உண்மையை மறுக்காதீர்கள் (இறுதிப் பகுதி)

அல்லாஹ் மனிதர்களுக்குத் தனது ரஸூல்மார்களை அனுப்பினான்; அல்லாஹ்வுக்கு மட்டுமே வணக்கம் செலுத்தி, அவனை ஒருமைப் படுத்துவதின் பால் மக்களை அழைக்குமாறு அவர்களுக்கு உத்தரவுமிட்டான். எனினும் அதிகமான சமுதாயங்கள், தங்கள்பால் அனுப்பப்பட்ட தூதர்களைப் பொய்யாக்கினார்கள்; அம்மக்கள் தாம் அழைக்கப்பட்ட தௌஹீதுக்கும் மாறு செய்தார்கள். அவர்களுடைய முடிவு அழிவாகவே இருந்தது.

‘எவனுடைய உள்ளத்தில் ஒரு கடுகளவேனும் பெருமை உண்டோ, அவன் சுவர்க்கம் பிரவேசிக்க மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, தொடர்ந்து பின்வருமாறு கூறினார்கள். ‘பெருமை என்பது உண்மைக்கு மாறானதும், மனிதர்களுக்கு இழிவானதுமாகும்’ ஆதாரம்: முஸ்லிம்

இதன்படி நிராகரிப்பவர்களுக்கு ஒப்பாகக் கூடியதும், சுவர்க்கம் பிரவேசிக்கத் தடையாயிருப்பதுமான பெருமையை விட்டொழிப்பதும், உண்மையையும், நல்லுபதேசத்தையும் மறுக்காமலிருப்பதும் ஒவ்வொரு மூமினின் மீதும் கடமையாகும். அறிவு என்பது ஒரு மூமினுடைய தவறிப்போன பொருள்; அதனை எவ்விடத்தில் கண்டு கொள்கிறானோ, அப்பொழுது அதனைப் பெற்றுக் கொள்வான்.


இதனால் அறிவு என்பது எந்த மனிதனிடமிருந்து பெற்றுக் கொண்டாலும், அதனை ஏற்றுக் கொள்வது கடமையாகின்றது. ஷைத்தானிடமிருந்து கிடைத்தாலும் உண்மையை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். பின்வரும் சம்பவம் இதற்கு ஆதாரமாக அமைகின்றது.‘நபி (ஸல்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களை ‘பைதுல்மால்’ பொதுநிதிக்குப் பாதுகாவலராக நியமித்தார்கள். ஒரு தினம் அதிலிருந்து திருடுவதற்கு ஒரு திருடன் வந்தான். உடனே அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். திருடன் தனது ஏழ்மையையும், இயலாமையையும் பற்றிச் சொன்னவனாகக் கெஞ்ச ஆரம்பித்தான். இதனால் அவனை விட்டு விட்டார்கள். இரண்டாம் முறை மீண்டும் வந்தான்; அப்பொழுதும் அவனைப் பிடிக்கவே முன்பு போலவே கெஞ்சினான். தொடர்ந்து மூன்றாம் முறையும் வந்தான். அப்பொழுது அவனைப் பிடித்துக் கொண்டு ‘உன்னை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்லப் போகிறேன்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்பொழுது அவன் ‘என்னை விட்டுவிடு! குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை உமக்குக் கற்றுத் தருகிறேன். அதனை நீர் ஓதி வந்தால் ஷைத்தான் உம்மிடம் நெருங்க மாட்டான்’ என்று கூறினான். அப்பொழுது அபூ ஹுரைரா (ரலி) அவ்வசனம் யாது என்று வினவினார்கள். அதற்கவன் அதுதான் ‘ஆயத்துல் குர்ஸி’ (2:255) என்று கூறினான். அப்பொழுது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அவனை விட்டு விட்டார்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் தான் கண்டதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார்கள். அப்பொழுது நபியவர்கள் ‘உம்முடன் பேசியது யாரென நீர் அறிவீரா? அவன்தான் ஷைத்தான்; அவன் உம்மிடத்தில் சொன்னது உண்மை; ஆனால் அவன் பொய்யனாவான்’ என்று கூறினார்கள். ஆதாரம்: புகாரி
 

எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவனுடைய திருப்பெயர்களின் மூலம் இறைஞ்சுவோமாக! அவன் நமக்கும் அவனுக்கும் நாம் மாறு செய்வதற்கும் இடையில் அரணாக இருக்கக்கூடிய இறையச்சத்தையும், அவனுடைய சுவனத்தின் பால் சேர்த்து வைக்கக்கூடிய வழிபாட்டையும் தருவானாக!நம்முடைய பாவங்களையும், நம்முடைய காரியங்களில் நாம் வரம்பு மீறுவதையும் அவன் மன்னித்தருள்வானாக! அவன் விலக்கிய விலக்கல்களை விடுத்து அவன் ஹலாலாக்கியவற்றை மட்டும், அவன் அல்லாதவர்களை விடுத்து அவனுடைய அருளை மட்டும் நமக்குப் போதுமாக்கித் தருவானாக! நம்முடைய பாவங்களைக் கழுவி, நம்முடைய தவ்பாவை ஏற்றுக் கொள்வானாக! திண்ணமாக அவன் யாவற்றையும் செவியேற்பவனும் (அழைப்பவரின் அழைப்புக்கு) பதில் தருபவனும் ஆவான். மேலும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் அனைவர் மீதும் அவனுடைய கருணையும் சாந்தியும் உண்டாவதாக! எல்லாப் புகழும் அகில உலகத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே!

அல்லாஹ் ஸுப்ஹானஹுவதஆலா அவனது சன்மார்க்கம் ஸ்திரமடைய ஒத்தாசை புரியுமாறும், அவனது திருக்கலிமாவை உயர்வாக்கி வைக்குமாறும், எங்கள் கருமங்களுக்குப் பொறுப்பாயுள்ளவர்களைச் சீர்திருத்துமாறும், அன்னார் அனுசரணையுடன் தீய விளைவுகளை அழித்தொழித்து விடுமாறும்,சத்திய வழியை நிலைநாட்டி, அசத்திய வழியை நிலைகுலைக்க அன்னாருக்கு ஊக்கமும் உதவியுமளிக்குமாறும், எங்களுக்கும் – உங்களுக்கும் ஏனைய முஸ்லிம்களுக்கும், நாடும் நாட்டு மக்களும் சீரும் சிறப்பும் பெற்று மகோன்னத வாழ்வு வாழ நல்லுதவி புரியுமாறும் அல்லாஹ்விடம் இரந்து கேட்கிறோம். நிச்சயமாக அவனே சகல வஸ்துக்கள் மீதும் சக்தி பெற்றவன். இறைஞ்சுவோருக்கு இடுக்கண் துடைக்க அவனே அருகதையுள்ளவன்.

ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல் லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலீயுல் அளீம். வஸல்லல்லாஹு வஸல்லம வபாறக அலா அப்திஹி வறசூலிஹி முஹம்மதின் வஆலிஹீ வஸஹ்பிஹீ வஸல்லம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

இனிதே முடிவுற்றது.

வஸ்ஸலாம்

This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.