முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிய வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது?

கேள்வி எண்: 91. முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தே வெளியில் செல்ல வேண்டும் என இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்துவது ஏன்?

பதில்: கம்யூனிஸ சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் மேற்கத்திய உலகின் கவனம் இஸ்லாத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தங்களின் கொள்கைகளைத் தாங்கிப் பிடிப்பதற்காக மேலைநாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாத்தை குறிவைத்து தாக்குகின்றனர். இத்தாக்குதலுக்கு முதல் குறியாக முஸ்லிம் பெண்களை எடுத்துக் கொண்டு ‘இஸ்லாம்’ பெண்களை பர்தா அணியுமாறு செய்து கேவலப்படுத்துகின்றது என்று மேற்கத்திய உலகில் பிரபலமாக உள்ள இஸ்லாத்தின் எதிரிகளுடைய செய்தி ஊடகங்களின் வாயிலாகவும் பகிரங்கமாக பொய்குற்றாம் சாட்டி வருகின்றனர். இறைவனருளால் நமது மார்க்கத்தின் அறிஞர்கள் பலர் இவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இனி முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் யாவை என்று பார்ப்போம். இஸ்லாத்திற்கு முந்தைய காலகட்டங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு, போகப் பொருளாகவும், அடிமையாகவும், விபச்சாரிகளாகவுமே பயன்படுத்தப்பட்டனர். பண்டைய கால பாபிலோனிய நாகரீகத்தில் கொலை செய்தவனுக்குப் பதிலாக அவனுடைய மனைவியை பழிவாங்கினர். பழைய கிரேக்க நாகரீகத்தில் பெண்கள் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்டு கேவலப்படுத்தப்பட்டார்கள். பண்டைய ரோமானிய நாகரீகத்திலோ, பெண்களை விபச்சாரிகளாகக் கருதுவதும், நிர்வாணமாக பார்ப்பதுமான வழக்கம் இருந்து வந்தது. இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியர்கள் பெண் குழந்தை பிறந்தால் கேவலம் எனக் கருதி அவர்களை உயிருடன் புதைத்து வந்தனர். பழைய இந்தியாவிலோ கணவன் இறந்தால் அவனுடைய சடலத்துடன் அவனுடைய மனைவியையும் எரிக்கும் வழக்கம் (உடன்கட்டை ஏறுதல்) இருந்தது.

இவ்வாறு பெண்கள் பல்வேறு இன்னல்களையும், துன்பங்களையும், கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இஸ்லாம் பெண்களை:-

கண்ணியப்படுத்திக் கவுரவித்தது
சொத்துரிமை வழங்கியது
சமுதாயத்தில் அந்தஸ்தோடு வாழ வழிவகுத்தது.

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதன் அவசியம்:-

பெண்கள் ஹிஜாப் அணிவதற்கான அவசியத்தையும் யார் யார் முன்னிலையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்பதையும் அல்லாஹ் தன் திருமறையில் விளக்குகிறான்.

“இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்”. (அல்குர்ஆன்: 24:31)

பெண்கள் ஏன் பர்தா (ஹிஜாப்) அணிய வேண்டும்?

பெண்கள் பர்தா அணிவதற்கான காரணத்தை அல்லாஹ்வே விளக்குகின்றான்.

“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்”. (அல்குர்ஆன்: 33:59)

பெண்கள் பர்தா அணிவதால் ஏற்படும் நன்மைகள்:-

பெண்கள் பர்தா அணிவதால் சமுதாயத்தில் கண்ணியமானவர்களாக அறியப்படுகிறார்கள்.
தீயவர்களின் தொல்லைகள், கேடுகளிலிருந்து தவிர்ந்துக் கொள்கிறார்கள்.

இவ்விரண்டு நன்மைகளுக்கும் டாக்டர் ஜாகிர் நாயக் கூறும் உதாரணம் மிகவும் பொறுத்தமானதாகும். நன்கு சம அழகுள்ள இரு இரட்டைப்பிறவி சகோதரிகள் கடைவீதியில் நடந்து செல்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு பெண் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்திருக்கிறாள். மற்றொரு பெண் உடலின் பாகங்களை வெளிக்காட்டும் மேற்கத்திய ஆடையான குட்டை பாவாடை அணிந்திருக்கிறாள். இப்போது இவ்விரு பெண்களில் கடைத்தெருவில் இருக்கும் சிலரால் கேலிக்கும், கிண்டலுக்கும், தொல்லைக்கும் ஆளாவது இஸ்லாமிய உடையணிந்திருக்கும் பெண்ணா? அல்லது குட்டை பாவாடை அணிந்திருக்கும் பெண்ணா? நிச்சயமாக குட்டை பாவாடை அணிந்தவள்தான் கேவலத்திற்கு உள்ளாவாள். ஏனென்றால் அவளுடைய ஆடை கடைத்தெருவிலிருக்கும் சிலரின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை அவ்வாறு தவறு செய்யத் தூண்டுகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக எவ்வளவு அற்புதமான திட்டத்தையல்லவா திருமறை வசனம் 33:59-ல் கூறியிருக்கிறது.

பெண்கள் பர்தா அணிவது பாலியல் குற்றங்களை முற்றிலுமாகத் தடுக்கின்றது.

இன்று உலகிலேயே பாலியல் பலாத்காரம் அதிகம் நடக்கும் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. இதற்கு அடுத்ததாக பிரான்ஸ் நாடு இருக்கிறது. 1990-ன் கணக்கெடுப்பின்படி சராசரியாக நாளொன்றுக்கு 1756 பாலியல் பலாத்காரங்கள் நடந்ததாக குற்றவியல் அறிக்கை கூறுகிறது. பிரான்ஸ் நாட்டில் ஆபாசப் படங்களுக்கு தணிக்கைகள் கிடையாததால் அங்கும் தற்போது பாலியல் பலாத்காரங்கள் மிகுந்து விட்டதாககூறி ஆபாசப்படத்திற்கு எதிராகப் போர்கொடி துவக்கியிருக்கிறார்கள் பிரான்ஸ் நாட்டு மக்கள். இங்கெல்லாம் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதற்குக் காரணம் ஆண்களை கிளர்ச்சியூட்டும் உடைகளை பெண்கள் அணிவதனாலேயாகும் என்று ஆய்வறிக்கைகள் தெள்ளத்தெளிவாக கூறுகின்றன.

இதற்கு நேர்மாற்றமாக பெண்களை பர்தா அணிய வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள் என மேற்கத்திய செய்து ஊடகங்களினால் விளம்பரப்படுத்தப்படும் நாடான சவுதி அரேபியாவில் பாலியல் குற்றங்கள் அறவே நடைபெறுவதில்லை என்று அதே ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதற்கு காரணம், முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தே வெளியில் செல்ல வேண்டும் என்ற சட்டமும் மற்றும் பாலியல் குற்றங்களுக்கான கடுமையான ஷரீஅத் சட்டமும் அமலில் இருப்பதேயாகும்.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.

1 Response to முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிய வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது?

  1. haja says:

    Masha allah…..i m very proud of u brother……allah give to u more and more nihmath…..u make duva for whole peoples….

Comments are closed.