கூத்தாநல்லூரில் அல்லாஹ்வுக்கு இணை வைத்தலுக்கு ஒரு மாநாடு

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

பாரம்பரியம் என்றும், முன்னோர்களின் வழிமுறையில் நிலைத்திருத்தல் என்றும் கூறிக் கொண்டு இஸ்லாமிய வழிமுறையை விட்டும் மக்களை திசைதிருப்பி விடும் மௌலானாக்களின், மௌலவிகளின் இஸ்லாமிய விரோதப் போக்கை கவனியுங்கள்.

அல்லாஹ் உலக கல்வி மூலம் சிலருக்கு இல்மைக் (அறிவைக்) கொடுத்து, அவர்களுடைய பாவச்செயல்களின் காரணத்தால் உண்மையை மறைத்து விடுகிறான். ஆனால் இவர்களோ தாங்கள் உண்மையின் மீது நிலைத்திருப்பதாக எண்ணிக் கொண்டு தாங்களும் கெட்டு, தங்களைச் சார்ந்தவர்களையும் வழிகெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்
mahaboob-subhani-copy

அப்துல் வஹ்ஹாப், (கொடையாளனாகிய அல்லாஹ்வின் அடிமை) அப்துர்ரஹ்மான் (அருளாளனனாகிய அல்லாஹ்வின் அடிமை) இதோடு “முஹ்யித்தீன் அடிமை’ ஒப்பிட்டுப் பாருங்கள். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். இதுவல்லவோ தெளிவான இணைவைத்தல். மார்க்கம் கற்ற அறிஞர்களை பின்பற்றுகிறோம், அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற மனப்பால் குடித்துக் கொண்டு அல்லாஹ்வின் கொடிய வேதனை மிக்க நரகை நோக்கி பயணிக்கும் என் அருமை கூத்தாநல்லூர் மார்க்க சகோதரா விழித்துக் கொள்!

இன்னும், அவர்களில்  எவரேனும் “அல்லாஹ்வையன்றி  நிச்சயமாக நானும் ஆண்டவன்தான்” என்று கூறுவாரேயானால்,   அ(த்தகைய)வருக்கு – நாம் நரகத்தையே  கூலியாகக்  கொடுப்போம் – இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக்   கூலி கொடுப்போம். அல்குர்ஆன்: 21:29

மேலுள்ள இறைவசனத்தை அல்லாஹ்வின் மீதுள்ள உள்ளச்சத்தைக் கொண்டு படித்து விட்டு, முஹ்யித்தீன் ஆண்டகை என்று கூறுகிறீர்களே அதை சற்று சீர்தூக்கிப் பாருங்கள். நம்பிக்கைக் கொண்டபின், மொழிகின்ற வார்த்தைகளால் குஃப்ருடைய பக்கம் செல்லுதல் நியாயமோ?

இதே தலைப்பை ஒட்டிய சுவனத்தென்றல் தளத்தின் ஆக்கம் ஒன்றும் அனுமதியுடன் இங்கே பிரசுரிக்கப்படுகிறது.

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

நபி (ஸல்) அவர்களின் பிறந்த மாதமாகிய ரபியுல் அவ்வல் முடிந்து விட்டது. பித்அத்களையும் பிறமத கலாச்சாரங்களையும் பின்பற்றுபவர்கள் ரபியுல் அவ்வல் மாதம் முழுவதும் மீலாது விழா என்ற பெயரில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் இல்லாத பல புதிய அனாச்சாரங்களை நிறைவேற்றினர். அதை அடுத்து வந்திருக்கின்ற இந்த ரபியுல் ஆகிர் மாதத்தில் ரபியுல் அவ்வல் மாதத்தில் சிலர் நிறைவேற்றிய அனாச்சாரங்களுக்குப் போட்டியாக இந்த மாதத்திலும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நோக்கில் முஹ்யித்தீன் அப்துல் ஜீலானியின் (ரஹ்) நினைவு தினத்தைக் கொண்டாடும் விதமாக இம்மாதம் முழுவதும் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்)நினைவு மாநாடு நடத்துகின்றனர்.
இவ்வகை மாநாடுகளில் மீலாது விழாக்களில் நடக்கும் அனாச்சாரங்களை எல்லாம் மிஞ்சி விடும் அளவிற்கு எல்லை மீறி ஷிர்கின் உச்சக்கட்டத்தை அடைகின்றனர்.

