நபிகள் இறந்ததற்கப்பால் அவர்களிடம் பிரார்த்திக்கக் கோரலாமா?

பெருமானார் (ஸல்) உலகை விட்டு மறைந்த பின்னர் அவர்களிடம் சென்று அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்து நமக்காகப் பாவமன்னிப்பு வாங்கித்தர வேண்டுவதும்: நபி வாழ்ந்திருக்கையில் ஸஹாபிகள் நபியிடம் பாவமன்னிப்பைத் தமக்காகப் பிரார்த்திக்கும்படி வேண்டியதற்குச் சமமானதாகும் என்று கூறி மேற்படி இறைவசனத்துக்கு தம் மனோ-இச்சைக்கொப்ப விளக்கம் அளித்தனர். இது அனைத்தும் முஸ்லிம் அறிஞர்களின் விளக்கத்துக்கும், ஸஹாபாக்களுடையவும் , தாபியீன்களுடையவும், ஏகமனதான தீர்மானங்களுக்கும் (இஜ்மாஉக்கும்) நேர் முரண் பட்டதாகும்.

ஏனெனில் பெருமானார் (ஸல்) அவர்கள் உலகை விட்டுப் பிரிந்த பிறகு அவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள், தாபியீன்கள் இவர்களில் ஒருவர் கூட நபி (ஸல்) அவர்கள் இறந்ததற்கப்பால் தமக்குப் பிழை பொறுக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றோ, எங்களுக்கு இன்னின்ன தேவைகளுண்டு அவையெல்லாம் நிறைவு பெறவும் அல்லாஹ் அவற்றை பூர்த்தி செய்து தரவும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றோ கேட்டதில்லை. அன்று வாழ்ந்திருந்த பற்பல நூலாசிரியர்கள் மற்றும் அறிஞர்கள், இமாம்கள் யாருமே இப்படியொரு சம்பவத்தை தமது நூலில் இன்று வரையிலும் எழுதியதில்லை. ரொம்ப பிற்காலத்தில் வந்த சிலர்கள் சில கட்டுக்கதைகளையும், பொய்ச் சம்பவங்களையும் இது விஷயத்தில் அங்குமிங்குமாக எழுதி வைத்திருக்கிறார்கள். பெரிய அறிஞர்களிடம் இச்சம்பவங்களுக்கு எந்தச் சான்றுகளுமில்லை. ஏனெனில் காலஞ்சென்ற பிறகு நபிமார்களிடமோ, வலிமார்களிடமோ, நன்மக்கள் என்று அறியப்பட்டிருந்த ஸாலிஹீன்களிடமோ அல்லது மலக்குகளிடமோ கேட்பதும், சமாதிகளில் சென்று கேட்பதும், பெரியோர்களின் சிலைகளை கட்டி வைத்து அவற்றிடம் பிரார்த்திப்பதும், கண் மறைவிலிருக்கும் பெரியோர்களை அழைத்துக் கேட்பதுமெல்லாம் இறைவனுக்கு இணை கற்பிக்கும் வகைகளிலெல்லாம் மிகப் பெரியதாகும். இவை கிறிஸ்தவ – யூத வகுப்பாரில் தோன்றிய (பித்அத்துக் காரர்களாலும்) அனாச்சாரங்களைப் புரிகின்றவர்களாலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அனுமதியளிக்காத செய்கைகளை வணக்க வழிபாடுகளென்று நினைத்துச் செய்கிற இஸ்லாமியர்களாலும் தோற்றுவிக்கப்பட்ட தீய செய்கைகளாகும்.

அல்லாஹ்வும், ரஸூலும் எவற்றைச் செய்ய அனுமதி வழங்கவில்லையோ அவற்றைச் செய்கிறவனை அல்லாஹ் தன் அனுக்கிரஹத்தை விட்டும் துரத்தி விடுகிறான். திருமறையில் அல்லாஹ் கூறினான்: ‘அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் மார்க்கத்தில் உள்ளது என்று அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கக்கூடிய இணை தெய்வங்களும் அவர்களுக்கு இருக்கின்றனவா?” (42:21). மலக்குகள், காலமான நபிமார்கள், கண் முன்னிலையில்லாத தூரத்தொலைவில் மறைந்திருப்பவர்கள் இவர்களிடமெல்லாம் தேவைகளைக் கேட்டல், இவர்களைக் கொண்டு உதவி தேடல், சிபாரிசு வேண்டுதல், இவர்களை நினைப்பதற்காகவோ அல்லது இவர்களின் எண்ணங்களை மனதில் நிலை பெறச் செய்வதற்காகவோ, பரிந்துரை தேடுவதற்காகவோ அல்லது மற்ற ஏதேனும் தேவைகளுக்காக அவர்களின் பிம்பங்களை எழுப்புதல் இதுபோன்ற செய்கைகள் அனைத்தும் அல்லாஹ்வும், அவன் தூதரும் அனுமதி வழங்காத அனாச்சாரங்களாகும். இத்தகைய செய்கைகளை நபிமார்கள் எவருமே மத அனுஷ்டானங்கள் என்று கூறியதில்லை. இறைவனால் இறக்கப்பட்ட எவ்வேதத்திலும் இவற்றைக் குறித்து இவை அனுமதிக்கப்பட்ட செய்கைகளெனச் சொல்லப்படவும் இல்லை. நம் இஸ்லாமிய மார்க்கத்தில் இத்தகைய செய்கைகளை கடமை (வாஜிபு) என்றோ, சுன்னத் என்றோ எந்த இமாமும் கூறியதுமில்லை. ஸஹாபாக்கள், தாபியீன்கள், மேலும் இமாம்களில் மிகப் பெரிய நால்வரும் இதை அனுமதித்ததுமில்லை. மற்றும் குறிப்பிடத்தக்க எவ்வறிஞரும் அனுமதி வழங்கவில்லை. நமது சன்மார்க்கத்தை எவர்கள் வழியாக நாம் விளங்கினோமோ அவர்களில் எவருமே இவற்றை ஆகுமான செய்கை என கூறியதுமில்லை.

