அல்லாஹ்விடம் அவன் படைப்பினங்களைக் கொண்டு ஆணையிட்டுப் பிரார்த்தித்தல் தடுக்கப்பட்டுள்ளது போல படைப்பினங்களிடம் சென்று அவற்றைக் காரணம் காட்டியும், அவற்றைப் பொருட்டாகக் கொண்டும் கேட்பது விலக்கப் பட்டிருக்கிறது. ஆனால் சிலர் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். சில ஸலபுஸ்ஸாலிஹீன்களுடைய குறிப்புகளையும் தம் தஃவாவுக்குச் சான்றாகக் கூறினார்கள். எனவே மக்களில் பலர் இம்மாதிரி துஆச் செய்வதைக் காணலாம். ஆனால் இது விஷயத்தில் நபிகளைப்பற்றி அறிவிக்கப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் பலம் குன்றியவையும், புனையப் பட்டவையுமாகும்.
மேலும் ஏதேனும் ஒன்றைக் காரணம் காட்டி ஒருவரிடமிருந்து ஒரு பொருளைக் கேட்பதற்கும் அப்பொருளைக் கொண்டு சத்தியம் செய்து கேட்பதற்குமிடையில் பெரிய வித்தியாசம் உண்டு. சத்தியம் செய்து கேட்பது சக்தியான வேண்டுதலாகும். மனிதன் தன் வேண்டுதலை உறுதிப்படுத்துவதற்காக ஆணையிடுகிறான். இப்படி சத்தியம் செய்து கேட்கும் நிலைக்கு அவன் வர வேண்டுமெனின் எவன் மீது சத்தியப் பிரமாணம் செய்து கேட்கப்பட்டதோ அவன் தான் கேட்டதைக் கொடுத்து விடுவான் என்ற உறுதி நிலை வந்தாக வேண்டும். ஆனால் சத்தியத்தைக் காப்பவர்களாக மனிதர்களுள் எத்தனைப் பேர்தான் இருக்க முடியும்? மனிதர்களுள் ஆணையை மீறாதவர்கள் மிகக் குறைவே. எனவேதான் அது கூடாதென்று தடுக்கப் பட்டுள்ளது. ஆனால் ஒரு பொருளைப் பொருட்டாக வைத்தும், ஏதுவாகக் காட்டியும், காரணமாக எடுத்துக் கூறியும் கேட்கப்படுவது அவ்வளவு சக்தி வாய்ந்த மதிப்பிற்குரிய வேண்டுதல் அல்ல. ஒன்றைப் பொருட்டாக அல்லது காரணமாகக் காட்டிக் கேட்பவன் இழிவுடன் கெஞ்சி நிற்பவனுக்குச் சமமாகிறான். மனிதன் தனது நினைப்பில் எது நல்லது என்று பட்டதோ அதைப் பொருட்டாக வைத்துக் கேட்டால் தான் விரும்புவது கிடைத்து விடும் என்று எண்ணிக் கொள்கிறான். எனவே இப்படிக் கேட்பவனுக்கு ஒருக்கால் கிடைத்து விடலாம். கிடைக்காமலும் இருக்கலாம். ஆனால் கிடைத்து விட்டால் ‘பொருட்டால்’ என்று கூறியதனால் அல்லது பெரியோர்களைக் கொண்டு உதவி தேடியதினால் தான் கிடைத்தது என எண்ணிவிடக் கூடாது. கேட்பதற்கொப்ப கிடைத்தது. யாருடைய பொருட்டாலும் அல்ல. தேவைப்படுகிறவர்களுக்கு எல்லாம் அல்லாஹ் கொடுக்கிறானல்லவா? எனவே கிடைத்தது அல்லாஹ்வின் பெரும் கருணையால் மட்டும்தான்.
