(*இஸ்லாத்தின் குடும்ப அமைப்பு’ என்ற ஆசிரியரின் விரிவான நூலின் சுருக்கமே இங்கே ‘குடும்ப வாழ்க்கை’ என்ற தலைப்பின் கீழ் விவாதிக்கப்படுகின்றது.)
’குடும்பம்’ என்பதற்கு பல்வேறு இலக்கணங்களும் வரையறைகளும் தரப்பட்டுள்ளன. இங்கே நாம் அவைகளில் எளிமையான இலக்கணமொன்றை எடுத்துக்கொண்டு நமது விவாதத்தைத் தொடருவோம்.
’குடும்பம்’ என்பது ஒரு மனித சமூகக்கூட்டம். அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இரத்த பந்தம் அல்லது திருமண உறவுகள் என்பவைகளால் ஒன்றாக இணைக்கப்படுகின்றார்கள். இந்தக் குடும்பபந்தம் ஒருவர் மற்றவருக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் உரிமைகளையும் கொண்டதாகும். இந்த உரிமைகளும் கடமைகளும் மார்க்கத்தினால் ஏற்படுத்தப்பட்டு, சட்டத்தினால் அமுல்படுத்தப்பட்டு, குடும்பத்தில் அங்கம் வகிப்பவர்களால் கடைபிடிக்கப்படுகின்றன. குடும்பத்தைப் பாதுகாத்தல், பராமரித்தல், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுதல், சிறுவர்களிடம் கருணை காட்டுதல், முதியவர்களிடம் மரியாதை காட்டுதல், முதியவர்களைப் பாதுகாத்தல், குடும்பம் சுமூகமாக நடந்திடத் தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் ஆகியவைகள் இந்தக் கடமைகளில் அடங்கும்.
இஸ்லாத்தின் குடும்ப வாழ்க்கையின் அடிப்படையாக அமைவது இரத்த பந்தங்களினால் ஏற்படும் பிணைப்பும், திருமணங்களின் மூலம் ஏற்படும் உறவுகளுமாகும். உடல் உறவுக்காகத் தனியாகத் தெரிவிக்கப்படும் இரகசிய ‘சம்மதங்கள்’, திருமணங்களின் ‘ஒத்திகை’த் திருமணங்கள், தத்தெடுத்தல் இவைகளை இஸ்லாம் அங்கீகரிப்பதே இல்லை. இஸ்லாம் குடும்பம் என்ற அமைப்பை உறுதியான அடித்தளங்களின் கீழ் அமைத்துத் தருகின்றது. இஸ்லாம் ஏற்படுத்தித்தரும் குடும்ப அமைப்பு நிலைத்து நின்று, குடும்ப உறுப்பினர்களுக்கு நிலையான பாதுகாப்பை வழங்கும். அத்துடன் அதன் உறுப்பினர்களுக்கிடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பு பாராட்டி ஒத்துழைத்திடவும், அவர்கள் தங்களது கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றிடவும் குடும்பம் என்ற அமைப்பு மிகவும் உறுதியான அடித்தளத்தின் மேல் அமைக்கப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.
இரத்த பந்தங்களின் மூலம் ஏற்படும் குடும்ப பிணைப்புகளைப்போல் இயற்கையான குடும்ப பிணைப்புகள் எதுவுமில்லை எனக் கூறுகின்றது இஸ்லாம்.
மனிதன் தன் உடலில் இயற்கையாக எழும் உணர்ச்சிகளைத் தணித்திட, முறையான ஒழுக்கவிதிகளைப் பின்பற்றிடுவதே சிறந்தது. ஒழுக்க நெறிகள் உடைபடாமல் உடல் திருப்திக்கு வகை செய்வது முறையான வாழ்க்கை ஒப்பந்தங்களே! அதாவது திருமணங்களே! என நம்புகின்றது இஸ்லாம். ஒழுக்கம், உடல் திருப்தி இவை இரண்டிற்கும் வகை செய்யும் திருமண உறவுகளைத்தான் இஸ்லாம் அங்கீகரிக்கின்றது.