ஆம். தஞ்சை, நாகை திருவாரூர் போன்ற மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர்களில் உள்ளவர்கள் ரபியுல் ஆகிர் மாதத்தில் முதல் பதினோரு நாட்களுக்கு முஹ்யித்தீன் ஆண்டகையை? (அவர்கள் அப்படித்தான் அழைக்கின்றனர்) நினைவு கூறும் முகமாக அவர்கள் பெயரில் கொடி ஏற்றி, தபரூக் வழங்கி, பயான் நிகழ்ச்சி நடத்துகின்றனர். இதில் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானியின் (ரஹ்) வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் இறைவனையும் மிஞ்சிய ஆற்றலுள்ளவராக அவரைச் சித்தரித்து கற்பனைக் கதைகளை முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களின் கராமத் (அற்புதங்கள்) என்று கட்டவிழ்த்து விடுகின்றனர். பிறகு பதினோராம் நாளின் இறுதியில் நபி (ஸல்) அவர்களின் மீலாது விழா மாநாட்டை மிஞ்சும் அளவிற்கு பெரிய மாநாடு நடத்துகின்றனர்.

இந்த மாநாட்டின் இறுதியில் அனைவரும் எழுந்து நின்று ‘யா கவ்துல் அஃலம் யா முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி ’ என்று ஒட்டு மொத்தமாக உரக்கக் கூவி அவரை ஆயிரத்து ஒரு (1001) முறை அழைக்கின்றனர். அவ்வாறு அழைக்கும் போது முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவ்விடத்திற்கு பிரசன்னமாகி ஒவ்வொருவரும் தம் மனதில் என்ன நாட்டத்தை நினைத்து அவரை அழைத்தாரோ அதை நிறைவேற்றுகிறார் என்று நம்புகின்றனர்.
இதைவிட மிகவும் மோசமானது என்ன வென்றால் முஹ்யித்தீன் ராத்திபு என்ற பெயரில் சிலர் இரவில் வட்டமாக அமர்ந்து தங்களுக்கு முன் ஒரு பெரிய தட்டு ஒன்றில் சில மாவுகளை தூவிவிட்டு பின்னர் விளக்குகளை எல்லாம் அனைத்து விட்டு மேற்கூறியவாறு முஹ்யித்தீன் ஆண்டகையை ஆயிரத்து ஓர் முறை அழைக்கின்றனர். அவ்வாறு அழைத்து முடித்ததும் பின்னர் விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தால் மாவு தூவப்பட்ட அந்த தட்டில் ஒருவரின் காலடித்தடம் இருக்கிறது. அந்த காலடித்தடம் முஹ்யித்தின் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் அங்கு வருகை தந்ததற்கான அடையாளமாம்.

மேலும் அவ்வாறு அவரை ஆயிரத்து ஓர் முறை இருட்டில் அழைத்துக் கொண்டிருக்கும் போது ஓர் ஒளி தென்படுமாம்! அதுவும் பக்தியுடன் அழைப்பவருக்கு மட்டும் தான் அந்த ஒளி தென்படுமாம். அந்நிகழ்ச்சி முடிந்ததும் அந்த ஒளியை நீ பார்த்தாயா? என்று அதில் கலந்துக் கொண்டவர்களைப் பார்த்து ஒவ்வொருவராக அந்த நிகழ்ச்சியின் கலீபா (அதை தலைமை தாங்கி நடத்துபவர்) கேட்பார். அனைவரும் பேந்த பேந்த விழ்த்துக் கொண்டு நான் பார்த்தேன் என்று கதையளப்பார்கள்.