கொடுமை செய்யப்பட்டோருக்கு அவர்கள் பிரார்த்தித்தால் அல்லாஹ் அள்ளி வழங்குகிறான். அவர்கள் காஃபிர்களாக இருந்தாலும் சரியே. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஏதேனும் ஒன்றைக் கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பவர்களுக்கெல்லாம் அவன் மூவகை நன்மைகளில் ஏதேனும் ஒன்றைச் செய்து விடுகிறான். அவன் கேட்டதைக் கொடுத்து விடுகிறான். அல்லது இவன் கேட்பதற்கொப்ப நன்மைகளை மறுமையில் இவனுக்காகச் சேகரித்து வைத்துக் கொள்வான். அல்லது இவன் கேட்ட அளவிற்குத் தீங்குகளை இவனை விட்டு அகற்றி விடுகிறான். இப்படி மூன்றில் ஒரு நன்மையான காரியத்தை அல்லாஹ் செய்து விடுகிறான். ஆனால் அப்பிரார்த்தனையில் பிறருக்குக் கெடுதல்கள், குற்றங்கள் இடம் பெறக் கூடாது. பிரார்த்திப்பவன் இரத்த பாசத்தைப் பிரிந்து வாழ்கிறவனாகவும் இருத்தல் கூடாது. இவ்விரண்டும் மேற்கூறப்பட்ட மூன்று நன்மைகளில் ஏதேனுமொன்று கிடைப்பதற்குரிய நிபந்தனையாகும். இந்த ஹதீஸைச் செவியுற்ற ஸஹாபிகள் நபியவர்களிடம் ‘யா ரஸூலல்லாஹ்! அப்படியானால் நாங்கள் இறைவனிடம் நிறையப் பிரார்த்திப்போம்’ என்று கூறியதற்கு ‘நீங்கள் பிரார்த்திப்பதை விட ஏராளமாக அல்லாஹ்விடம் இருக்கிறது’ என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
படைப்பினங்களைக் கொண்டு ஆணையிட்டுப் பிரார்த்தித்தல் தடுக்கப்பட்டுள்ளது போல படைப்பினங்களிடம் அவற்றைக் காரணம் காட்டி மேலும் பொருட்டாகக் கொண்டு கேட்பதும் விலக்கப் பட்டிருக்கிறது. ஆனால் சில மக்கள் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். சில ஸலபுஸ்ஸாலிஹீன்களுடைய குறிப்புகளையும் தம் தஃவாவுக்குச் சான்றாகக் கூறினார்கள். எனவே பலர் இம்மாதிரி துஆச் செய்வதைக் காணலாம். ஆனால் இது விஷயத்தில் நபிகளைப் பற்றி அறிவிக்கப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் பலம் குன்றியவையும், புனையப்பட்டவையுமாகும்.
கண் பார்வை இழந்த ஸஹாபியின் கீழ்வரும் ஒரு ஹதீஸைத் தவிர வேறொரு பொருத்தமான ஆதாரங்கள் எதையும் இவர்கள் தம் தஃவாவுக்குச் சாதகமாகப் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த ஹதீஸைப் பொறுத்தவரையில் கூட உண்மையில் அவர்களுக்கு ஆதாரங்களில்லை என்றே கூறலாம். ஏனெனில் இந்த ஹதீஸின் நேருரையிலிருந்தே இம்மனிதர் நபியின் துஆவைக் கொண்டும், ஷபாஅத்தைக் கொண்டும் தான் வஸீலாத் தேடினார்கள் என்பது தெளிவான உண்மையாகும். அதனால் தான் அவரது கண்பார்வையும் மீட்கப்பட்டது.
அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்து ‘நாயகமே! என் கண்கள் குணமாகப் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று வேண்டிய போது அவருக்கு நபி (ஸல்) அவர்களும் கீழ்வரும் துஆவை ஓத வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்கள். ‘இறைவா! நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன். உன்னுடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களைக் கொண்டு நான் உன் பக்கம் திரும்புகிறேன். அவர்கள் கருணை நபி’. சிருஷ்டிகளைப் பொருட்டாக (காரணமாக)க் கொண்டு பிரார்த்திக்கலாம் என அனுமதி வழங்குகிறவர்களுக்கு இந்த ஹதீஸில் கூட யாதொரு ஆதாரத்தையும் காண முடியாது. ஏனெனில் இந்த ஹதீஸில் கண்பார்வை இழந்த மனிதர் நபிகளின் துஆவையும், ஷபாஅத்தையும் கொண்டுதான் அல்லாஹ்விடம் வஸீலாத் தேடியிருக்கிறார் என்று தெளிவாக விளங்க முடிகிறது.
ஆரம்பத்திலேயே அவர் நபியிடம் வந்து தமக்காக துஆக் கேட்க வேண்டுமென்றல்லவா விரும்பினார்கள். எனவேதான் இவருடைய துஆவில் கூறப்பட்டுள்ள ‘இறைவா! நபி முஹம்மது (ஸல்) அவர்களைக் கொண்டு நான் உன் பக்கம் முகம் திருப்புகிறேன்’ என்பதற்கு ‘நபியின் துஆவின் பொருட்டாலும் முகம் திருப்புகிறேன்’ என்பது தாத்பரியமாகும் என்று கூறினோம். அதுமட்டுமல்ல மேற்கூறப்பட்ட துஆவின் கடைசியில் ‘இறைவா! என் விஷயத்தில் நபியின் சிபாரிசை ஏற்றருள்வாயாக!’ என்றும் கூறப்பட்டுள்ளது. இதையும் சொல்லும்படி நபியவர்கள் அம்மனிதருக்கு கற்றுக் கொடுத்தார்கள். எனவே இதிலிருந்தும் நபிகளின் துஆ, ஷபாஅத்துக்களைக் கொண்டுதான் அல்லாஹ்விடம் அம்மனிதர் வஸீலாத் தேடினார் என்பதாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. நபியவர்கள் இம்மனிதருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். சிபாரிசும் செய்தார்கள். இதன் காரணத்தினால் அவருடைய கண்பார்வை திரும்பி விட்டது. அவர் குணமடைந்து விட்டார். இதை நபிகளின் அற்புதச் சக்திகளில் ஒன்றாகக் கருத வேண்டும். நபிகளின் பிரார்த்தனையைப் பெறாத வேறு குருடர்கள் நபிகளைப் பொருட்டாக வைத்து பிரார்த்தித்தால், அவர்களின் நிலைமை கண்பார்வை இழந்த இம்மனிதரின் நிலைமையைப் போன்று நிச்சயமாக ஆகி இருக்காது.
மழைதேடும் விஷயத்தில் உமருடைய துஆவும் இதைத்தான் காட்டுகிறது. அதில் அவர்கள் ‘இறைவா! மழை இல்லாமல் எங்களுக்கு வறட்சி நிலை வரும்போதெல்லாம், எங்கள் நபிகளைக் கொண்டு நாங்கள் உன்னிடம் வஸீலாத் தேடினோம். அதனால் நீ எங்களுக்கு மழை பெய்யச் செய்தாய். இதோ எங்களுக்கு அந்த நிலைமை நபியவர்கள் இறந்த பின்னும் ஏற்பட்டு விட்டது. ஆகவே நபியின் பெரிய தந்தையைக் கொண்டு நாங்கள் உன்னிடம் வஸீலாத் தேடுகிறோம்’ என்று பிரார்த்தித்தனர். இச்சம்பவத்தில் காணப்படுகின்ற வஸீலாவும் அனுமதிக்கப்பட்ட வஸீலாக்களில் ஒன்றாகும். இவையனைத்து நபிகளுடையவும், மற்ற பெரியவர்களுடையவும் துஆக்களைக் கொண்டும், சிபாரிசுகளைக் கொண்டும் இறைவனிடம் வஸீலாத் தேடுவதைத் தவிர அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவதல்ல என விளங்குதல் வேண்டும்.
