நபி (ஸல்) அவர்கள் சரித்திரத்தைப் படிக்கிறவன் பின்வரும் படித்தரங்களைக் கண்டுக் கொள்வான்.
1. தௌஹீத்:- நபி (ஸல்) அவர்கள் தனது கூட்டத்தாரை இபாதத்திலும், துஆக் கேட்பதிலும், அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவதிலும், ஷிர்க்குக்கு எதிராகப் போராடுவதிலும் பதிமூன்று வருடங்களை மக்காவில் கழித்தார்கள். இந்த நம்பிக்கை தமது தோழார்களுடைய உள்ளங்களில் உறுதியாகப் பதிந்து விடும்வரை, நபியவர்கள் இப்போராட்டத்தை நடத்திக் கொண்டே இருந்தார்கள். இதனால் நபித்தோழர்கள் அல்லாஹ் அல்லாத எவருக்கும் பயப்படாத வீரமுள்ளவர்களாக மாறினர்.
இஸ்லாமிய அழைப்பாளர்கள் அல்லாஹ்வுடைய ரஸூலைப் பின்பற்றியவர்களாக ஆகுவதற்காகத் தமது பிரசாரத்தைத் தௌஹீதைக் கொண்டும், ஷிர்க்கை விட்டு மக்களை எச்சரிப்பது கொண்டுமே ஆரம்பிக்க வேண்டும்.
2. சகோதரத்துவம்:- நபி (ஸல்) அவர்கள், இஸ்லாமிய சமுதாயம் தமக்குள் ஒருவருக்கொருவர் நேசிப்பவர்களாக இருக்கக் கூடியவர்களாக, அவர்களை அமைப்பதற்காக மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்கள்.
நபியவர்கள் மதினா சென்றதும், முதலாவதாக முஸ்லிம்கள் தமது இறைவனை வணங்குவதற்கு ஒன்று கூடுவதற்காக, ஒரு பள்ளிவாசலை நிறுவுவதைக் கொண்டே ஆரம்பித்தார்கள். முஸ்லிம்கள் தமது வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் ஐவேளை பள்ளிவாசலில் ஒன்று கூடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
மதினாவாசிகளான அன்ஸாரிகளும், தமது சொத்துக்களை விட்டுவந்த மக்காவாசிகளான முஹாஜிர்களுக்கும் இடையில் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதில் நபி (ஸல்) அவர்கள் தீவிரமடைந்தார்கள். அன்ஸார்கள் தமது சொத்துக்கள் அனைத்தையும் முஹாஜிர்களுக்கு முன்னால் வைத்து, அவர்களது தேவைகளுக்கேற்றவாறு கொடுத்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், மதினாவாசிகளில் ‘அவுஸ்’ ‘கஸ்ரஜ்’ என்ற இரு கோத்திரங்களை நீண்டகாலப் பகைவர்களாகக் கண்டு, அவர்களுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்தி வைத்தார்கள். அவர்களது உள்ளங்களிலிருந்து வஞ்சகத்தையும், பகைமையையும் நீக்கி விட்டார்கள். அவர்களை ஈமானிலும், தௌஹீதிலும் ஒருவருக்கொருவர் நேசங்கொள்ளக்கூடிய சகோதரர்களாக ஆக்கி வைத்தார்கள். ‘ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரன்’ என்பது இதற்குச் சான்றாய் அமைகின்றது.
3. முன்னேற்பாடு செய்து கொள்ளல்:- பகைவர்களுக்கெதிரான யுத்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு குர்ஆன் கட்டளையிடுகின்றது.
“அவர்களை (எதிரிகளை) எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், (திறமையான) போர்க் குதிரைகளையும் உங்களுக்குச் சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள்” (8:60)
நபி (ஸல்) அவர்கள் இவ்வசனத்துக்குப் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளார்கள்.
‘அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அம்பெய்யக் கற்று கொள்வதில் (எம்மைக் காத்துக் கொள்ளும்) பலமுண்டு’ ஆதாரம்: முஸ்லிம்
முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அவரவருடைய தகுதிக்கேற்றவாறு தற்காப்பு ஏற்பாட்டைச் செய்துக் கொள்வதும், ஏனையவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதும் வாஜிபாகும். துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களை இயக்குவதற்கு முஸ்லிம்களுக்குக் கற்றுக் கொடுப்பது அவசியமாகும். பாடசாலை மாணவர்கள் இவ்விதமான பயிற்சிகளைக் கற்றுக் கொள்ளவேண்டிய இக்காலத்தில் கைப்பந்தாட்டம், உதைப்பந்தாட்டம், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்காக தமது நேரங்களை வீணாக்குகின்றனர்.
இஸ்லாம் மறைத்துக் கொள்ளுமாறு உத்தரவிடுகின்ற தமது உடலின் பகுதிகளை இவர்கள் வெளிப்படுத்தி ஆடை அணிகின்றனர். பேணிக்காத்துக் கொள்ளுமாறு அல்லாஹ் நமக்குக் கட்டளையிடுகின்ற தொழுகைகளை எல்லாம் இவர்கள் விளையாட்டுக்காக வீணாக்கி விடுகின்றனர்.
4. ஏகத்துவ கொள்கையின் பால் நாங்கள் மீளுகின்றபோது ஒருவருக்கொருவர் நேசிக்கும் சகோதரர்களாக ஆகிவிடுகிறோம்; பகைவர்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு நாம் தயாராகி விடுவோம்.
நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களது தோழர்களுக்கும் அல்லாஹ்வுடைய உதவி வந்தது போலவே, ஒரு காலத்தில் நமக்கும் உதவி கிட்டும். அல்லாஹ்வும் இதுபற்றி பின்வருமாறு கூறுகிறான்.
“மூமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால், அவனும் உங்களுக்கு உதவிபுரிந்து, உங்களுடைய பாதங்களை ஸ்திரப்படுத்தி விடுவான்” (47:7)
மேற்கூறப்பட்ட படித்தரங்கள் ஒவ்வொன்றும் ஒன்று மற்றொன்றுடன் தொடர்பற்றது என்று அர்த்தமல்ல. இப்படித்தரங்கள் ஒவ்வொன்றும் ஒன்று மற்றொன்றுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.