ரமளான் மாதத்தில் நன்மைகளை அதிகம் பெற்றுத் தரத் கூடிய செயல்கள்!

ரமளானில் செய்யப்படும் அமல்களுக்கான கூலிகள் அபரிதமாகக் கணக்கிடப்பட்டு அல்லாஹ்வால் கொடுக்கப்படுகின்றன : அத்தகைய நற்செயல்களாவன :

1. திருமறையை ஓதுதல் :

மகத்துவமிக்கவனான அல்லாஹ் கூறுகின்றான் :

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ – தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ – நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான். இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன். (35:29-30)

2. கியாம் என்றழைக்கக் கூடிய இரவுத் தொழுகை :

இது இன்று தராவீஹ் தொழுகை என்றழைக்கப்படுகின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எவனொருவன் ரமளான் மாதத்தின் இரவுத் தொழுகையைக் கடைபிடித்துத் தொழுது வருகின்றானோ, அவன் தன்னுடைய வெகுமதியை எதிர்பார்க்கட்டும், அல்லாஹ் அவனது முந்தைய பாவங்களை மன்னித்து விடுகின்றான். (புகாரி, முஸ்லிம், மற்றும் பல.. ..)

3. ஸலாத்துத் தராவீஹ் :

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மக்களே உங்களுக்கிடையில் வாழ்த்துக்களை (ஸலாத்தை)ப் பரிமாறிக் கொள்ளுங்கள், உணவுகளை அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள், உங்களுக்கிடையே சொந்தங்கள் நட்புகளை இறுக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள், மக்கள் தூங்குகின்ற இரவு நேரங்களில் நீங்கள் எழுந்திருந்து தொழுங்கள், (அவ்வாறு நீங்கள் செய்தால்) பாதுகாப்பாகச் சொர்க்கத்தில் நீங்கள் நுழைந்து விடலாம். (அத்திர்மிதி)

ஸலாத்துத் தராவீஹ் என்ற தொழுகையானது, ரமளான் நாட்களில் இஷாத் தொழுகைக்குப் பின்பு தொழப்படுகின்றது. இந்தத் தொழுகையை கூட்டுத் தொழுகையாகத் தொழுவது என்பது மிகச் சிறந்ததொரு செயலாகும். ஓருவேளை அருகில் பள்ளிவாசல் எதுமில்லை என்றால், அதனைத் தனித்துச் தொழுதும் கொள்ளலாம். இது 8 ரக்அத்துக்களைக் கொண்டதாகவும் (4 தடவையாக, ஒவ்வொரு தடவைக்கும் 2 ரக்அத் என்ற அடிப்டையில் தொழ வேண்டும்.), அதனை அடுத்து 3 ரக்அத் கொண்ட வித்ருத் தொழுகையைத் தொழ வேண்டும்.

இரவுத்தொழுகையின் பொழுது வழக்கமாக ரசூல் (ஸல்) அவர்கள் எத்தனை ரக்அத்துக்களைத் தொழுது வந்தார்கள் என்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள்:

முஹம்மது (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்திலும் அது அல்லாத மாதங்களிலும், 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழுததில்லை. (புகாரி, முஸ்லிம் மற்றும் பல)

ஆஸிப் பின் யஸீது (ரலி) அவர்கள் கூறியதாக இமாம் மாலிக் அவர்கள் கூறுகின்றார்கள் :

உபை பின் கஃப் அவர்களையும், தமீம் அத்தாரி (ரலி) அவர்களையும் முன்னின்று தராவீஹ் தொழுகையை நடத்துமாறு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (முவத்தா இமாம் மாலிக்).