இதை கற்பனையாக நான் எழுதுவதாக யாரும் நினைக்க வேண்டாம். நான் அவர்களுள் ஒருவனாக அறியாமையில் மூழ்கியிருந்தபோது இந்த வகை ராத்திபுகளில் பங்கு கொண்டிருக்கின்றேன். அதற்காக கருனையாளாகிய அல்லாஹ் என்னை மன்னித்தருள வேண்டும் என அவனிடம் மன்றாடுகிறேன். கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் அவர்கள் இத்தகைய அறிவீனமான செயல்களை இன்னமும் செய்து கொண்டுதானிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டுமாறு பிரார்த்திப்போமாக!

இதைவிடக் கொடுமை என்னவென்றால் நாகை, தஞ்சை, திருவாரூர் (எனக்குத் தெரிந்த மாட்டங்கள்) போன்ற மாவட்டங்களில் உள்ளவர்களில் பலர் தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரும் போது அவர்களை அறியாமல் அவர்களின் வாயிலிருந்தும் உதிரும் வார்த்தை என்ன வெனில் ‘யா முஹ்யித்தீன்’. அதாவது நம்மையறியாது ஒரு ஆபத்து நிகழும் போது நாம் ‘யா அல்லாஹ்’ என்று இறைவனை அழைத்து உதவி தேடுவது போல் அவர்கள் முஹ்யித்தீனை அழைத்து அந்த ஆபத்திலிருந்து அவர்களைக் காக்குமாறு வேண்டுகின்றனர். இன்றளவும் பலர் இதை தொடர்ந்து செய்கின்றனர்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் ‘அவனைத் தவிர வேறு ஒருவரை அழைப்பவர்கள் மிகுந்த வழிகேட்டில் இருக்கிறார்கள்’   என்று கூறுகிறான்.

“கியாம நாள்வரை (அழைத்தாலும் ) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை  அழைப்பவர்களை  விட வழி கெட்டவர்கள்  யார்? தங்களை அழைப்பதையே  அவர்கள் அறிய முடியாது.  அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும்  (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய  பகைவர்களாக  இருப்பர் ; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும்  நிராகரித்து  (மறுத்து) விடுவர்.” (அல்-குர்ஆன் 46:5-6)

இவ்வாறு அழைக்கப்படுபவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்வதற்கு சக்தியற்றவர்களாக இருக்கின்றனர் என அல்லாஹ் கூறுகிறான்: –

“அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி (த்து அழை)க்கின்றீர்களோ ,  அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும்  இல்லை. நீங்கள் அவர்களைப்  பிரார்த்தி(த்து அழை)த்தாலும் ,  அவர்கள் உங்கள் பிரார்த்தனையை  (அழைப்பை )ச் செவியோற்கார் ; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்  ; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும்  அவர்கள் நிராகரித்து  விடுவார்கள்; யாவற்றையும்  நன்கு அறிபவனைப்  போன்று  (அவர்கள் ) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். (அல்-குர்ஆன் 35:13-14)

இப்னு அல்-கைய்யூம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

இறந்தவர்களை  அழைத்து தேவைகளை  கோருவது,  அவர்களின் உதவியை நாடுவது,  அவர்களின் பால் திரும்புவது  ஆகியவைகள் அனைத்தும் ஷிர்கின் (இணை வைத்தலின் ) வகைகளாகும்.  இவைகள் தான் ஷிர்கின் (இணை வைத்தலின் ) முக்கிய அடிப்படைகளாகும். ஆதாரம் : பத்-அல் மஜீத்

இணை வைத்தவர்களுக்கு  மன்னிப்பே  கிடைக்காது!

