இன்றைய காலத்தில் நம்முடைய எதிரிகள் நவீன, நவநாகரீக உடைகளை பல்வேறு மாடல்களிலும், டிசைன்களிலும் தயாரித்து முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவவிட்டுள்ளதன் மூலம் நமக்கெதிராகப் போர் பிரகடனம் செய்துள்ளனர். இவ்வுடைகள் சிறிய அளவிலோ, மெல்லியதாகவோ அல்லது இறுக்கமானதாகவோ இருப்பதால் மறைக்கப்பட வேண்டிய அங்கங்களை மறைப்பதில்லை. இவற்றில் பெரும்பாலான உடைகளை பெண்கள் தம் சக பெண்களுக்கு மத்தியிலும் நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியிலும் கூட அணிவது கூடாது. இத்தகைய உடைகள் பெண்களிடம் இறுதிக்காலத்தில் தோன்றுமென்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளனர். அந்த நபிமொழி வருமாறு:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நரகவாசிகளில் இரு பிரிவினர் உள்ளனர். அவர்களை நான் பார்த்ததில்லை. ஒரு பிரிவினர்: அவர்களிடம் பசுமாட்டின் வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடிப்பார்கள். மற்றொரு பிரிவினர் பெண்களாவர். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பர். தாமும் மையல் கொண்டு பிறரையும் மையல் கொள்ளச் செய்யக்கூடிய அவர்களின் கொண்டை ஒட்டகத்தின் திமில்போல ஒய்யாரமாக இருக்கும். அப்பெண்கள் சுவனம் செல்ல மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். உண்மையில் அதன் வாடை இவ்வளவு இவ்வளவு தூரத்திலிருந்து வருகின்றது’ (முஸ்லிம்)
இத்தகைய ஆடைகளில் இன்று சில பெண்கள் அணியக்கூடிய ஆடைகளும் அடங்கும். அந்த ஆடைகள் கீழிருந்து மேல் வரை திறந்திருக்கும். அல்லது பல இடங்களில் ஜன்னல்கள் (ஓட்டைகள்) விடப்பட்டிருக்கும். அவள் அமரும்போது மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் வெளியே தெரியும். மட்டுமல்ல இத்தகைய ஆடைகளை அணிவது காஃபிர்களுக்கு ஒப்பானதாகவும் அவர்களின் கலாச்சாரத்திலும் அவர்கள் உருவாக்கிய அநாகரீகத்திலும் அவர்களை பின்பற்றுவதாக அமையும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அதுபோல ஆபத்தான விஷயம் என்னவெனில் சில ஆடைகளில் பாடகர்கள், இசைக்கருவிகள், மதுப்புட்டிகள், மதுக்கிண்ணங்கள், உயிர் பிராணிகளின் உருவங்கள், சிலுவைகள், தீய கிளப்கள் மற்றும் அமைப்புகளின் அடையாளச் சின்னங்கள், அல்லது கண்ணியத்தையும், நன்னடத்தையையும் கெடுக்கும் விதமான வாசகங்கள் இருப்பதாகும். அவ்வாசகங்கள் பெரும்பாலும் அந்நிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கும்.
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.