1307. நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கி (ஹிஜ்ரத்) சென்றபோது சுராக்கா இப்னு மாலிக் இப்னி ஜுஃஷும் என்பவர் அவர்களைப் (பிடித்து வரப்) பின்தொடர்ந்து சென்றார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கெதிராக (அவரைச் செயலிழக்கச் செய்யும் படிப்) பிரார்த்தித்தார்கள். உடனே, அவரின் குதிரை அவருடனேயே பூமியில் அழுந்திவிட்டது. சுராக்கா (நபியவர்களிடமே), ‘எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். நான் உங்களுக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் அவருக்காகப் பிரார்த்தித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாகத்துடனிருக்க, ஓர் ஆட்டிடையன் அவ்வழியே சென்றான். உடனே, அபூபக்ர் (ரலி) ஒரு கிண்ணத்தை எடுத்து (ஆடு ஒன்றிலிருந்து) சிறிது பாலை அதில் கறந்து அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அபூ பக்ர் அவர்கள் திருப்தியடையும் வரை நபி (ஸல்) அவர்கள் (அதிலிருந்து) அருந்தினார்கள்.
1308. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஈலியா’ (எனும் ஜெரூசலத்து)க்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாரிடம் மது மற்றும் பால் கோப்பைகள் இரண்டு கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டையும் அவர்கள் கூர்ந்து நோக்கிவிட்டு, பால் கோப்பையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ‘உங்களை இயற்கை நெறியின் பக்கம் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! மதுக் கோப்பையை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழிதவறிப் போயிருக்கும்” என்று கூறினார்கள்.