மனிதனுக்குக் ‘கற்பனா சக்தி’ என்றொன்றை அல்லாஹ் வழங்கியுள்ளான். அந்தக் கற்பனா சக்தி எல்லோருக்கும் ஒரேவிதமாக அமைவது இல்லை. ஒவ்வொருவரது அறிவு, அனுபவம், திறமை, ஆர்வம் என்பவற்றுக்கமைய அது வித்தியாசப்படும். அத்தகையவர்களுள் ஆன்மீக ஆர்வம் மேலிட்டு அதில் அதிக ஈடுபாடு கொண்ட பல மதத்தைச் சேர்ந்தவர்கள் இறைவனைப் பற்றிய கற்பனையில் ஈடுபடலாயினர். அத்தகைய ஈடுபாடுகள் மூலமே விதவிதமான விக்கிரகங்கள் தோற்றம் பெற்றன.
இஸ்லாம், இத்தகைய கற்பனைகள் மூலம் ‘இறைவன் இப்படித்தான் இருப்பான்’ என்று நிர்ணயிப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் கற்பனை என்பது நிலையானதல்ல. அத்துடன் அது வேறு சில இயல்புகளின் துணையின்றி இயங்கவும் முடியாது. அந்த இயல்புகளும் – அதாவது அறிவு, அனுபவம், திறமை, ஆர்வம் என்பன ஒருபோதும் முழுமையாக இருப்பது இல்லை. அவை மனிதன் தோன்றிய காலந்தொட்டு, அவ்வக்காலத் தேவைகள், சூழல்களைப் பொறுத்து இயங்கி, வளர்ந்து வருபவையே.எனவே நிலையில்லா இவற்றைக் கொண்டு நிலையான ஒருவனை – அல்லாஹ்வை – கற்பனை செய்து ‘இப்படித்தான் இருப்பான்’ என நிர்ணயிப்பது சாத்தியமற்றதே. அந்த வகையில் அவன் பேரில் விக்கிரகம் வடிப்பதும், சித்திரம் வரைவதும் பிழையானதே; பாவ காரியமே!
குவைத் இஸ்லாமிய நிலையத்தின் (IPC) வெளியீடாகிய “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்ற நூலிலிருந்து. ஆசிரியர்: S.M. மன்சூர் அவர்கள்.