பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2260
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கூடிய, நம்பகமான கருவூலக் காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்!” என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2261
அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நானும் அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த மற்றும் இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம்; (அவர்கள் இருவரும் நபி(ஸல) அவர்களிடம் பதவி கேட்டார்கள்;) நான் நபி(ஸல்) அவர்களிடம்), ‘இவ்விருவரும் பதவி கேட்பார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை! (முன்பே நான் இதை அறிந்திருந்தால் இவர்களைத் தங்களிடம் அழைத்து வந்திருக்கவே மாட்டேன்!)” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் ‘பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி கொடுக்கமாட்டோம்!” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2262
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; அப்போது நபித்தோழர்கள், ‘நீங்களுமா?’ என்று கேட்டார்கள். ‘ஆம்! மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்!” என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2263
ஆயிஷா(ரலி) அறிவித்தார். (மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குச் சென்ற போது) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் பனூ அப்து இப்னு அதீ குலத்தைச் சேர்ந்த ஒருவரை (வழிகாட்டியாகக்) கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் தேர்ந்த வழிகாட்டியாக இருந்தார். அம்மனிதர் ஆஸ்பின் வாயிலின் குடும்பத்தாரிடம் உடன்படிக்கை செய்திருந்தார். மேலும், அவர் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் மார்க்கத்தில் இருந்தார். நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் அவரை நம்பித் தம் ஒட்டகங்களை அவரிடம் ஒப்படைத்து, மூன்று நாள்கள் கழித்து ஸவ்ர் குகையில் வந்து சேரும்படி கூறினார்கள். அம்மனிதர் மூன்றாம் நாள் காலையில் ஒட்டகங்களுடன் அவர்களிடம் வந்தார். உடனே, நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் (மதீனாவை நோக்கிப்) புறப்பட்டார்கள். அவர்களுடன் ஆமிர் இப்னு ஃபுஹைரா என்பாரும் சேர்ந்து கொண்டார். பனூ தீல் கூட்டத்தைச் சேர்ந்த அந்த வழிகாட்டி அம்மூவரையும் மக்காவிற்குக் கீழே கடற்கரை வழியாக அழைத்துச் சென்றார்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2264
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் பனூ} தீல் குலத்தைச் சேர்ந்த ஒருவரை (வழிகாட்டுவதற்காகக்) கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் மார்க்கத்தில் இருந்தார். நபி(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் தம் ஒட்டகங்களை அவரிடம் கொடுத்து ‘மூன்று இரவுகள் கழித்து எங்கள் ஒட்டகங்களுடன் ஸவ்ர் குகையில் எங்களைச் சந்திக்க வேண்டும்’ என்று அவரிடம் கூறினார்கள். அவர், (அவ்வாறே) மூன்றாம் நாள் காலையில் அவர்களின் ஒட்டகங்களுடன் அவர்களைச் சந்தித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2265
யஃலா இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் சிரமமான (தபூக்) போரில் பங்கெடுத்துக் கொண்டேன். அந்தப் போர் என்னுடைய அமல்களிலேயே உறுதிமிக்கதாக எனக்குத் தோன்றியது. என்னிடம் கூலியாள் ஒருவர் இருந்தார். அவர் ஒரு மனிதரிடம் சண்டையிட்டார். அப்போது (அவர்களில்) ஒருவர், மற்றவரின் விரலைக் கடித்துவிட்டார். கடிபட்டவர் விரலை உருவிக் கொண்டு, கடித்தவரின் முன் பல்லை உடைத்தார். பல் கீழே விழுந்தது. பல்லுடைக்கப்பட்டவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, நபி(ஸல்) அவர்கள் ‘அதற்கு எந்த நஷ்ட ஈடும் இல்லை!” என்று தீர்ப்பளித்துவிட்டு, அவரிடம், ‘ஒட்டகம் மெல்லுவது போல் நீர் மெல்லுவதற்காக அவர் உம் வாயில் தன் விரலைக் கொடுத்துக் கொண்டிருப்பாரா?’ என்று கேட்டார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2266
ஸுஹைர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். “ஒருவர் இன்னொருவரின் கையைக் கடித்துவிட்டார்; கடிபட்டவர் கடித்தவரின் முன் பல்லை உடைத்துவிட்டார்! ‘அதற்கு எந்த நஷ்டஈடும் தரத் தேவையில்லை’ என்று அபூ பக்ர்(ரலி) தீர்ப்பளித்தார்கள்!”