ஷேய்க் நஸீரத்தீன் அல்-பானி (ரஹ்) இந்த மேலே உள்ள ஹதீஸ் பற்றி விளக்கமளிக்கும் பொழுது கூறியதாவது: முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு நாளின் இரவில் 11 ரக்அத்துக்களுக்கு மேலாக இரவுத் தொழுகையைத் தொழுகாதிருந்திருக்கும் பொழுது, அந்தப் 11 ரக்அத்துக்களை விடத் தொழ நினைப்பது அனுமதியளிக்கப்பட்டதல்ல. இவ்வாறு அதற்கு அதிகமாகத் தொழ நினைப்பது முஹம்மது (ஸல்) அவர்களின் கட்டளையை மறுத்து, அவருடைய அந்தச் செயலில் குறைகாண்பதாக ஆகிவிடக் கூடியதாக இருக்கின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள், நீங்கள் என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுது கொள்ளுங்கள் என்று கூறியிருக்கும் பொழுது, எவ்வாறு பஜர் தொழுகையினுடைய சுன்னத்தான 2 ரக்அத்துக்களை அதைவிட அதிகமாகத் தொழ முயற்சி செய்ய மாட்டோமோ அதைப் போலவே, இந்தத் தராவீஹ் தொழுகையிலும் 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழ முயற்சி செய்தல் கூடாது. இவ்வாறு அல்லாமல், 11 ரக்அத்துக்களுக்கு மேலாக நாம்தொழுதோமென்றால் இஸ்லாத்தில் ஒரு புதிய நூதனத்தைக் (பித்அத்தைக்) கடைபிடித்தவர்களாவோம், அவ்வாறு 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழுது வருபவர்கள் சட்டம் தெரியாதவர்களாக இருப்பின், அவர்களை அழைத்து சட்டத்தைக் கூறுங்கள், அல்லது அவர்களது மன இச்சையைப் பின்பற்றாதிருங்கள். இந்தத் தொழுகையை கூட்டுத் தொழுகையாகத் தொழுவது, ஜமாத்துடன் பர்ளுத் தொழுகையை நிறைவேற்றியதற்கு ஒப்பாகும். இந்த இரவு தராவீஹ் தொழுகையை ஆரம்பித்து வைத்து, அதை மூன்று நாட்கள் தொடர்ந்து ஜமாத்தாக முஹம்மது (ஸல்) அவர்கள் தொழுது வந்தார்கள். மேலும், இந்தத் தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்தும் தொழாமல் இடையிலேயே விட்டு விட்டதன் காரணமென்னவெனில், இது என்னுடைய சமுதாயத்தினர் மீது பர்ளான தொழுகையைப் போல கடமையாகி விடுமோ எனப் பயந்தே தான் அதைக் கைவிட்டேன் என முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பின்பு வந்த உமர் (ரலி) அவர்கள் இந்த தராவீஹ் தொழுகையை கூட்டுத் தொழுகையாக நடத்தும்படி உபை பின் கஃப் (ரலி) அவர்களையும், தமீம் அத்தாரி (ரலி) அவர்களையும் ஏவினார்கள். மேலே உள்ள ஹதீஸின் அடிப்படையில் 11 ரக்அத்துத் தொழுகையாகவே தொழும்படி அவர்கள் கட்டளையிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (நஸீரத்தீன் அல்பானி, ஸலாத்துத் தராவீஹ் பக்.25).

4. உம்ராச் செய்தல் :

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வது, ஹஜ்ஜுச் செய்ததன் கூலிக்குச் சமமானது. (முஸ்லிம்)

ரமளான் மாதத்தில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன மற்றும் நரகத்தின் வாசல்கள் பூட்டப்படுகின்றன. மற்றும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. மேலும், இந்த மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையாக உள்ள நாட்களில் லைலத்துல் கத்ர் என்ற இரவு ஒன்று வருகின்றது, அ (ந்த இரவான)தில் செய்கின்ற அமல்கள், தொழுகைகள், ஆயிரம் மாதங்கள் அமல்கள் செய்த நன்மையைப் பெற்றுத்தரக் கூடியதாக இருக்கின்றது. அந்த இரவில் யாரொருவர் இறைவனுடைய நற்கூலியை எதிர்பார்த்து இறைவனை வணங்குகின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இந்த இரவு ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் வருகின்றது, அப்பொழுது கீழ்க்கண்ட துஅவை அதிகமதிகம் ஓதிக் கொள்வது சிறப்பானது :

அல்லாஹும்ம இன்னக்க அஃபுஉன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ!

யா அல்லாஹ் நீ மன்னிப்பவனாக இருக்கின்றாய்! மன்னிப்பை விரும்பக் கூடியவனாக இருக்கின்றாய்! எனவே, என்னை மன்னித்தருள்வாயாக! (திர்மிதி மற்றும் இப்னு மாஜா).

Tamil Islamic Library

This entry was posted in ஈமான் (நம்பிக்கை) and tagged , , , , , , . Bookmark the permalink.