திருமணம் ஒரு சமுதாயத் தேவை என்பது இஸ்லாத்தின் கண்ணோட்டம். திருமணம் இஸ்லாம் பேணும் மாண்புகளுள் ஒன்றாகும். மனிதன் ஒழுக்க நெறிகளிலிருந்து பிரழ்ந்து சீரழிந்திடாமல் காத்திடும் அரண் திருமணம்.
ஒவ்வொரு முஸ்லிமும் தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்கின்ற விதத்திலேதான் தன்னுடைய வாழ்வின் போக்கை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் தன் வாழ்வில் எடுக்கும் எல்லா முயற்சிகளும் குடும்ப அமைப்பை மனதிற்கொண்டே இருந்திட வேண்டும். திருமணம், குடும்பம் இவை இஸ்லாமிய அமைப்பின் மையங்களாகும். ’ஒரு முஸ்லிம் திருமணம் செய்து கொண்டால் அவன் தனது மார்க்கத்தில் அரைப்பகுதியை நிறைவு செய்து விட்டவனாவான். ஆகவே அவன் மிகுதியுள்ள அரைப்பகுதியில் இறை நினைவு நிறைந்தவனாகவும், மார்க்கக் கடமைகளில் கவனம் நிறைந்தவனாகவும் இருக்கட்டும்’ என்பது பெருமானார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளுள் ஒன்றாகும். இந்த அளவிற்கு திருமணங்களுக்குச் சிறப்பிடம் தந்து சிறப்பித்துள்ளது இஸ்லாம்.
திருமறைக்குத் தெளிவுரைகளை நல்கியுள்ள சான்றோர் பலர், திருமணம் என்பது ஒரு மார்க்கக்கடமை, ஒழுக்கத்தின் அரண், சமுதாயத்தை இறுகப்பிணைத்திடும் கயிறு என்ற அளவில் திருமணத்திற்கு சிறப்பிடம் தந்து சில திருமறை வசனங்களுக்கு விளக்கம் தந்துள்ளார்கள்.
ஒரு மார்க்கக்கடமை என்பதனால் ஒவ்வொரு முஸ்லிமும் திருமணம் முடித்தாக வேண்டும். ஆனால் இஸ்லாத்தின் ஏனைய கடமைகளைப்போலவே இதுவும் அதில் அடங்கியுள்ள பொறுப்புகளை நிறைவேற்றும் தகுதி படைத்தவர்கள் மீதே கடமையாக்கப்பட்டுள்ளது.
திருமணத்தின் பொருள்.
திருமணத்திற்கு என்னதான் விளக்கங்கள் தரப்பட்டாலும், இஸ்லாம் திருமணத்தை இறுக்கமான ஒரு குடும்ப பிணைப்பு என்றே பார்க்கின்றது. அது ஒரு வாழ்க்கை ஒப்பந்தமாகும். அதைச் சமுதாயத்துடன் வைத்துக்கொள்ளும் ஒரு ஒப்பந்தம் என்றும் கொள்ளலாம். உலக வாழ்க்கையை கண்ணியமான முறையில் வாழ்ந்திடுவதற்கும், மனித இனம் பல்கிப் பெருகிடவும் ஒது ஒரு உன்னதமான உயர்வழியாகும்.
திருமணம் என்பது தம்பதிகள் தங்களுக்குள் செய்துகொள்கின்ற ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் என்பது மட்டுமல்ல, அது தம்பதிகள் இறைவனுடன் செய்துகொள்ளும் ஒரு ஒப்பந்தமாகும். பொறுப்புடன் வாழ விரும்புவோரின் பொறுப்புள்ள இறை உணர்வின் வெளிப்பாடாகும். இந்த வாழ்க்கை ஒப்பந்தத்தின் மூலம் தம்பதிகள் உடல் நிறைவையும், உள்ளத்தின் நிறைவையும் காணலாம். அன்பின் பரிமாற்றம் அங்கே பூரணத்துவத்தைக் காண்கின்றது.