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2267
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “(மூஸா(அலை), கிள்ரு(அலை) ஆகிய) இருவரும் (ஒன்றாக) நடந்து சென்றபோது, விழும் நிலையிலிருந்த ஒரு சுவரைக் கண்டார்கள். உடனே, கிள்ரு(அலை) அவர்கள் தங்களின் கையை உயர்த்த, அது நேராக நின்றுவிட்டது! அப்போது மூஸா(அலை) அவர்கள், கிள்ரு(அலை) அவர்களிடம் ‘நீர் விரும்பியிருந்தால் இதற்குக் கூலி வாங்கியிருக்கலாமே!” என்று கூறினார்கள்”
என உபை இப்னு கஅபு(ரலி) அறிவித்தார். “கிள்ரு(அலை) அவர்கள் தம் கையை உயர்த்தினார்கள்’ என்று சொன்னபோது, அறிவிப்பாளர் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் (கிள்ரு) (அலை) அவர்களைப் போன்று) கையை உயர்த்திக் காட்டி ‘இப்படி!” என்று கூறினார்கள்.
“ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் ‘கிள்ரு(அலை) அவர்கள் சுவரைத் தம் கரத்தால் தடவ, அதுநேராக நின்றுவிட்டது!’ என்று கூறினார்கள் என நான் நினைக்கிறேன்” என்று அறிவிப்பாளர் யஃலா(ரஹ்) அவர்கள் (சந்தேகத்துடன்) கூறுகிறார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2268
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களுக்கும் வேதம் கொடுக்கப்பட்ட இரண்டு சமுதாயத்தாருக்கும் உவமை, ஒரு மனிதரால் வேலைக்கு அமர்த்தப்பட்ட கூலியாட்களாவர்! ‘ஒரு கீராத் கூலிக்குக் காலையிலிருந்து பகலின் நடுப்பகல் நேரம்வரை எனக்கு வேலை செய்பவர் யார்?’ என்று அம்மனிதர் கேட்டார். யூதர்கள் அவ்வாறு வேலை செய்தார்கள். பிறகு, ‘நடுப்பகலிலிருந்து அஸர் தொழுகை வரை ஒரு கீராத் கூலிக்கு எனக்காக வேலை செய்பவர் யார்?’ என்று அவர் கேட்டார். கிறிஸ்தவர்கள் அவ்வாறு வேலை செய்தார்கள். பிறகு, ‘அஸரிலிருந்து சூரியன் மறையும் வரை இரண்டு கீராத் கூலிக்கு எனக்காக வேலை செய்பவர் யார்?’ என்று அவர் கேட்டார். (முஸ்லிம்களான) நீங்கள் தாம் அ(ப்படி வேலை செய்த)வர்கள்! யூதர்களும் கிறிஸ்தவர்களும் கோபமுற்று. ‘அதிக வேலை நாங்கள் செய்திருக்கும்போது எங்களுக்கு ஏன் குறைந்த கூலி?’ என்று கேட்டனர். அதற்கு அவர் ‘உங்களுக்கு உரியதை நான் குறைத்திருக்கிறேனா?’ என்று கேட்டார். அவர்கள் ‘இல்லை!” என்றனர். ‘சிலருக்கு நான் அதிகமாகக் கொடுப்பது என்னுடைய அருட்கொடையாகும்! நான் விரும்பியவருக்கு நான் அதைக் கொடுப்பேன்!” என்று அவர் கூறினார் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2269
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்களுக்கும், யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உவமை, ஒருவரால் கூலிக்கு நியமிக்கப்பட்ட மனிதர்களாவர்! ‘ஒவ்வொரு கீராத் கூலிக்கு (காலையிலிருந்து) நடுப்பகல் நேரம்வரை எனக்காக வேலை செய்பவர் யார்?’ என்று அம்மனிதர் கேட்டார். யூதர்கள் ஒவ்வொரு கீராத் கூலிக்காக வேலை செய்தார்கள்; பிறகு, கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு கீராத் கூலிக்காக வேலை செய்தார்கள். பிறகு, அஸரிலிருந்து சூரியன் மறையும் வரை, இரண்டிரண்டு கீராத் கூலிக்கு (முஸ்லிம்களாகிய) நீங்கள்தான் வேலை செய்கிறீர்கள்; யூதர்களும் கிறிஸ்தவர்களும் கோபமுற்று, ‘அதிக வேலை நாங்கள் செய்திருக்கும்போது எங்களுக்கு ஏன் குறைந்த கூலி?’ என்று கேட்டனர். அதற்கு அவர் ‘உங்களுக்கு உரியதை நான் குறைத்திருக்கிறேனா?’ என்று கேட்டார். அவர்கள் ‘இல்லை!” என்றனர். ‘சிலருக்கு நான் அதிகமாகக் கொடுப்பது என்னுடைய அருட் கொடையாகும்! நான் விரும்பியவருக்கு நான் அதைக் கொடுப்பேன்!” என்று அம்மனிதர் கூறினார். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2270
