கனவுகளுக்கு விளக்கமளித்தல்.

1462. ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘(இறைத்தூதர் அவர்களே!) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலே சென்றீர்கள் . பிறகு இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அவர் மேலே சென்றார்.பின்னர் வேறொருவர் அதன்பின் நான்காவதாக ஒருவர் அக்கயிற்றைப்பற்ற அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது” என்றார்.அப்போது (அங்கிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தைதங்களுக்குஅர்ப்பணம் ஆகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தக் கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்” என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘அந்த மேகம் தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்து) சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும்குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது, நீங்கள் இருந்து வருகிற சத்திய(மார்க்க)மாகும். அதை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்தி விடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப பின்பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்து விடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்து விடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்துவிடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார்” என்று கூறிவிட்டு, ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்” என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்கவேண்டும்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘(இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப்போவதில்லை)” என்றார்கள்.

புஹாரி : 7046 இப்னுஅப்பாஸ் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , , , , , . Bookmark the permalink.