பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2483
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடற்கரையை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அந்தப் படையினருக்கு அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) அவர்களைத் தளபதியாக ஆக்கினார்கள். அவர்கள் (படையினர்) முந்நூறு பேர் இருந்தனர். அவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். நாங்கள் புறப்பட்டோம். பாதி வழியிலேயே எங்கள் கையிருப்பில் இருந்த (பயண) உணவு தீர்ந்து போய்விட்டது. அபூ உபைதா(ரலி) அந்தப் படையின் (கைவசமிருந்த) கட்டுச் சாதங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டும் படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை அனைத்தும் ஒன்று திரட்டப்பட்டன. இரண்டு பைகள் (நிறைய) பேரீச்சம் பழங்கள் சேர்ந்தன. அபூ உபைதா(ரலி) அவற்றை எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் கொடுத்து வந்தார்கள். இறுதியில், அவையும் தீர்ந்து போய்விட்டன. எங்களுக்கு (ஆளுக்கு) ஒவ்வொரு பேரீச்சம் பழம்தான் கிடைத்து வந்தது.
இதை ஜாபிர்(ரலி) சொன்னபோது, இதைக் கேட்டுக் கொண்டிருந்த அறிவிப்பாளர் வஹ்ப் இப்னு கைஸான்(ரஹ்), ‘ஒரு பேரீச்சம் பழம் எப்படி போதும்?’ என்று கேட்டதற்கு ஜாபிர்(ரலி), ‘அதுவும் தீர்ந்து போன பின்புதான் அதன் மதிப்பை நாங்கள் உணர்ந்தோம்” என்று பதிலளித்தார்கள்.
பிறகு நாங்கள் கடல் வரை வந்து சேர்ந்து விட்டோம். அங்கு தற்செயலாக சிறிய மலை போன்ற (திமிங்கல வகை) மீன் ஒன்று கிடைத்தது. அதிலிருந்து (எங்களுடைய) அந்தப் படை பதினெட்டு நாள்கள் உண்டது. பிறகு அபூ உபைதா(ரலி) அதன் விலா எலும்புகளிலிருந்து இரண்டு விலா எலும்புகளை பூமியில் நட்டு வைக்கும்படி உத்திரவிட்டார்கள். அவ்வாறே, அவை இரண்டும் நட்டப்பட்டன. பிறகு, ஒட்டகத்தை அதன் கீழே ஓட்டிச் செல்லும்படி உத்திரவிட்டார்கள். அவ்வாறே ஓட்டிக் செல்லப்பட்டது. அது (அந்தத் திமிங்கலத்தின்) விலா எலும்புகளின் கீழே சென்றது. ஆனால், அவற்றை அது தொடவில்லை.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2484
ஸலமா(ரலி) அறிவித்தார். (ஹவாஸின் போரில்) மக்களின் பயண உணவு தீர்ந்து போய்ப் பஞ்சத்திற்குள்ளானார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் வந்து, (புசிப்பதற்காகத்) தங்கள் ஒட்டகங்களை அறுக்க அனுமதி கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். (வழியில்) அவர்களை உமர்(ரலி) சந்திக்க, மக்கள் அவர்களுக்கு (நடந்த விஷயத்தை)த் தெரிவித்தார்கள். அதற்கு உமர்(ரலி), ‘உங்கள் ஒட்டகங்களை அறுத்து (உண்டு)விட்ட பிறகு நீங்கள் எப்படி உயிர் வாழ்வீர்கள்?’ என்று கேட்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! மக்கள் தங்களின் ஒட்டகத்தை அறுத்து (உண்டு)விட்ட பிறகு அவர்கள் எப்படி உயிர் வாழ்வார்கள்?’ என்று கேட்டார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மக்கள் தங்கள் பயண உணவில் எஞ்சியதைக் கொண்டு வரும்படி அவர்களிடையே அறிவிப்புச் செய்யுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அறிவிப்புச் செய்யப்பட்டு, மக்கள் தங்கள் எஞ்சிய உணவைக் கொண்டு வந்து போடுவதற்காக ஒரு தோல் விரிப்பு விரித்து வைக்கப்பட்டது. மக்கள் அதில் தங்கள் எஞ்சிய உணவுகளை (குவியலாக) வைத்துவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்து அதில் பரக்கத்தை அளிக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.