”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான் அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்.  அல்லாஹ்வுக்கு  இணை கற்பிப்பவர்  மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்.” (திருக்குர்ஆன், 004:048,116)

அல்லாஹ் முஸ்லிமான நம் அனைவருக்கும் அவனுடைய கருணையை பொழிந்து இணை வைக்கும் படுபயங்கர செயல்களிலிருந்து நம்மைக் காத்தருள்வானாகவும்.

நன்றி: சுவனத்தென்றல்

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.

10 Responses to கூத்தாநல்லூரில் அல்லாஹ்வுக்கு இணை வைத்தலுக்கு ஒரு மாநாடு

  1. Knrian says:

    மாற்று மதத்தவர்கள் தங்களின் தெய்வங்களுக்கு பால், சந்தனம் மற்றும் நெய் அபிசேகம் செய்வதைப் போல் இவர்களும் அவுலியாக்களின் கப்றுகளுக்கு சந்தனம் பூசுகிறார்கள்.

    அவர்கள் தேர் திருவிழா நடத்துவது போல் இவர்களும் சந்தனக் கூடு திருவிழா நடத்துகிறார்கள்,

    அவர்கள் தங்களின் தெய்வங்களுக்கு பட்டாடை அணிவிப்பது போல இவர்களும் கப்றுகளுக்கு பட்டுப் போர்வை போர்த்துகிறார்கள்,

    அவர்கள் தங்களின் தெய்வங்களுக்கு மாலை மற்றும் அணிகலன்கள் அணிவிப்பது போன்று இவர்களும் கப்றுகளுக்கு பூ மாலை அணிவிக்கிறார்கள்,

    அவர்கள் தங்களின் தெய்வங்களுக்கு நேர்ச்சை செய்து உண்டியலில் காணிக்கை செலுத்துவது போல் இவர்களும் கப்றுகளில் உள்ள தங்களின் ஆண்டவர்களுக்கு நேர்ச்சை செய்து உண்டியலில் காணிக்கை செய்கின்றனர்.

    அவர்கள் வருடத்திற்கு ஒருமுறை தங்களின் தெய்வத்திற்கு திருவிழா எடுப்பது போல் இவர்களும் தங்களின் ஆண்டவர்களுக்கு திருவிழா எடுத்து அவர்களை பூஜிக்கின்றனர்.

    இவ்வாறு அனைத்து விஷயங்களிலும் ஒரே மாதிரியாக செய்யும் அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

    ‘யார் பிற (மத) கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவர் தான்’ என்ற நபி மொழியின் அடிப்படையில் அவர்கள் இரு வகையினரும் ஒரே பிரிவினர் தான்.

  2. Burhan says:

    விட்டாலாச்சாரியாரின் படங்களையும் மிஞ்சிவிடும் அளவிற்கு அப்துல் காதர் ஜீலானியின் பெயர்களில் கட்டுக் கதைகளையும் நபிமார்கள், மலக்குகள் ஏன் இறைவனை விடவும் சக்தி வாய்ந்தவராக அவரை சித்தரித்து கதையளந்துள்ளார்கள். ஜைத்தூன் கிஸ்ஸா, நூறு மசாலா, விறகு வெட்டியார் கிஸ்ஸா போன்ற கட்டுக் கதைகளையே மார்க்கம் என்று எண்ணி பக்தி பரவசத்துடன் அந்தக் கதைகளை கேட்டு நம்பி வந்தவர்கள் முஹ்யித்தீன் பெயரால் இருக்கும் இந்தக் கட்டுக் கதைகளையும் எப்படி நம்பாமல் இருப்பார்கள்?

    கேடு கெட்ட புரோகித மவ்லவிகளும் (ஹஜ்ரத் மார்கள்) இதற்கு உடந்தை வேறு!

    குர்ஆன் மற்றும் ஏராளாமான நபிமொழி தொகுப்புகளும் எளிய தமிழில் வந்திருக்கும் போது அதை மக்களுக்கு போதிக்காமல் அதை விட்டுவிட்டு கட்டுக்கதைகளை மார்க்கம் என்று மேடை போட்டு மக்களுக்கு கதை விடுகிறார்கள் இந்த புரோகித மவ்லவிமார்கள்!

