1082. ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்கிறவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகிற அளவிற்குச் செல்வம் இருந்தால் அந்த அடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு தன்னுடைய கூட்டாளிகளுக்கு அவர்களின் பங்குக்கான விலையைக் கொடுத்து அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்து விட வேண்டும். இல்லையென்றால், அவர் எந்த அளவிற்கு விடுதலை செய்தாரோ, அந்த (தன்னுடைய பங்கின்) அளவிற்கே விடுதலை செய்தவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 2522 இப்னு உமர் (ரலி).
1083. ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்து விடுகிறவரிடம் போதிய செல்வம் இருக்குமாயின் அவ்வடிமை முழுவதுமாக விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையெனில், (விடுதலையாகாத மீதிப் பங்கையும் விடுவித்துக் கொள்வதற்காக அவ்வடிமை உழைத்துச் சம்பாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வடிமையின் மீது (தாங்க முடியாத) சிரமத்தை சுமத்தக் கூடாது.
புஹாரி :2504 அபூஹுரைரா (ரலி).
1084. அன்சாரிகளில் ஒருவர் தம் அடிமை ஒருவனைத் தம் இறப்புக்குப் பின் விடுதலை பெற்றவனாவான் என்று அறிவித்திருந்தார். ஆனால், அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவுமிருக்கவில்லை. இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது ‘என்னிடமிருந்து இவனை (விலைக்கு) வாங்குபவர் யார்?’ என்று கேட்டார்கள். அப்போது அவனை நுஐம் இப்னு நஹ்ஹராம் (ரலி) அவர்கள் எண்ணூறு திர்ஹங்களுக்கு (வெள்ளிக் காசுகளுக்கு) வாங்கினார்கள்.
புஹாரி :6716 ஜாபிர் (ரலி).