1211. மக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஆம் (இருக்கிறது)” என்று பதிலளித்தார்கள். நான், ‘இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும். என்று பதிலளிக்க நான், ‘அந்தக் கலங்கலான நிலை என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்” என்று பதிலளித்தார்கள். நான், ‘அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்” என்று பதில் கூறினார்கள். அதற்கு நான், ‘அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்… (என்ன செய்வது)?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கி விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)” என்று பதிலளித்தார்கள்.
1212. எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் அஞ்ஞான கால மரணத்தை எய்துவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” .