இறை சாபத்துக்குள்ளான மன எரிச்சல்!

3:118-120 இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்களை உங்கள் அந்தரங்க நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய பலவீனங்களை பயன்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் நழுவவிடுவதில்லை. உங்களைத் துன்புறுத்தக்கூடியது அவர்களுக்கு விருப்பமானதாய் இருக்கிறது. அவர்களுடைய வாய் மூலமாகவே அவர்களுடைய காழ்ப்புணர்வு வெளிப்படுகிறது. இன்னும் அவர்கள் தங்கள் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருப்பவை (இவற்றை விட) அதிக கொடியனவாக இருக்கின்றன. நிச்சயமாக நாம் தெளிவான அறிவுரைகளை உங்களுக்கு அளித்திருக்கின்றோம். நீங்கள் அறிவுடையோராயின் (அவர்களோடு தொடர்பு கொள்வதில் விழிப்புடன் இருங்கள்) அவர்களை நீங்கள் நேசிக்கிறீர்கள்; ஆனால் அவர்கள் உங்களை நேசிப்பதில்லை. நீங்களோ எல்லா இறைவேதங்களின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்! அவர்கள் உங்களைச் சந்திக்கும் போது, “நாங்களும் (உங்களுடைய தூதரையும், வேதத்தையும்) நம்புகிறோம்” எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்றதுமே, உங்கள் மீது மன எரிச்சல் கொண்டு தம் விரல் நுனிகளைக் கடிக்கிறார்கள். — அவர்களிடம் நீர் கூறுவீராக: “நீங்கள் உங்கள் எரிச்சலிலேயே மூழ்கி சாகுங்கள். திண்ணமாக, அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களில் மறைந்திருப்பவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.” — உங்களுக்கு நன்மை ஏதும் கிட்டிவிட்டால் அது அவர்களை வருந்தச் செய்கிறது. மேலும், உங்களுக்கு துன்பம் நேர்ந்து விட்டாலோ அது அவர்களை மகிழ்வுறச் செய்கிறது. ஆனால் நீங்கள் நிலைகுலையாமலும், அல்லாஹ்வுக்கு அஞ்சியும் வாழ்ந்தால் (உங்களுக்கெதிராக) அவர்கள் கையாளுகின்ற சூழ்ச்சி எந்தப் பலனையும் தரப்போவதில்லை. திண்ணமாக, அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற அனைத்தையும் அல்லாஹ் சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.

அல் குர்ஆன்: சூரா ஆல இம்ரான்.

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.