பித்அத்தான ஸலவாத்துக்கள்

நபி (ஸல்) அவர்களது சொல்லிலோ, ஸஹாபாக்கள், தாபியீன்கள், முஜ்தஹிதான இமாம்கள் ஆகியோரின் சொல்லிலோ அடங்காத பித்அத்தான ஸலவாத்தின் அமைப்புகளை அதிகமாக செவிதாழ்த்த முடிகின்றது. அவை பின்னால் வந்தவர்களால் ஏற்படுத்தப் பட்டவையாகும். அவ்வாறான பித்அத்தான வசன அமைப்புகள் எங்கிருந்து வந்தன? என்று தெரியாத அளவு அந்த ஸலவாத்துக்கள் பொதுமக்களுக்கு மத்தியிலும் அறிஞர்களுக்கு மத்தியிலும் பரவி விட்டன.

நபி (ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்ட ஸலவாத்துக்களை ஓதுவதைவிட இவற்றையே மக்கள் அதிகமாக ஓதுகின்றனர். சிலவேளை நபியவர்களால் கற்றுத் தரப்பட்டவற்றை விட்டுவிட்டு தங்களது மஸாயிகுகளால் அமைக்கப்பட்டுள்ள ஸலவாத்துக்களை ஓதி வருகின்றனர். நாம் நன்றாக கவனித்துப் பார்த்தால் இவ்வாறான ஸலவாத்துக்கள் நபியவர்களுடைய நடைமுறைக்கு முரணாயிருப்பதைக் காணலாம். பின்வரும் பித்அத்தான ஸலவாத்தை உற்று நோக்குவோம்.

‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் திப்பில் குலூபி வதவாஇஹா. வஆபியதில் அப்தானி வஷிபாஇஹா, வநூரில் அப்ஸாரி வழியாஇஹா, வஅலா ஆலிஹீ வஸல்லிம்’

(அல்லாஹ்வே! உள்ளங்களுக்குப் பரிகாரமாகவும், அவற்றுக்கு மருந்தாகவும், உடலுக்குப் பாதுகாவலாகவும், அவற்றுக்கு சுகமாகவும், கண்களுக்கு ஒளியாகவும், அவற்றுக்கு பிரகாசமாகவும் அமைந்துள்ள முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!)

உடல்களுக்கும் உள்ளங்களுக்கும் சுகத்தையும் பாதுகாப்பையும் அளிப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமேயாவான். நபி (ஸல்) அவர்கள் தனக்கோ, அல்லது பிறருக்கோ யாதொரு நன்மையோ தீமையோ செய்யச் சக்தியற்றவர்களாகவே இருக்கின்றனர். ஸலவாத் என்று சொல்லப்படும் மேற்சொன்ன வாசக அமைப்பு பின்வரும் அல்லாஹ்வின் வாக்குக்கு முரண்படுகின்றது.

“அல்லாஹ் நாடியதையன்றி யாதொரு நன்மையோ, தீமையோ நான் எனக்கே தேடிக் கொள்ளச் சக்தியற்றவன் என்று (நபியே!) நீர் கூறும்” (10:49)

மேலும் பின்வரும் நபிவாக்குக்கும் அந்த ஸலவாத்து முரண்படுகின்றது:

‘கிறிஸ்தவர்கள், மர்யமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களை அளவு கடந்து புகழ்ந்தது போன்று என்னையும் அளவு கடந்து புகழாதீர்கள். நானோ அல்லாஹ்வுடைய அடியானாவேன். நீங்கள் அல்லாஹ்வுடைய அடியான் என்றும் அவனுடைய ரஸூல் என்றுமே என்னை அழையுங்கள்’  ஆதாரம்: புகாரி

மேற்காட்டிய ஹதீஸில் பயன்படுத்தப் பட்டுள்ள
‘அல்இத்றா’ என்ற சொல்லுக்கு புகழ்வதில் எல்லை கடந்து விடல், அல்லது புகழ்வதை அதிகப்படுத்தல் என்று பொருள்படும். பன்னானீ ஸூபிய்யி என்ற ஒருவருக்குரிய ‘பள்லுஸ் ஸலவாத்’ (ஸலவாத்தின் மகிமை) என்ற ஒரு புத்தகத்தில் பின்வரும் ஸலவாத் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் ஹத்தா தஜ்அல மின்ஹுல் அஹதிய்யத வல் கய்யூமிய்யா’(அல்லாஹ்வே! முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வாயாக! அவரிலிருந்தே ‘அஹதிய்யா’ (ஒருவன் என்ற தன்மை) ‘கய்யூமிய்யா’ (நிலைபாடு) ஆகிய பண்புகளை நீ உண்டாக்குகிறாய்)‘அஹதிய்யா’ ‘கய்யூமிய்யா’ ஆகிய இரண்டும் அல்லாஹ்வுக்குச் சொந்தமான பண்புகள் என்று குர்ஆன் கூறுகின்றது. இப்பண்புகளை அந்த ஷைகு நபி (ஸல்) அவர்களுக்குச் சொந்தமாக்குகிறார்.

