“ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக் கூடாது. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி என நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?” “நீங்கள் என்னையே வணங்க வேண்டும். இதுதான் நேரான வழியென்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?”
“(அவ்வாறிருந்தும்) உங்களில் பெருந்தொகையினரை அவன் நிச்சயமாக வழிகெடுத்து விட்டான். இதனை நீங்கள் அறிந்து கொள்ள வில்லையா?”. (36:60-62)
“என் அடியார்களிடத்தில் நிச்சயமாக உனக்கு யாதொரு செல்வாக்கும் இராது. வழிகேட்டில் உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர”. (15:42)
“(நபியே!) நீர் திருக்குர்ஆனை ஓத ஆரம்பித்தால் (அதற்கு முன்) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டுக் காக்கும்படி அல்லாஹ்விடம் கோரிக் கொள்ளும்.* எவர்கள் விசுவாசம் கொண்டு தங்கள் இறைவன் மீது தவக்குல் வைத்திருக்கிறார்களோ அவர்களிடத்தில் நிச்சயமாக (இந்த) ஷைத்தானுக்கு யாதொரு அதிகாரமுமில்லை. அவனுடைய அதிகாரமெல்லாம் அவனுடன் சம்பந்தம் வைத்திருப்பவர்களிடமும், அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களிடமுமே செல்லும்”. (16:98-100)
“எவன் ரஹ்மானுடைய நல்லுபதேசத்திலிருந்து கண்ணை மூடிக் கொள்கிறானோ அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை (சினேகிதனாக) காட்டி விடுவோம். அவன் இவனுக்கு இணைபிரியாத தோழனாகி விடுவான். நிச்சயமாக அவைதாம் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. எனினும் அவர்களோ தாங்கள் நேரான பதையில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வார்கள்”. (43:36-37)
“நிச்சயமாக நாம்தாம் இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம். ஆகவே (அதில் எத்தகைய மாறுதலும், அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனை இரட்சித்துக் கொள்வோம்”. (15:9)
“நிச்சயமாக என்னுடைய நேர்வழி உங்களிடம் வரும். எவன் என்னுடைய நேர்வழியைப் பின்பற்றுகின்றானோ அவன் வழிதப்பவும், நஷ்டமடையவும் மாட்டான். எவன் என்னுடைய நல்லுபதேசத்தைப் புறக்கணிக்கின்றானோ, அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும்.** மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாக எழுப்புவோம். அவன் என் இறைவனே! நீ ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய். நான் (உலகில்) பார்வையுடையவனாக இருந்தேனே என்று கேட்பான். அதற்கு இவ்வாறே நம் வசனங்களும் உன்னிடம் வந்தன. நீ அவற்றை மறந்து விட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய் என்று இறைவன் கூறுவான்”. (20:123-126)
“அலிஃப், லாம், மீம், ஸாத். (நபியே! இவ்) வேதம் உம்மீது அருளப் பெற்றுள்ளது. இதைப் பற்றி உம்முடைய நெஞ்சத்தில் யாதொரு நெருக்கமும் வேண்டாம். இதனைக் கொண்டு நீர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், விசுவாசம் கொண்டோருக்கு ஒரு நல்லுபதேசமாகவும் அருளப் பெற்றுள்ளது. (மனிதர்களே!) உங்களுக்கு உங்கள் இறைவனால் அருளப்பட்டதைப் பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்கு) பாதுகாப்பாளர் (களாக ஆக்கி அவர்) களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும் இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவது வெகு சொற்பமே”. (7:1-3)
