அத்தியாயம்-4. B. மனிதனின் குடும்ப வாழ்க்கை (2)

மனைவியின் உரிமைகள் – கணவனின் கடமைகள்

நாம் மேலே சொன்ன ஒழுக்க விதிகள் பெண்களுக்குச் சில உரிமைகளை ஏற்படுத்துகின்றன. அதுபோலவே அவர்களுக்கென சில கடமைகளையும் ஏற்படுத்துகின்றன. திருக்குர்ஆனும், பெருமானார் (ஸல்) அவர்களது வாழ்வின் அழகிய முன்மாதிரியும் கணவன் மனைவியிடம் நீதமுடனும், இரக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனப் பணித்திருப்பதால், மனைவியிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டியது கணவனின் கடமையாகும். இதிலிருந்து பிரிகின்ற இன்னொரு கடமை, கணவன் மனைவியின் பராமரிப்புக்குத் தேவையானவை அனைத்தையும் தந்திட வேண்டும் என்பதாகும். இந்தக் கடமையை ஆண்கள் கடுகளவு கசப்புமின்றி நிறைவேற்றிட வேண்டும்.
பராமரிப்பின் பல்வேறு கூறுகள்.

உணவு, உடை, உறையுள் ஆகியவற்றிற்கானப் பாதுகாப்பும் உறுதியும் தான் மனைவியின் உரிமைகள் என்றில்லை. அவளுக்கென இன்னும் பல உரிமைகளுண்டு. கணவன் மனைவியைப் பெண்மைக்கே உரிய தனித்தன்மையோடும், தனிக்கவனத்தோடும் நடத்திட வேண்டும். அவளது கண்ணியம் காக்கப்பட வேண்டும். கருணையோடு அவளை நடத்திட வேண்டும். அவளுடைய உரிமைகளும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும். வெறுப்பு எந்த நிலைமையிலும் தலைகாட்டிடக் கூடாது.

தனது உரிமைகள் மதிக்கப்படவில்லை என்ற பதட்டமோ, பயமோ அவளுக்கு ஏற்பட்டிடக் கூடாது. இதிலிருந்து பெறப்படும் இன்னொரு உண்மை என்னவெனில், எந்த நிலையிலும் மனைவியின் உரிமைகளைப் பறித்திடவோ, தடுத்திடவோ கூடாது என்பதாகும். அவள்மீது சற்றும் அன்பு செலுத்தாமல், அவளது உரிமைகளும் மதிக்கப்படாமல் போயிடுமேயானால் அந்த மண ஒப்பந்தத்திலிருந்து பிரிந்து பிரிதொரு புதுவாழ்வைத் தேடிகொள்ளும் உரிமையில் யாரும் அவளுக்குக் குறுக்கே நின்றிட முடியாது.

மனைவியின் பணிகளும், கணவனின் உரிமைகளும்.

வாழ்க்கை ஒப்பந்தத்தின் ஈடேற்றத்திற்கும், மனையறத்தின் மாட்சிமைக்கும் தன்னால் முடிந்தவை அனைத்தையும் செய்திட வேண்டியது, வாழ்க்கை ஒப்பந்தத்தில் தானும் ஒருபகுதி என்ற அளவில் மனைவின் அடிப்படைக் கடமையாகும். கணவனின் வாழ்வின் வெற்றிக்குத் தன்னால் இயன்றவை அனைத்தையும் செய்து உறுதுணையாக அமைந்திட வேண்டும். கணவனின் தேவைகளைக் கவனிப்பவளாகவும், அவனது நல்வாழ்வுக்கு வகைச் செய்பவளாகவும் விளங்கிட வேண்டும். கணவனின் உணர்ச்சிகளுக்கு குறுக்கே நிற்பவளாகவோ, கணவனின் அமைதியைக் குழைப்பவளாகவோ இருந்திடக் கூடாது. திருமறையின் 25:74 வது வசனம் இதனைத் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றது. இல்லறத்தில் இனிமைச் சுவை ததும்ப வாழ்பவர்கள் செய்திடும் பிரார்த்தனை:

எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகளையும், எங்கள் சந்ததிகளையும் எங்களுக்கு கண்குளிர்ச்சியாக்கித் தருவாயாக! அன்றி, பரிசுத்தவான்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்கியருள்வாயாக! (அல்குர்ஆன்: 25:74)