திருமணத்தின் மூலம் மனிதன் தனது இயற்கையான உணர்வுக்கு வடிகால் அமைத்துக் கொள்கின்றான். மனதில் ஏற்படும் சபலங்கள், சலனங்கள் இவைகளை வென்று ஒழுக்க நெறிகளுக்குள் நின்று மனிதன் நிலையாக வாழ்ந்திட வகைசெய்வது திருமணம். இதன் மூலம் ஏற்படும் இனப்பெருக்கம் ஒரு சமுதாயத்தேவை அல்லது சேவை. மனிதன் தனது உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளவும் வகை செய்வது திருமணம். மனிதனின் மனநிலை நல்ல ஆரோக்கியத்துடன் திகழ்ந்திட திருமணம் ஒரு அவசியத்தேவை. இவை திருமணத்தால் ஏற்படும் பொதுவான நன்மைகளாகும்.
ஆனால், திருமணங்கள் இறைநினைவுடன் கலந்து இறையச்சத்தோடு நிறைவேற்றப்படும் கடமை என்ற வகையில் பார்த்திடும்போது அதற்கேற்படும் பயனும் பொருளும் தனி. இஸ்லாம் திருமணத்தை இறைவழியில் நிறைவேற்றப்பட்ட ஒரு கடமை என்று கூறுகின்றது. இஸ்லாத்தின் பார்வையில் திருமணங்கள் ஒரு சமுதாயத்தேவை!
வல்லான் அல்லாஹ் வழங்கிய வான்மறை “மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:1)
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்: 30:21) எனக் கூறுகின்றது.
மண வாழ்க்கையில் சில மனக்குறைகள் ஏற்பட்டு வாழ்க்கை ஒப்பந்தம் உடைகின்ற ஒரு நிலை ஏற்பட்டிடுமேயானால் அந்த நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இறைவன் வகுத்துத் தந்துள்ள சட்டங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், இவற்றிற்கெல்லாம் மேலாக இறை உணர்வுடன் (இறைவனிடம் பொறுப்புடன்) நடந்து கொள்ள வேண்டும் என்றும் நினைவுறுத்துகின்றது திருக்குர்ஆன்.
இஸ்லாம் வழங்கும் திருமணச் சட்டங்கள் ஆண், பெண் இருபாலருக்கும் சம அளவில் பொருந்துவதாகும். உதாரணமாக பிரம்மச்சார்யம் ஆண்களுக்கு எப்படி ஆகாதோ அதேபோல் பெண்களுக்கும் ஆகாது என அறிவித்துள்ளது இஸ்லாம். பெண்களின் தேவைகள் ஆண்களின் தேவைகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல என்ற அடிப்படையில் எழுந்ததே இது. உண்மையில் இஸ்லாம், திருமணம் ஆண்களுக்கு எப்படி சாதாரண வாழ்க்கைக்கு இன்றியமையாதது என எண்ணுகின்றதோ, அதேபோல்தான் பெண்களுக்கும் இயற்கையாகவே இன்றியமையாதது எனக் கருதுகின்றது. பெண்களைப் பொறுத்தவரை திருமணங்கள், ஆண்களைவிட முக்கியமானதாகும். ஏனெனில் இது பெண்களுக்கு ஏனைய பாதுகாப்புகளுடன் பொருளாதாரப் பாதுகாப்பையும் வழங்குகின்றது. பெண்களுக்குத் திருமணத்தால் பொருளாதாரப் பாதுகாப்பு இருக்கின்றது என்பதால், திருமணங்கள் எல்லாம் வியாபாரங்களே என்று எவரும் கருதிவிடக்கூடாது.
உண்மையில், இஸ்லாத்தின் பார்வையில் ‘பொருளாதாரம்’ என்பது மிகக்குறைந்த அளவே முக்கியத்துவம் வாய்ந்தது. அது எவ்வளவு வலுவுள்ளதாகக் கருதப்பட்டாலும் சரியே!
பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்திடுவது குறித்துப் பின்வருமாறு பகர்ந்துள்ளார்கள். ஒரு பெண்ணை சாதாரணமாக அழகு, சொத்து, கண்ணியம், குடும்ப கௌரவம் ஆகியவைகளுக்காக திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் தனது வாழ்க்கைத் துணைவியை ’மார்க்கத்திற்காக’ (இஸ்லாத்திற்காக) மணந்து கொள்பவர் நிச்சயமாக அல்லாஹ்வின் அருளைப் பெற்றவராவார். வாழ்க்கைத் துணை இல்லாதவர்களும், இறையச்சம் மிக்கவர்களும் திருமணம் முடித்துக் கொள்ள வேண்டும், அவர்கள் ஏழையாகவோ அடிமையாகவோ இருப்பினும் சரியே! எனப் பணிக்கின்றது இஸ்லாம். (சான்றாகத் திருமறையின் 24:32 வசனத்தைப் பார்க்கவும்.)
திருமணப்பணமாக ஒருவர் தனது மனைவிக்கு எவ்வளவு கொடுத்தாலும் அது அவளையே சாரும். அதுபோலவே திருமணத்திற்கு முன் அல்லது பின் அவளாக எதையாவது சேர்த்துக் கொண்டிருந்தால் அல்லது சேர்த்துக் கொண்டால் அது அவளுக்கே உரியதாகும். குடும்பத்தின் தேவைகளை நிறைவு செய்திட வேண்டியவன் கணவனே! ஒரு பெண் திருமணத்திற்கு முன் என்னென்ன உதவிகளையும் சேவைகளையும் பெற்று வந்தாளோ அந்த உதவிகளையும் சேவைகளையும் அவள் தொடர்ந்து பெற்றிட ஏற்பாடு செய்திட வேண்டியது கணவனின் பொறுப்பாகும். இன்னும், சில அறிஞர்கள் கூற்றுப்படி வீட்டு வேலைகளைச் செய்திட வேண்டியது மனைவியின் மீது சட்டப்படி கடமையல்ல. அவள் நித்திய வேலைகளை விருப்பப்பட்டு செய்யலாம். சாதாரணமாகச் செய்து கொண்டும் இருக்கின்றார்கள். கணவனோடு ஒத்துழைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடும், சிக்கனத்தை மனதிற்கொண்டும் அவள் வீட்டின் வேலைகளைச் செய்திடலாம்.
திருமணங்கள் நிரந்தரமானவை.
வாழ்க்கை ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அந்த ஒப்பந்தம் நீடித்திருக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இஸ்லாம் திருமணங்களை மிகவும் சிறப்பான அமைப்பு எனக் கருதுவதால் அது நிலைத்திருக்கச் சில நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது. பக்குவமான வயது, பொதுவானப் பொருத்தங்கள், நியாயமானத் திருமணப்பணம், (பெண்ணுக்கு மணமகனால் தரப்படுவது) நிர்பந்தங்கள் ஏதுமின்றி சுதந்திரமாகத் தரப்படும் ‘சம்மதம்’ எண்ணத்தூய்மை ஆகியவைகளுக்கு அதிக்கவனம் செலுத்திட வேண்டுமென பணிக்கின்றது இஸ்லாம். இதயத்தூய்மை இல்லற வாழ்வின் இன்பத்திற்கு மிகவும் இன்றியமையாதது எனக் கருதுகின்றது இஸ்லாம். இதனால்தான் ‘ஒத்திகை’த் திருமணங்களையும், தற்காலிகமான ஒப்பந்தத்தின் கீழ் செய்யப்படும் திருமணங்களையும் தடை செய்துள்ளது இஸ்லாம். திருமண ஒப்பந்தங்களை அடிக்கடி மீறுபவர்கள், அதை உடைத்து விடுபவர்கள் (அதாவது ஒருவனை அல்லது ஒருத்தியை சிறிதுகாலம் சுவைத்து விட்டு பின்னர் அடுத்தவர்களை அண்டுபவர்கள்) சபிக்கப்பட்டவர்களாவார்கள்.
