1163. பராஉ (ரலி) அவர்களிடம் ஒருவர், ‘அபூ உமாராவே! நீங்கள் ஹுனைன் போரின்போது பின்வாங்கி ஓடினீர்களா?’ என்று கேட்க, அதற்கு அவர்கள், ‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களின் தோழர்களில் வாலிபர்களும் ஆயுதபலமில்லாதவர்களும் களைத்துப் போய் நிராயுதபாணிகளாக வெளியேறினர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் வில் வீரர்களைக் கடந்து சென்றனர். அவர்களின் எந்த அம்பும் இலக்கு தவறி விழுவதில்லை. அவர்கள் குறி தவறாமல் அம்புகளை எய்தார்கள். எனவே, முஸ்லிம்கள் மீண்டும் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகன் அபூ சுஃப்யான் இப்னு ஹாரிஸ் இப்னி அப்தில் முத்தலிப் (ரலி) ஓட்டிக் கொண்டு வர, அதன் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். (செய்தியறிந்ததும் அதைவிட்டு) இறங்கி அல்லாஹ்விடம் உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். பிறகு, ‘நான் இறைத்தூதர் தான். இது பொய் அல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்” என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.
1164. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் ஹுனைன் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் தோற்றுப் பின்வாங்கிச் சென்றீர்களா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘(எங்களில் சிலர் பின் வாங்கிச் சென்றது உண்மையே. ஆயினும்,) நபி (ஸல்) அவர்களோ பின்வாங்கிச் செல்லவில்லை. (எதிரிகளான) ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘நான் இறைத்தூதர் தாம்; இது பொய்யல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனுடைய) மகன் ஆவேன்’ என்று (பாடிய படிக்) கூறிக் கொண்டிருந்தார்கள்.