  3. MOHAMED says:

    நல்ல தகவல்களை இங்கு கொடுத்துள்ளிர்கள் எல்லா புகழும் இறைவனுகே.

    அல்லாஹ் அவர்களுக்கும், நமக்கும் நேர்வழி காட்டுவானாக. ஆமீன்.

  4. Siraj says:

    உங்களைபோல முட்டாள்களுக்கு மூடர்களுக்கு எவ்வளவு சொல்லியும் புரிய போவதில்லை, ஏன் டா? மஹான்களின் பெயர் கூறினால் அது ஷிர்கா?. உன் அப்பன் பெயரை நீ கூறினால் அது ஷிர்ககடா முட்டாள்…

    • Jafar Ali says:

      சிராஜ் போன்ற சகோதரர்களைப் பார்க்கும் போது இந்த தவ்ஹீதுடைய பிரச்சாரத்தில் இன்னும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. அல்லாஹ் இலேசாக்குவானாக!

  5. அலீம் கூத்தாநல்லூர் says:

    கூத்தாநல்லூரில் அல்லாஹ்விற்கு இணைவைத்தல் மாநாடு என்ற தலைப்பில் அறிவுப்பு தந்து இருந்தாய் உனக்கு இணைவைத்தல் என்ற வார்த்தைக்கு PJ மற்றும் பல குழப்பவாதிகள் கூறிய அர்த்தங்களை வைத்துக்கொண்டு இந்த அறிவுப்பு செய்து இருந்தாய். இன்றைய கால கட்டத்தில் நாளுக்கு ஒரு கருத்து, நாளுக்கு ஒரு மறுப்பு கொடுத்து வரும் தவ்ஹீது கொள்கைகளை பாலாக்கி வரும் மடையர்களின் வழிகேட்டில் இருந்து உங்களை போன்ற மடையர்கள் இருக்கும் வரை எங்களை போன்ற சீர்திருத்தவாதிகள் இருந்த வண்ணமே இருக்கும் என்பதில் உங்களுக்கு எந்த ஒரு ஐயம் வேண்டாம்.

  6. Burhan says:

    அன்பு சகோதரர் சிராஜ் அவர்களுக்கு,

    மஹான் பெயரைக் கூறுவதிலும் தவறில்லை! அல்லது தந்தையின் பெயரைக் கூறுவதிலும் தவறில்லை. ஆனால் என்றோ இறந்து அடக்கம் செய்யப்பட்டு பல நூறு வருடங்கள் ஆனவரை அழைத்து உதவி தேடுகிறார்களே! மேலும் அந்த மகான்கள் கப்றுகளில் உட்கார்ந்து கொண்டு நீங்கள் கூப்பிட்டவுடன் ஓடி வந்து உங்களுக்கு உதவி செய்வதாகவும் நம்பிக்கை வேறு கொள்கிகிறார்களே! இதற்கு எதேனும் இஸ்லாமிய அடிப்படை உண்டா? நடு நிலையோடு சிந்தியுங்கள்.

    பல இறை வசனங்கள் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து உதவிதேடக் கூடாது என்றும் அவ்வாறு அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து உதவி தேடுவது இறைவனால் மன்னிக்கப்படாத மாபெரும் பாவம் என்று இறைவன் கூறியிருக்க எங்களுக்கு குர்ஆனின் போதனைகள் எல்லாம் தேவையில்லை! கப்று வணங்கிகளான எங்களின் முன்னோர்களின் வழிமுறைகளைத் தான் நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுவது தான் புத்திசாலித்தனமா? (பார்க்கவும் : http://suvanathendral.com/portal/?p=211 )

