சக முஸ்லிம் வலைப்பதிவர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

பிஸ்மில்லாஹ்!
 

அன்பின் மார்க்க சகோதரர்களுக்கு…

இறைவனை, அவனுடைய தூதரை, மறுமையை, இன்னும் பல மறைவானவற்றை நம்ப மறுக்கும் நம்பிக்கையற்றவர்கள் (காஃபிர்கள்) செய்கின்ற இவ்வுலக காரியங்கள் யாவும் இவ்வுலக பயனை மட்டுமே கருத்தில் கொண்டதாகும். அதனால் இரு சமுதாயங்களுக்கிடையே துவேசத்தை தூண்டி அதில் குளிர்காயும் கேடுகெட்ட மனிதர்கள் இணையம் என்னும் இந்த அதியற்புத மீடியாவையும் விட்டுவைக்கவில்லை. நிச்சயமாக முஸ்லிமாகிய நமக்கு இதுவும் ஒரு சோதனையே! உணர்ச்சி பிழம்பான இந்த விஷயத்தில் ஒரு இஸ்லாமியன் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பது மிக முக்கியமான விஷயமாகும். இவ்வுலக பயனை கருத்தில் கொண்ட இறைவனைப் பற்றிய நம்பிக்கையற்ற எதிர்தரப்பார் எடுத்து வைக்கும் வாதங்களை ஒரு முஸ்லிம் தான் இஸ்லாம் எனும் வட்டவரைக்குள் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை முதலில் நினைவில் கொண்டு பிறகு அவர்களுக்கு பதிலுரைப்பதே அழகானதாகும். ஆனால் நம்பிக்கையற்றவர்களின் சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமாக இஸ்லாம் என்ற வட்டவரையை விட்டு வெளியேறி பதிலளிப்பது முஸ்லிமாகிய நமக்குத் தகுமானதோ என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். அழகிய விவாத களங்களும், விவாதிப்பதில் மிக அழகிய நேர்மையை கடைப்பிடிக்கும் வலைப்பதிவர்கள் அனேகரை கொண்டுள்ளது தமிழ் இணையம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியே! ஆனால் சக முஸ்லிம் வலைப்பதிவர் தவறிழைத்தாலும், தவறு எங்கு நடந்தாலும் சுட்டிக் காட்டப்பட வேண்டும் என்பதிலும் ஏனோதானோவென்ற நிலை எம்மிடையே காணக் கிடைக்கிறது. இது முஸ்லிமாகிய நம் வழிமுறையல்லவே. 

மேலும் நம்பிக்கையற்றவர்களின் சொல்லால், செயலால் வேதனை அடைந்து, அதையே நாமும் மறுமொழிந்து விடுவோமானால் நம்மை விட நஷ்டவாளிகள் யாரும் இல்லை என்று சொல்லலாம். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்:

….ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன – நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான். (அல்குர்ஆன்: 9:120)

அழைப்பு பணி எனும் அல்லாஹ்வுடைய பாதையிலே ஏற்படும் இடர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழலாகும். இணையத்தில் இவ்வகையான சூழலை அல்லாஹ் நமக்கு ஆக்கி வைத்திருக்கிறான். ஆகவே முஸ்லிமாகிய நாம் மொழியக்கூடிய வார்த்தைகளுக்கு நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்ற பயபக்தியுடன் விவாதத்தில் ஈடுபட முயற்சித்தல் வேண்டும்.

அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் கற்றுக் கொடுத்துள்ளவாறு மட்டுமே நம்முடைய அழைப்பு பணி இருக்க வேண்டுமே தவிர, வரம்பு மீறிய சொல் மற்றும் விவாதம் இவைகளால் நோக்கம் சிதைவுபட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறான வாதங்களால் இருதரப்பாருக்குமே பயனேதும் விளையப்போவதில்லை. மாறாக புரிந்துணர்வும், சகிப்புத் தன்மையுமற்ற ஒரு சூழலே உறுவாகி வருகிறது. இணையத்தில் உள்ள அனைவரும் இதை உணர்ந்தே வருகிறோம்.

