இறைவன் எல்லா வகையான தேவைகளிலிருந்தும் விடுபட்டவன்; தூய்மையானவன் என்பதை யாரும் மறுப்பது இல்லை. என்றாலும் அறிந்தோ அறியாமலும் இந்த இறைவனின் தூய்மைக்கு மாசு கற்பிக்கும் வேலை சில மதங்களிலும் நடைபெற்றுள்ளது. அதாவது, ‘இறைவனுக்கு மனைவி உண்டு; மக்கள் இருக்கிறார்கள்’ என்ற கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக:
– பரமசிவனுக்குப் பார்வதி மனைவியாகவும், வினாயகர், முருகர் இருவரும் பிள்ளைகளாகவும் இருப்பதாக இந்து மதத்தில் கூறப்படுகிறது!
– இயேசு நாதர் இறைவனின் குமாரன் என்று கிறிஸ்தவ மதம் கூறுகின்றது!
இஸ்லாம் இறைவனைப் பற்றி இத்தகைய முறைகேடான கருத்துகளைக் கூறவில்லை. மாறாக, ‘அவன் மிகத் தூய்மையானவன்; எவரது எந்தத் தேவையுமற்றவன்; எவருக்கும் பிறக்கவில்லை; எவரையும் மனைவியாகக் கொள்ளவில்லை; எவரையும் பெறவும் இல்லை’ என்பதை எத்தகைய சிறு ஐயத்துக்கும் இடமளிக்காது கூறிவிட்டது.
“அல்லாஹ் யாரையும் பெறவில்லை; யாராலும் பெறப்படவுமில்லை!” (அல்குர்ஆன்: 112:3)
என்பதுதான் இதுதொடர்பான இஸ்லாத்தின் தெளிவான கருத்தாகும். இதுபற்றி நீங்கள் சிந்தித்தால் ‘இது எத்தகைய உயர்வான கருத்து’ என்பதை நன்கு விளங்கிக் கொள்வீர்கள்.