    மக்கத்து இறை நிராகரிப்பாளர்கள் கூட படைத்துப் பரிபாலிப்பவன் அல்லாஹ் மட்டுமே என்றே நம்பி வந்தார்கள். ஆனால் இன்றைய கப்று வணங்கிகளோ இறைவனுக்கே உரிய அந்தத் தன்மைககளையும் மஹான்களின் கராமத்துகள் என்ற கப்ஸாக்களில் (கட்டுக் கதைகளில்) தங்களின் குத்புல் அக்தாப்களுக்கு பங்கிட்டு மாபெரும் இணைவைக்கின்றனர். மக்காவின் அன்றைய முஷ்ரிக்குகளுக்கும் இன்றை கப்று வணங்கிகளுக்கும் என்ன வித்தியாசம்?

    நடுநிலையுடன் அறிவாளிகளான நீங்கள் இந்தச் சுட்டியை கிளிக் செய்து படித்துப் பாருங்கள். http://suvanathendral.com/portal/?p=275

  7. Burhan says:

    சீர்த்திருத்தவாதி அலீம் அவர்களுக்கு,

    அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

    இணைவைத்தல் என்பதற்கு சகோதரர் பி.ஜே. மற்றும் குழப்பவாதிகளின் கூறிய அர்த்தங்களின் அடிப்படையில் இந்த ஆக்கம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறீர்கள். குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும், சகோதரர் பி.ஜே. உட்பட எத்தகைய மகான்காளாக இருந்தாலும் அவர்களுக்கு மார்க்கத்தில் கடுகளவேனும் புதிதாக நுழைத்திடவோ அல்லது மார்க்கத்திலிருந்து நீக்கிவிடவோ உரிமையில்லை என்று கூறும் நாங்கள் சகோதரர் பி.ஜே. போன்றவர்களின் அர்த்தங்களை பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை.

    இறைவன் அருளிய அவனது சத்திய திருவேதத்திலும் அவனது திருத்தூதரின் அழகிய வழிகாட்டுதல்களான ஹதீஸ்களிலும் இணைவைத்தல் என்றால் என்ன என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் போது நாம் ஏன் பி.ஜே. போன்றவர்களைப் பின்பற்ற வேண்டும். மாறாக அவ்வாறு கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களை நாம் விமர்சித்து குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை பின்பற்றுங்கள் என்றல்லவா கூறிக்கொண்டிருக்கிறோம்.

    அறிஞர்களையும் பெரியார்களின் கூற்றையும் மார்க்கம் என்று எண்ணி செயல்பட்டால் அதற்கு கடுமையான தண்டணைகள் இருக்கிறது என்று குர்ஆன் எச்சரிக்கிறது.

    இணைவைத்தலுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான விளக்கத்தை பின்வரும் சுட்டிகளின் மூலம் உங்களுக்குத் தருகிறோம்.

    http://suvanathendral.com/portal/?p=22
    http://suvanathendral.com/portal/?p=26

    மேற் கூறப்பட்ட சுட்டிகளின் மூலம் கூறப்பட்ட விளக்கங்கள் தவறு என்று சீர்திருத்தவாதிகளான நீங்கள் கூறினால் இதற்குரிய ஆதாரத்துடன் உங்களின் விளக்கங்களை அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் கூறுங்கள். சத்தியம் எங்கிருக்கிருக்கிதோ அதை நாம் ஏற்கத் தயாராக இருக்கிறோம்.

  8. Knrian says:

    ஜீலான் நகரில் அபூஸாலிஹ் எனும் பெரியாருக்கும் பாத்திமா எனும் அம்மை- யாருக்கும் புதல்வனாக ஹிஜ்ரி 47 – ம் ஆண்டு ரமழான் முதல் தேதியில் அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் பிறந்தார்கள். இவர்கள் இல்லறத்தை நல்லறமாகவும் இறைப்பணியையும் செவ்வனே செயல்படுத்தி வந்தார்கள்.