பிறகு, தங்கள் பாத்திரங்களைக் கொண்டு வரும்படி மக்களை அழைத்தார்கள். மக்கள், தங்கள் இரண்டு கைகளையும் குவித்து (உணவில் தங்களின் பங்கைப்) பெற்றார்கள்.
அனைவரும் உணவைப் பெற்ற பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை என்றும் நான் இறைத்தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்” என்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2485
ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அஸர் தொழுகை தொழுதுவிட்டு, ஒட்டகத்தை அறுப்போம். அது பத்துப் பங்குகளாகப் பங்கு போடப்படும். சூரியன் மறைவதற்கு முன் நாங்கள் (அதன்) சமைக்கப்பட்ட இறைச்சியை உண்போம்.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2486
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அஷ்அரீ குலத்தினர் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்துவிட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன். என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2487
அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடமையாக்கிய (ஸகாத் என்னும்) ஸதகாவைப் பற்றி எனக்கு அபூ பக்ர்(ரலி) எழுதும்போது, ‘இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் ஒருவர், தன் பொருட்களின் ஸகாத்துடன் மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து, தானே செலுத்திவிடுவாராயின், அவர் தன் கூட்டாளியின் பங்குக்குச் சமமான ஸகாத் தொகையைக் கணக்கிட்டு அதை அவரிடமிருந்து பெற்றுக் கொள்வார்” என்று குறிப்பிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2488
ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் துல் ஹுலைஃபாவில் தங்கியிருந்தோம். மக்களுக்குப் பசி எடுத்தது. அவர்கள் போரில் கிடைத்த செல்வங்களிலிருந்து சில ஒட்டகங்களையும் ஆடுகளையும் பெற்றார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். மக்கள் அவசரப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே) அறுத்துப், பாத்திரங்களை (அடுப்பில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி)விட்டனர். நபி(ஸல்) அவர்கள் (இந்த விஷயம் தெரிய வந்தவுடன்) பாத்திரங்களைக் கவிழ்க்கும் படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டு (அவற்றிலிருந்துவை வெளியே கொட்டப்பட்டு)விட்டன. பிறகு, அவற்றை அவர்கள் பங்கிட்டார்கள். பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக வைத்தார்கள். அப்போது ஓர் ஒட்டகம்மிரண்டு ஓடிவிட்டது. மக்கள் அதைத் தேடிச் சென்றார்கள். அது (அவர்களிடம் அகப்படாமல்) அவர்களைக் களைப்படையச் செய்துவிட்டது. மக்களிடம் குதிரைகள் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தன. ஒருவர் (நபித் தோழர்) அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து ஓர் அம்பை எறிந்தார். அல்லாஹ் அதை (ஓட விடாமல்) தடுத்து நிறுத்திவிட்டான். பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘காட்டு மிருகங்களில் கட்டுக்கடங்காதவை இருப்பது போல் இந்தப் பிராணிகளிலும் கட்டுக் கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே செய்யுங்கள் (அம்பெறிந்து தடுத்து நிறுத்துங்கள்)” என்று கூறினார்கள். நான், ‘(ஒட்டகத்தை அறுக்க வாட்களை இன்று நாங்கள் பயன்படுத்திவிட்டால், அதன் கூர்முனை சேதமடைந்து) நாளை எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் பகைவர்களை (சந்திக்க நேரிடுமோ என்று) நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, நாங்கள் (கூரான) மூங்கில்களால் (இந்த ஒட்டகத்தை) அறுக்கலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்), அவர்கள், ‘இரத்தத்தை ஓடச் செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர, அதைப் பற்றி (‘அது ஏன் கூடாது’ என்று) நான் உங்களுக்குச் சொல்கிறேன்; பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர்களின்) கத்திகளாகும்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2489
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒருவர் (தோழர்களுடன் உண்ணும் போதும்) தன் தோழர்கள் அனுமதிக்காத வரை, இரண்டு பேரீச்சம் பழங்களை ஒரு சேர எடுத்து உண்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2490