அவர்களையே வைத்து வஸீலாத் தேடுதல் அனுமதிக்கப்படுமானால் கலீபா உமர் (ரலி) அவர்களும், இதர முஹாஜிரீன்களும், அன்சாரிகளும் நபிகளை வைத்து வஸீலாத் தேடுவதை விட்டு விட்டு அப்பாஸைக் கொண்டு வஸீலாத் தேட முனைந்திருக்க மாட்டார்கள். இமாம் அபூஹனிபாவும், தோழர்களும், மற்றவர்களும் நபியைப் பொருட்டாக வைத்துக் கேட்பதை தடுத்திருக்கிறார்கள். இமாம் மாலிக்குடைய மத்ஹபும் அப்படித்தான் கூறுகிறது. ஆனால் இந்த இமாம் மாலிக் (ரஹ்) அவர்களைப் பற்றி வேறு சிலர் கூறும்போது அவர்கள் சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிட்டுப் பிரார்த்திப்பதையும், நபிமார்களையும், வலிமார்களையும் பொருட்டாக வைத்துப் பிரார்த்திப்பதையும் அனுமதித்திருப்பதாகச் சொல்கிறார்கள். இச்சொல் இமாம் மாலிக்கின் மீது பொய்யாகச் சுமத்தப்பட்ட சொல்லாகும். இமாம் அவர்களோ, அவர்களின் தோழர்களோ ஒருபோதும் இதை அனுமதித்திருக்க முடியாது. எப்படி அதை அவர்கள் அனுமதிக்க முடியும்? பிரார்த்திப்பவன் தன் இறைவனை அழைக்கும் போது ‘எஜமானே! எஜமானே! (யா ஸய்யிதீ! யா ஸய்யிதீ) என அழைத்துப் பிரார்த்திப்பதைக் கூட அவர்கள் வெறுத்திருக்கும் போது நபியைக் கொண்டு ஆணையிட்டும், அவர்களை பொருட்டாக வைத்தும் பிரார்த்திப்பதை எப்படி இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் அனுமதிப்பார்கள்? ஷரீஅத்தில் இல்லாத ஒன்றை, மேலும் ஸலபுஸ்ஸாலிஹீன்கள் சொல்லாத ஒரு சட்டத்தை இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாக எவராலும் நிரூபிக்க முடியாது.
நபியவர்கள் இறந்த பின்னர் அவர்களின் துஆவையும், ஷபாஅத்தையும் வேண்டிப் பிரார்த்திக்கலாம் என்றும், கப்றருகில் சென்று இவையெல்லாம் கேட்கலாமென்றும் ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்கள்.
அதுமட்டுமல்லாது பிரார்த்தனையின் போது இறைவனை ‘கொடை வள்ளலே! அகிலத்தைப் படைத்து ஆள்பவனே! (யா ரப்பீ! யா கரீம்!) என்று கூறித்தான் பிரார்த்திக்க வேண்டுமென்று பணித்திருக்கிறார்கள். மாறாக தயாபரனே! கிருபையுள்ளவனே! என அழைத்துப் பிரார்த்திப்பதைக் கூட அவர்கள் விரும்பவில்லை. ஏனெனில் நபித்தோழர்கள் மற்றும் முன்னோர்களான ஸலபுஸ்ஸாலிஹீன்கள் இப்படி அழைத்துப் பிரார்த்தனை செய்திருப்பதாக அறியப்பட வில்லையாம். இப்படி மிக நுட்பமாக ஒவ்வொன்றையும் ஆராய்ந்து ஷரீஅத்தின் அடிப்படையில் பிரார்த்தனை செய்ய வேண்டிய அமைப்புகளை இமாம் மாலிக் அவர்கள் விளக்கிக் காட்டியிருக்கும் போது இந்த இமாமைப் பற்றி நபியைப் பொருட்டாக வைத்தும், அவர்களைக் கொண்டு சத்தியம் செய்தும் பிரார்த்திப்பதை அனுமதித்துள்ளார்கள் என்று யாராவது கூறினால் நம்ப முடியுமா?
