248- வரிசையை ஒழுங்குப் படுத்துங்கள்! வரிசைகளை ஒழுங்குப் படுத்துவது தொழுகையை நிலைப் பெறச் செய்வதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
249- தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் எங்கள் பக்கம் முன்னோக்கி, வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முகத்துக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காணுகிறேன் எனக் கூறினார்கள்.
250- உங்களது வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் அல்லாஹ் உங்களது முகங்களை மாற்றிவிடுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
251- பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டு குலுக்கும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்.தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதில் உள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுப்ஹ் தொழுகையிலும் இஷா (அதமா)த் தொழகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.