தானத்தால் நரக நெருப்பிலிருந்து..

596.”பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1417 அதீ இப்னு ஹாத்திம் (ரலி)


597.அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காணமாட்டார். பிறகு தம(து முகத்து)க்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்புதான் வரவேற்கும். எனவே, முடிந்தால் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6539 அதீ இப்னு ஹாத்திம் (ரலி)


597(1) .(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் ‘நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு (நரகத்தைப் பார்த்து அஞ்சுவதைப் போன்று) முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். பிறகு (மீண்டும்) ‘நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு, (நரகத்தைக் கண்டு அஞ்சுவதைப் போன்று) தம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அவர்கள் நரகத்தையே பார்க்கிறார்களோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்கு மூன்று முறை (இவ்வாறு) செய்தார்கள். பிறகு ‘பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன்சொல்லைக் கொண்டேனும் நரகத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

புஹாரி :6540 அதீ பின் ஹாத்திம் (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.