46.அநீதிகளும் அபகரித்தலும்

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2440

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறைநம்பிக்கையாளர்கள் நரகத்திலிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி விடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை, உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள். என அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2441

ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ் அல்மாஸினீ(ரஹ்) அறிவித்தார். நான் இப்னு உமர்(ரலி) அவர்களுடன், அவர்களின் கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்தபோது ஒருவர் குறுக்கிட்டு, ‘(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?’ என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), ‘அல்லாஹுதஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, ‘நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?’ என்று கேட்பான். அதற்கு, அவன் ‘ஆம், என் இறைவா!’ என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறைநம்பிக்கையாளர், ‘நாம் இத்தோடு ஒழிந்தோம்’ என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும்போது இறைவன், ‘இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்’ என்று கூறுவான். அப்போது அவனுடைய நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், ‘இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகும்’ என்று கூறுவார்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2442

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றன. என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2443

உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளான நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2444

அனஸ்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ‘உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்” என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘அவனுடைய கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2445

பராஉ வின் ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்;

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.

2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.

3. தும்மியவருக்கு அவர், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (‘அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ என்று) சொன்னால், ‘யர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று பிரார்த்திப்பது.

4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது.

5. அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுவது.

6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது.

7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2446

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது.

(இப்படிக் கூறும்போது) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள். என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2447

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2448

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2449

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2450

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். ஒரு பெண் தன் கணவன் தன்னிடம் நல்லமுறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, (தன்னைப்) புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால் கணவன் மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம்விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை” என்கிற திருக்குர்ஆனின் (திருக்குர்ஆன் 04:128 ஆம்) வசனத்தைப் பற்றி ஆயிஷா(ரலி) கூறும்போது, ‘ஒருவர் தன் மனைவியிடம் (தாம்பத்திய) உறவை நாடி அதிகமாக வந்து செல்லாமல் தன் மனைவியைப் பிரிந்து (எவனுடைய நாளில் வேறொரு மனைவியிடம் சென்று) விட வேண்டும் என்று விரும்புகிற நிலையில் அவரின் மனைவி ‘என் (தாம்பத்திய உரிமைகள்) விஷயத்தில் (நான்விட்டுக் கொடுத்து) உம்மை மன்னித்து விடுகிறேன்’ என்று கூறினார். அப்போதுதான் இந்த இறைவசனம் அருளப்பட்டது” என்று குறிப்பிட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2451

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்களின் வலப்பக்கம் ஒரு சிறுவரும் இடப் பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘(இந்த பானத்தை) இவர்களிடம் (வயது முதிர்ந்தவர்களிடம்) கொடுக்க நீ எனக்கு அனுமதி தருவாயா?’ என்று கேட்டார்கள். அந்தச் சிறுவர், ‘மாட்டேன், இறைவன் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக் கூடிய) என் பங்கை எவருக்கும் நான்விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறினார். எனவே, இறைத்தூதர் அச்சிறுவரின் கரத்தில் அந்த பானத்தை வைத்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2452

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2453

அபூ ஸலமா(ரலி) அறிவித்தார். எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2454

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய் விடுவான். இதைஇப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2455

ஜபலா இப்னு ஸூஹைம்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் இராக்வாசிகள் சிலருடன் மதீனாவில் இருந்தோம். எங்களைப் பஞ்சம் தீண்டியது. எனவே, இப்னு ஸுபைர்(ரலி) எங்களுக்குப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து வந்தார்கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும்போது இப்னு உமர்(ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது, ‘இறைத்தூதர் இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள்; உங்களில் (அப்படிச் சேர்த்து உண்ண விரும்பும்) அந்த மனிதர் தன் சகோதரிடம் அனுமதி பெற்றாலே தவிர” என்று கூறுவார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2456

அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘அபூ ஷுஐப்’ என்றழைக்கப்பட்ட அன்சாரித் தோழர் ஒருவருக்கு இறைச்சிக் கடை வைத்திருந்த ஊழியர் ஒருவர் இருந்தார். அவரிடம் அபூ ஷுஐப்(ரலி), ‘எனக்கு ஐந்து பேருக்கான உணவைத் தயார் செய். நான் ஐந்தாவதாக நபி(ஸல்) அவர்களை அழைக்கக்கூடும்” என்று கூறினார். அவர்கள் நபி(ஸல்) அவர்களின் திருமுகத்தில் பசியின் அடையாள(மாக வாட்ட)த்தைப் பார்த்திருந்தார்கள். எனவே, அவர்களை விருந்துக்கு அழைத்தார்கள். நபி(ஸல்) அவர்களுடனும் அவர்களுடன் வந்திருந்தவர்களுடனும் விருந்துக்கு அழைக்கப்படாத ஒருவர் சேர்ந்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் (அபூ ஷுஐப்(ரலி) அவர்களிடம்), ‘இவர் எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். இவருக்கு (இந்த விருந்தில் கலந்து கொள்ள) நீங்கள் அனுமதியளிக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ‘ஆம் (அனுமதியளிக்கிறேன்)” என்று பதில் கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2457

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2458

உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, ‘நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம். மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்)விட்டு விடட்டும்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2459

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதைவிட்டுவிடும்வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறு செய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் அவமதிப்பான். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2460

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஹிந்த் பின்த்து உத்பா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியாக இருக்கிறார். அவரின் பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் குழந்தை குட்டிகளுக்கு உணவளிப்பதால் என் மீது குற்றம் ஏதும் உண்டா?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நியாயமான அளவிற்கு (உன் கணவனின் பணத்தை எடுத்து) அவர்களுக்கு உணவளிப்பதால் உன் மீது குற்றம் எதுவும் இல்லை” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2461

உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் எங்களை ஒரு சமூகத்திடம் அனுப்புகிறீர்கள்; நாங்களும் (தங்கள் கட்டளையை ஏற்று) அங்கு செல்கிறோம்; (ஆனால்,) அவர்கள் எங்களுக்கு விருந்துபசாரம் செய்ய மறுக்கிறார்கள் எனில், அது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் ஒரு சமூகத்திடம் சென்று விருந்தினர்களுக்குத் தேவையான வசதிகளை உங்களுக்குச் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால் அவர்களிடமிருந்து விருந்தனரின் உரிமையை (நீங்களாகவே) எடுத்துக்கொள்ளுங்கள்” என்று எங்களுக்கு பதில் தந்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2462

உமர்(ரலி) அறிவித்தார். அல்லாஹ், நபி(ஸல்) அவர்களை மரணிக்கச் செய்தபோது, அன்சாரிகள் பனூசாயிதா சாவடியில் ஒன்றுகூடிவிட்டார்கள். நான் அபூ பக்ரு(ரலி) அவர்களை, ‘எங்களுடன் வாருங்கள்” என்று அழைத்தேன். நாங்கள் அன்சாரிகளிடம் பனூ சாயிதா (குலத்தாரின் பஞ்சாயத்துச்) சாவடிக்குச் சென்றோம்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2463

அப்துர் ரஹ்மான் இப்னு ஹுர் முஸ்அல் அஃரஜ்(ரஹ்) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில், தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (அல்லது உத்திரம், கர்டர், பரண் போன்ற எதையும்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்” என்று கூறினார்கள் என்று சொல்லிவிட்டு, அபூ ஹுரைரா(ரலி), ‘என்ன இது? உங்களை இதை (நபியவர்களின் இந்தக் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கிறேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபிவாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்” என்று கூறுவார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2464

அனஸ்(ரலி) அறிவித்தார். நான் அபூ தல்ஹா(ரலி) வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாள்களில் பேரீச்சம் பழ மதுவை (பேரீச்ச மரக்கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, ‘(மக்களே!) மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூ தல்ஹா(ரலி) என்னிடம், ‘வெளியே சென்று இதை ஊற்றிவிடு” என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது. மக்களில் சிலர், ‘மது தங்கள் வயிறுகளில் இருக்கும் நிலையில் பல பேர் கொல்லப்பட்டிருக்கிறார்களே! (அவர்களின் நிலை என்ன?)” என்று கேட்டார்கள். அப்போதுதான், ‘இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறவர்கள் (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்களின் மீது குற்றமில்லை” (திருக்குர்ஆன் 05:93) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2465

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். “நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2466

