36.ஷுஃஆ (இருவருக்கு சொந்தமான சொத்து விற்பது)

பாகம் 2, அத்தியாயம் 36, எண் 2257

ஜாபிர்(ரலி) அறிவித்தார். “பங்காளிக்கே விற்க வேண்டும் என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது! எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் (பிரித்துக்) குறிக்கப்பட்டால் பங்காளிக்குத்தான் விற்கவேண்டும் என்ற நிலையில்லை!’ என்று இறைத்தூதர்(ஸல்) விதித்தார்கள்

பாகம் 2, அத்தியாயம் 36, எண் 2258

அம்ர் இப்னு ஷரீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான், ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) வந்து, தம் கையை என்னுடைய தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூ ராஃபிஉ(ரலி) வந்து, ‘ஸஅதே! உம்முடைய வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக!’ எனக் கூறினார்கள். அதற்கு ஸஅத்(ரலி) ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்!” என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர்(ரலி) அவர்கள், ஸஅத்(ரலி) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!” என்றார்கள். அப்போது ஸஅத்(ரலி), ‘அல்லாஹ்வீன் மீது ஆணையாக! தவணை அடிப்படையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தரமாட்டேன்!” என்று கூறினார்கள். அதற்கு அபூ ராஃபிவு(ரலி), ‘ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது; அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்’ என்று கூறிவிட்டு ஸஅதுக்கே விற்றார்.

பாகம் 2, அத்தியாயம் 36, எண் 2259

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு” என்றார்கள்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , . Bookmark the permalink.