நபி (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்படும் ஹதீஸ்களில் ஸஹீஹ் (சரியானது) ஹஸன் (நல்லது) ளஈப் (பலவீனமானது) மௌளூஃ (கற்பனை செய்யப்பட்டது) என்று பல வகையுண்டு.
இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தனது ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் கிரந்தத்தின் முன்னுரையில் ‘ளஈப்’களைப் பற்றிய எச்சரிக்கையைப் பின்வருமாறு தலையங்கமிட்டுக் கூறுகிறார்கள். ‘பாபுந்-நஹ்யி அனில் ஹதீஸி பி-குல்லி மா-ஸமிஅ’ (செவியேற்பதெல்லாவற்றைக் கொண்டுமுள்ள ஹதீஸைப் பற்றிய தடை) பின்வரும் நபிவாக்கை ஆதாரமாகக் கொண்டே இந்தத் தலையங்கத்தைக் கூறியுள்ளார்கள்.
‘பொய்யாக இருக்கும் நிலையில் செவியேற்பதெல்லாவற்றைக் கொண்டும் ஹதீஸ்களை அறிவிக்கும் மனிதன் பிடிக்கப்படுவான். (வினவப்படுவான்)’ ஆதாரம்: முஸ்லிம்
பின்வரும் நபிவாக்கை ஆதாரமாகக் கொண்டு ளஈபான அறிவிப்பாளர்களின் அறிவிப்புக்களைப் பற்றி நவவி (ரஹ்) அவர்கள் தனது ஷரஹு ஸஹீஹ் முஸ்லிமில் கூறுகிறார்கள்.
‘நீங்களோ உங்களுடைய மூதாதையர்களோ கேட்டிராதவற்றை உங்களுக்கு அறிவிக்கக்கூடிய மனிதர்கள் எதிர்காலத்தில் தோன்றுவார்கள். உங்களையும் (புதுமைகளைச் சொல்லும்) அவர்களையும் எச்சரிக்கிறேன்’ ஆதாரம்: முஸ்லிம்
‘நபி (ஸல்) அவர்களைப்பற்றி அவர்கள் சொல்லாத எதனையும் கூறுகிறவன் நரகம் பிரவேசிப்பான்’ என்ற பாடத்தில் பின்வரும் ஹதீஸை இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
‘நான் சொல்லாத எதனையும் என்மீது எவரேனும் கற்பனைசெய்து கூறுவானென்றால், அவன் தனது இருப்பிடத்தை நரகில் தேடிக் கொள்ளட்டும்’
மௌளூஆன ஹதீஸ்களைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
‘எவனொருவன் என்மீது மனமுரண்டாய்ப் பொய்யுரைக்கிறானோ, அவன் தனது இருப்பிடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
கவலையான நிகழ்ச்சி என்னவெனில் அதிகமான ஷைய்குமார்கள் மௌளூஆன ஹதீஸ்களை தமது வழிமுறைகளுக்கும் (பிழையான) நம்பிக்கைகளுக்கும் ஆதாரமாகக் காட்டுகின்றனர். அவ்வாறான ஹதீஸ்களில் ‘எனது உம்மத்தில், ஏற்படும் கருத்து முரண்பாடு ஓர் அருளாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கூறுகின்றனர். அல்லாமா இப்னுஹஸ்ம் அவர்கள் ‘இது ஹதீஸ் அல்ல என்றும் இது பிழையானதும் பொய்யாக கற்பனைச் செய்யப்பட்டதுமாகும்’ என்றும் கூறுகிறார்கள்.
ஏனென்றால் கருத்து முரண்பாடு ஓர் அருளென்றால், கருத்து ஒருமைப்பாடு ஓர் இழிவாக இருக்க வேண்டும். இது ஒரு முஸ்லிம் கூறும் வார்த்தையன்று.
‘நீங்கள் சூனியத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். அதனைக் கொண்டு செயல்படாதீர்கள்’ என்று நபியவர்கள் கூறியதாக மற்றொரு பொய் ஹதீஸ் கற்பனை செய்யப்பட்டுள்ளது. இதல்லாத இன்னும் பல கற்பனை ஹதீஸ்கள் உண்டு.
‘உங்களுடைய பிள்ளைகளையும், உங்களிடையே உள்ள பைத்தியக்காரர்களையும் பள்ளிவாசல்களை விட்டு அப்புறப்படுத்துங்கள்’ என்பது பரவலாகச் சொல்லப்படும் மற்றுமொரு ஹதீஸாகும். இப்னு ஹஜ்ர் (ரஹ்) அவர்கள் இதனை ளஈப் என்று கூறியுள்ளார்கள். இப்னு ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் இதனை சரியானதல்ல என்றும், அப்துல்ஹக் (ரஹ்) அவர்கள் இதற்கு அடிப்படையே கிடையாது என்றும் கூறியுள்ளார்கள்.
