ஸூஃபிகள் கொடுக்கும் தட்டு, தகடு, தாயத்து!

ஸூஃபியிஸம்: இக்கொள்கையை உடையவர்கள் தங்களின் ஸூஃபிகள் கொடுத்த தட்டு, தகடு, தாயத்து போன்றவற்றை ஆபத்து, சிக்கல்களிலிருந்து பாதுகாவல் பெறுவதற்காக பயன்படுத்துகின்றனர்.
 

இஸ்லாம்: நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: ‘குர்ஆன் அல்லாததைக் கொண்டு ஓதிப்பார்த்தல். தாயத்துகள், ஏலஸ்கள் கட்டுதல் (தாவிசுகள்), தவ்லாக்கள் ஆகியவையெல்லாம் ஷிர்க்காகும்’ என்ற ஹதீஸ் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவித்து அபூதாவூத், அஹ்மத் போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ளது.

ஸூஃபியிஸம்: இக்கொள்கையை உடையவர்கள் தங்களின் ஸூஃபிகளின் மீது கண்மூடித்தனமான அளவுகடந்த பக்தியைச் செலுத்துகின்றனர். இதனால் அந்த ஸூஃபிகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு மாற்றமான கருத்துக்களைக் கூறினாலும் கூட அதை அப்படியே ஏற்றுச் செயல்படுகின்றனர்.

இஸ்லாம்: “மேலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்” (அல்குர்ஆன்: 33:36)

ஸூஃபியிஸம்: ஸூஃபியாக்கள் தாங்கள் சுய நினைவிலிருக்கும் போதே நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவம் இல்லாமல் நேரடியாகவும் உள்ளத்து உதிப்பின் மூலமாகவும் இறைவனிடமிருந்து அறிவைப் பெறுவதாகக் கூறுகின்றனர். அதாவது (ஹத்தஸனீ கல்பி அன் ரப்பி – என் உள்ளம் என் இறைவனிடமிருந்து எனக்கு கூறிற்று என்கின்றனர்)

இஸ்லாம்: மார்க்கம் சம்பந்தபட்ட சட்டங்களையோ கல்விகளையோ அல்லாஹ் அருளிய திருமறையின் மூலம் அல்லது அவனது தூதர் (ஸல்) அவர்கள் மூலம் தான் நாம் அறிந்து கொள்ள முடியும். இவ்விரண்டின் துணையில்லாமல் நமது சிந்தனையால் யூகித்து கூற முடியாது. எவர் ஒருவர் மார்க்கத்தில் ஒன்றை ‘இது எனக்கு இறைவனிடமிருந்து உள்ளத்தின் உதிப்பால் கிடைத்தது’ என்று கூறினால், அவர் அல்லாஹ்வின் திருமறையை பொய்ப்பித்தவர் ஆவார்.

“…. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்….” (அல்குர்ஆன்: 5:3) என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து, தீன் என்பது முழுமையாக்கப்பட்டு விட்டது. எவரின் உள்ளத்து உதிப்பும் இனி இந்த உம்மத்துக்கு தேவையில்லை என்பது தெளிவு.

அல்லாஹ் பின்வரும் வசனங்களில் தன்னுடைய வேதத்தையும், தூதரையும் பின்பற்றுமாறு கட்டளையிடுகிறான். நமது உள்ளத்தில் உதிக்கும் மனோ இச்சையைப் பின்பற்ற வேண்டாம் என நம்மை எச்சரிக்கிறான்.

“(நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன்: 3:31)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு வழிபடுங்கள். உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்” (அல்குர்ஆன்: 47:33)

“உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில், நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர்வழியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனை விட, மிக வழிகெட்டவன் எவன் இருக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான்” (அல்குர்ஆன்: 28:50)

“எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்; ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர்வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லர்” (அல்குர்ஆன்: 30:29)

“எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்” (அல்குர்ஆன்: 4:115)

ஸூஃபியிஸம்: இதைப் பின்பற்றுபவர்கள் தங்களின் ஸூஃபிகள் மற்றும் அவ்லியாக்களின் கல்லறைகளுக்குப் பயணம் செய்து அவர்களை வழிபடுகின்றனர்.

இஸ்லாம்: ‘மஸ்ஜிதுல் ஹராம், எனது மஸ்ஜித் (மஸ்ஜிதுந்நபவி) மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய இம்மூன்று இடங்களைத்தவிர வேறு இடங்களுக்கு நன்மையை நாடி பயணம் செய்யாதீர்கள்’ அறிவிப்பாளர்: அபூ ஸயீதுல் குத்ரி (ரலி).

எனவே, இந்த மாதிரியான வழிகேடுகளை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றி, நம் அனைவருக்கும் நேரான வழியைக் காண்பித்து அவனுடைய வேதத்தையும், அவனுடைய தூதருடைய வழிமுறைகளை மட்டுமே பின்பற்றி நடக்க அருள் புரிவானாக! ஆமீன்!!

முடிவுற்றது.

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.