14:42. மேலும் அக்கிரமக்காரர்கள் செய்துக் கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பாராமுகமாக இருக்கின்றான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதபடுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை – இறுதி) நாளுக்காகத்தான்.
14:43. (அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவர்களாகவும் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங் கொண்டு) சூனியமாக இருக்கும்.
14:44. எனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே!) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அப்போது அநியாயம் செய்தவர்கள்; “எங்கள் இறைவனே! எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக! உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்” என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்) “உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்கவில்லையா?” (என்றும்)
14:45. அன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும் உங்களுக்குத் தெளிவாக்கப்பட்டது; இன்னும் நாம் உங்களுக்கு(ப் பல முன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டி இருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்).
14:46. எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளைச் செய்து கொண்டேயிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக்கூடியவையாக இருந்த போதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது.
14:47. ஆகவே, அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த தன் வாக்குறுதியில் மாறு செய்வான் என்று (நபியே!) நீர் எண்ண வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான்.
14:48. இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.
14:49. இன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர்.
14:50. அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.
14:51. அல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்தற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை அல்லாஹ் இவ்வாறு செய்வான்) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
14:52. இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.
அல் குர்ஆன்: ஸூரத்து இப்ராஹீம்.
ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்தற்கான கூலி!
This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.