1024. நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கைபரின் ஆளுநராக நியமித்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் உயர்ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள், ‘கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இதே தரத்திலமைந்தவையா?’ என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! ‘இல்லை இறைத்தூதர் அவர்களே! மட்டமான பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவுக்கு இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவையும், மட்டமான பேரீச்சம் பழத்தில் மூன்று ஸாவுக்கு இந்தப் பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவையும் நாங்கள் வாங்குவோம்’ எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘இவ்வாறு செய்யாதீர்! மட்டமான பேரீச்சம் பழத்தைக் காசுக்கு விற்று, அந்தக் காசின் மூலம் தரமான பேரீச்சம் பழத்தை வாங்குவீராக!” எனக் கூறினார்கள்.
1025. நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரலி) ‘பர்னீ’ எனும் (மஞ்சளான, வட்ட வடிவமான) உயர் ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் ‘இது எங்கிருந்து கிடைத்தது?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) ‘என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது. நபி (ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாவைக் கொடுத்து இதில் ஒரு ஸாவு வாங்கினேன்! என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அடடா! இது வட்டியேதான்! இது வட்டியேதான்! நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் வாயிலாக விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக! என்றார்கள்.
1026. பலதரப்பட்ட பேரீச்சம் பழங்களின் கலவை எங்களுக்கு வழங்கப்படும்; அதை ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவு என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்வோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவும் கூடாது இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது!” என்று கூறினார்கள்.
1027. ”தங்க நாணயத்திற்கு (தீனாருக்கு)த் தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்திற்கு (திர்ஹத்திற்கு) வெள்ளி நாணயத்தையும் விற்கலாம்!’ என அபூ ஸயீத் (ரலி) கூறினார். அவரிடம் நான் இப்னு அப்பாஸ் (ரலி) இவ்வாறு கூறுவதில்லையே எனக் கேட்டேன். அதற்கு அபூ ஸயீத் (ரலி) ‘நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நீங்கள் இதை நபி (ஸல்) அவர்கள் வழியாகச் செவியுற்றீர்களா? அல்லது அல்லாஹ்வின் வேதத்தில் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவ்வாறு நான் கூறவில்லை. என்னைவிட நீங்கள் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி நன்கறிந்தவர் என்றாலும், கடனில் தவிர வட்டி ஏற்படாது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸாமா எனக்கு கூறினார் என்று விடையளித்தார் எனப் பதிலளித்தார்.