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “ஒருவர் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடும் தாகம் ஏற்பட்டது. (வழியில்) அவர் ஒரு கிணற்றைக் கண்டு அதில் இறங்கினார். (அதிலிருந்து) தண்ணீர் குடித்தார். பிறகு வெளியே வந்தார். அப்போது, தன் எதிரே நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) ஈரமண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதைப் பார்த்தார். ‘எனக்கு ஏற்பட்டது போன்ற (கடும்) தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டுள்ளது போலும்’ என்று (தன் மனத்திற்குள்) கூறினார். பிறகு கிணற்றில் இறங்கி, தன் காலுறையைத் தண்ணீரால் நிரப்பி (மேலே கொண்டு வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ், அவரின் இந்த நற்செயலை அங்கீகரித்து அவருக்கு மன்னிப்பளித்தான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைச் செவியுற்ற மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்றுமுள்ள பிராணிகள்) விஷயத்திலுமா எங்களுக்குப் பிரதிபலன் உண்டு?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உயிருள்ள பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்குக் கருணை காட்டினால்) உங்களுக்குப் பிரதிபலன் உண்டு” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2467

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீதிருந்து நோட்டமிட்டார்கள். பிறகு, ‘நான் பார்ப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் உங்கள் வீடுகள் நெடும்லும் குழப்பங்கள் விளையவிருக்கும் இடங்களை மழைத்துளி விழும் இடங்களைப் (பார்ப்பதை) போன்று பார்க்கிறேன்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2468

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களில் இருவரைப் பற்றி உமர்(ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். ஏனெனில், அவ்விருவரைப் பற்றித்தான் அல்லாஹ் (திருக்குர்ஆனில்), ‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்.) ஏனெனில், உங்கள் உள்ளங்கள் நேரிய வழியிலிருந்து (சற்றே) பிறழ்ந்து விட்டிருக்கின்றன” (திருக்குர்ஆன் 66:04) என்று கூறியிருந்தான்.

