வழிபாடுகளில் ஏற்றமானது தொழுகை. அத்தொழுகையில் குர்ஆன் ஓதுதல், துஆக்கள் கேட்டல், திக்ரு செய்தல் யாவும் அடங்கியிருக்கின்றன. இதில் ஒவ்வொன்றும் அதற்குரிய குறிப்பிட்ட இடத்தில் சொல்ல வேண்டுமென்பது சட்டம். தக்பீர் கட்டித் தொழுகையில் நுழைந்து ‘வஜ்ஜஹ்த்து, தனா போன்றவை ஒதி முடித்ததும் குர்ஆனிலிருந்து சிறிதளவு ஓதவேண்டும். ருகூவிலும், ஸுஜுதிலும் குர்ஆன் ஓதுதல் விலக்கப்பட்டுள்ளது. இவ்விரு இடங்களிலும் திக்ருகள், துஆக்கள் தான் ஓதவேண்டும். பெருமானார் அவர்கள் தொழுகையின் இறுதியில் பிரார்த்தித்திருக்கிறார்கள். தோழர்களிடமும் அதைப் போன்று பிரார்த்திக்க ஏவியிருக்கிறார்கள். குறிப்பாக ஸுஜுதில் துஆ செய்வது மிக ஏற்றமானது. ஸுஜுதில் அதிகமாகப் பிரார்த்திப்பதைப் பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பியிருக்கிறார்கள். நிலையிலும், ருகூவிலும் கூடப் பிரார்த்தனைகள் அனுமதிக்கப்படும். குர்ஆன் ஓதுவதும், திக்ரு செய்வதும் தொழுகையில் மிகச்சிறந்த கர்மங்களாக இருந்தும் கூட மனிதன் தன் இரட்சகனிடம் சிரம் பணிந்து பாவமன்னிப்புத் தேடுதல் சிலாகிக்கத் தக்கதாக கருதப்படுகிறது.
கலீலுல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் இரட்சகனிடம் அனைத்து நாட்டங்களையும் கேட்டு மன்றாடினார்கள். மற்ற நபிமார்களும் இதுபோன்றே செய்திருக்கிறார்கள். அவ்வாறாயின் சாதாரண மனிதன் அல்லாஹ்விடம் எப்படி மன்னிப்புக் கேட்டுத் தேவைகளுக்காகப் பிரார்த்திக்காமலிருக்க முடியும்? இதைப்பற்றி தெளிவாக இறைவன் விளக்கிக் காட்டுகிறான்: “எங்கள் ரப்பே! திட்டமாக நான் என் சந்ததிகளை மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக நான் வசித்திருக்கச் செய்தேன். அது விவசாயம் ஏதுமில்லாத ஒரு பள்ளதாக்கு. எங்கள் ரப்பே! அவர்கள் உன்னைத் தொழுது கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்கச் செய்தேன்) மனிதர்களில் ஒரு சாராரின் இதயங்கள் அவர்களை நாடும்படிச் செய்வாயாக! பற்பல கனிவர்க்கங்களையும் ஆகாரமாக அவர்களுக்கு அளித்தருள்வாயாக! அதற்கு அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள்.
எங்கள் ரப்பே! இதயங்களில் நாங்கள் மறைத்து வைப்பதையும், வெளிப்படுத்துவதையும் நீயே நன்கறிவாய். வானத்திலோ, பூமியிலோ உள்ளவற்றில் யாதொன்றும் அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல. சர்வபுகழும் அல்லாஹ்வுக்குரியது. அவந்தான் என்னுடைய வயோதிகத்தில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் எனக்குச் சந்ததிகளாக அளித்தான். நிச்சயமாக என் ரப்பு பிரார்த்தனையைச் செவியுறுபவனாக இருக்கிறான்.
ரப்பே! என்னையும், என் சந்ததிகளையும் உன்னைத் தொழுது வருபவர்களாக ஆக்கி வைப்பாயாக. எங்கள் ரப்பே! என்னுடைய பிரார்த்தனைகளை அங்கீகரித்துக் கொள்வாயாக.
