிருந்து வருகிறவர்கள், அதை நாடுகிறவர்கள் இவர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பல விடுத்தம் நீண்ட நேரம் நபிகளின் கப்றருகில் நின்று பிரார்த்திக்க அனுமதியில்லை என்றார்கள். அபுல்வலீதுல்பாஜீ ‘இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் உள்ளூரைச் சார்ந்த மதீனாவாசிகளுக்கும், வெளியூர்க்காரர்களுக்கும் நபிகளை ஸியாரத் செய்யும் விஷயத்தில் மாறுபட்ட சட்டங்களால் பணித்துள்ளார்கள். இதற்குக் காரணம் வெளியூர்க்காரர்கள் தொலைதூரத்திலிருந்து நபியின் பள்ளியில் தொழுவதற்கும், நபிகளுக்கு ஸலாம் சொல்ல வேண்டுமென்றும் நாடி மதீனாவுக்கு வருகிறார்கள். மதீனாவாசிகளோ ஊரிலேயே தங்கியிருப்பவர்கள். நபிகளுக்கு ஸலாம் சொல்ல வேண்டுமென்பதை நாடி தூரத்தில் எங்கும் பயணம் செய்ய வேண்டியதில்லை. ஆகவேதான் ஸலாம் கூறும் மாதிரியில் இவ்விரு சாராருக்கும் மத்தியில் சில மாறுதல்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன’ என்று கூறிவிட்டு நபிகளின் ஒரு ஹதீஸையும் எடுத்துரைத்தார்கள். இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ‘இறைவா! என்னுடைய கப்றை வணங்கப்படும் சிலையாக மாற்றிவிடாதே!’ என கூறியுள்ளார்கள். மேலும் நபியவர்கள் ‘நபிமார்களின் கப்றுகளை யார் பள்ளிவாசல்களாக ஆக்கினாரோ அவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் அதிகமாகட்டும்’ என்றும் கூறியுள்ளார்கள். மேலும் அபுல் வலீத் கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் ‘மக்களே! யாரும் எனது கப்றில் விழாக்கள் கொண்டாடாதீர்கள்’ என்று உரைத்தார்கள். இன்னும் இமாம் மாலிக்கைப் பற்றிக் கூறும் ஒரு மஸ்அலாவில் (சட்டத்தில்) ‘நபிகளின் பள்ளிவாசலில் வருகிறவர்கள் முதலில் காணிக்கையாக தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை தொழுது கொள்ள வேண்டும். அதன் பின் ஸியாரத் செய்ய வேண்டும். இப்பள்ளியில் ஸுன்னத்துத் தொழுவதற்கு மிக ஏற்றமான இடமாக நபிகள் தொழுத சில இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை மணம் பூசப்பட்ட தூண்களுள்ள இடமாகும். (அதாவது அவ்விடத்திலுள்ள தூண்களின் கீழ்பகுதியில் வெள்ளை நிறம் காணப்படும்). ஆனால் பர்ளுத் தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு இமாமுடன் நெருங்கி இருக்கிற முந்திய ஸப்புகளே (அணிகளே) சிறந்தவையாகும் என்று கூறியிருக்கிறார்கள்.
நபிகளின் பள்ளியை நாடி வருகின்ற வெளியூர்வாசிகளுக்கு மேற்கூறப்பட்ட இடத்தில் நின்று ஸுன்னத்தான தொழுகையை நிறைவேற்றுதல் அவர்கள் தங்கியிருக்கின்ற இடங்களில் தொழுவதைவிட மேன்மைக்குரியது. இவையனைத்தும் இமாம் மாலிக்கைப் பற்றியும், அவர்களின் தோழர்கள், மற்றும் இதர ஸஹாபாக்கள் பற்றியும் அறியப்பட்ட பிரபலமான சட்டங்களாகும். நபிகளின் மீது ஸலாம் சொல்லி அவர்களுக்காகப் பிரார்த்திக்க வேண்டும் என்ற இலட்சியத்தைத் தவிர வேறு எந்த எண்ணத்திலும் நபியவர்களின் கப்றை நாடக்கூடாது. ஸலாம் சொல்லி துஆ செய்கிறவர்கள் கூட அதிக நேரம் கப்றருகில் நின்று கொண்டிருப்பதையும் இமாம் மாலிக் அவர்கள் வெறுத்திருக்கிறார்கள். மதீனாவைச் சார்ந்தவர்கள் கூட கப்றில் வரும்போதெல்லாம் அதனருகில் நீண்ட நேரம் நிற்க கூடாது.