(ஒரு முறை) உமர்(ரலி) அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். அவர்கள் (மலஜலம் கழிப்பதற்காக) விலகிச் சென்றார்கள். நானும் அவர்களுடன் தண்ணீர்க் குவளையை எடுத்துக் கொண்டு விலகிச் சென்றேன். அவர்கள் மலஜலம் கழித்துவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் அவர்களின் கைகளில் குவளையிலிருந்த தண்ணீரை ஊற்றினேன். (அதில்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது நான், ‘விசுவாசிகளின் தலைவரே! நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களில் இருவரைக் குறித்து, ‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களக்குச் சிறந்ததாகும்)’ என்று இறைவன் கூறியுள்ளானே, அந்த இருவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு உமர்(ரலி), ‘இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (குர்ஆனின் விளக்கத்தில் பெரும் அறிஞரான உங்களுக்கு இது கூடவா தெரியாது?) ஆயிஷா(ரலி) அவர்களும் ஹஃப்ஸா(ரலி) அவர்களும் தான் அந்த இருவர்” என்று கூறினார்கள். பிறகு உமர்(ரலி) நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள் நான் அன்சாரியான என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருடன் பனூ உமய்யா இப்னு ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்து வந்தேன். அது மனீதாவை ஒட்டிய ஒரு குடிறியிருப்புப் பகுதியாகும். நாங்கள் இருவரும் முறை வைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் தங்குவோம். அவர் ஒரு நாள் நபி(ஸல்) அவர்களுடன் இருப்பார். நான் ஒரு நாள் நபி(ஸல்) அவர்களடன் இருப்பார். நான் ஒரு நாள் நபி(ஸல) அவர்களுடன் இருப்பேன். நான் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது நபி(ஸல்) அவர்களின் அன்றைய நாளின் கட்டளைகள், போதனைகளையும் பிறவற்றையும் அவரிடம் தெரிவிப்பேன். அவர் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது இதே போன்று அவரும் எனக்குத் தெரிவிப்பார். குறைஷிக் குலத்தினராகிய நாங்கள் பெண்களை மிஞ்சி விடுபவர்களாக இருந்து வந்தோம். (பெண்களை எங்கள் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக, எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்.) நாங்கள் அன்சாரிகளிடம் (மதீனா நகருக்கு) வந்தபோது பெண்கள் அவர்களை (ஆண்களை) மிஞ்சி விடக் கூடியவர்களாக இருக்கக் கண்டோம். (பெண்கள் ஆண்களைக் கட்டுப்படுத்துபவர்களாக, தம் மனத்திற்குப் பிடிக்காதவற்றைக் கூறும்போது ஆண்களை எதிர்த்துப் பேசக் கூடியவர்களாக இருக்கக் கண்டோம்.) (இதைக் கண்ட) எங்களுடைய பெண்களும் அன்சாரிப் பெண்களின் வழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினார்கள். (ஒரு நாள்) நான் என் மனைவியிடம் (கோபத்துடன்) இரைந்து பேசினேன். அவள் என்னை எதிர்த்துப் பேசினாள், அவள் என்னை எதிர்த்துப் பேசுகிறார்கள். அவர்களில் சிலர் நபியவர்களிடம் ஒருந்hள் முழுக்கவும் இரவு வரை பேசுவதில்லை” என்று கூறினாள். இதைக் கேட்டு நான் அச்சமுற்று, ‘அவர்களில் இப்படிச் செய்தவர் பெரும் இழப்புக்கு ஆளாம்விட்டார்” என்று கூறினேன். பிறகு உடையணிந்து (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். ‘ஹஃப்ஸாவே! உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் நாள் முழுக்க, இரவு வரை கோபமாக இருக்கிறார்களாமே! (உண்மையா?)” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஆம்” என்று பதிலளித்தார். நான், ‘அப்படி இருப்பவர் நஷ்டப்பட்டுவிட்டார்; இழப்புக்குள்ளாம்விட்டார். இறைத் தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அதனால் அல்லாஹ்வும் நம் மீது கோபமடைந்து நாம் அழிந்து போய்விடுவோம் என்னும் அச்சம் அவருக்கில்லையா? அல்லாஹ்வின் தூதரிடம் அதிகமாக (தேவைகளை) நீ கேட்காதே. எந்த விஷயத்திலும் அவர்களை எதிர்த்துப் பேசாதே. அவர்களிடம் பேசாமல் இருக்காதே. உனக்கு (அவசியத் தேவையென்று) தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா(ரலி) உன்னை விட அழகு மிக்கவராகவும் அல்லாஹ்வின் தூதருக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு ஊடலும் கோபமும் கொள்வதைப் பார்த்து) நீ ஏமாந்துவிடாதே” என்று (அறிவுரை) கூறினேன். அந்தக் காலகட்டத்தில் நாங்கள், கஸ்ஸானியர்கள் (ஷாம் நாட்டில் வாழும் ஒரு குலத்தினர்) எங்களின் மீது படையெடுப்பதற்காக, தங்கள் குதிரைகளுக்கு லாடம் அடித்துத் தயாராம்க் கொண்டிருக்கின்றனர் என்று ஒரு (வதந்தியான) செய்தியைப் பேசிக் கொண்டிருந்தோம். என் அன்சாரித் தோழர் தம் முறை வந்தபோது, நபி(ஸல்) அவர்களிடம் சென்று தங்கி, இஷா நேரத்தில் திரும்பி வந்தார். என் வீட்டுக் கதவை பலமாகத் தட்டி, ‘அவர் (உமர்) அங்கே இருக்கிறாரா?’ என்று கேட்டார். நான் அச்சமுற்று அவரைப் பாhக்க வெளியே வந்தேன். அவர், ‘மிகப் பெரிய ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது” என்று கூறினார். நான், ‘என்ன அது? கஸ்ஸானியர்கள் (படையெடுத்து) வந்துவிட்டனரா?’ என்று கேட்டேன். ‘இல்லை. அதை விடப் பெரிய, அதை விட (அதிகக்) கவலைக்குரிய சம்பவம் நடந்துவிட்டது. இறைத்தூதர்(ஸல்) தம் மனைவிமார்களை விவாகரத்து (தலாக்) செய்துவிட்டார்கள்” என்று கூறினார். நான், ‘ஹஃப்ஸா நஷ்டமடைந்து பெரும் இழப்புக்குள்ளாம்விட்டாள். நான் ‘இது (விரைவில் என்றாவது ஒரு நாள்) நடக்கத்தான் போகிறது’ என்று எண்ணியிருந்தேன்” என்று கூறிவிட்டு உடையணிந்து கொண்டு புறப்பட்டேன். நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகை தொழுதேன். நபி(ஸல்) அவர்கள் தொழுகை முடிந்தவுடன் தம் மாடியறைக்குள் (சென்று) அங்கே தனியே இருந்தார்கள். நான் ஹஃப்ஸாவிடம் சென்றேன். அப்போது அவர் அழுது கொண்டிருந்தார். நான், ‘ஏன் அழுகிறாய்? நான் உன்னை எச்சரித்திருக்கவில்லையா? இறைத்தூதர்(ஸல்) உங்களை விவாகரத்து (தலாக்) செய்துவிட்டாரா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘எனக்கொன்றும் தெரியாது. அவர் அந்த அறையில்தான் இருக்கிறார்” என்று கூறினார். நான் மிம்பருக்கருகில் சென்றேன். அதைச் சுற்றி ஒரு கூட்டத்தினர் அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் (கேள்விப்பட்ட செய்தியை எண்ணி) அழுது கொண்டிருந்தனர். அவர்களுடன் நான் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பிறகு நான் அந்த (துக்ககரமான) சூழ்நிலையத் தாங்க முடியாமல் நபியவர்கள் இருந்த அறைக்கு அருகே சென்றேன். அங்கிருந்த, நபி(ஸல்) அவர்களின் கறுப்பு அடிமையிடம், ‘உமருக்காக (எனக்காக) நபியவர்களிடம் (அறைக்குள் வர) அனுமதி கேள்” என்று சொன்னேன். அந்த அடிமை அறைக்கு உள்ளே சென்று நபி(ஸல்) அவர்களிடம் பேசிவிட்டுப் பிறகு வெளியே வந்து, ‘உங்களைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள்” என்று கூறினார். எனவே, நான் திரும்பி வந்து மிம்பருக்கருகில் இருந்த கூட்டத்தினருடன் அமர்ந்து கொண்டேன். பின்னர், அங்கு நிலவிய (துக்ககரமான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் மீண்டும் அந்த அடிமையிடம் சென்று, ‘உமருக்காக நீ (நபி(ஸல்) அவர்களிடம் அவர்களின் அறைக்குள் வர) அனுமதி கேள்” என்று கூறினேன். அவர் (உள்ளே சென்று வந்து) முன்பு சொன்னதைப் போன்றே இப்போதும் கூறினார். நான் (மறுபடியும்) மிம்பருக்கருகில் இருந்த கூட்டத்தாருடன் அமர்ந்து கொண்டேன். மறுபடி அங்கு நான் கண்ட (கவலையான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் அந்த அடிமையிடம் சென்று, ‘உமருக்காக அனுமதி கேள்” என்று கூறினேன். அப்போதும் அந்த அடிமை முன் போன்றே கூறினார். நான் திரும்பிச் செல்ல இருந்தபோது அந்த அடிமை என்னை அழைத்து, ‘உங்களுக்கு இறைத்தூதர் அனுமதியளித்து விட்டார்கள்” என்று கூறினார். உடனே, நான் நபி(ஸல்) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் படுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கம் அந்தப் பாய்க்குமிடையே மெத்தை எதுவும் இருக்கவில்லை. எனவே, அவர்களின் விலாவில் அந்த ஈச்சம் பாய் அடையாளம் பதித்திருந்தது. அவர்கள் ஈச்ச நார்கள் அடைத்த தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் சலாம் கூறினேன். பிறகு நான் நின்று கொண்டே, ‘தங்கள் மனைவிமார்களை தாங்கள் தலாக் (விவாகரத்து) செய்து விட்டீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள் தங்களின் பார்வையை என் பக்கம் உயர்த்தி, ‘இல்லை” என்று கூறினார்கள். பிறகு, நான் நின்று கொண்டே (அவர்களின் கோபத்தைக் குறைத்து) அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டுவர விரும்பி, பின்வருமாறு சொல்லத் தொடங்கினேன்: இறைத்தூதர் அவர்களே! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். குறைஷிகளான நாங்கள் பெண்களை எங்கள் அதிகாரத்திற்குள் வைத்திருந்தோம். பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரிடம் (மதீனா வாசிகளிடம்) நாங்கள் வந்தபோது, (எங்கள் பெண்களும் அவர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டு எங்களிடம் எதிர்த்துப் பேசத் தொடங்கினர்) என்று தொடங்கி, (முன்பு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் என் மனைவி பற்றிச் சொன்னவை) எல்லாவற்றையும் கூறினேன். (அதைக் கேட்டு) நபி(ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் ஹஃப்ஸாவிடம் சென்று, ‘உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா(ரலி) உன்னை விட அழகானவராகவும் அல்லாஹ்வின் தூதருக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு ஊடலும் கோபமும் கொள்வதைக் கண்டு) நீ ஏமாந்துவிடாதே’ என்று கூறியதைச் சொன்னேன். (இதை நான் சொல்லக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் இன்னொரு முறை புன்னகைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் புன்னகைத்ததைக் கண்ட நான் அமர்ந்து கொண்டேன். பிறகு, நான் அவர்களின் அறையை என் பார்வையை உயர்த்தி நோட்டமிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! கண்ணைக் கவருகிற பொருள் எதையும் நான் அதில் காணவில்லை; மூன்றே மூன்று (பதனிடப்படாத) தோல்களைத் தவிர அப்போது நான், ‘தங்கள் சமுதாயத்தினருக்கு உலகச் செல்வங்களை தாராளமாக வழங்கும்படி தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். ஏனெனில், பாரசீகர்களுக்கும் உலோமர்களுக்கும் – அவர்கள் அல்லாஹ்வை வணங்காதவர்களாக இருந்தும் (உலகச் செல்வங்கள்) தாரளமாக வழங்கப்பட்டிருக்கின்றனவே” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் (தலையணை மீது) சாய்ந்து உட்கார்ந்து, ‘கத்தாபின் மகனே! நீங்கள் சந்தேகத்தில் இருக்கிறீர்களா? அவர்கள், தம் (நற் செயல்களுக்கான) பிரதிபலன்கள் எல்லாம் இந்த உலக வாழ்விலேயே (மறுமை வாழ்வுக்கு) முன்னதாகக் கொடுக்கப்பட்டுவிட்டார்கள்” என்று கூறினார்கள். உடனே நான், ‘இறைத்தூதர் அவர்களே! (அவரசப்பட்டு இப்படிக் கேட்டதற்காக) எனக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிராந்தியுங்கள்” என்று கூறினேன்.