திருமணங்கள் நிரந்தரமானவைகள் எனக் கூறிடும்போது, அல்லது திருமண ஒப்பந்தங்கள் நிரந்தரமாக நீடித்திருக்கத் தேவையான எல்லா முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொண்டிட வேண்டும் எனக் கூறிடும்போது, திருமண ஒப்பந்தங்களை எந்தச் சூழ்நிலையிலேயும் உடைக்கவே முடியாது என்று பொருளாகாது.
திருக்குர்ஆனை அடியொற்றி வாழும் முஸ்லிம்களை திருக்குர்ஆன் நடுநிலையான சமுதாயம் (உம்மத்தன் வசத்தன்) எனக் குறிப்பிடுகின்றது. உண்மையிலேயே திருக்குர்ஆன் எல்லோருக்கும் வழிகாட்ட வந்த உயர்வேதம். முஸ்லிம்கள் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாக அமைந்திட வேண்டியவர்கள். இஸ்லாம் திருமணத்தையும் இந்த நடுநிலையோடுதான் அணுகுகின்றது. அது திருமணத்திற்கு தேவையான முக்கியத்துவத்தைத் தவிர, அளவுக்குமீறிய முக்கியத்துவத்தை அள்ளிக் கொட்டுவதுமில்லை. அதேநேரத்தில் அதை சாதாரண ஒப்பந்தம் என்ற கண்கொண்டு பார்ப்பதும் இல்லை. திருமணங்கள் புனிதமானவை. அதே நேரத்தில் அவை சிறந்த ஒப்பந்தமுமாகும். வாழ்க்கை ஒப்பந்தங்கள் உடைக்கக் கூடாதவை ஆனால் உடைக்க முடியாதவைகளல்ல.
வாழ்க்கை ஒப்பந்தங்களை (திருமணங்களை) நிரந்தரமானவைகள் என்றே கொள்ள வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தங்கள் எதற்காக செய்து கொள்ளப்பட்டனவோ அதைப் பெற்றுத்தராதபோது, அவைகளை அமைதியாகவும் கண்ணியம் குன்றாமலும் உடைத்திடுவது தவறாகாது.
கணவன் – மனைவி உறவு.
வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதில் பக்தியையே அடிப்படையாகக் கொள்வர் தம்பதிகள். வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்துத் திருமணத்தின் நிபந்தனைகளை மனப்பூர்வமாக நிறைவேற்றிய பின்னர் வாழ்வை இன்பத்தை நோக்கி இட்டுச் செல்வர் தம்பதிகள். இஸ்லாம் ஒருபடி மேலே போய் கணவன் – மனைவி அடைந்திட வேண்டிய இலக்கினை அமைத்துத் தருகின்றது. இரக்கம், ஒருவரை ஒருவர் மதித்து வாழ்தல், ஒருவரிடம் காணும் குறையை மற்றவர் நிறைவு செய்கின்ற விதத்தில் நடந்து கொள்ளுதல், பொறுமையை எல்லா நிலைகளிலும் கடைப்பிடித்தல் இவை இஸ்லாம் தம்பதிகளிடம் எதிர்பார்க்கும் அடிப்படைகள். பாசம், பரிவு, அனுதாபம் ஆகியவை நிறைந்ததாக இல்லற வாழ்க்கை இருந்திட வேண்டும். இவைகளை வலியுறுத்திக் கூறும் திருக்குர்ஆன் வசனங்களும், பெருமானார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் ஏராளம்! ஏராளம்!
மனையறத்தின் மாட்சியைக் கூறவந்தவிடத்துப் பெருமானார் (ஸல்) அவர்கள் ‘எவர் தன்னுடைய குடும்பத்தில் சிறந்தவராக இருக்கின்றாரோ அவரே சிறந்த முஸ்லிமாவார். பெண்களின் வாழ்க்கையில் மிகவும் இதமளிப்பது நேர்மையான நல்ல மனைவியாக வாழ்ந்திடுவதே’ எனப் பகர்ந்துள்ளார்கள்.