ஷைக் ஸூரி கபீர் என்பவர்க்குரிய ‘அத்இய்யதுஸ் ஸபாஹி – வல் – மஸாஇ’ என்ற நூலில் பின்வருமாறு ஒரு ஸலவாத் இடம் பெற்றுள்ளது.

‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அல்லதீ க(ஹ)லக்த மின் – நூரிஹீ குல்ல ஷைஇன்’

(அல்லாஹ்வே! முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வாயாக! அவருடைய ஒளியைக் கொண்டே எல்லா வஸ்துக்களையும் நீ படைத்தாய்)

‘எல்லா வஸ்துக்கள்’ என்று கூறும்போது அவற்றில் ஆதம் (அலை), இப்லீஸ், (ஷைத்தான்) குரங்கு, பன்றி, நாய் போன்ற அனைத்தும் அடங்குகின்றன. இவையனைத்தும் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய ஒளியினால் படைக்கப்பட்டன என்பதைப் புத்தியுள்ள எவனும் ஒப்புக் கொள்வானா?

“(இப்லீஸாகிய) அவன், ‘அவரை (ஆதமை) விட நானே மேலானவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்; அவரை களிமண்ணால் படைத்தாய்’ என்று (அல்லாஹ்வை நோக்கிக்) கூறினான்” (38:76)

குர்ஆனில் கூறப்பட்டுள்ள இவ்வசனத்தை ஷைத்தான் எப்பொழுது சொன்னானோ, அன்றைய தினமே தனது படைப்பு எவ்வாறு? ஆதம் (அலை) அவர்களின் படைப்பு எவ்வாறு? என்பதை அறிந்து கொண்டான். இந்த வசனம் ஷைகுடைய வாக்கியத்தைப் பொய்யாக்குகின்றது.

பித்அத்தான ஸலவாத்துடைய அமைப்புகளில் சிலர் பின்வருமாறு ஓதுவார்கள்.

‘அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹ் ளாகத் ஹய்லதீ ப-அத்ரிக்நீ யாஹபீபல்லாஹ்!’

(நபியே! உங்கள் மீது ஸல்வாத்தும் ஸலாமும் உண்டாவதாக! எனது நிலைமை நெருக்கடியாகி விட்டது. எனக்கு நீங்கள் கைக்கொடுத்து உதவுவீர்களாக!)

இது பின்வரும் அல்குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுகின்றதைக் காணலாம்.

“கஷ்டத்தில் சிக்கி(த் துடித்து)க் கொண்டிருப்போர் அ(பயமிட்ட)ழைத்தால், (அவர்களுக்குப்) பதில்கூறி அவர்களுடைய கஷ்டங்களை நீக்குபவன் யார்? பூமியில் உங்களை(த் தன்னுடைய) பிரதிநிதிகளாக ஆக்கி வைப்பவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்துக்குரிய (வேறொரு)வன் இருக்கின்றானா? (இல்லவே இல்லை) நீங்கள் (இதைப்பற்றிச்) சிந்திப்பது வெகு சொற்பம்” (27:62)

“(நபியே!) அல்லாஹ் உமக்கு யாதொரு தீங்கிழைத்தால், அதனை நீக்குவோர் அவனையன்றி வேறொருவருமில்லை” (6:17)

நபி (ஸல்) அவர்கள், தனக்கொரு துன்பமோ, கவலையோ பீடிக்குமானால் பின்வருமாறு சொல்பவர்களாக இருந்தார்கள்.

‘யாஹய்யு யாகய்யூம், பிரஹ்மதிக அஸ்தகீது’

(உயிருடனிருப்பவனே! என்றும் நிலையானவனே! உன்னுடைய ரஹ்மத்தைக் கொண்டு உன்னிடம் நான் இரட்சிக்கத் தேடுகிறேன்)

நபியவர்களே இவ்வாறு பிரார்த்திக்கின்றவர்களாக இருந்திருக்கும் போது, நபியவர்களே! எனக்குக் கண்பார்வையைத் தந்து விடுங்கள்! என்னை காப்பாற்றுங்கள்! என்று கேட்பது எவ்வாறு ஆகும்? மேலேயுள்ள பித்அத்தான வாசக அமைப்பு பின்வரும் நபி வாக்குக்கு முரணாக
அமைகின்றது.