பெரும்பாலான எதிர்வாதம் புரிபவர்களிடம் நாம் அவதானிப்பது என்னவென்றால் இஸ்லாம் தான் உண்மையானதென்றால் அதற்குண்டான அத்தாட்சியைக் கொண்டுவாருங்கள் என்பதேயாகும். இவர்கள் கேட்கும் அத்தாட்சிகளெல்லாம் நாம் கொடுக்க முடியுமா? இந்த இறைவசனத்தை பாருங்கள்.

(நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெருங் கஷ்டமாக இருந்தால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கம் வைத்து அல்லது வானத்திலே ஓர் ஏணி வைத்து (ஏறிச்சென்று அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டுவாரும்; (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டு தானிருப்பார்கள்.) அன்றியும் அல்லாஹ் நாடினால் அவர்கள் அனைவரையும் நேர் வழியில் ஒன்று சேர்த்து விடுவான்; ஆகவே அறிவில்லாதவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம். (அல்குர்ஆன்: 6:35)

இன்னும் இந்த வகையான நிராகரிப்பவர்கள் குறித்த மற்ற இறைவசனங்களையும் உற்று நோக்கி முஸ்லிம்களாகிய நாம் படிப்பினை பெறுவோம்.

“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள். (அல்குர்ஆன்: 2:11)

பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.  (அல்குர்ஆன்: 7:100)

எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்; அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்.  (அல்குர்ஆன்: 7:146)

இவர்கள் பூமியில் (அல்லாஹ் திட்டமிட்டிருப்பதைத்) தோற்கடித்து விடமுடியாது, அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு வேறு பாதுகாவலர்கள் இல்லை; இவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும்; அவர்கள் (நல்லவற்றைக்) கேட்கும் சக்தியை இறந்து விட்டார்கள் – இவர்கள் (நேர்வழியைக்) காணவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 11:20)

உங்களுக்கு முன்னால் இருந்த சமுதாயங்களில் இந்த பூமியில் குழப்பங்களை தடுக்கக் கூடிய அறிவுடையோர் இருந்திருக்கக் கூடாதா? மிகக் குறைவாகவே தவிர (அவ்வாறு இருக்கவில்லை.) அவர்களை நாம் காப்பாற்றினோம். யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் தங்கள் செல்வச் செருக்கையே பின்பற்றுகிறார்கள்; மேலும் குற்றவாளிகளாகவும் இருந்தார்கள். (அல்குர்ஆன்: 11:116)

எவர்கள் நிராகரித்துக் கொண்டும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துக்கொண்டும், இருந்தார்களோ அவர்களுக்கு – (பூமியில்) குழப்பம் உண்டாக்கிக் கொண்டிருந்ததற்காக – நாம் வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்திக்கொண்டே இருப்போம்.  (அல்குர்ஆன்: 16:88)

அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குரடாகவில்லை எனினும், நெஞ்சக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன.  (அல்குர்ஆன்: 22:46)

நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும். (அல்குர்ஆன்: 24:57) 

இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். (அல்குர்ஆன்:  25:63)

“(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன்: 31:18)

அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்; காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை. (அல்குர்ஆன்: 35:39)  

(அன்றியும்,) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகளைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச் சூழ்ச்சி) செய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனை பெற்ற) வழியைத் தான் இவர்களும் எதிர் பார்க்கின்றனரா? அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர் அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர். (அல்குர்ஆன்: 35:43)

அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், “உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், “ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்). (அல்குர்ஆன்: 46:20)

சிந்திப்போம், சீர் பெறுவோம். அல்லாஹ் அருளிய இந்த இணையம் எனும் அருமையான தகவல் பரிமாற்றத்தை அழைப்பு பணிக்கு முழுமையான வகையில் பயன் படுத்திக் கொள்ள வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக.

என்றும் அன்புடன்:
jafar safamarva.

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.