மழையின்றி வறட்சியால் மக்கள் வாடிய வேளையில் கலீபா உமரும், முஹாஜிரீன்கள், அன்ஸாரிகள் எவருமே எந்தச் சிருஷ்டிகளையும் பொருட்டாக வைத்து அவற்றைக் காரணமாகக்காட்டி மழை தேடிப் பிரார்த்திக்கவில்லை. நபியவர்களின் மரணத்தின் பின்னர் அப்பாஸ் (ரலி) அவர்களின் துஆவினாலும், ஷபாஅத்தினாலும் தான் வஸீலாத் தேடப்பட்டுள்ளது என்று இந்தப் பிரபலமான சம்பவத்தை இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தெரியாமலிருக்க முடியாது. நபியவர்களின் வாழ்நாளில் ஒருமுறைக் கூட சிருஷ்டிகளை முன்னிறுத்தித் தன் தேவைகளை அல்லாஹ்விடம் அவர்கள் வேண்டவில்லை. தம்மையோ, தம்மைப்போன்ற இதர நபிமார்களையோ பொருட்டாகக் கொண்டும் பிரார்த்திக்கவில்லை. வறட்சியின் போது மழை பொழிவதற்காகவும் பிரார்த்திக்கவில்லை. மற்றும் எந்தத் தேவைக்காகவும் அப்படிப் பிரார்த்திக்கவில்லை. நபித்தோழர்களில் அனஸ் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் போன்ற பெரும் நபித்தோழர்களெல்லாம் வறட்சி வேளையில் நபிகள் நாயகத்தின் பிரார்த்தனையைக் கொண்டு வஸீலாத் தேடி மழையைப் பெற ஆசைப்பட்டார்கள்.
நபியவர்களைக் காரணம் காட்டியும், பொருட்டாக வைத்தும் பிரார்த்தனை செய்வது ஸஹாபிகளுக்கு மத்தியில் தெரிந்திருந்தால் உமர், அப்பாஸ் (ரலி) அவர்களைக் கொண்டு மழை பொழிவதற்காக வஸீலாத் தேடிய வேளையில் ஸஹாபிகள் உமர் (ரலி) அவர்களைத் தடுத்திருப்பார்கள். நபியைப் பொருட்டாக வைத்து வஸீலாத் தேடுவதுதான் அப்பாஸ் (ரலி) அவர்களை கொண்டு வஸீலாத் தேடுவதை விட மிக மேலானது என்றும் கூறியிருப்பார்கள். எல்லாச் சிருஷ்டிகளை விட மேலான நபியவர்கள் வாழ்ந்திருக்கும் போது அவர்களை வைத்து வஸீலாத் தேடப்பட்டது. இன்று கடும் வறட்சி நம்மைப் பீடித்துள்ளது. இப்பொழுதுதான் நபியவர்களின் வஸீலா மிகத் தேவைப்படுகிறது. இந்நிலையில் நபியைவிட மதிப்பிற் குறைந்த அவர்களின் உறவினர்களைச் சார்ந்த ஒரு மனிதரை வைத்து ஏன் வஸீலாத் தேட வேண்டுமென்று ஸஹாபிகள் உமர் (ரலி) அவர்களிடம் கேள்விகளைத் தொடுத்திருப்பார்கள். நபிகளால் செய்துக் காட்டப்பட்ட ஒரு ஸுன்னத்துக்கு மாறு செய்தும், இருவர்களில் அல்லாஹ்விடம் மிக மதிப்பிற்குரிய ஒருவரைத் தேர்வு செய்து வஸீலாத் தேடாமல் நபியைவிட மதிப்பிலும், அந்தஸ்திலும் குறைந்த ஒருவரைத் தேர்ந்து ஏன் வஸீலாத் தேட வேண்டுமென்று ஸஹாபிகள் உமர் (ரலி) அவர்களிடம் வினவியிருப்பார்கள். ஆனால் ஸஹாபிகள் உமரின் செய்கையைக் கண்டு எதையும் கேட்கவில்லை.