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!’ என்று அல்லாஹ் கூறினான்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2271
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகியோரின் உவமை, குறிப்பிட்ட கூலிக்கு, ஒரு நாள் முழுக்க இரவுவரை, தனக்காக வேலை செய்யும்படி ஒரு மனிதரால் அமர்த்தப்பட்டவர்கள் ஆவர்! அவர் (முதலில்) ஒரு கூட்டத்தாரை கூலிக்கு அமர்த்தினார்; அவர்கள் நடுப்பகல் வரை வேலை செய்துவிட்டு, ‘நீர் எங்களுக்குத் தருவதாகக் கூறிய கூலி எங்களுக்குத் தேவையில்லை; எங்கள் வேலை வீணாகட்டும்!’ எனக் கூறினார்கள். அப்போது கூலிக்கு அமர்த்தியவர் அவர்களிடம், ‘இவ்வாறு செய்யாதீர்கள்! உங்கள் எஞ்சிய வேலைகளையும் பூர்த்தி செய்யுங்கள்! கூலியையும் முழுமையாகப் பெறுங்கள்!’ எனக் கூறினார். அவர்கள் (ஏற்க) மறுத்து வேலையைவிட்டுவிட்டனர். அவர்களுக்குப் பின், மற்றும் சில கூலியாட்களை அவர் வேலைக்கு அமர்த்தினார். அவர்களிடம் அவர், ‘இன்று எஞ்சியுள்ள நேரத்தைப் பூர்த்தியாக்குங்கள்! அவர்களுக்குத் தருவதாகக் கூறிய கூலியை உங்களுக்குத் தருகிறேன்!” என்றார். அவர்கள் அஸர் தொழுகை வரை வேலை செய்துவிட்டு ‘உமக்காக நாங்கள் வேலை செய்தது வீணாகட்டும்! எங்களுக்காக நீர் நிர்ணயித்த கூலியையும் நீரே வைத்துக் கொள்ளும்!” என்றனர். அவர் ‘உங்கள் எஞ்சிய வேலையைப் பூர்த்தி செய்யுங்கள்! பகலில் இன்னும் சிறிது நேரமே மிச்சமுள்ளது!” என அவர்களிடம் கூறினார். அவர்கள் (வேலை செய்ய) மறுத்துவிட்டனர். பிறகு, அன்றைய பொழுதில் எஞ்சிய நேரத்தில் வேலை செய்வதற்காக மற்றொரு கூட்டத்தாரை அவர் வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் சூரியன் மறையும் வரை உள்ள எஞ்சிய நேரத்தில் வேலை செய்தனர். இதனால், அவர்கள் முதலிரண்டு கூட்டத்தினரின் கூலியையும் சேர்த்து முழுமையாகப் பெற்றனர். இதுதான் (முஸ்லிம்களாகிய) இவர்களுக்கும் இவர்கள் ஏற்றுள்ள பிரகாசத்திற்கும் உரிய உவமையாகும்!” என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2272
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் ‘நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!” என்று தமக்குள் கூறினர்.
அவர்களில் ஒருவர் ‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!
மற்றொருவர், ‘இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, ‘முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!” என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமேவிட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.
மூன்றாமவர், ‘இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!” என்று கூறினார். ‘நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!” என்று கூறினேன். அதற்கவர் ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!” என்றார். ‘நான் உம்மை கேலி செய்யவில்லை!” என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். ‘இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!” என அப்துல்லாஹ்வின் உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2273
அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி கட்டளையிட்டால், எங்களில் ஒருவர் கடைவீதிக்குச் சென்று, சுமைதூக்கி ஒரு ‘முத்து’ கூலியைப் பெற்று அதை தர்மம் செய்வார்! ஆனால், இன்று அவர்களில் சிலருக்கு ஓர் இலட்சம் தங்கக் காசுகள் உள்ளன!”