ஜபலா(ரஹ்) அறிவித்தார். நாங்கள் மதீனாவில் இருந்தபோது எங்களைப் பஞ்சம் பீடித்தது. இப்னு ஸுபைர்(ரலி) எங்களுக்குப் பேரீச்சம் பழங்களை (உண்ணக்) கொடுத்து வந்தார்கள். இப்னு உமர்(ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது, ‘(இரண்டிரண்டாகச்) சேர்த்து உண்ணாதீர்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் ஒருவர் தன் சகோதரருக்கு அனுமதி தந்தாலே தவிர சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2491
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஓர் அடிமையில் தனக்குரிய பங்கை விடுதலை செய்பவர், தன்னிடம் அவ்வடிமையின் (சந்தை விலைக்கு) ஒத்த விலை (அளவிற்குப் பணம்) இருந்தால் (அதைக் கொடுத்து) அந்த அடிமையை முழுமையாக விடுதலை செய்யட்டும். இல்லையெனில், அவர் விடுதலை செய்த அளவுக்கு மட்டுமே அவ்வடிமை சுதந்திரவானாவான். ‘ என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) அவர்களின் மாணவர் நாஃபிஉ(ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவித்த அய்யூப்(ரஹ்), ‘இல்லையெனில் எந்த அளவுக்கு அவர் விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கு மட்டுமே அவ்வடிமை சுதந்திரவான் ஆவான்’ என்னும் வாசகம் நாஃபிஉ(ரஹ்) அவர்களின் சொல்லா அல்லது நபி(ஸல்) அவர்களின் ஹதீஸின் ஒரு பகுதியா என்று எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2492
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” தன் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்து விடுகிறவர் (வசதியுடையவராயின்) தன் செல்வத்தைக் கொண்டு அவ்வடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவரின் மீது கடமையாகும். அவரிடம் செல்வம் இல்லையெனில் அந்த அடிமையின் விலை, (அவனை) ஒத்த (அடிமையின்) விலையைக் கொண்டு மதிப்பிடப்பட்டு அவன் உழைத்துச் சம்பாதிக்க அனுமதியளிக்கப்பட வேண்டும். அவன் மீது தாங்க முடியாத (உழைப்பைச் சுமத்திச்) சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2493
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை – ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) ‘நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள்விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2494
உர்வா இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘அநாதை(ப் பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்துகொள்ளுங்கள்” (திருக்குர்ஆன் 04:03) என்னும் இறைவசனத்தைக் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.
என் சகோதரி மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் (வலீயின்) மடியில் (பொறுப்பில்) வளர்கிற – அவரின் செல்வத்தில் கூட்டாக இருக்கிற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளுடைய மஹ்ர் விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் மற்றவர்கள் அவளுக்குக் கொடுப்பது போன்ற மஹ்ரை அவளுக்குக் கொடுக்காமல் – அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் என்னும் நிலையிலிருப்பவள் ஆவாள். இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பிலிருக்கும் அநாதைப் பொண்களை அவர்களுக்கு நீதி செய்யாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும். மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை மணந்துகொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக) தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற பெண்களில் அவர்களுக்கு விருப்பமான பெண்களை மணந்துகொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. பிறகு, (இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும்) மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். எனவே அல்லாஹ், ‘பெண்கள் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கும்படி உங்களிடம் கோருகின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவர்களின் விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான். மேலும், இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டங்களையும் நினைவுபடுத்துகிறான். (அதாவது,) எந்த அநாதைப் பெண்களுக்கு, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரிமையை நீங்கள் கொடுப்பதில்லையோ, மேலும், எவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லையோ அந்த அநாதைப் பெண்கள் பற்றிய சட்டங்களையும் (உங்களுக்கு நினைவுபடுத்துகிறான்)” என்னும் (திருக்குர்ஆன் 04:127) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
