347– வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத் தவிர எவரும் இல்லை. அவன் ஏகன் அவனுக்கு நிகராக எவருமில்லை. ஆட்சி அவனுக்குரியது. புகழும் அவனுக்குரியது. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. எந்த மதிப்பு உடையவனும் உன்னிடம் எந்தப் பயனும் அளிக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் கூறக் கூடியவர்களாக இருந்தனர்.
348– ஏழை மக்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போலவே அவர்களும் தொழுகிறார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போலவே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்; உம்ராச் செய்கின்றனர்; தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை) என்று முறையிட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகிறேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்தி விட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும் அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள். (அந்தக் காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை இறைவனைத் துதியுங்கள், 33 தடவை இறைவனைப் புகழுங்கள், 33 தடவை இறைவனைப் பெருமைப் படுத்துங்கள் என்று கூறினார்கள். நாங்கள் இந்த விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் ஸுப்ஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும் அல்லாஹு அக்பர் 33 தடவையும் கூறலானோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றி கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹூ அக்பர் என்று 33 தடவை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 தடவைகள் கூறியதாக அமையும் என்று விளக்கம் தந்தார்கள்.