பின்வருமாறு அமைந்துள்ள நபி (ஸல்) அவர்களுடைய ஒரு வாக்கு ஸஹீஹான ஹதீஸில் பதிவாகியுள்ளது.
‘உங்களுடைய பிள்ளைகள் ஏழு வயதை அடைந்ததும் அவர்களுக்குத் தொழுகையைக் கற்றுக் கொடுங்கள். அவர்கள் பத்துவயதை அடைந்தபோது(ம் தொழ வில்லையென்றால்) அதற்காக அவர்களை அடியுங்கள்’ ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)
நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்து கொண்டு தனது தோழர்களுக்குத் தொழுகையைக் கற்றுக் கொடுத்தது போலவே பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் தொழுகை பள்ளிவாசலில் அமையும். நபி (ஸல்) அவர்களுடைய பள்ளிவாசலில் பருவமடையாத பிள்ளைகள் இருந்துள்ளனர்.
திர்மிதி அறிவிக்கின்றார்; அல்லது அவரல்லாதவர் அறிவிக்கின்றார் என்று வெறுமனே எம்மால் கூற முடியாது. ஏனென்றால் சிலவேளை அவர்கள் ஸஹீஹ் அல்லாத ஹதீஸ்களையும் அறிவிப்பதுண்டு. அதனால் ஸஹீஹ், ஹஸன், ளஈப் என்று ஹதீஸின் தரத்தையும் சேர்த்து அறிவிப்பது அவசியமாகின்றது.
இமாம் புகாரி அறிவித்தார்; முஸ்லிம் அறிவித்தார் என்று நாம் சொல்வது கொண்டு போதுமாக்கியுள்ளோம். ஸஹீஹ் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு அவசியமில்லை. ஏனென்றால் அவ்விருவரின் ஹதீஸ்களும் ஸஹீஹானவைகளாகும்.
ளஈபான ஹதீஸ் அதன் அறிவிப்பாளர் வரிசையிலும் வாசகத்திலும் குறையுண்டு என்பதால், அது நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புடையதாக இருக்காது.
எங்களில் ஒருவர் சந்தைக்குச் சென்றபோது, கொழுப்புள்ள இறைச்சியையும், மெலிந்த, நலிந்த இறைச்சியையும் கண்டால் கொழுத்ததை எடுத்துக் கொண்டு மெலிந்ததை விட்டு விடுவார். ‘உழ்ஹிய்யா’ கொடுக்கும்போது கொழுத்த மிருகத்தைத் தேர்ந்தெடுக்குமாறும், மெலிந்த பலஹீனமானதை விட்டு விடுமாறும் இஸ்லாம் எமக்குக் கட்டளையிடுகின்றது. அவ்வாறெனில் ஸஹீஹான ஹதீஸ் தாராளமாக இருக்கும் போது ளஈபான ஹதீஸை எடுப்பது எவ்வாறு சரியானதாகும்?
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று ஸஹீஹான ஹதீஸைக் குறித்துச் சொல்வது போன்று ளஈபான ஹதீஸைக் குறித்துச் சொல்லக் கூடாதென முஹத்திஸீன் (ஹதீஸுடைய உலமாக்)கள் சட்டமியற்றியுள்ளார்கள். எனினும் ஸஹீஹிலிருந்து ளஈப் பிரித்துக் காட்டப்பட வேண்டும்.
பின்னால் வந்த சில உலமாக்கள் சில நிபந்தனைகளுடன் ளஈபான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.
* அமல்களின் சிறப்புக்களில் மட்டும் அது எடுக்கப்பட வேண்டும்.
* அது ளஈபில் கடுமை இல்லாததாக இருக்க வேண்டும்.
* ஸஹீஹுடைய அடிப்படையின் கீழ் அது அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
* செயல்படுத்தும்போது, உறுதியான ஒன்றாக நம்பி ஏற்றுக் கொள்ளாதிருக்க வேண்டும்.
இக்கால மக்களில் அதிகமானவர்கள் இந்நிபந்தனைகளை கவனியாது கண்டபடி ளஈபானவற்றைக் கடைப்பிடிக்கிறார்கள். (சிலர் சட்டங்களுக்கு ஆதாரமாகக் கூட இவற்றை எடுப்பதுண்டு)
இன்ஷா அல்லாஹ் தொடரும்.