    இவரின் மறைவு ஹிஜ்ரி 561-ம் ஆண்டு ரபியுல் ஆகிர் மாதமாகும். இவர் இல்லறத்தை ஏற்று 27 ஆண் பிள்ளைகளையும், 22 பெண் பிள்ளைகளையும் பெற்றார்கள். துறவறம் மேற்கொண்டதில்லை.

    இவர்கள் தமது காலமெல்லாம் ஏகத்துவத்தை நிலை நிறுத்தும் அறப்போருக்குத் தம்மை அற்பணித்தவர். இவரின் மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். துக்க தினமான நாளில் கூடு இழுத்து கும்மாளமிட்டுத்திரியும் இவர்களை உருவாக்கிய கைக்கூலிகள் யார்? இறந்த தினத்தை சந்தோசமாக கொண்டாடும் இவர்களின் அறிவீனம் தான் என்ன?

    குர்ஆன் ஹதீஸ் மட்டுமே சான்றாகக் கொண்டு செயல்பட்ட இவர்களின் போதனைகள் ஒவ்வொன்றும் தத்துவ முத்துக்கள்! இவர்களின் நூல்கள் பிரசித்து பெற்றவை. ஃபத்ஹுர் ரப்பானி, குன்யத்துத்தாலிபீன், புதூஹுல்கைப் இவைகள் ஏகத்துவத்தின் அற்புத கருவூலங்களாகும். இவையன்றி, மற்ற பல நூல்கள் அன்னாரை அவமதிக்கும் படைப்புகளே.

    குர்ஆன்- ஹதீஸை மாற்ற – திரிக்க – திணிக்க முடியவில்லை. ஆகவே, மகான்களின் பேரால் தமது ஆதாயத்திற்காக மகான்களைப் பகடையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். சில அரபி அரை குறை பண்டிதர்கள், இவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகளைப் போல் வேறு எவருக்கும் கிடையாது. அவைகளில் சில………

    எல்லா நபிமார்களுடன் ஆபத்து காலங்களில் அவர்களுடன் இருந்ததாகவும் ஏன் அல்லாஹ்வின் அருகில் தொட்டிலில் படுத்திருந்ததாகவும், நபியவர்களின் மிஃராஜ் பயணத்தின் போது அவர்களை தம் தோள் கொடுத்து தூக்கிவிட்டவர்கள் என்றும், அவர் பிறந்த போது அன்றைய நாளில் பிறந்த குழந்தைகள் யாவும் நோன்பு நோற்றன என்றும் அவர்கள் அனைவரும் முடிவில் ‘வலீ’ (இறைநேசர்) ஆக மாறினர் என்றும்; அவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது அனைத்து வானவர்களும் வலீ வருகிறார் வழிவிட்டு நில்லுங்கள்! என்று கூறுவார்கள் என்றும்; கோழியை தின்று விட்டு எலும்புத் துண்டுகளை வைத்து கோழியை உயிரூட்டினார்கள் என்றும், பிரசங்கத்தில் ஒரு பாம்பு இவர்களின் பயானை ஆர்வமுடன் கேட்க அவர் தோளில் தொற்றிக்கொண்டு அவருடன் பேசும் என்றும்; கபரஸ்தானில் உள்ள மைய்யத்துக்கள் இவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டு சவக்குழியில் இருந்து வெழி வந்தன என்றும்; உயிரை பறிக்கும் ‘மலக்குல் மவ்த்’ பறித்த உயிர்களை, அவரை அறைந்து வெளியே மீட்டார்கள் என்றும், பல நூற்றாண்டுகளாக கடலில் மூழ்கிக் கிடந்த கப்பலையும், பிணங்களையும் மீட்டார்கள் என்றும் இவரின் மீது புனையப்பட்ட பகுத்தறிவுக்கப்பாற்பட்ட அபத்தமான கற்பனை கதைகள் ஏராளம்! ஏராளம்!!