“அபூ மஸ்வூத்(ரலி) தம்மையே இவ்வாறு (‘அவர்களில் சிலருக்கு’ என்று) குறிப்பிட்டதாக நாம் கருதுகிறோம்!” என்று அறிவிப்பாளர் ஷகீக்(ரஹ்) கூறினார்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2274
தாவூஸ் அறிவித்தார். சந்தைக்கு வரும் வணிகர்களை எதிர்கொண்டு வாங்குவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ‘க்ராம வாசிக்காக உள்ளூர் வாசிவிற்றுத் தரக்கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். கிராமவாசிக்காக உள்ளூர் வாசி விற்கக் கூடாது என்பதன் பொருள் என்ன? என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர் ‘இடைத் தரகராக இருக்கக் கூடாது’ என்றார்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2275
கப்பாப்(ரலி) அறிவித்தார். நான் கருமானாக இருந்தேன்; ஆஸ் இப்னு வாயில் என்பவனிடம் கூலிக்கு வேலை செய்தேன். எனக்குரிய கூலி அவனிடம் தங்கிவிட்டது; அதைக் கேட்பதற்காக அவனிடம் நான் சென்றபோது அவன், ‘நீர் முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும் வரை உமக்குரியதை நான் தர மாட்டேன்!” என்றான். நான், ‘நீ செய்து, பிறகு (உயிர் தந்து) எழுப்பப்படும் வரை அது நடக்காது!” என்றேன். ‘நான் செத்து, திரும்ப எழுப்பப்படுவேனா?’ என்று அவன் கேட்டான். நான் ‘ஆம்!” என்றேன். அதற்கவன், ‘அப்படியானால் அங்கே எனக்குச் செல்வமும் குழந்தைகளும் கிடைப்பர்! அப்போது உமக்குரியதைத் தந்து விடுகிறேன்!” என்றான். அப்போது, ‘நம்முடைய வசனங்களை நிராகரித்துவிட்டு, ‘(மறுமையிலும்) நான் நிச்சயமாக பொருட்செல்வமும், மக்கள் செல்வமும் கொடுக்கப்படுவேன்!’ என்று கூறியவனை (நபியே!) நீர் பார்த்தீரா!” என்ற (திருக்குர்ஆன் 19: 77) இறைவசனம் அருளப்பட்டது.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2276
அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், ‘இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!” என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து ‘கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?’ என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், ‘ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!” என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, ‘அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..” என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். ‘இதைப் பங்கு வையுங்கள்!” என்று ஒருவர் கேட்டபோது, ‘நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!” என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டுவிட்டு, ‘நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2277
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். “(அடிமையாயிருந்த) அபூ தைபா(ரலி), நபி(ஸல்) அவர்களுக்கு இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தார்; நபி(ஸல்) அவர்கள் அவருக்கு ஒரு ஸாவு அல்லது இரண்டு ஸாவு உணவு கொடுக்குமாறு கட்டளையிட்டு, அவரின் எஜமானர்களிடம் பேசி, அவர் செலுத்த வேண்டிய வரியைக் குறைத்தார்கள்!”
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2278
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி, எடுத்தார்கள்; இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தவருக்கு அதற்கான கூலியைக் கொடுத்தார்கள்!”
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2279
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்தார்கள். அதற்கான கூலியை இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தவருக்குக் கொடுத்தார்கள். அதை (இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவதை) வெறுக்கத் தக்கதாகக் கருதியிருந்தால் நபி(ஸல்) அவர்கள் அவருக்குக் (கூலி) கொடுத்திருக்க மாட்டார்கள்!”
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2280
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வார்கள்; எவருடைய கூலியிலும் நபி(ஸல்), அவர்கள் அநீதி இழைக்க மாட்டார்கள்!”
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2281
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுக்கும் ஓர் இளைஞரை அழைத்துவரச் செய்து இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தார்கள். அவருக்காக ஒரு ஸாவு அல்லது இரண்டு ஸாவு, ஒரு ‘முத்து’ அல்லது இரண்டு ‘முத்து’ (அளவிற்கு உணவு) கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். அவர் சம்பந்தமாகப் பேசி அவர் செலுத்த வேண்டிய வரியைக் குறைத்தார்கள்!”
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2282
அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். “நாய் விற்றகாசு, விபசாரியின் வருமானம், சோதிடனுக்குரிய தட்சணை ஆகியவற்றை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!”
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2283
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அடிமைப் பெண்கள் (விபச்சாரத்தின் மூலம்) பொருளீட்டுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2284
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஆண் விலங்குகளைப் பெண் விலங்குகளுடன் இணையச் செய்வதற்கு (பொலிப் பிராணியைக் கொண்டு பெண் விலங்குகளுக்கு சினையூட்டுவதற்கு) கட்டணம் பெறுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2285
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். “விளைச்சலில் பாதி கூறப்படும் என்ற அடிப்படையில் கைபருடைய நிலங்களை உழைத்துப் பயிரிட்டுக் கொள்வதற்காக, யூதர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வழங்கினார்கள்!’
“(நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) விளைநிலங்களை அவற்றின் விளைச்சலில் ஏதேனும் (ஒரு பகுதியைப்) பெற்றுக் கொண்டு வாடகைக்கு (குத்தகைக்கு) கொடுக்கப்பட்டு வந்தன!’ என்று இப்னு உமர்(ரலி) கூறினார் என நாஃபிஉ(ரஹ்) கூறினார்.
பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2286
ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். “விளை நிலங்களைக் குத்தகைக்கு விடுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்’. ‘முடிவில் கைபரிலிருந்து யூதர்களை உமர்(ரலி) வெளியேற்றினார்கள். என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.