நேர்ச்சைகள் செய்வது கடனைப் போன்றதாகும். கடனை திருப்பி ஒப்படைப்பது கட்டாயமாவதைப் போல நேர்ந்த கடன்களையும் திருப்ப வேண்டுமென அனைத்து இமாம்களும் கூறியிருக்கிறார்கள். எனவே நபியவர்களின் கப்றை நோக்கிப் பிரயாணம் செய்ய வேண்டுமென்று ஒருவர் நேர்ந்தால் அல்லது மற்ற நபிமார்கள், நன்மக்கள் ஆகியோருடைய கப்றுகளில் ஏதேனுமொன்றுக்குப் போக வேண்டுமென்று நேர்ந்தால் அதை நிறைவேற்றுதல் அவசியமில்லை. மாறாக அதை நிறைவேற்றினால் விலக்கப்பட்ட ஒரு அனுஷ்டானத்தைச் செய்தவனாகி விடுகிறான் என்று அனைத்து அறிஞர்களும் ஏகோபித்து அபிப்பிராயப் படுகிறார்கள்.
இனி நபிகளின் பள்ளிவாசலிலோ, அல்லது பைத்துல் முகத்தஸிலோ தொழுவதற்குப் போக வேண்டுமென்று நேர்ந்தால் அதை நிறைவேற்றுவது கடமையா? இல்லையா? என்பதில் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இருவிதமான கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார்கள். இது ஒரு கடன் என்றும், இக்கடனை நிறைவு செய்வது கடமையாகும் என்பதும்தான் அவர்களின் பலமான அபிப்பிராயமாகும். இமாம்களான மாலிக்கும், அஹ்மத் பின் ஹன்பலும் இந்த அபிப்பிராயத்தை ஆதரிக்கிறார்கள். இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் இந்த நேர்ச்சையை நிறைவேற்றுவது கடமையில்லை என்று அபிப்பிராயப் படுகிறார்கள். ஏனெனில் இமாம் அபூஹனீபாவின் மத்ஹபில் நேர்ச்சை நிறைவேற வேண்டுமானால் கடமையான ஒன்றை நேர வேண்டும். வாஜிபல்லாத அமல்களைச் செய்வதாக நேர்ந்தால் அதை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. இதனடிப்படையில் மேற்கூறிய இரு பள்ளிவாசல்களுக்கும் பிரயாணம் செய்வது ஷரீஅத்தில் கடமையாக விதிக்கப்பட்ட ஒரு அனுஷ்டானம் அல்ல. அப்படியானால் இத்தகைய நேர்ச்சைகளை நேர்ந்து நிறைவேற்றுவதும் கடமையாகாது. இது இமாம் அபூஹனீபாவின் கொள்கையாகும். நேர்ச்சைகளை அவசியம் நிறைவு செய்ய வேண்டுமென்று கடமையாக்கிய மற்ற இமாம்கள் பள்ளியில் தொழப் போவதாக நேர்ந்து கொள்வது ஒரு வழிபாடாகும். வழிபாடுகளையும், அனுஷ்டானங்களையும் புரிவதாக நேர்ந்து கொண்டால் அவசியம் அந்நேர்ச்சையை நிறைவேற்றியாக வேண்டும் எனக் கூறியிருக்கிறார்கள்.
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ‘மனிதன் அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக நேர்ந்து கொண்டால் அதற்கொப்ப வழிபட்டுக் கொள்ள வேண்டும். அவனுக்கு மாறு செய்வதாக எவர் நேர்ந்து கொண்டாலும் அதை நிறைவேற்ற வேண்டாம்’ என்று கூறினார்கள்.
நபிமார்கள் அல்லது ஸாலிஹீன்களின் சமாதிகளை நோக்கி ஸியாரத்துக்காக பிரயாணம் செய்வதாக ஒருவர் நேர்ந்தால் எக்காரணத்தாலும் அதை நிறைவேற்ற வேண்டியதில்லை என்று எல்லா இமாம்களும் கூறியிருக்கிறார்கள். ஏனெனில் இது இறைவழிபாடுகளில் சேராத ஒன்றாகும். இவ்வாறிருக்க வழிபாடுகளின் இனத்தைச் சேராத செயலை ஒரு மனிதன் செய்தால், அதனால் நபித்தோழரைப் போன்று ஆகிவிடுவான் என்று கூறும் கூற்று ஹதீஸாக இருக்க முடியுமா? இன்னும் கூறப்போனால் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் ‘நபியின் கப்றை ஸியாரத் செய்தேன்’ என ஒரு மனிதன் கூறுவதையே வெறுத்திருக்கிறார்கள். அப்படிச் சொல்வதே பெரும் தவறு எனக் கருதியிருக்கிறார்கள். ஏனெனில் ஸியாரத் என்ற வார்த்தை நபியின் கப்றோடு சேர்த்துக் கூறப்படமாட்டாது என்றும், அது மரியாதைக் குறைவாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். இவ்வார்த்தை மூடலான தெளிவற்ற கருத்தை வழங்குகிறதாம். ஸியாரத் செய்தேன் என்று ஒருவர் கூறினால் அது ஷரீஅத் அனுமதிக்கின்ற ஸியாரத்தாகவும் இருக்கலாம். ஷரீஅத் அனுமதிக்காத ஷிர்க்கின் இனத்தைச் சார்ந்த பித்அத்தான முறையில் அனுஷ்டிக்கப்படும் ஸியாரத்தாகவும் இருக்கலாம். ஷரீஅத் அனுமதிக்கின்ற ஸியாரத்தைக் கொண்டு கப்றாளிக்கு ஸலாம் சொல்வதும், அவருக்கு துஆ செய்வதும் கருதப்படும். பித்அத்தான ஸியாரத்தைக் கொண்டு முஷ்ரிக்கீன்களுடையவும், நூதன அனுஷ்டானவாதிகளுடையவும், மய்யித்துகளிடம் தம் தேவையைக் கேட்பவர்களுடையவும் ஸியாரத்தைக் கருதுதல் வேண்டும். இது முற்றிலும் விலக்கப்பட்ட ஸியாரத்தாகும். எனவேதான் ஸியாரத் என்ற சொல் தெளிவற்ற மூடலான கருத்தைக் கொண்டிருக்கிறது என்று கூறினோம். அத்தகைய ஒரு சொல்லை நபியவர்களின் கப்றுடன் இணைத்துச் சொல்வதைக் காட்டிலும் தெள்ளத் தெளிவான பிசகுதலில்லாத ஒரு வார்த்தையைத் தேர்வுச் செய்து அவ்வார்த்தையுடன் நபியின் கப்றை சேர்த்துச் சொல்வதில் பெருமை இருக்கிறது. அப்படியென்றால் ‘நபிகளின் மீது ஸலாம் சொன்னேன்’ என்று கூற முடியும். அதனால் தவறான பல மாறுபட்ட கருத்துக்களை விட்டும் தப்பித்துக் கொள்ளலாம். ஷரீஅத்தில் அனுமதிக்கப்படாத ஸியாரத் என்பதும் கூட மய்யித்துக்காக ஸலாம் கூறி பிரார்த்திப்பது தானே ஆகவே ‘நபியின் மீது ஸலாம் கூறினேன்’ என்று சொல்லும் போது அது அனுமதிக்கப்பட்ட ஸியாரத்திற்கு ஈடாகிறது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…