எனவே நபிகளாரின் துஆக்களைக் கொண்டு தான் வஸீலாத் தேடப்பட்டதே தவிர அவர்களையே வைத்து வஸீலாத் தேடப்படவில்லை என்பதற்கு இதுவே சான்றாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். இந்நிலையில் அவர்களின் பிரார்த்தனையை எதிர்பார்க்க முடியாது. உயிருடன் வாழ்ந்திருப்பவர்களின் பிரார்த்தனையில் தான் ஆதரவு வைக்க முடியும். இதனால் அப்பாஸ் (ரலி) அவர்களின் பிரார்த்தனையைக் கொண்டு வஸீலாத் தேடப்பட்டு மழை பொழிய வேண்டுமென்று எதிர் பார்த்தார்கள்.
அப்பாஸ் (ரலி) அவர்களை வைத்து கலீபா உமர் செய்துக் காட்டியதைப் போன்ற ஒரு சம்பவம் கலீபா முஆவியா (ரலி) அவர்கள் காலத்திலும் நடைப்பெற்றது. இவர்களும், இவர்தம் சுற்றம் சூழ இருந்த ஸஹாபிகள், தாபியீன்கள் அனைவரும் சேர்ந்து யஸீத் பின் அல் அஸ்வதில் ஜர்ஷீ* என்பவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள்.
எனவே இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மத் பின் ஹன்பல் போன்ற மத்ஹபுடைய இமாம்களின் தோழர்களான மார்க்க பேரறிஞர்கள் மழைத் தேடிப் பிரார்த்திக்கும் போது நல்ல ஒழுக்கமுள்ள உத்தமர்களின் பிரார்த்தனையைக் கொண்டு வஸீலாத் தேட வேண்டுமென்று கூறியிருக்கிறார்கள். அத்துடன் மேற்கூறப்பட்ட உத்தமர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களைப் போல நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் இத்தகைய பிரார்த்தனைகளுக்கு மிகவும் ஏற்றவர்கள் என்றும் கூறியிருக்கின்றனர். ஏனெனில் அதில் உமர் (ரலி) அவர்களின் முன்மாதிரி உண்டு. அறிஞர்களான இமாம் ஷாபிஈ, மாலிக், அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்-அலைஹிம்) போன்றவர்களைப் பற்றிக் கூறப்படும்போது இவர்கள் அனைவரும் நபிமார்கள் மரணமடைந்த பின்னர் அவர்களிடத்தில் தேவைகளை முறையிடுவதையும், ஷபாஅத் கேட்பதையும் அனுமதித்து இருக்கிறார்கள் என்று யார் கூறினாலும் அது பொய்யான கூற்றாகும். இது முஸ்லிம்களுடைய இமாம்கள் மீது பொய் புளுகுகளைச் சுமத்துவதாகும். சில அறிவீலிகள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் மீது இத்தகைய பொய்களைச் சுமத்தியிருக்கிறார்கள். அவர்கள் கூறியதாக சில கட்டுகதைகளையும் எடுத்துக் காட்டுகிறார்கள். இக்கதைகள் உண்மையாக இருந்தால் கூட இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் மறுமையில் ஷபாஅத் கேட்டு பிரார்த்திப்பதை சொல்லியிருப்பார்களேயொழிய நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்னர் ஷபாஅத்தைக் கேட்கலாம் என்ரு சொல்லியிருக்க மாட்டார்கள். இமாம்களின் சொற்களை எடுத்துரைப்பதில் சிலர் அவற்றை அப்படியே புரட்டி மறித்து விடுகின்றனர். இதுபற்றி இன்ஷா அல்லாஹ் நாம் பிறகு விளக்குவோம்.
