தரிசனம் செய்யப்படும் இடங்கள்

ஸிரியா, இராக், எகிப்து இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும், இவையல்லாத இன்னும் பல நாடுகளிலும் நாம் காணுகின்ற, கட்டப்பட்ட கப்றுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் எதனையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. கப்றின் மீது கட்டிடம் கட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளது பின்வருமாறு அமைந்துள்ளது.

‘கப்றின் மீது சாந்து சுண்ணாம்பு பூசுவதையும், அதன் மீது அமர்வதையும், அதன் மீது கட்டிடம் கட்டுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்’ ஆதாரம்: முஸ்லிம்

மேற்காட்டிய ஹதீஸில் வந்த ‘தஜ்ஸீஸ்’ என்ற அரபு வார்த்தைக்கு சாந்து அல்லது சுண்ணாம்புகளின் கொழுப்புக்களைப் பூசுதல் என்று பொருள்படும். இமாம் திர்மிதி (ரஹ்) அவர்களின் ரிவாயத் ஒன்றில் ‘கப்றின் மீது எழுதப்படுவதையும் நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்’ என்று பதியப்பட்டுள்ளது. எழுதப்படுவது என்றால் அல்குர்ஆன் வசனம், ஹதீஸ் வாக்கியம், பாடல்கள், கப்றில் அடங்கியவரின் பெயர் போன்றவைகளாகும்.

ஸியாரத் செய்யக்கூடிய அதிகமான கட்டப்பட்ட கப்றுகள் முறையற்றனவாகவே இருந்து கொண்டிருக்கின்றன. ஹுஸைன் (ரலி) அவர்கள் இறாக்கில் ஷஹீதாகி அங்குதான் அடக்கம் செய்யப்பட்டார்கள். அவர்கள் மிஸ்ரு (எகிப்து)க்குச் செல்லவில்லை. அவர்களுடைய அடக்கஸ்தலம் மிஸ்ரில் இருப்பதாகச் சொல்லப்படுவது சரியானதன்று.

இவர்களுடைய பிழையான செயலுக்குரிய மற்றுமொரு சான்று யாதெனில் ஹுஸைன் (ரலி) அவர்களின் அடக்கஸ்தலம் இறாக், எகிப்து, ஸிரியா ஆகிய மூன்று நாடுகளிலும் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் ஷைகு அலாவுத்தீன் என்பவர் பதினான்கு இடங்களில் அடங்கியிருப்பதாக சில மக்கள் கருதுகின்றனர். இவ்வாறே ஷைகு தாவுது வலியுல்லாஹ்வும் எண்ணிலடங்காத இடங்களில் அடங்கியிருப்பதாகவும் ஒவ்வொரு இடத்திலும் அவர் கராமத்துக் (அற்புதம்) காட்டுகிறார் என்றும் கூறுகின்றனர். — (மொழிபெயர்ப்பாளர்).

ஹுஸைன் (ரலி) அவர்களுடைய கப்றைப்பற்றி மக்கள் கொண்டிருக்கும் தவறான நம்பிக்கைக்கு எதிரான மற்றுமொரு சான்று ‘ஸஹாபாக்கள் மரணித்தால் நபி (ஸல்) அவர்களின் பின்வரும் சொல்லுக்கமைவாக பள்ளிவாசலினுள் அடக்கம் செய்யப்பட மாட்டார்கள்’ என்பதாகும்.

‘அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் சபிப்பானாக! அவர்கள் தங்களுடைய நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்’ ஆதாரம்: புகாரி

இவ்வாதாரத்தைக் கொண்டு ஸஹாபாக்களுடைய காலத்தில் மரணித்த எந்த ஸஹாபியும் பள்ளிவாசலினுள் அடக்கம் செய்யப்பட்டிருக்க முடியாது. இதனுடைய விளக்கம் என்னவெனில், அக்காலத்தில் இருந்த பள்ளிவாசல்கள் அனைத்தும் ஷிர்க் இல்லாத வழிபாட்டுத் தலங்களாக இருந்தன. அந்த ஸஹாபாக்கள் பின்வரும் மறைவசனத்தைக் கற்று அதன்படி செயல்படுகின்றவர்களாக இருந்தனர்.

“நிச்சயமாக மஸ்ஜிதுகளெல்லாம் அல்லாஹ்வி(ன் வணக்கத்தி)ற்காகவே உள்ளன. ஆகவே (அவற்றில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (வணங்க, பெயர் கூறி) அழைக்காதீர்கள்” (72:18)

நபி (ஸல்) அவர்கள் தான் கட்டிய பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படவில்லை; அவர்களது வீட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இது நம்மிடையே உள்ள மிக உறுதியானதோர் ஆதாரமாகும். உமையாக்கள் தமது ஆட்சிக்காலத்தில் மஸ்ஜிதுந்நபவியை விசாலப்படுத்திய போது, அவர்கள் தான் நபியவர்களின் கப்றைப் பள்ளிவாசலினுள் உட்படுத்தினார்கள். அவர்கள் இவ்வாறு செய்யாதிருந்திருக்கலாம்.