மேலும், ‘இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டங்களையும்…” என்று அல்லாஹ் கூறியிருப்பது, ‘அநாதை(ப் பெண்)களுடன் நீதியுடன் நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால்…” என்னும் (திருக்குர்ஆன் 04:03) இறைவசனத்தைக் குறிப்பதாகும். மேலும், 4:127ம் இறைவசனத்தில், ‘மேலும் எவரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லையோ” என்று கூறியிருப்பது, உங்களில் ஒரு காப்பாளர் தன் பராமரிப்பில் இருக்கும் அநாதைப் பெண் ஒருத்தியை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது அவளை விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும். (செல்வத்தில் குறைந்தவர்களாக இருக்கும் போது) அந்த (அநாதை)ப் பெண்களை மணந்துகொள்ள அவர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகுக்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் ‘நீதியான முறையிலே தவிர மணந்துகொள்ளலாகாது’ என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2495
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (இருவருக்குச் சொந்தமான சொத்தில் தம் பங்கை ஒருவர் விற்கும்போது, தம் பங்காளிக்கே அவர் முன்னுரிமை, அளிக்க வேண்டும் என்னும்) ‘ஷுஃப்ஆ’ சட்டத்தைப் பங்கிடப்படாமலிருக்கும் கூட்டுச் சொத்து ஒவ்வொன்றிலுமே நபி(ஸல்) அவர்கள் விதித்திருந்தார்கள். எல்லைகள் வகுக்கப்பட்டு, பாதைகள் பிரிக்கப்பட்டால் ஷுஃப்ஆ(வின் உரிமை பங்காளிக்குக்) கிடையாது.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2496
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ‘பங்கிடப்படாத ஒவ்வொரு சொத்திலும் (அதிலுள்ள தம் பங்கை ஒருவர் விற்க முனைந்தால் அவரைத் தவிர உள்ள) பிற பங்காளிகளுக்கு ஷுஃப்ஆவின் உரிமையுண்டு’ என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். எல்லைகள் வகுக்கப்பட்டு, பாதைகள் பிரிக்கப்பட்டால் ஷுஃப்ஆ(வின் உரிமை பங்காளிகளுக்குக்) கிடையாது.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2497
சுலைமான் இப்னு அபீ முஸ்லிம்(ரஹ்) அறிவித்தார். நான் அபுல் மின்ஹால்(ரஹ்) அவர்களுடன் உடனுக்குடன் செய்யும் நாணயமாற்று வியாபாரம் குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள். நானும் என் வியாபாரக் கூட்டாளி ஒருவரும் ஒரு பொருளை (சிறிது) உடனுக்குடனும் (சிறிது) தவணை முறையிலும் வாங்கினோம். அப்போது பராஉ இப்னு ஆஸிப்(ரலி) எங்களிடம் வந்தார்கள். நாங்கள் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டோம். அதற்கு அவர்கள், ‘நானும் என்னுடைய கூட்டாளியான ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களும் இந்த வியாபாரத்தைச் செய்து வந்தோம். நபி(ஸல்) அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள், ‘உடனுக்குடன் மாற்றியதை எடுத்துக் கொள்ளுங்கள்; ஆனால், தவணை முறையில் மாற்றிக் கொண்டிருப்பீர்களாயின் அதை ரத்துச் செய்யுங்கள்’ என்று பதிலளித்தார்கள்” எனக் கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2499
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் நிலங்களை யூதர்களுக்கு, அவற்றில் அவர்கள் உழைத்து விவசாயம் செய்ய வேண்டும் என்றும், அவற்றிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் ‘பாதி அவர்களுக்குரியது (பாதி இஸ்லாமிய அரசுக்குரியது)’ என்றும் நிபந்தனையிட்டு (குத்தகைக்குக்) கொடுத்துவிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2500
உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் சில ஆடுகளைத் தம் தோழர்களிடையே பங்கிடும்படி கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு விட்டேன்.) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, ‘அதை நீ குர்பானி கொடுத்து விடு” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2501
அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார். என் தாயார் ஸைனப் பின்த்து ஹுமைத்(ரலி) (நான் சிறுவனாயிருக்கும் போது) என்னை அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! இவனிடம் (இஸ்லாத்தின் படி நடப்பதற்கான) உறுதிப் பிரமாணம் வாங்குங்கள்” என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘சிறுவனாயிற்றே!” என்று கூறிவிட்டு, என் தலையைத் தடவிக் கொடுத்து எனக்காக (அருள்வளம் வேண்டி) பிரார்த்தித்தார்கள்.