‘நீ கேட்டால் அல்லாஹ்விடம் கேள்! உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு!’ ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)

‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதினில் பாதிஹி லம்மா உக்லிக்’

(அல்லாஹ்வே! கலக்கமுற்றிருக்கும் போது வெற்றியை ஏற்படுத்துகின்ற முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வாயாக!)

இவ்வமைப்புடனுள்ள ஸலவாத்துக்கு ‘ஸலாதுல் பாதிஹா’ என்று சொல்லப்படும். ‘6000 விடுத்தங்கள் அல்குர்ஆனை ஓதுவதைவிட இந்த ஸலவாத்தை ஒரு விடுத்தம் ஓதுவது சிறப்பானது’ என்று இதனை ஓதுகின்றவர்கள் நம்புகின்றார்கள். தரீகத்துத் தீஜானிய்யாவின் தலைவர் ஷைக் அஹ்மத் அத்தீஜானிய்யா என்பவரே இந்த ஸலவாத்தை ஏற்படுத்தினார்.

6000 விடுத்தங்கள் குர்ஆனை ஓதுவது என்று சொல்வது ஒரு புறமிருக்க, ‘ஒரு விடுத்தம் குர்ஆனை ஓதுவது’ என்று அதன் சிறப்பைச் சொன்னாலும் இது முற்றிலும் மடமைத்தனமாகும். குர்ஆனின் ஒரு வசனத்துக்காவது இதனைச் சமப்படுத்தலாமா? இது ஒரு முஸ்லிம் சொல்லும் வார்த்தையன்று.

‘அல்லாஹ்வுடைய நாட்டமின்றி நபி (ஸல்) அவர்கள் ஒரு வெற்றியை ஏற்படுத்துவார்’ என்று நபியவர்களை வர்ணிப்பது முற்றிலும் பிழையாகும். ஏனென்றால், நபி (ஸல்) அவர்களே அல்லாஹ்வுடைய நாட்டமின்றி மக்காவை வெற்றிக் கொள்ளவில்லை.

தனது சாச்சா அபூதாலிபை, ஈமான்கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வைக்கக்கூடியதாக, அவருடைய உள்ளத்தை வெற்றிகொள்ள நபியவர்களால் முடியவில்லை. எனினும் அவர் ஷிர்க்கிலேயே மரணித்தார். அல்குர்ஆன் பின்வருமாறு நபியவர்களோடு உரையாடுகின்றது.

“நீர் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்திவிட நிச்சயமாக உம்மால் முடியாது; எனினும் அல்லாஹ் தான் விரும்பியவர்களையே நேரான வழியில் செலுத்துகின்றான். நேரான வழியில் செல்லக்கூடியவர் யார் என்பதை அவனே நன்கறிவான்” (28:56)

“(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உமக்குத் தெளிவான (மிகப்பெரிய)தொரு வெற்றியைத் தந்தோம்” (48:01)

‘தலாஇலுல் கைராத்’ என்ற தொகுப்பை அமைத்தவர் ‘அல்ஹிஸ்புல் ஸாபிஃ’  என்ற பகுதியில் பின்வரும் பித்அத்தான ஸலவாத்தை ஏற்படுத்தியுள்ளார்.

‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் மா ஸஜ அதில் ஹமாஇமு வநபஅதித் தமாஇமு’

(அல்லாஹ்வே! புறாக்கள் ஓசையிடுவதும், தாயத்துக்கள், அச்சரங்கள் பிரயோசனம் ஏற்படுத்துவதுமான காலமெல்லாம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வாயாக!)

பித்அத்தான இந்த ஸலவாத்தில் தாயத்துக்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இவை பாதுகாப்புக்காகவும், கண் திருஷ்டிக்காகவும் பிள்ளைகள் பெரியவர்கள் போன்றவர்களின் மீது தொங்கவிடப்படும் செம்பு, பித்தளை, நூல் போன்றவைகளாகும். இவற்றைச் செய்து
கொண்டிருப்பவனோ, கட்டிக் கொண்டிருப்பவனோ எந்தவிதப் பயனையும் அடைய முடியாது. இது இணை வைப்பவர்களின் வேலையாகும். நபி (ஸல்) அவர்கள் இதுபற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

‘எவன் ஒரு அச்சரத்தை(க் கட்டி)த் தொங்க விடுகிறானோ, அவன் இணை வைத்தவனாவான்’  ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

மேலேயுள்ள ஸலவாத்தின் வாசக அமைப்பு ஹதீஸுக்கு முரண்படுகின்றது. அது ஷிர்க்கை ஏற்படுத்தக்கூடிய அச்சரம் (தாயத்துக்) கட்டுவதை அல்லாஹ்வின் பால் நெருங்கக் கூடியதாக ஆக்குகின்றது. இதிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பையும், நேர்வழியையும் வேண்டுவோமாக! ஸலவாத் என்ற பெயரில் பின்வருமாறு ஒரு வாசக அமைப்பும் தலாஇலுல் கைராத்தில் இடம் பெற்றுள்ளது.

‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் ஹத்தா லா-யப்கா மினஸ்ஸலாதி ஷைஉன் வர்ஹம் முஹம்மதன் ஹத்தா லா யப்கா மினர்ரஹ்மதி ஷைஉன்’

(அல்லாஹ்வே! (இவ்வுலகில்) ஸலவாத்தில் எதுவுமே மீதம் ஏற்படாதளவு முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வாயாக! ரஹ்மத்தில் எதுவுமே மீதம் ஏற்படாதளவு முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அருள் புரிவாயாக!) இந்த வாசக அமைப்பு அல்லாஹ்வுடைய ஸிபத்துக்களில் ஸலவாத், ரஹ்மத் ஆகியவற்றை முடிவடையக் கூடியதாக ஆக்குகின்றது. அல்லாஹ் இதற்கு மாறாகக் கூறுகின்றான்.

“சமுத்திரத்திலுள்ள நீர் யாவும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை (எழுத) ஆரம்பித்தால், என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தச் சமுத்திரம் யாவும் செலவாகி விடும். அதைப்போல் இன்னொரு பங்கும் (சமுத்திரத்தைச்) சேர்த்துக்கொண்ட போதிலும் கூட என்று (நபியே!) நீர் கூறும்” (18:109)

“மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்” (31:27)

அஸ்ஸலாத்துல் பஷீஷிய்யா:-

‘அல்லாஹும்மன்ஷுல்னீ மின் அவ்ஹாலித் தௌஹீத் வஅக்ரிக்நீ பீ-ஐனி பஹ்ரில் வஹ்தா; வஸுஜ்ஜ-பீ-பில் அஹதிய்யா ஹத்தா லா அரா, வலா அஸ்மஅ, வலா அஹுஸ்ஸ இல்லா-பிஹா’

(அல்லாஹ்வே! தௌஹீதுடைய சகதிகளி(சேறுகளி)லிருந்து என்னை வெளிப்படுத்துவாயாக! எல்லாம் ஒன்றே என்னும் கடலில் என்னை மூழ்கச் செய்வாயாக! அஹதிய்யாவிலே (எல்லாம் ஒன்று என்பதிலே) என்னைப் பதியச் செய்வாயாக! அந்த அஹதிய்யாவைத் தவிர வேறெதனையும் நான் பார்க்காதவனாகவும் கேட்காதவனாகவும் உணராதவனாகவும் இருக்கச் செய்வாயாக!)

இது ‘படைத்தவனும் படைக்கப்பட்டவனும் ஒன்றே’ என்னும் கோட்பாடாகும். தௌஹீதிலே சேறும் சகதியும் உண்டென்றும், அதிலிருந்து தன்னை வெளிப்படுத்துமாறும் பிரார்த்திப்பதாக மேற்படி ஸலவாத்தின் முற்பகுதி அமைந்துள்ளது. இறைவனை எல்லா வஸ்துக்களிலும் காண்பதற்காக ‘எல்லாம் ஒன்றே’ என்ற அத்வைதக் கடலில் தன்னை மூழ்கடிக்கச் செய்யுமாறு வேண்டுவதாக அதன் பிற்பகுதி அமைந்துள்ளது. இதே கொள்கையிலுள்ள கவிஞன் ஒருவன் பின்வருமாறு பாடுகிறான்.

‘நாயும் பன்றியும் எமது இறைவன் தான்
கோயிலிலுள்ள பூசாரியும் அல்லாஹ்தான்

கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ்வுடைய குமாரன் என்று சொல்லி ஷிர்க் வைத்தார்கள். ‘ஆனால் எல்லாம் ஒன்றே’ என்ற கோட்பாட்டிலுள்ளோர் படைப்புகள் அனைத்தையும் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கி ஷிர்க் வைக்கிறார்கள். இந்த முஷ்ரிக்குகள் கூறுவதிலிருந்து அல்லாஹ் மேலானவனாகி விட்டான்.

முஸ்லிம் சகோதரனே! உன்னைச் ஷிர்க்கில் ஆழ்த்தி விடக்கூடிய மேற்காட்டிய பித்அத்தான ஸலவாத் அமைப்புகளை விட்டு விலகிவிடு! வஹியைக் கொண்டு அறிவிக்கப்பட்டதையன்றி சுயமாக எதனையும் மொழியாத நபியவர்களால் கற்றுத்தரப்பட்ட ஸலவாத்துகளை மொழிவது கொண்டு போதுமாக்கிக் கொள்! அந்த நபியைப் பின்பற்றுவதைக் கொண்டல்லாமல் நேர்வழியோ, வெற்றியோ கிடையாது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.