“(நபியே! இது) வேதநூல்.இதனை நாமே உம்மீது அருட்செய்திருக்கிறோம். (இதன் மூலம்) மனிதர்களை அவர்களின் இறைவனின் கட்டளைப் பிரகாரம் இருள்களிலிருந்து வெளியேற்றி பிரகாசத்தின்பால் நீர் கொண்டு வருவீராக. (அப்பிரகாசமே) மிக்க புகழுக்குரிய (அல்லாஹ்வாகிய, யாவரையும்) மிகைத்தோனின் நேரான வழியாகும். அந்த அல்லாஹ் (எத்தகையோனென்றால்) வானங்களிலும், பூமியிலும் இருப்பவை யாவும் அவனுக்கே சொந்தமானவையே. ஆகவே நிராகரிப்போருக்கு வந்தடையும் கடினமான வேதனையின் காரணமாக (அவர்களுக்கு) பெருங்கேடுதான்”. (14:1-2)
“(நபியே!) உமக்கு நம்முடைய கட்டளைகளில் உயிரானதை (குர்ஆன்) வஹி மூலம் அறிவிக்கிறோம். (இதற்கு முன்னர்) நீர் வேதம் இன்னதென்றும், விசுவாசம் இன்னதென்றும் அறிந்தவராக இருக்கவில்லை. ஆயினும் (இவ்வேதத்தை உமக்கு வஹி மூலம் அறிவித்து) இதனைப் பிரகாசமாகவும் ஆக்கி நம் அடியார்களில் நாம் விரும்பியவர்களுக்கு இதனைக் கொண்டு நேரான வழியைக் காண்பிக்கின்றோம். (நபியே!) நிச்சயமாக நீர் (இதன் மூலம் ஜனங்களுக்கு) நேரான வழியைக் காண்பிக்கின்றீர். இதுதான் அல்லாஹ்வுடைய வழி. வானங்களிலும், பூமியிலும் இருப்பவை (யாவையும்) அவனுக்குச் சொந்தமானவையே. சகல காரியங்களும் அவனிடம் வந்தே தீரும் என்பதை (நபியே!) நீர் அறிந்து கொள்வீராக”. (42:52-53)
* நாவளவில் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன்) என்று சொல்ல வேண்டுமென்பது மட்டுமல்ல இதன் கருத்து: அத்துடன் ‘திருக்குர்ஆனை ஓதிடும்போது ஷைத்தானின் வழிகெடுக்கும் ஊசலாட்டங்களை விட்டு அல்லாஹ் என்னைப் பாதுகாப்பானாக!’ என்றும் உளமார்ந்த முறையில் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். ஏனெனில், எவன் குர்ஆனிலிருந்து நேர்வழி பெறவில்லையோ அவன் வேறு எங்கிருந்தும் நேர்வழி பெற முடியாது. எவன் குர்ஆனிலிருந்து வழிகேட்டை அடைகிறானோ அவனை இவ்வுலகமனைத்தும் சேர்ந்தும் கூட வழிகேட்டிலிருந்து விடுவிக்க முடியாது.
** “உலகில் நெருக்கடியான வாழ்க்கை உண்டு” — என்பதன் கருத்து, ஏழ்மையோ ஆதரவின்மையோ அவனை வருத்தும் என்பதல்ல. மாறாக, இங்கு அவன் மன அமைதியை இழந்து விடுவான். அவன் பெருஞ் செல்வந்தனாக இருந்தாலும் நிம்மதியிழந்தே வாழ்வான். அவன் முழு அதிகாரத்துடன் நாட்டை ஆள்பவனாக இருந்தாலும் மனக்குழப்பம், அமைதியின்மை ஆகியவற்றிலிருந்து ஈடேறமாட்டான். அவனுடைய உலகியல் வெற்றிகளெல்லாம் ஆயிரக்கணக்கான முறையற்ற நடத்தைகளின் விளைவுகளாகும். அவற்றின் காரணமாக தனது மனசாட்சி முதல் அக்கம் பக்கத்திலுள்ள முழு சமூகச்சூழல் வரை ஒவ்வொன்றோடும் அவன் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கவேண்டி வரும். அது அவனை நிம்மதியுடனும், மன அமைதியுடனும், உண்மையான மகிழ்ச்சியுடனும் வாழ விடாது.
பிரகாசத்தின்பால் அழைப்பு!
This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.