ஸுஹ்ரா இப்னு மஅபத்(ரஹ்) அறிவித்தார்.
என்னை என் பாட்டனார் அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) கடைவீதிக்குக் கொண்டு சென்று உணவுப் பொருளை வாங்குவார்கள். (அப்போது அவர்களை இப்னு உமர்(ரலி) அவர்களும் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களும் சந்திப்பார்கள். அப்போது அவ்விருவரும், ‘எங்களுடன் உணவு வியாபாரத்தில் கூட்டாளியாகி விடுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் உங்களுக்காக அருள்வளம் வேண்டி பிரார்த்தித்துள்ளார்கள்” என்று கூறுவார்கள். அவ்வாறே, என் பாட்டனாரும் அவர்களின் கூட்டாளியாகி விடுவார்கள். சில வேளைகளில், ஓர் ஒட்டகம் முழுக்க அப்படியே (லாபமாக) அவருக்குக் கிடைக்கும். அதை (தம்) வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2503
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்கிறவரிடம் அவ்வடிமைக்கு ஈடான வேறோர் அடிமையின் விலை அளவுக்கான செல்வம் இருக்குமாயின், அவ்வடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவரின் மீது கடமையாகும். அந்த அடிமையில் அவருடன் பங்குள்ளவர்களுக்கு அவர்களின் பங்குக்கான தொகை கொடுக்கப்பட்டு விடவேண்டும்; விடுதலை செய்யப்பட்ட அடிமை சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2504
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்துவிடுகிறவரிடம் போதிய செல்வம் இருக்குமாயின் அவ்வடிமை முழுவதுமாக விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையெனிறல், (விடுதலையாகாத மீதிப் பங்கையும் விடுவித்துக் கொள்வதற்காக அவ்வடிமை உழைத்துச் சம்பாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வடிமையின் மீது (தாங்க முடியாத) சிரமத்தை சுமத்தக் கூடாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2505
ஜாபிர்(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் துல்ஹஜ்ஜின் நான்காவது (நாளின்) காலையில் ஹஜ்ஜுக்காக மட்டும் அவர்களு(டைய ஹஜ்ஜுடைய நிய்யத்து)டன் (உம்ரா) எதுவும் கலந்து விடாமல் இஹ்ராம் அணிந்தவர்களாக வந்தார்கள். நாங்கள் வந்து சேர்ந்தபோது நாங்கள் இஹ்ராம் அணிந்ததை உம்ராவாக ஆக்கிக் கொள்ளும்படியும் எங்கள் மனைவிமார்களிடம் நாங்கள் உறவு கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். மக்களிடையே இந்த விஷயம் பரவிவிட்டது. அதைப் பற்றி அவர்கள் வியப்புடன் பேசிக் கொள்ளலாயினர்.
அறிவிப்பாளர் அதா இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்: பிறகு ஜாபிர்(ரலி), ‘எங்கள் இன உறுப்பில் விந்து சொட்டிக் கொண்டிருக்க, (மனைவியுடன் கூடிய பின் உடனடியாக) நாங்கள் மினாவுக்குச் செல்வதா? என்று (வியப்புடன்) கேட்டார்கள். அப்போது ஜாபிர்(ரலி) தம் கையால் சைகை செய்து இவ்வாறு கேட்டார்கள்.”..
இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே, நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில், மக்கள் சிலர் இப்படி ‘இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று எனக்குச் செய்தி எட்டியது. இறைவன் மீதாணையாக! நான் அவர்களை விட அதிக நற்செயல் புரிபவனும் அதிகமாக அல்லாஹ்வுக்கு அஞ்சுபவனும் ஆவேன். என் விவகாரத்தில் (ஹஜ்ஜுக்கு நிய்யத் செய்ததில்) நான் பிற்பாடு (இறையறிவிப்பின் வாயிலாக) அறிந்த (‘ஹஜ் மாதத்தில் உம்ரா செய்ய அனுமதியுண்டு’ என்கிற சட்டத்)தை முன்கூட்டியே நான் அறிந்திருப்பேனாயின் என்னுடன் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருக்க மாட்டேன். என்னுடன் பலிப்பிராணி இல்லாமல் இருந்திருந்தால் நானும் (உம்ரா மட்டும் செய்து) இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலாலாம்) விட்டிருப்பேன்.” என்று கூறினார்கள். இதைக் கேட்ட சுரக்காக இப்னு மாலிக் இப்னு ஜுஃஷும்(ரலி) எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இந்தச் சலுகை எங்களுக்கு மட்டும் தானா? இல்லை, என்றைக்குமாகவா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(உங்களுக்கு மட்டும் என்று) இல்லை; மாறாக, என்றைக்குமாகத் தான்” என்று கூறினார்கள். அப்போது அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) (யமன் நாட்டிலிருந்து திரும்பி) வந்தார்கள்.
அறிவிப்பாளர் அதாஉ(ரஹ்) கூறினார்கள்:
ஜாபிர்(ரலி) மற்றும் இப்னு அப்பாஸ்(ரலி) ஆகிய இருவரில் ஒருவர் (அதாவது ஜாபிர்(ரலி)), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்துள்ளார்களோ அதே ஹஜ்ஜுக்காகத்தான் நானும் இஹ்ராம் அணிகிறேன்” என்று அலீ(ரலி) சொன்னதாகக் கூறுகிறார். மற்றொருவர், (இப்னு அப்பாஸ்(ரலி)), ‘அல்லாஹ்வின் தூதருடைய ஹஜ்ஜைப் போன்றதற்கே (ஹஜ்ஜும்ரானுக்கே) நானும் இஹ்ராம் அணிகிறேன்” என்று அலீ(ரலி) சொன்னதாகக் கூறுகிறார். நபி(ஸல்) அவர்கள், அலீ(ரலி) அவர்களை அவர்களின் இஹ்ராமிலேயே நீடித்திருக்கும்படி கட்டளையிட்டார்கள். தம் தியாக பிராணியில் அவர்களையும் கூட்டாளியாக்கினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2507
ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் திஹாமாவிலுள்ள துல் ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது நாங்கள் (கனீமத்தாக) ஆடுகளை அல்லது ஒட்டகங்களைப் பெற்றோம். மக்கள் அவசரப்பட்டு (உணவு சமைப்பதற்காகப்) பாத்திரங்களைக் கொதிக்க வைத்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்தார்கள். அந்தப் பாத்திங்களைத் தலைகீழாகக் கவிழ்க்கும்படி உத்தரவிட்டார்கள். அவை அவ்வாறே தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டன. பிறகு, ஓர் ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகளைச் சமமாக்கினார்கள். பிறகு, அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டோடியது. மக்களிடம் சில குதிரைகளே இருந்தன. (அதை விரட்டிச் சென்று பிடிக்கப் போதுமான குதிரைகள் இல்லை. எனவே,) ஒருவர் அம்பெய்து அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கட்டுங்கடங்காத காட்டு மிருகங்களைப் போன்று இந்தக் கால்நடைகளிலும் கட்டுக் கடங்காதவை சில உண்டு. எனவே, இவற்றில் எது உங்களை மீறிச் செல்லுகிறதோ அதை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்” என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! ‘(இப்போது பிராணிகளை அறுக்க எங்கள் வாட்களைப் பயன்படுத்திவிட்டால்), எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் நாளை (போர்க்களத்தில்) பகைவர்களைச் சந்திக்க வேண்டியிருக்குமே’ என்று நாங்கள் அஞ்சுகிறோம். (கூரான) மூங்கில்களால் நாங்கள் (அவற்றை) அறுக்கலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘சீக்கிரம்! இரத்தத்தை ஓடச்செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்படும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர அதைப் பற்றி (‘அது ஏன் கூடாது’ என்று) உங்களுக்கு நான் சொல்கிறேன்: பல்லோ எலும்பாகும். நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர்களின்) கத்திகளாகும்” என்று பதிலளித்தார்கள்.