இப்பொழுது ஹுஸைன் (ரலி) அவர்களின் கப்று பள்ளிவாசலினுள் இருக்கின்றது. (பிற்காலத்தவர்கள் கப்றைப் பள்ளிவாசலாக மாற்றி இருக்கலாம்.) சிலர் அதனைத் ‘தவாப்’ செய்கின்றனர். நோயைக் குணப்படுத்தல், கஷ்டங்களை நீக்குதல் போன்ற அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கத் தகுதியான சில தேவைகளை ஹுஸைன் (ரலி) அவர்களிடம் கேட்கின்றனர். நமது மார்க்கமோ, இவற்றை அல்லாஹ்விடம் மட்டுமே கேட்குமாறும், கஃபத்துல்லாவைத் தவிர வேறெதனையும் வலம் வரக் (தவாப் செய்யக்) கூடாதென்றும் நமக்குக் கட்டளை இடுகின்றது. தவாப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

“அவர்கள் புராதன ஆலயத்தை (கஃபாவை)த் ‘தவாப்’ செய்யவும்” (22:29)

அலி (ரலி) அவர்களின் மகள் ஜைனபு (ரலி) அவர்களின் ‘கப்று’ மிஸ்ரிலும், டமாஸ்கஸ்ஸிலும் இருப்பதாகச் சொல்லுவது சரியானதன்று. அவர்கள் மிஸ்ரில் மரணிக்கவுமில்லை; ஸிரியாவில் மரணிக்கவுமில்லை. அவ்விரு இடங்களில் அவர்கள் பெயரில் கப்றுகள் இருப்பதே, அதனை நம்புகின்ற மக்களுடைய கொள்கை பிழையானது என்பதற்கு ஆதாரமாகும்.

உண்மையாகவே கப்றில் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும், கப்றுகளின் மீது கட்டிடம் கட்டி, அவற்றைப் பள்ளிவாசலினுள் அமைப்பதை இஸ்லாம் தடை செய்கின்றது. இறாக்கில் ஹுஸைன் (ரலி) அவர்களுடைய கப்றும், மிஸ்ரில் இமாம் ஷாபி (ரஹ்) அவர்களுடைய கப்றும், பக்தாதில் அப்துல்காதிர் ஜிலானிய்யி (ரஹ்) அவர்களுடைய கப்றும் இவர்களல்லாத பலருடைய கப்றுகளும் பள்ளிவாசல்களினுள் இருப்பதைக் காணலாம்.

‘ஷைக் ஸாதிக்’ என்பவர் பின்வருமாறு என்னிடம் ஒரு சம்பவத்தைக் கூறினார். ஒரு மனிதர் கிப்லாத் திசையை நோக்கித் தொழாமல் (முஹ்யித்தீன்) அப்துல் காதிர் ஜீலானிய்யி அவர்களுடைய கப்றை நோக்கித் தொழுது கொண்டிருந்தார். அவரை நோக்கி, கிப்லாவை முன்னோக்கித் தொழுவது ‘பர்ளு’ என்றும் ‘கப்றுகளின் மீது கட்டிடம் கட்டவோ, அவற்றை நோக்கித் தொழவோ வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்றும் நான் செய்த உபதேசத்தைச் செவியேற்காதவரைப் போன்று என்னை நோக்கி ‘நீ ஒரு வஹ்ஹாபி’ என்று சொன்னார்.

மிஸ்ரிலே கட்டப்பட்ட அதிகமான கப்றுகள் ‘பாதிமிய்யா’ ஆட்சிகாலத்தில் நிருவப்பட்டனவாகும். இமாம் இப்னுகதீர் (ரஹ்) அவர்கள் இதனைத் தனது அல்-பிதாயா வந்-நிஹாயா என்ற நூலில் பாகம்-1, பக்கம் 346-ல் கூறியுள்ளார்கள்.

இறை நிராகரிப்பாளர்கள், பாவிகள், கொடுமைக்காரர்கள், நாத்திகர்கள், அல்லாஹ்வுடைய ஸிபத்துகளை மறுக்கின்றவர்கள், இஸ்லாத்தையே மறுக்கின்றவர்கள், நெருப்பு வணக்கத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள் போன்ற காஃபிர்கள் பள்ளிவாசல்களில் ஐங்காலமும் தொழுதுவரும் முஸ்லிம்களின் கூட்டங்களை கண்டு பயந்தனர்; திடுக்குற்றனர்; இவர்களோ தொழுவதுமில்லை. ஹஜ் செய்வதுமில்லை. முஸ்லிம்கள் மீது கடுமையான பொறாமைக் கொள்பவர்களாக இருந்தனர்.

