1218. ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழியைப் பெறுவதற்காக (என் சகோதரர்) அபூ மஅபத் (முஜாஹித்) அவர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஹிஜ்ரத், அதற்குரியவர்களுக்குக் கடமையாகி (நிறைவேறி) முடிந்துவிட்டது. இனி, இஸ்லாத்தின் படி நடந்திடவும் அறப்போர் புரிந்திடவும் தான் இவரிடம் நான் உறுதிமொழி பெறுவேன்” என்று கூறினார்கள்.
1219. மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘ஹிஜ்ரத் இனி கிடையாது. ஆயினும், ஜிஹாதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் (நிய்யத்) கொள்வதும் உண்டு. நீங்கள் அறப்போர் புரியப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் உடனே புறப்பட்டு விடுங்கள்” என்று கூறினார்கள்.
1220. ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் பற்றிக் கேட்டதற்கு அவர்கள், ‘உமக்கு என்ன கேடு? (எனச் செல்லமாகக் கேட்டுவிட்டு) நிச்சயமாக அதன் நிலைமை மிகவும் கடுமையானது. உம்மிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா? அவற்றிக்கு ஸகாத் கொடுத்து வருகிறீரா?’ எனக் கேட்டார்கள். அவர், ‘ஆம் என்றதும் நபி (ஸல்) அவர்கள், ‘கடல்களுக்குப்பால் சென்று வேலை செய்வீராக! நிச்சயமாக அல்லாஹ் உம்முடைய உழைப்பின் ஊதியத்தைக் குறைத்துவிடமாட்டான்” எனக் கூறினார்கள்.