அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையை துறைகள் வாரியாகவோ, இம்மை மறுமை என்றோ பிரித்து நோக்குவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ‘வணங்குவதற்குதான் அல்லாஹ்; வாழ்வது எப்படியும் எக்கொள்கைப்படியும் இருக்கலாம்’ என்ற கருத்தை இஸ்லாம் முழுமையாக நிராகரிக்கின்றது.
அல்லாஹ் அண்ட சராசரத்தையும், அதனுள் அடங்கப் பெற்றவற்றையும், எல்லாக் காலங்களையும், எல்லாச் சூழல்களையும், எல்லா உயிரினங்களையும், எல்லாப் பொருட்களையும் – ஆக அணு முதல் அண்டம் வரையிலான அனைத்தையும் சூழ்ந்து நிற்கின்றான். இதன் கருத்து, ‘அவன் எல்லாப் பொருட்களாகவும் இருக்கின்றான்’ என்பது அல்ல; எல்லாப் பொருட்களிலும் அவனது தன்னிகரற்ற அதிகாரம் உண்டு என்பதாகும். அவன் வைத்த நியதிக்கு மாறாகவோ, ஏற்பாட்டுக்கு எதிராகவோ எவரும் எதுவும் செய்துவிட முடியாது.