மனிதன் தனக்காகப் பிரார்த்திக்க நினைத்தால் கிப்லாவின் பக்கம் முகம் திருப்பி நின்று பிரார்த்திக்க வேண்டும். இதுவே ஸஹாபாக்களின் வழியாகும். அவர்களின் வரலாற்றில் ஒருவர் கூட நீண்ட நேரம் கப்றருகில் நின்று நபிகளுக்காகப் பிரார்த்திக்கவில்லை. அப்படியானால் நாம் எப்படி நீண்ட நேரம் பிரார்த்திக்க முடியும்? நபிகளை வேண்டிப் பிரார்த்தித்தல், அவர்களிடம் தேவையை முறையிடுதல், அவர்களின் கப்றருகில் சென்று சிபாரிசை வேண்டி நிற்குதல், அல்லது அவர்கள் இறந்த பின்னர் சிபாரிசு வேண்டுதல் போன்ற எதையுமே ஆன்றோர் (ஸலபு)களில் எவரும் செய்ததில்லை. கப்றின் பக்கத்தில் சென்று பிரார்த்திப்பதாலோ அல்லது நபியைப் பொருட்டாக வைத்துப் பிரார்த்திப்பதாலோ விசேஷமான ஏதேனும் விதிகளும், குறிப்பிடத்தக்க நன்மைகளும் உண்டென்றிருந்தால் ஸஹாபிகளும், தாபியீன்களும் அவற்றைச் செய்யாமல் விட்டு வைப்பார்களா?
முன்னர் நாம் கூறிய அபூ ஜஃபருல் மன்ஸூரை நோக்கி இமாம் மாலிக் சொல்லியதாகக் கூறப்படும் ‘நீர் நபிகளை முன்னோக்கி நிற்பீராக! அவர்களைக் கொண்டு சிபாரிசும் தேடுவீராக!’ என்ற சம்பவம் இமாம் அவர்கள் மீது இட்டுகட்டி சுமத்தப்பட்டதாகும். இச்சம்பவன் இமாம் அவர்களின் அபிப்பிராயங்களுக்கும் மற்றும் ஸஹாபிகள், தாபியீன்களுடைய சொல், செயல்களுக்கும் மாறுபட்ட ஒன்றாகும். அவர்கள் எல்லோரும் தமக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதில் கூட கப்றை நோக்கி நிற்பதைக் குற்றமாக கருதினார்களென்றால் நபியிடம் சிபாரிசு செய்யும் துஆவையும் கேட்க அவர்கள் எப்படி அனுமதித்து இருக்க முடியும்? கப்றை நோக்கி நின்று தமக்காகப் பிரார்த்திப்பதைக் குற்றமாக மதித்த ஒருசமூகம் தீனிலும், துன்யாவிலும் உண்டாகும் துன்பங்களைக் களைந்திட காலஞ்சென்ற நபிமார்களிடமும், வலிமார்களிடமும், மலக்குகளிடமும் எப்படி முறையிடுவார்கள்? ஒருபோதும் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். இத்தகைய வழிபாடுகள் அனைத்துமே இறைவனுக்கு இணை வைப்பவர்களான முஷ்ரிகீன்களும், குஃப்பார்களும் மற்றும் கிறிஸ்தவர்களும் இவர்களைப் பின்பற்றிய சில முஸ்லிம்களும் செய்கின்றவையாகும். இது முஹாஜிரீன்கள், அன்ஸாரிகள் போன்ற நன்மக்களைப் பின்பற்றிய பழக்கமே அல்ல. முஸ்லிம்களுடைய இமாம்களாக அறியப்பட்ட அறிஞர்களில் ஒருவர்கூட இத்தகைய கொள்கைகளை ஆதரிக்கவில்லை. இவர்கள் அனைவரும் நபியவர்கள் மீது ஸலவாத்தும், ஸலாமும் கூறுவதில் அதிக அக்கரை கொண்டவர்களாக இருந்தார்கள். நபிகளின் அருகில் நின்று ஸலாம் கூறினால் அதை அவர்கள் கேட்கிறார்கள். தூரத்திலிருந்து கூறப்படும் ஸலாம் நபியவர்களுக்கு எத்தி வைக்கப்படுகிறது என்றும் இவர்கள் முழுக்க முழுக்க விளக்கம் பெற்றிருந்தார்கள்.