எங்கள் ரப்பே! எனக்கும், என் பெற்றோருக்கும் மற்ற மூமின்களுக்கும் கேள்விக் கணக்கு கேட்கும் மறுமை நாளில் மன்னிப்பளிப்பாயாக என்று பிரார்த்தித்தார்”. (14:37-41)
“இப்ராஹீமும், இஸ்மாயீலும் கஃபத்துல்லாவின் அஸ்திவாரத்தைக் கட்டி உயர்த்திய போது: ‘எங்கள் ரப்பே! உன்னை வணங்குவதற்காக நாங்கள் அமைத்த இவ்வில்லத்தை எங்களிடமிருந்து ஏற்றருள்வாயாக. நிச்சயமாக நீயே நம்முடைய இப்பிரார்த்தனையைச் செவியுறுவோனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய்.
எங்கள் ரப்பே! எங்களிருவரையும் உனக்கு முற்றிலும் வழிப்படும் முஸ்லிம்களாகவும், எங்களுடைய சந்ததியிலிருந்து ஒரு கூட்டத்தினரை ஆக்கி வைப்பாயாக. (ஹஜ் காலத்தி நாம் புரிய வேண்டிய) எங்களுடைய வணக்கங்களையும் அறிவிப்பாயாக. (நாங்கள் தவறிழைத்து விட்டாலும்) எங்களை நீ மன்னிப்பாயாக. நிச்சயமாக நீயே மிக மன்னிப்போனும், நிகரற்ற அன்புடையோனுமாக இருக்கிறாய்.
எங்கள் ரப்பே! என் சந்ததிகளுக்கு உன்னுடைய அத்தாட்சிகளை எடுத்தோதிக் காண்பித்து, வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கக்கூடிய ஒரு தூதரை அவர்களிடமிருந்தே அவர்களுக்கு அனுப்பி வைப்பாயாக. நிச்சயமாக நீயே மிக்க வல்லோனும், நுண்ணறிவுடையோனுமாக இருக்கிறாய்’ என்றும் பிரார்த்தித்தார்கள்”. (2:127-129)
மேலும் மனிதன் தன் முஸ்லிம் சகோதரருக்காக வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது விரும்பத்தக்க செயல். இது விஷயமாக அபுத்தர்தா (ரலி) என்ற ஸஹாபி மூலமாக அறிவிக்கப்படும் ஸஹீஹான ஹதீஸாவது: நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மனிதன் கண் பார்வைக்கு அப்பாற்பட்டிருக்கும் தன் இஸ்லாமிய சகோதரனுக்காகப் பிரார்த்தித்தால் இம்மனிதனிடம் ஒரு மலக்கு ஏவிவிடப் படுகிறார்கள். ஒரு இஸ்லாமியன் உடன் பிறந்தவனுக்காக எப்பொழுதெல்லாம் இறைவனிடம் பிரார்த்திக்கிறானோ அப்பொழுதெல்லாம் மலக்கு இப்பிரார்த்தனையைக் கேட்டு ‘ஆமின்’ சொல்கிறார். அத்துடன் நீ பிரார்த்தித்தற்கொப்ப அல்லாஹ் உனக்கும் தந்தருள் புரியட்டுமென்றும் வேண்டுகிறார். இதனால் இருவரின் தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன.
அல்லாஹ்விடம் தனக்காகப் பிரார்த்திப்பதனால் தன் நாட்டங்கள் நிறைவேறுகின்றன. பிறருக்காகப் பிரார்த்திப்பதனால் தன்னுடையவும், பிறருடையவும் தேவைகள் கிடைக்கின்றன. இவ்வாறிருக்க மனிதன் மனிதனை நோக்கியே பிரார்த்தித்தால், மனிதன் மனிதனிடமே தேவைகளைக் கேட்டு முறையிட்டால் எவருடைய நாட்டமும் நிறைவேறாமல் போவதுடன் பிரார்த்திப்பவன் குற்றவாளியாகவும் ஆகிவிடுகிறான். ஏனென்றால் படைப்பினம் தன்னைப் போன்ற இன்னொரு படைப்பிடம் சென்று கேட்பதில் என்ன பயனிருக்கிறது. மனிதன் பிறரிடம் கேட்க அனுமதிக்கப்பட்ட விஷயங்களைத் தவிர வேறு எதையும் எத்தனைப் பெரிய மனிதரிடமும் கேட்டு நிற்கக் கூடாது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…