    மக்களை விட்டு விலகி – கம்பளி உடை தரித்து- உலகை, மணவாழ்க்கையை வெறுத்து துறவறம் கொள்வது நபிவழியா? நபி (ஸல்) அவர்களும் ஆட்சியாளர்களாக- குடும்பத் தலைவராக இருந்து ஆத்மீகத்தையும் ஆன்மீகத்தையும் போதித்ததைத் தானே இம்மகானும் செய்தார்கள்.

    பின்னால் வந்தவர்கள் தான் இஸ்லாத்திற்குப் புறம்பான கட்டுக் கதைகளைப் புனைந்தார்கள். துறவுக் கொள்கையை தெளித்த துறவிகள், அவ்லியாக்கள் ஆனார்கள். இதனை அறியா மக்கள் குர்ஆனையும்- ஹதீஸையும் புறமாக ஒதுக்கிவிட்டு குர்ஆனை மையத்துக்காக மட்டும் பயன்படுத்தி விட்டு, இக்கதைகளை கவிதைகளாக பாட ஆரம்பித்தனர்.இஸ்லாத்தின் ஆணிவேரை அழித்திட இதுவே முதல் மூல காரணமாயிற்று.

    குறைபாடு அபாயம் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பான நிலை குர்ஆன் – ஹதீஸ் ஆகிய இவ்விரண்டில் மட்டுமே உள்ளது. இவை அல்லாதவைகளில் நாசம் தான் உண்டு. இந்த இரண்டை மட்டும் கொண்டுதான் ஒரு அடியான் இறை நேசன் எனும் அரிய உயர் பதவியை அடைய முடியும்! (36 வது சொற்பொழிவு நூல் புதூஹுல் கைப்)

    அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களை இருட்டில் இருந்து கொண்டு 1000 முறை ‘யா முஹ்யித்தீன்’ என்று கூப்பாடு போட்டால் தம்முன் தோன்றுவார்கள் என்று நம்புகின்றனர். இப்படிக் கூற அனுமதி தந்தது யார்?

    தோழர்களே! உங்களுக்கும் உங்கள் இரட்சகனுக்குமிடையே தரகர்கள் வேண்டாம் ஏனெனில், நமக்கும் நம் இரட்சகனுக்குமிடயில் இந்தத் தரகர்கள் உபயோகமற்றவர்கள். அந்த மெய்யான ஹக்கு தஆலா ஒருவனே சகல அதிகாரங்களையும் செல்வங்களையும் முழுவதுமாகத் தன் கைவசத்தில் வைத்துக் கொண்டிருப்பவன்! (36 வது சொற்பொழிவு நூல் ஃபத்ஹுர் ரப்பானீ)

    உமக்கேற்படும் எத்துன்பத்தையும் அல்லாஹ்வையன்றி மற்றவர்களிடம் முறையிட வேண்டாம் என்று கூறி அதற்கு ஆதாரமாக அல்குர்ஆன் 10:107 வது வசனத்தையும் ஓதிக் காட்டுகின்றனர் (நூல் ஃபத்ஹுர் ரப்பானீ)

    தமது போதனைகளுக்குச் சான்றாக அவர்கள் குர்ஆன்-ஹதீஸை மட்டுமே ஏற்று தம் வாழ்க்கையிலும், அவ்வாறே வாழ்ந்து மறைந்த ஒரு நல்லடியாரை இன்று மக்கள் மறந்து, அல்லாஹ்வை விட்டு அப்துல் காதர் ஜீலானியைப் பிடித்துக் கொண்டது மாபெரும் ஷிர்க் இணைவைத்தலே! இவர்கள் குர்ஆன் – ஹதீஸ் மற்றும் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களின் போதனைகளை அடியோடு மறந்து மறுத்து அப்பட்டமான வழிகேட்டில் இருக்கும் இந்த நிழலைத் தேடும் நிஜங்களின் திரை விலகட்டும்! அல்லாஹ் போதுமானவன்.

    Thanks : http://www.readislam.net/thirai.htm

Comments are closed.