அறிஞர் காழி இயாள் என்பவர்கள் இமாம் மாலிக்கிடமும் அவர்தம் தோழர்களிடம் அறியப்பட்டிருந்த அனைத்து அபிப்பிராயங்களையும் உண்மையாகவே தம் நூலில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ‘நபிகளின் கப்றை ஸியாரத் செய்தல்’ என்ற தலைப்பில் இமாம் மாலிக்கைப் பற்றி பொய்யர்கள் கூறிய கூற்றுகளில் ஒன்றையுமே இவர்தம் நூலில் குறிப்பிடவில்லை. இவர்கள் இமாம் மாலிக்கைப்பற்றியும், தோழர்களைப்பற்றியும் கூறுகையில் ‘நபி (ஸல்) அவர்கள் இறந்ததன் பின் அவர்களின் மதிப்பும், கண்ணியமும் குறைந்து விடாது. உயிரோடிருக்கையில் இருந்த மதிப்பைப் போன்று இறந்த பின்னரும் அவர்களுக்கு நிறைய மதிப்புண்டு. ஆகவே இறந்த பின்னர் நபி அவர்களுக்குரிய மதிப்பையும் கொடுத்துதான் ஆக வேண்டும். அவர்களைப் பற்றிக் கூறப்படும்போதும், அவர்களின் பொன்மொழிகள் எடுத்துரைக்கப்பட்டாலும், அவர்களின் திருநாமத்தைச் செவியுற்றாலும் அதற்கெல்லாம் அவசியம் மதிப்புக் கொடுத்துதான் ஆக வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்கள்.
மேலும் இமாம் மாலிக்கைப் பற்றி அறிஞர் காழி இயாள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள். ‘ஒருநாள் அய்யூபுஸ் ஸக்தியானி என்பவர்களைப் பற்றி இமாம் மாலிக்கிடம் கேட்கப்பட்டபோது கூறினார்களாம். நான் பேசிய அனைவரைக் காட்டிலும் அய்யூபுஸ் ஸக்தியானி ஒரு சிறந்த மனிதர். அவர் இருமுறை ஹஜ் செய்திருக்கிறார். அவரை நான் பலமுறை கவனித்திருக்கிறேன். தேவையை மீறி அவர் எதையும் பேசமாட்டார். நபி அவர்களின் திருநாமம் எடுத்துரைக்கப்பட்டால் அழுது விடுவார். அப்போது அவருக்கு கனிவுடன் நான் ஆறுதல் சொல்வேன். அவரிடமிருந்து நான் இதை அறிந்ததினாலும் அவர் நபிக்கு அளவே இல்லாத கண்ணியம் கொடுத்ததினாலும் தான் அவரைப்பற்றி இப்படி நான் எழுதுகிறேன்’.
முஸ்அப் பின் அப்துல்லாஹ் என்பவர் சொல்கிறார். நபிகள் நாயகத்தைப் பற்றி பேசும்போது இமாம் மாலிக்கின் முகம் வித்தியாசமாகி விடும். அப்படியே அவர்கள் தலை குனிந்து விடுவார்கள். பக்கத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் இது கஷ்டமாகத் தெரியும். ஒருநாள் இதைப் பற்றி இமாம் அவர்களிடம் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்று கேட்டபோது அதற்கு அவர்கள் விடையளிக்கையில் ‘நான் பார்ப்பவற்றையெல்லாம் நீங்களும் பார்த்திருந்தால் இப்படிக் கேட்டிருக்க மாட்டீர்கள்’ என்று கூறிவிட்டு கீழ்வரும் சம்பவங்களையும் எடுத்துக்காட்டி விளக்கம் தந்தார்கள்.