நபி(ஸல்) அவர்களின் அந்த இரகசியத்தை ஹஃப்ஸா(ரலி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறி பம்ரங்கப்படுத்திவிட்டபோது, அதன் காரணத்தால்தான் நபி(ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களிடமிருந்து விலகித் தனிமையில் இருக்கத் தொடங்கினார்கள். மேலும், ‘அவர்களிடம் ஒரு மாத காலத்திற்கு செல்ல மாட்டேன்” என்றும் கூறியிருந்தார்கள். அல்லாஹ் அவர்களைக் கண்டித்தபோது தம் மனைவிமார்களின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட கடும் வருத்தமே இவ்வாறு அவர்கள் சொல்லக் காரணமாகும். இருபத்தொன்பது நாள்கள் கழிந்துவிட்ட பொழுது, நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று, அவர்களிலிருந்து (மற்ற மனைவிமார்களிடம் செல்லத்) தொடங்கினார்கள். ஆயிஷா(ரலி), அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம், ‘எங்களிடம் ஒரு மாத காலத்திற்கு வரப் போவதில்லை என்று நீங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே, நாங்கள் இருபத்தொன்பது இரவுகளல்லவா கழித்திருக்கிறோம்? (ஒரு நாள் முன்னதாக வந்து விட்டீர்களே!) அதை நான் ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டே வருகிறேனே” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மாதம் என்பது (குறைந்த பட்சம்) இருபத்தொன்பது நாள்களும் தான்” என்று பதில் கூறினார்கள். அந்த மாதமும் இருபத்தொன்பது நாள்களாகவே இருந்தது.