திருமணம் என்ற வாழ்க்கை ஒப்பந்தம் நடந்தேறியது முதல் தம்பதிகள் வாழ்க்கை ஒரு முக்கியத் திருப்பத்தை அடைகின்றது. அவர்கள் புதுமையான பல கடமைகளை நிறைவேற்ற வேண்டியவர்களாகின்றனர். இதில் ஒருவருக்கொருவர் நிறைவேற்ற வேண்டிய கடமைகளும், உரிமைகளும் அடங்கும்.
மனைவியை அன்புடனும், அனுதாபத்துடனும், கண்ணியத்துடனும் நடத்திட வேண்டியது கணவனின் கடமையாகும். இது அவன் இறைவனுக்காக நிறைவேற்றிட வேண்டிய கடமை எனும் ஒழுக்க விதியிலிருந்து ஆரம்பம் ஆகின்றது. குடும்ப வாழ்வின் சுமூக நிலை குலைந்து ஒருவரை ஒருவர் பிரிந்திட வேண்டிய நிலை வந்தால் அப்போதும் தாராளத் தன்மையோடும், கண்ணியத்துடனுமே ஒருவரையொருவர் பிரிந்திட வேண்டும்.எந்தச் சூழ்நிலையிலேயும் கணவன் மனைவியை புண்படுத்திடக் கூடாது. (திருமறையில் 2:229-232, 4:19 ஆகிய வசனங்களைப் பார்த்திடவும்.) இந்த இறைவசனங்களில் பெண்களின் பணி எத்தன்மையது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இருக்கும் கடமையின் அளவு உரிமையும் இருக்கின்றது. எனினும் ஆண்களுக்கு பெண்களைவிட ஓரளவு அதிகமான உரிமை இருக்கின்றது. (2:228) இந்த அதிக அளவு உரிமையை சில மார்க்க அறிஞர்கள் திருக்குர்ஆனின் 4:34 வசனத்தோடு ஒப்பிட்டு விளக்கம் தருவது வழக்கம், திருமறையின் 4:34 வசனம் பின்வருமாறு அமைகின்றது.
பெண்களின் நிர்வாகிகளாக ஆண்களே இருக்கின்றனர். ஏனெனில் அவர்களில் ஒருவரைவிட மற்றவரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கின்றான். அன்றி (ஆண்களாகிய) அவர்கள் தங்கள் பொருள்களைப் பெண்களுக்காகச் செலவிடுகின்றனர். ஆகவே நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டுமென அல்லாஹ் விரும்புவனவற்றை (தங்களையும், தங்கள் கணவனின் ஏனையப் பொருட்களையும்) பேணிக்காத்துக் கொள்வார்கள். சில சமூகவியலாளர்கள் குறிப்பிடுவதுபோல ‘தலைமையின் ஒரு கருவி’ இந்த உரிமை ஆண்கள், பெண்களைவிட ஆதிகமாக ஆற்றுகின்ற பணியினை அடியொற்றி எழுந்ததேயாகும். ஆண்களுக்கு அவர்கள் ஆற்றுகின்ற அதிகமானப் பணிகளின் அடிப்படையில் தந்திருக்கின்ற அதிகமான உரிமையைக் காரணங்காட்டி பெண்களை இஸ்லாம் ஆண்களைவிட குறைந்த பிறப்புகள் என்றே நடத்துகின்றது என்பது மிகப்பெரும் தவறாகும்.*
(*ஆண்களுக்குப் பெண்களைவிட ஓரளவு அதிக உரிமையுண்டு என்பதை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் ஒன்றுபோல் தவறாகவே புரிந்துள்ளனர். இதனை நாம் ‘இஸ்லாத்தில் குடும்ப அமைப்பு’ என்ற நூலில் மிகவும் விரிவாக விவாதித்துள்ளோம். முடிவாக நாம் பெண்களைவிட ஆண்கள் உயர்ந்தவர்கள் என்றோ தாழ்ந்தவர்கள் என்றோ சொல்லவில்லை. இந்த உரிமை வேற்றுமைகள் ஆண்தன்மை பெண்தன்மை ஆகியவற்றில் இருக்கும் வேறுபாடுகளைக் கொண்டு எழுந்ததேயாகும்)