இந்த அடிப்படையிலிருந்துதான் மனைவியின் கடமைகள் பிறக்கின்றன. தனது கடமைகளை நிறைவேற்றுகின்ற விதத்தில் மனைவி நம்பிக்கையுடையவளாகவும், கண்ணியமும், நேர்மையும் நிறைந்தவளாகவும் இருந்திட வேண்டும். இன்னும் குறிப்பாக கூறுவதாக இருந்தால் அவள் கருவுருவதை வேண்டுமென்றே தவிர்ப்பவளாக இருந்திடக் கூடாது. ஏனெனில் இச்செயல் கணவன் நியாயமான வாரிசுகளைப் பெறுகின்ற உரிமையை மறுக்கின்றது. அத்துடன் அவள் இதில் வேறு எவரும் தன்னை அண்டிட அனுமதித்திடக் கூடாது. அது முழுக்க, முழுக்க அவளது கணவனின் உரிமையேயாகும். (அதாவது உடல் உறவு).

இதிலிருந்து எழுகின்ற பிரிதொரு நியதி என்னவெனில், அவள் தனது இல்லத்தில் வேற்று ஆண்களை எந்தக் காரணத்தை முன்னிட்டும் அனுமதித்திடக் கூடாது. அதுபோலவே தன் கணவனின் அனுமதியின்றி, அடுத்தவர்கள் தரும் பரிசுகளை ஏற்றிடக் கூடாது. இத்தடைகளின் நோக்கம், வீணான சந்தேகங்களைத் தவிர்ப்பதும், வதந்திகளைத் தவிர்த்திடுவதுமேயாகும். அத்துடன் குடும்பத்தில் ஒரு நல்ல கட்டுப்பாடும், சுமூக நிலையும் ஏற்படுத்தி வாழ்வில் இன்சுவை கூட்டிட உதவிடும் இந்தத் தடைகள்.

கணவனுக்குச் சொந்தமானவைகளும், குடும்ப சொத்துகளும் கணவன் மனைவியிடத்தில் ஒப்படைத்திருக்கும் அமானிதப் பொருள்களாகும். கணவன் மனைவியிடத்தில் ஒப்படைக்கும் அனைத்தையும் அவள் பொறுப்போடு பேணிக்காத்திட வேண்டும். கணவன் மனைவியினிடத்தில் ஒப்படைக்கும் ‘சம்பாத்தியங்களைச்’ செலவிடுவதில் மனைவி சிக்கனத்தைக் கையாண்டிட வேண்டும். கணவனின் பொருள்களில் எதையும் அவள் அவனுடைய அனுமதியின்றி கடனாகத் தரவோ, விலை செய்யவோ கூடாது.

அவர்களுக்கிடையேயுள்ள (வீட்டு) உறவுகளைப் பொறுத்தவரை, அவள் கணவன் தன்னை நாடுகிற விதத்தில், தன்னை அலங்கரித்துக் கொள்வதில் தனிக் கவனம் செலுத்திட வேண்டும். அத்துடன் முழுமையாக ஒத்துழைப்பவளாகவும் இருந்திட வேண்டும். மனைவி தன்னை நாடும் கணவனிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்பவளாக இருக்கக் கூடாது. ஏனெனில் திருக்குர்ஆன், ஒருவர் மற்றவரிக் கொண்டு திருப்திகொள்ள வேண்டும் எனப் பகர்ந்துள்ளது. இதில் இருவரின் ஆரோக்கியத்திற்கும் போதிய கவனம் தந்திட வேண்டும். மனைவி தனது கணவனுக்கு குறைந்த திருப்தியைத் தருகின்ற விதத்திலோ, வெறுப்பு ஏற்படும் விதத்திலோ நடந்திடக் கூடாது. எந்தக் காரணத்தைக் கொண்டாவது அவள் இவ்வாறு நடந்திடத் துணிவாளேயானால் கணவன் அவளது உரிமைகளில் தலையிட்டு நிலைமையை சரிகட்டும் உரிமையைப் பெறுவான். இருவரும் தங்களது தேவைகளை முடிந்தவரை திருப்தி செய்துகொள்ள முயல வேண்டும். கணவன் மனைவியின் திருப்தியை குறைத்திடும் விதத்தில் நடக்கக் கூடாது.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.