இவ்வைபவம், நபி (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்கள், தாபிஈன்கள், நான்கு இமாம்கள் ஆகியோர்களோ அல்லது சிறப்பெனக் கருதப்பட்ட காலங்களிலிருந்தவர்களோ செய்யாததாகும். மார்க்க அடிப்படையில் இதற்கு எந்தவித ஆதாரமுமில்லை.
மௌலிது ஓதுகின்றவர்கள் அதிகமாக, ஷிர்க்கிலேயே மூழ்கியுள்ளனர். அவர்கள், மௌலிதுகளில் பின்வருமாறு ஓதுவார்கள்.
‘இரட்சிக்கக்கூடிய உதவி செய்யக்கூடிய அல்லாஹ்வுடைய ரஸூலே! உங்கள் மீதே நம்பிக்கை வைக்கிறோம். அல்லாஹ்வுடைய ரஸூலே! எங்களது துன்பங்களை அகற்றி விடுங்கள்! துன்பங்கள் உங்களைக் கண்டதும் ஓடிவிடும்’
இந்த வார்த்தையை நபி (ஸல்) அவர்கள் செவிதாழ்த்தி இருப்பார்களென்றால், ‘பெரிய ஷிர்க் செய்தவன்’ என்று இதனை ஓதியவனுக்குத் தீர்ப்பு வழங்கியிருப்பார்கள். ஏனென்றால் இரட்சிப்புக் கோருவதும், துன்பங்களை அகற்றுமாறு கோருவதும், உதவி தேடுவதும், நம்பிக்கை வைப்பதும் அல்லாஹ்விடம் மட்டுமேயாகும். அல்லாஹ் இதுபற்றி பின்வருமாறு கூறுகிறான்.
“கஷ்டத்தில் சிக்கித் துடித்துக் கொண்டிருப்போர் அ(பயமிட்ட)ழைத்தால், அவர்களுக்குப் பதில் கூறி அவர்களுடைய கஷ்டங்களை நீக்குபவன் யார்? பூமியில் உங்களை (த் தன்னுடைய) பிரதிநிதியாக ஆக்கிவைப்பவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்துக்குரிய (வேறொரு)வன் இருக்கின்றானா? (இல்லவே இல்லை) நீங்கள் (இதைப்பற்றிச்) சிந்திப்பது வெகு சொற்பம்” (27:62)
அல்லாஹ் தனது ரஸூலை நோக்கி மனிதர்களுக்குக் கூறும்படி பின்வருமாறு கட்டளையிடுகிறான்.
“உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்ய நிச்சயமாக நான் சக்தியற்றவன் என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (72:21)
எமது தேவைகளை அல்லாஹ்விடம் மட்டுமே கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றிப் பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
‘நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! உதவி கோரினால் அல்லாஹ்விடமே உதவி கோரு!’ ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)
அதிகமான மௌலிதுகள் நபி (ஸல்) அவர்களை அளவுகடந்து எல்லை மீறி புகழ்வதாக அமைந்துள்ளைதைக் காணலாம். நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறி அதனைத் தடை செய்துள்ளார்கள்.
‘மர்யமுடைய மகன் ஈஸாவைக் கிறிஸ்தவர்கள் அளவு கடந்து புகழ்ந்தது போல் என்னையும் புகழாதீர்கள். நானோ அல்லாஹ்வுடைய அடியானாவேன். அல்லாஹ்வுடைய அடியான் என்றும், அவனுடைய ரஸூல் என்றும் என்னை அழையுங்கள்’ ஆதாரம்: புகாரி
ஸுப்ஹான மௌலிதும், அதல்லாதவைகளும் ‘அல்லாஹ் தனது நூரை (ஒளியை)க் கொண்டு முஹம்மத் (ஸல்) அவர்களைப் படைத்தான்’ என்றும் ‘முஹம்மதுடைய நூரினால் எல்லாப் படைப்பினங்களையும் படைத்தான்’ என்றும் கூறுகின்றன. குர்ஆன் இதனைப் பொய்யாக்குகின்றது.
“நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன் தான் என்று எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று (நபியே!) நீர் கூறும்” (18:110)
‘நபி (ஸல்) அவர்கள் ஒரு தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தார்கள்’ என்பதே சரித்திரம் கூறும் உண்மை. அல்லாஹ்வினால் வஹியைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதராகவே அவர்கள் இருக்கின்றார்கள். ‘முஹம்மத் (ஸல்) அவர்களுக்காகவே, அல்லாஹ் உலகமனைத்தையும் படைத்தான்’ என்று மௌலிதுகள் கூறுவதைக் குர்ஆன் பொய்யாக்குகின்றது.
“எனக்கு வழிபட்டு என்னை வணங்குவதற்காகவே தான் ஜின்களையும் மனிதர்களையும் நான் படைத்தேன்” (51:56)
கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவது கொண்டும், தமது குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவது கொண்டும் தமது மார்க்கத்துக்கு முரணாக நடக்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் இதனைப் பின்வருமாறு எச்சரிக்கின்றனர்.
‘எவன் எந்தக் கூட்டத்துக்கு ஒப்பாகிறானோ, அவன் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனாவான்’ ஆதாரம்: அபூதாவூத் (ஸஹீஹ்)
மௌலிது வைபவங்களில் அதிகமான ஆண்களும் பெண்களும் இரண்டற கலக்கின்றனர். இது இஸ்லாம் தடை செய்கின்ற ஒரு செயலாகும்.