ஆயிஷா(ரலி) கூறினார்: அப்போதுதான், (‘நபி(ஸல்) அவர்களுடன் வாழ்ந்து, அல்லது அவர்களின் மணபந்தத்திலிருந்து விலம் விடுவது’ ஆகிய இரண்டு விஷயங்களில்) நாங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கட்டளையிடும் இறைவசனம் அருளப்பட்டது. எனவே, நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவிமார்களில் முதலாவதாக என்னிடம் தொடங்கி, ‘உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்; நீ உன் தாய் தந்தையரிடம் (அதற்காக) அனுமதி வாங்கும் வரை அவசரப்படத் தேவையில்லை” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘என் தாய் தந்தையர் தங்களைவிட்டுப் பிரிந்து வாழும்படி ஒருபோதும் சொல்ல மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினேன். பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘நபியே! நீங்கள் உங்கள் மனைவிமார்களிடம் கூறிவிடுங்கள்: ‘நீங்கள் உலக வாழ்வையும் அதன் அழகையும் விரும்புகிறீர்களென்றால் வாருங்கள். நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பி விடுகிறேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுவுலகத்தையும் விரும்புகிறீர்கள் என்றால் (அறிந்து கொள்ளுங்கள்:) உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான பிரதிபலனைத் தயார் செய்து வைத்துள்ளான்’ என்று அல்லாஹ் கூறினான். (எனவே, உங்கள் முடிவு என்ன?)” என்று கேட்டார்கள். நான், ‘இந்த விஷயத்திலா என் தாய் தந்தையரிடம் நான் அனுமதி கேட்பேன். நானோ அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமையையும்தான் விரும்புகிறேன்” என்றேன். பிறகு, தம் மனைவியர் அனைவருக்கும் (‘தம்முடன் வாழ்வது, தம்மைவிட்டுப் பிரிவது’ ஆகிய இரண்டில்) விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை வழங்கினார்கள். அவர்கள் அனைவருமே நான் சொன்னது போன்றே சொன்னார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2469

அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மனைவிமார்களை ஒரு மாத காலத்திற்கு விலக்கி வைப்பதாக சத்தியம் செய்திருந்தார்கள். அவர்களின் கால் (நரம்பு) பிசம் விட்டிருந்தது; எனவே, அவர்கள் தங்களின் மாடியறை ஒன்றில் அமர்ந்திருந்தார்கள். அப்போது உமர்(ரலி) வந்து, ‘தாங்கள் தங்கள் மனைவிமார்களை விவாகரத்து (தலாக்) செய்து விட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘இல்லை; ஆனால், நான் அவர்களிடமிருந்து ஒரு மாதகாலம் விலகியிருப்பதாக சத்தியம் செய்துள்ளேன்” என்று கூறினார்கள்; அவ்வாறே இருபத்தொன்பது நாள்கள் (அதில்) தங்கியிருந்தார்கள். பிறகு இறங்கி வந்து தம் மனைவிமார்களிடம் சென்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2470

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் நுழைந்தார்கள். நானும் அவர்களைச் சந்திக்கப் பள்ளிவாசலில் நுழைந்தேன். ஒட்டகத்தை (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலின் முன்பு, கற்கள் பதிக்கப்பட்டிருந்த நடைபாதையில் கட்டி வைத்தேன். (நபியவர்களிடம் சென்று), ‘இதோ, தங்கள் ஒட்டகம்” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் வெளியே வந்து ஒட்டகத்தைச் சுற்றி உலாவத் தொடங்கினார்கள். ‘ஒட்டகமும் (அதன்) விலையும் உனக்கே” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2471

ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு குலத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்து, (அங்கு) நின்று சிறுநீர் கழித்தார்கள்.

“அல்லது ‘நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்ததை பார்த்தேன்’ என்று ஹுதைஃபா(ரலி) கூறினார்” என்று அறிவிப்பாளர் அபூ வாயில்(ரஹ்) கூறினார்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2472

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2473

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நடைபாதை விஷயத்தில் மக்கள் சச்சரவு செய்தபோது, ஏழு முழங்கள் நிலத்தைப் பொதுவழியாக (போக்குவரத்துச் சாலையாக)விட்டுவிட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2474

அப்துல்லாஹ் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். கொள்ளையடிப்பதை (பிறர் பொருளை அவரின் அனுமதியின்றி பலவந்தமாக, பகிரங்கமாக அபகரித்துக் கொள்வதை)யும் (போரின்போது அல்லது பகைமையின் காரணத்தால்) ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2475

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “விபச்சாரி, விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் விபசாரம் புரிவதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகிற பொழுது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, (பிறரின் பொருளை அபகரித்துக்) கொள்ளையடிக்கும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் கொள்ளையடிப்பதில்லை” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து இதே போன்று மற்றோர் அறிவிப்பும் உள்ளது. அதில் கொள்ளையடிப்பது பற்றிய வாசகங்கள் மட்டும இடம் பெறவில்லை.

அபூ அப்தில்லாஹ்(புகாரீ) கூறுகிறேன்: “இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் இச்செயல்களை ஒருவன் செய்வதில்லை என்பதன் கருத்து, ‘இவற்றைச் செய்யும் நேரத்தில் இவற்றைச் செய்பவனிடமிருந்து ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒளி நீக்கப்பட்டு விடுகிறது’ என்பதாகும்”

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2476

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” மர்யமின் குமாரர்(ஈஸா) அவர்கள் நீதி செலுத்தும் நடுவராக உங்களிடையே இறங்குவார்கள். அவர்கள் வந்தவுடன் சிலுவையை உடைப்பார்கள்; பன்றியைக் கொல்வார்கள்; ‘ஜிஸ்யா’ வரியை (ஏற்க) மறுப்பார்கள். எவரும் பெற முன் வராத அளவுக்கு செல்வம் பெரும் வழியும். இவையெல்லாம் நடக்காதவரை உலக முடிவு (மறுமை) நாள் வராது.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2477

