1072. (ஒருமுறை இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள், ‘நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது (சுலைமான் -அலை) அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) ‘இன்ஷா அல்லாஹ் – இறைவன் நாடினால்” என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்” என்றார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள், ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறவில்லை; மறந்துவிட்டார்கள். அவ்வாறே சுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை. அந்த ஒரு மனைவியும் (ஒரு புஜமுடைய) அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர் ‘இன்ஷா அல்லாஹ் – இறைவன் நாடினால்’ என்று கூறியிருந்தால் அவர் தம் சத்தியத்தை முறித்திருக்கமாட்டார். (சபதத்தை நிறைவேற்றியிருப்பார்.) தம் தேவை நிறைவேறுவதைப் பெரிதும் அவர் நம்பியிருப்பார்” என்று கூறினார்கள்.
1073. தாவூத் (அலை) அவர்களின் மகன் சுலைமான் (அலை) அவர்கள், ‘இன்றிரவு நான் எழுபது மனைவிமார்களிடம் செல்வேன். (அவர்களில்) ஒவ்வொருவரும் இறைவழியில் போராடும் குதிரை வீரரைக் கருத்தரிப்பார்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவரின் தோழர் ஒருவர், ‘அல்லாஹ் நாடினால்…” என்று சொல்லுங்கள்” என்று கூறினார். சுலைமான் (அலை) அவர்கள், ‘அல்லாஹ் நாடினால்” என்று (மறந்து போய்) சொல்லாமலிருந்து விட்டார்கள். (அவர்கள் அவ்வாறே சென்றும் கூட) தன் இரண்டு புஜங்களில் ஒன்று கீழே விழுந்த ஒரேயொரு குழந்தையைத் தவிர வேறெதையும் அவர்கள் கருத்தரிக்கவில்லை. ‘இன்ஷா அல்லாஹ்… (இறைவன் நாடினால்)’ என்று சுலைமான் (அலை) அவர்கள் கூறியிருந்தால் அவர்கள் (எழுபது பேரும் பிறந்து) இறைவழியில் போராடியிருப்பார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.