மீலாது, மௌலிது நாட்களில் பல இலட்சம் ரூபாய் வரை, முஸ்லிம்கள் பணத்தை செலவு செய்து, அலங்காரங்கள் செய்கின்றனர்; விளக்குகள் ஏற்றுகின்றனர். காஃபிர்களுடைய நடைமுறையைப் பின்பற்றுவதன்றி, இதனால் வேறெந்தப் பிரயோசனத்தையும் அடைய முடியாது. நபி (ஸல்) அவர்களோ வீண்விரயம் செய்வதைத் தடை செய்துள்ளார்கள்.
மக்கள் அலங்காரங்களுக்குச் செலவு செய்யும் நேரங்களில் சிலவேளை பர்ளான தொழுகைகளைக்கூட விட்டு விடுகின்றனர்.
மௌலிது வைபவத்தின் இறுதிக் கட்டத்தில், ‘நபி (ஸல்) அவர்கள் அந்த சபைக்கு சமூகமளிக்கிறார்கள்’ என்ற நம்பிக்கையுடன் மக்கள் எழுந்து நிற்பதுண்டு. இது மிகத் தெளிவானதொரு பொய்யாகும். ஏனென்றால் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.
“(மரணித்த) அவர்களுக்கு முன் அதில் (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள்வரையில் ஓர் அரண் ஏற்பட்டுவிடும்” (23:100)
மேற்காட்டிய வசனத்தில் அரண் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள சொல்லின் அரபுப் பதம் ‘பர்ஸக்’ (BARZAKH) என்பதாகும். இம்மைக்கும் மறுமைக்கும் இடைப்பட்ட ஓர் உலகத்துக்கே இவ்வாறு சொல்லப்படும்.
‘ஸஹாபாக்களுக்கு நபி (ஸல்) அவர்களைவிட மிக நேசத்துக்குரிய எவரும் இருந்ததில்லை. அவர்கள், நபியவர்கள் வருவதைக் கண்டால் எழுந்து நிற்க மாட்டார்கள். நபியவர்கள் இதனை வெறுப்பதினாலேயே அவ்வாறு செய்யாதவர்களாக இருந்தனர்’ என்பதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஆதாரம்: அஹ்மத், திர்மிதி (ஸஹீஹ்)
மௌலிது ஓதுகின்றவர்கள், தாம் நபி (ஸல்) அவர்களுடைய சரித்திரத்தை வாசிப்பதாகக் கூறுகின்றனர். நடப்பது என்னவென்றால், இவர்கள் அல்லாஹ்வுடைய சொல்லுக்கும், நபி (ஸல்) அவர்களுடைய நடைமுறைக்கும் மாறு செய்கின்றனர்.
நபி (ஸல்) அவர்களை நேசிக்கின்றவன், அவர்களுடைய சரித்திரத்தை வருடத்துக்கு ஒருமுறை மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் வாசிக்கின்றவனாகவே இருப்பான். நபியவர்கள் பிறந்தது ரபியுல் அவ்வல் மாதத்தில். மரணமடைந்ததும் அதே மாதத்தில் தான். அவர்கள் மரணமடைந்தது பிறை 12ம் நாளிலாகும். அறிவு ரீதியாக உற்று நோக்கினாலும் இம்மாதத்தில் (முஸ்லிம்களின் இரு பெருநாட்களைப் போன்று மீலாத் கொண்டாடி) சந்தோசப்படுவதை விட துக்கமாக இருப்பதே மேலானதாகும்.
மௌலிது ஓதுகின்றவர்களும், அவ்வைபவத்தை நடத்துகின்றவர்களும் அத்தினத்தில் நடுஇரவுவரை விழித்திருப்பார்கள். இதனால் மறுநாள் காலை சிலர் ஸுப்ஹ் தொழுகையின் ஜமாஅத்தைத் தவற விடுவார்கள். பலர் தொழுகையையே தவற விடுவார்கள். வீட்டிலுள்ளவர்கள் சபை ஏற்பாட்டிற்காகப் பல நேரத் தொழுகைகளைத் தவற விடுவார்கள்.
அதிகமான மனிதர்கள் மௌலிது வைபவங்களை நடத்துகின்றார்கள் என்பதால், மௌலிது ஓதுவது ஆகும் என்பதற்கு ஆதாரமாய் அமைந்து விடாது. பின்வருமாறு அல்லாஹ் கூறுவது இதற்கெதிரான ஆதாரமாக அமைகின்றது.
“இப்புவியிலிருப்போரில் அநேகரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திருப்பி விடுவார்கள்” (6:116)
‘பித்அத்’ பற்றி ஹுதைபா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். ‘பித்அத்துகள் அனைத்தும் வழிகேடாகும். மக்கள் அவற்றை நல்லதென்று கருதினாலும் சரியே!’
ஸுன்னத்-வல்-ஜமாஅத் பற்றி ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் தனது காலத்து ஜனங்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்கள்.
‘ஸுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்தோர் கடந்த காலங்களில் குறைந்தவர்களாகவே இருந்தனர்; எதிர் காலத்திலும் அவ்வாறே இருப்பார்கள்; அவர்கள் வீண் கேளிக்கைகள் செய்வோருடனோ, பித்அத்துக்களைச் செய்பவர்களுடனோ இருக்க மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய இறைவனைச் சந்திக்கும்வரை ஸுன்னத்துகளைப் பின்பற்றுவதில் பொறுமையாக இருப்பார்கள். நீங்களும் அவ்வாறே இருங்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.