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது நெருப்பு ஒன்று மூடப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே, ‘எதற்காக இந்த நெருப்பு மூட்டப்படுகிறது?’ என்று கேட்டார்கள். ‘நாட்டுக் கழுதை இறைச்சியைச் சமைப்பதற்காக” என்று மக்கள் பதிலளித்தார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘பானைகளை உடைத்து அவற்றிலுள்ள (இறைச்சி, உணவு ஆகிய)வற்றை எறிந்துவிடுங்கள்” என்று உத்திரவிட்டார்கள். மக்கள், ‘அதிலுள்ளவற்றை எறிந்துவிட்டு அவற்றைக் கழுவி விடலாமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறே) கழுவிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2478

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள். ‘சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது” (திருக்குர்ஆன்- 17-81) என்னும் வசனத்தை கூறத் தொடங்கினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2479

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் என்னுடைய அலமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்களின் உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு தீரைச் சிலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை நபி(ஸல்) அவர்கள் கிழித்துவிட்டார்கள். எனவே, அதிலிருந்து நான் இரண்டு மெத்தை இருக்கைகளைச் செய்து கொண்டேன். அவை வீட்டில் இருந்தன. அவற்றின் மீது நபி(ஸல்) அவர்கள் அமர்வார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2480

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும்போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2481

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவிமார்களில் ஒருவரிடம் இருந்தார்கள். விசுவாசிகளின் தாய்மார்களின் ஒருவர் (நபியவர்களின் மனைவிமார்களில் ஒருவர்) பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள ஒரு தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். (அவர்கள் உணவு) கொடுத்தனுப்பிய வீட்டிலிருந்த நபி(ஸல்) அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து, உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்), ‘உண்ணுங்கள்” என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்தினார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2482

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ‘ஜுரைஜ்’ என்று அழைக்கப்பட்டு வந்த ஒருவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். அவருக்கு பதில் கூற ஜுரைஜ் மறுத்துவிட்டார். ‘நான் அவருக்கு பதிலளிப்பதா, அல்லது தொழுவதா?’ என்று (மனத்திற்குள்) கூறினார். பிறகு (மீண்டும்), அவரின் தாயார் அவரிடம் வந்து, (தான் அழைத்தும் தன் மகன் பதிலளிக்க வில்லையே என்ற கோபத்தில்), ‘இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்கச் செய்யாத வரை அவனுக்கு (ஜுரைஜுக்கு) மரணத்தைத் தராதே” என்று கூறினார். (ஒரு நாள்) ஜுரைஜ் தன் ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், ‘நான் ஜுரைஜை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன்” என்று கூறினாள். அதற்காக, ஜுரைஜின் முன்பு வந்து அவருடன் (தகாத உறவு கொள்ள அழைத்துப்) பேச முனைந்தாள். அவர் (இணங்க) மறுத்துவிட்டார். எனவே, அவள் ஒர் இடையனிடம் சென்று, தன்னை அவனுடைய ஆளுகைக்குள் ஒப்படைத்துவிட்டாள். அதன் காரணமாக ஒரு (ஆண்) குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு, ‘இவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன்” என்று கூறினாள். (இதைக் கேட்ட) மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்தனர்; (கோபாவேசத்தில்) அவரின் ஆசிரமத்தைத் தகர்த்து உடைத்துவிட்டனர்; அவரை (அவரின் அறையிலிருந்து) இறக்கி அவரை ஏசினர். ஜுரைஜ் உளூச் செய்து தொழுதார். பிறகு அக்குழந்தையிடம் வந்து, ‘குழந்தையே! உன் தந்தை யார்?’ என்று கேட்டார். அந்தக் குழந்தை (வாய் திறந்து), ‘(இன்ன) இடையன்” என்று கூறியது. இதைச் செவியுற்ற மக்கள், ‘உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தால் நாங்கள் கட்டித் தருகிறோம்” என்று (ஜுரைஜிடம் அனுமதி) கேட்டார்கள். அதற்கு ஜுரைஜ், ‘இல்லை; களிமண்ணால் கட்டித் தந்தாலே போதும்” என்று கூறிவிட்டார்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.