இமாம் அஹ்மத் பின் ஹன்பலும், மற்றும் இமாம்கள் பலரும் கீழ்வரும் ஹதீஸை நபியவர்களுக்கு ஸலாம் எத்தி வைக்கப்படுகிறது என்பதற்குச் சான்றாக காட்டியுள்ளார்கள். நபியவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) கூறுகிறார்கள்: ‘என் மீது யார் ஸலாம் கூறினாலும் நான் அவருக்கு பதில் ஸலாம் சொல்வதற்காக எனது உயிர் மீட்டித்தரப்படுகிறது’. (அபூதாவூத், அஹ்மத்)
நபியின் கப்றருகில் வந்து சொல்வதை மேன்மையாகக் கருதிய இமாம்கள் இந்த ஹதீஸைச் சான்றாக எடுத்துள்ளனர். நபியவர்களின் கப்றை ஸியாரத் செய்வதைப்பற்றிக் கூறப்படும் ஏனைய ஹதீஸ்களும் பலவீனமானவையாகவும், மார்க்கத்தீர்ப்புகள் வழங்க சான்றாக எடுத்துக் கொள்ள முடியாதவையாகவும் காணப்படுகின்றன. எனவேதான் ‘ஸிஹாஹுஸ் ஸித்தா’ எனும் ஆறு பெரும் ஹதீஸ் தொகுப்பாசிரியர்களும், ‘ஸுனன்’ எனும் ஹதீஸ் நூலாசிரியர்களும் இத்தகைய ஹதீஸ்களை தம் நூல்களில் பதிவு செய்யவில்லை. பலவீனமான ஹதீஸ்களை அறிவிக்கின்ற தாருல் குத்னி, பஸ்ஸாஸ் போன்ற தொகுப்பாசிரியர்கள் சிலர் மட்டுமே இது விஷயத்தில் ஒரு சில ஹதீஸ்களைக் கூறியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அப்துல்லாஹ் பின் உமர் அல்இமரி என்பவர் அறிவிக்கின்ற ஹதீஸை நினைவில் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இவர் பலவீனமான அறிவிப்பாளர் என்பதில் சந்தேகமில்லை. இவர் அறிவிக்கின்ற ஹதீஸ்களில் பொய்யை வெளிப்படையாகக் காண முடிகிறது. ‘நான் மரணமடைந்த பின்னர் என்னை யார் ஸியாரத் செய்கிறாரோ அவர் நான் வாழ்ந்திருக்கையில் என்னை வந்து சந்தித்தற்குச் சமமாகிறார்’ என்று நபியவர்கள் கூறியதாக இந்த அப்துல்லாஹ் குறிப்பிடுகிறார். இந்த ஹதீஸின் கருத்தில் உண்மைக்கு மாறுபட்ட விளக்கம் வெளிப்படையாகத் தெரிவது போல முஸ்லிம்களின் கொள்கைகளுக்கே இந்த ஹதீஸ் முரண்பட்டிருப்பதை விளங்கலாம். ஏனெனில் ஈமான் கொண்டு, நபியவர்கள் வாழ்ந்திருக்கையில் அவர்களைச் சந்தித்தவர்களுக்கு ஸஹாபிகள் என பெயர் சூட்டப்படுகிறது. முஹாஜிரீன்கள் மற்றும் இறைவன் பாதையில் போராடிய முஜாஹிதீன்கள்போன்றவர்கள் இப்பெயருக்கு