திருமறையை அழகாக ஓதக்கூடிய காரிகளில் தலைசிறந்து விளங்கிய முஹம்மத் பின் அல்முன்கதிர் அவர்களிடம் நபியவர்களின் ஹதீஸ்களில் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கேட்கப்பட்டால் உடனே அழுது விடுவார்கள். பிறகு நாங்கள் அவர்மீது இரக்கம் கொண்டு ஆறுதல் சொல்லித் தேற்றும் வரையிலும் அழுகையை நிறுத்த மாட்டார்கள். இவர்களைப் போன்றே ஜஃபர் பின் முஹம்மத் என்ற பெரியாரும் இருந்தார்கள். இவர்கள் நகைச்சுவையோடு பேசுவார்கள். புன்முறுவல் பூத்தவாறே காணப்படுவார்கள். ஆனால் நபியவர்கள் பற்றிக் கூறப்பட்டால் மட்டும் அவர்களின் நிறம் மஞ்சனித்து விடும். நபிகளைப்பற்றி ஹதீஸ்களை அறிவிக்கும்போது ஒளுவில்லாமல் எதையும் சொல்ல மாட்டார்கள். பலமுறை அவருடன் நான் சென்றிருக்கிறேன். கீழ்வரும் மூன்று அம்சங்களில் ஒன்றை விட்டுக் கூட அவர் நீங்கியதாக நான் பார்த்ததில்லை. தொழுது கொண்டிருப்பார்கள். அல்லது பேசாமல் வாய்மூடி கொண்டிருப்பார்கள். அல்லது திருமறையை ஓதிக் கொண்டிருப்பார்கள். தேவையில்லாமல் எதையும் பேச மாட்டார்கள். அல்லாஹ்வை பயந்து நடக்கின்ற அறிஞர்களைச் சார்ந்தவராகவும், மிகுந்த வணக்க வழிபாடுகளை செய்கின்றவராகவும் இருந்தார்கள்.
இன்னும் அப்துர்ரஹ்மான் பின் அல்காஸிம் என்ற அறிஞர் எப்போதெல்லாம் நபிகளைப்பற்றி எடுத்துரைக்கின்றாரோ அப்போதெல்லாம் அவருடைய மேனியில் நிறத்தைக் கவனித்தால் அது இரத்தம் பீறிட்டோடுகின்ற உடம்பைப் போல் காட்சி தரும். நாயகத்தைப் பற்றி எடுத்துச் சொல்லும்போது அவருடைய நாவு பயத்தால் வரண்டு விடும். மேலும் ஆமிர் பின் அப்துல்லாஹ் பின் ஸுபைர் என்பவரிடம் நான் அடிக்கடி வருவதுண்டு. அவர்களும் நபிகளைப்பற்றி கூறப்பட்டால் அழுது விடுவார்கள். கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வழியும். ஸுஹ்ரியை நான் பார்த்திருக்கிறேன். அவர் எனக்கு மிக நெருங்கியவரும், மிக வேண்டியவருமாக இருந்தார். எனினும் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டால் என்னை யாரென்று தெரியாதவர் போலவும், நாம் அவரை யாரென்று அடையாளம் கண்டு கொள்ளாத ரீதியிலும் மாறி விடுவார். மேலும் ஸப்வான் பின் ஸுலைம் என்பவரிடத்தில் நான் அடிக்கடி செல்வதுண்டு. இறைவனுக்குக் கீழ்படிவதிலும், வணக்க வழிபாடுகள் அதிகம் செய்வதிலும் அவர்கள் சிறந்து விளங்கினார்கள். திருமறையையும், நபிமொழியையும் ஆராய்கின்ற ஆற்றல் பெற்ற முஜ்தஹிதாகவும் அவர் இருந்தார். ஆனால் அவரிடத்தில் நபியவர்களைப் பற்றிக் குறிப்பிட்டால் போதும், கண்ணீர் வடித்து அழுது கொண்டே இருப்பார்கள். மக்களெல்லாம் இவரைத் தனியாக விட்டுவிட்டு ஒதுங்கி விடுவார்கள்
*இந்த யஸீத் பின் அல் அஸ்வத் என்பவர்கள் வணக்க வழிபாட்டில் மிகவும் ஊறிப்போனவர்களாக இருந்தார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…