இவர்கள், முஸ்லிம்களைப் பள்ளிவாசல் தொடர்பிலிருந்து திசை திருப்புவதைப் பற்றி சிந்தித்தனர். எனவே கப்றுகளின் மீது குப்பாக்களையும் மனாராக்களையும் கட்டி அலங்கரித்தனர். அவை ஒவ்வொன்றினுள்ளும், ஹுஸைன் (ரலி), அவர்களின் சகோதரி ஜைனப் (ரலி) போன்றோர் இருப்பதாக மக்களை நம்ப வைத்தனர். அவற்றின் பக்கம் மக்களைத் திசை திருப்புவதற்காக, அவற்றில் பல விழாக்களை ஏற்படுத்தினர். தங்கள் பக்கம் மக்களைக் கவரச் செய்வதற்காகத் தமக்குத்தாமே ‘பாதிமிகள்’ என்று பெயர் சூட்டிக் கொண்டனர்.

பின்னர் முஸ்லிம்கள், தம்மைச் ஷிர்க்கில் ஆழ்த்திய இந்த பித்அத்துகளைப் பற்றிப் பிடித்தனர். அன்று அம்மக்கள் எதிரிகளிடமிருந்து தமது மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்கள் வாங்க வேண்டியிருந்தது; அவர்களது பொருளாதாரத்தை வளர்க்க வேண்டியிருந்தது. இவ்வாறான பிரயோசனமும் தேவையுமுடைய வழியில் பணத்தைச் செலவு செய்வதற்குப் பதிலாக மேற்கூறப்பட்ட கப்று வணக்கங்களுக்காகச் செலவு செய்தனர்.

முஸ்லிம்கள் தங்களது பணத்தை கப்றுகளின் மீது குப்பாக்கள் கட்டவும், வளைத்துச்சுவர் எழுப்பவும் தரிசனை ஏற்படுத்தவும் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்தப்பணம் இறந்தவர்களுக்கு எந்தப்பயனையும் அளிக்காது. ‘கப்றுகளின் மீது கட்டிடம் கட்டுவதை இஸ்லாம் தடை செய்கின்றது’ என்ற விஷயத்தை அறிந்த நிலையில், இந்தப்பணம் ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்டால் அது உயிருள்ளவர்களுக்கும் மரணித்தவர்களுக்கும் பயனளிக்கும்.

‘எந்த ஒரு சிலையையும் அழிக்காமலும், சிறப்பளித்துக் கொண்டிருக்கும் எந்த ஒரு கப்றையும் (பூமியுடன்) தரை மட்டமாக்காமலும் விட்டுவிடாதே’ என்று அலி (ரலி) அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

‘அதாவது உயர்ந்திருக்கும் எந்த ஒரு கப்றையும் உடைக்காமல் விட்டுவிடாதே!’ என்பது இதன் கருத்தாகும். நபி (ஸல்) அவர்கள் சிலையை எந்தளவு வெறுத்தார்களோ அதே அளவு கட்டப்பட்ட கப்றையும் வெறுத்தார்கள் என்பதை மேற்காட்டிய ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. கப்றை அடையாளம் கண்டு கொள்வதற்காக ஒரு சாணளவு உயர்த்துவதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கின்றது.

இறந்தவர்களுக்காகச் செய்யப்படும் நேர்ச்சைகள் அனைத்தும் பெரிய ஷிர்க்காகும். மேற்கூறப்பட்ட இடங்களில் வேலை செய்கின்றவர்கள், நேர்ச்சை செய்யப்பட்ட பணம், மற்றும் பொருட்களைப் பெற்று, பாவமான கருமங்களிலும் இச்சையைத் தீர்க்கும் வழிகளிலும் செலவு செய்கின்றனர். நேர்ச்சை செய்து அதனைக் கொடுத்தவனின் பாவச் செயல்களுக்குக்கூட இவர்கள் துணையாகின்றனர்.

இந்தப்பணம் ‘ஸதகா’ என்ற பெயரில் ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் உயிருள்ளவர்களும் மரணித்தவர்களும் இதனால் பயனடைந்திருப்பர். இந்தத் தர்மத்தைப் பெற்றுக் கொண்டவன் தனது தேவைகளுக்கு இதனைப் பயன்படுத்துவான்.

அ;ல்லாஹ்வே! நீ, உண்மையை உண்மையாகவே எங்களுக்குக் காட்டி, அதனை பின்பற்றுகின்றவர்களாகவும், அதிலே விருப்பம் கொள்ளக் கூடியவர்களாகவும் எங்களை ஆக்கி வைப்பாயாக! மேலும் தீமையை தீமையாகவே எங்களுக்குக் காட்டி, அதனை விட்டு விலகக் கூடியவர்களாகவும், அதிலே வெறுப்புக் கொள்ளக் கூடியவர்களாகவும் எங்களை ஆக்கி வைப்பாயாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.