மிகவும் அருகதைப் படைத்திருந்தார்கள். நபியவர்கள் இன்னுமொரு ஹதீஸில் ‘என்னுடைய தோழர்களைத் திட்டாதீர்கள்’ என விலக்கி விட்டு கீழ்வருவதையும் கூறினார்கள்: ‘சத்தியமாக நீங்கள் உஹது மலையைப் போன்ற அளவுக்குத் தங்கத்தைச் செலவு செய்தாலும் என் ஸஹாபாக்களின் சிறப்பில் இரு சிறங்கை அளவோ அல்லது அதில் பாதியோ கூட உங்களால் அடைய முடியாது’. (புகாரி, முஸ்லிம்)
அப்படியானால் நபியவர்கள் மரணமடைந்தற்குப் பின் அவர்களை ஸியாரத் செய்வதால் ஸஹாபியாக ஆகிவிட முடியுமா? ஸஹாபாக்களுக்குப் பிறகு தோன்றிய மக்கள் மாபெரும் கடமைகளான தொழுகை, ஹஜ், நோன்பு, போன்ற அமல்களைச் செய்து, இறைவன் பாதையில் போராடி மற்றும் பல வாஜிபான அமல்களைச் நிறைவேற்றுவதனால் கூட ஸஹாபிகளின் நிலையை அடைய முடியாமலிருக்க, கடமையில்லாததும், அந்த அமலுக்காகப் பிரயாணம் செய்தல் அனுமதிக்கப்படாததுமான ஒருசில அமலைச் செய்து விடுவதனால் ஸஹாபியாக ஆகிவிட முடியும் என்று கூறுவதை எப்படி ஹதீஸ் என்று நிரூபிக்க முடியும்?
நபியவர்களின் கப்றை ஸியாரத் செய்ய வேண்டுமென்பதை மட்டும் இலட்சியமாகக் கொண்டு பிரயாணம் செய்வதை அறிஞர்கள் தடுத்திருக்கிறார்கள். ஏனெனில் நபிகளின் பள்ளிவாசலை நாடிப் பிரயாணம் செய்வதெல்லாம் அதில் தொழுவதற்காகத்தான். தொழுகையை நிறைவேற்றிய பின்னர்தான் ஸியாரத்தை நினைக்க வேண்டும். இதைப்போலவே தொழுகையை இலட்சியமாகக் கொண்டே பைத்துல் முஹத்தஸ் பள்ளிவாசலுக்கும் செல்ல வேண்டும். ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக கஃபத்துல்லாவை நோக்கி பிரயாணமாக வேண்டும். இப்படிப் பிரபலமான பள்ளிகளில் கடமையானதும், முஸ்தஹப்பானதுமான அமல்களை நிறைவேற்றச் சென்றால் கூட நபிகளின் வாழ்நாளில் அவர்களை நோக்கி பிரயாணம் செய்த ஒரு ஸஹாபியின் பதவியை அடைய முடியாமலிருக்கும் போது நபியவர்களின் கப்றை ஸியாரத் செய்வதை மட்டும் நாடி விலக்கப்பட்ட பிரயாணமாக யாத்திரை செய்கின்ற ஒரு சாதாரண மனிதர் ஸஹாபியாக முடியுமா?
*மேலும் இவர் மிகப் பலவீனமான அறிவிப்பாளர் என்று காட்டுகின்ற பல விளக்கங்களை இமாம் இப்னு தைமிய்யா இங்கு குறிப்பிடுகிறார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…