அப்படியென்றால் நாம் மேற்கூறிய அனாச்சாரங்களை இஸ்லாமிய செய்கைகள் என்று எப்படிக் கூற முடியும். தாம் கண்ட பொய்க் கனவுகளையும், கட்டுக்கதைகளையும் மட்டுமே இந்தத் தீய செய்கைகளுக்குச் சான்றாக ஆக்கியிருக்கிறார்கள். இவையனைத்தும் ஷைத்தானின் வேலைகள். அவனே இவர்களை வழி கெடுக்கும் நோக்கத்துடன் இவற்றை செய்கிறானென்பதை இவர்கள் உணரவில்லை.

சில காலமானவர்களை அழைப்பதற்காவும், அவர்களிடம் சிபாரிசு வேண்டுவதற்காவும் யாரோ இயற்றிய பாடல்களையும், கவிதைகளையும் வைத்து கவர்ச்சியான இராகங்களில் இறந்தவர்களுடன் உரையாடுகின்றனர். தமது இத்தீய செயலுக்கு உறுதுணையாகப் பாட்டுகளையும் எடுத்துக் கொள்கின்றனர். காலஞ் சென்ற நபிமார்கள், வலிமார்கள் இவர்கள்மீது புகழ்ப் பாக்களை இயற்றி அவற்றின் கடைசியில் ஷபாஅத்தை வேண்டுகிற ஒருபகுதி (மைய்யித்துடன் உரையாடி சம்பாஷனை நடத்தும், மற்றொரு பகுதி கெஞ்சி கேட்கும், இன்னொரு பகுதி) இப்படியாகப் பல காட்சிகளைப் பாடல்களில் அமைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் உரையாடும் இப்பாக்கள் ஒருபோதும் எந்தப் பயனையும் தராது. மத்ஹபுடைய எந்த இமாமும் இதை நல்லது, ஸுன்னத், வாஜிப் என்று சொன்னதில்லை. அறிஞர்களின் எந்த நூல்களிலும் இதைக் குறிப்பிடப்படவுமில்லை. இவற்றைப் பாமரமக்கள் இன்னும் விளங்காமலிருக்கின்றனர்.

ஸுன்னத்தோ, வாஜிபோ இல்லாத ஒரு செயலை ஸுன்னத் அல்லது வாஜிப் என்ற நம்பிக்கையில் எவர் புரிந்தாலும் அவரை வழிகெட்டவன் (முட்டாள்) என்று கூற வேண்டும். இது அறிஞர்களின் தீர்ப்பாகும். ஏனெனில் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிற வணக்க வழிபாடுகள் அனைத்தும் வாஜிப் அல்லது முஸ்தஹப்பு என்ற சட்டங்களுக்கு உட்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். இவ்விரு சட்டங்களுக்கும் உட்படாத செய்கைகளை எவர் காட்டினாலும் அவர் வணக்க முறைகளில் தவறியவர் என்றே கூற வேண்டும்.

இம்மாதிரியான வேண்டாச் செயல்களைப் பற்றி அவற்றில் பற்பல பலாபலன்களைக் கண்கூடாகக் கண்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். நிறைய நன்மைகளைப் பெற்றதாகக் கூறி தம் விருப்பத்திற்கும், ஆசைக்கும் இசைந்தவாறு பொய்ச் சான்றுகளைக் காட்டுகின்றனர். இவற்றையெல்லாம் இவர்களுக்கு காட்டிக் கொடுத்தவர்கள் யார்? இவர்களின் மனோ-இச்சைகளா அல்லது குர்ஆனும், ஹதீஸுமா? இவற்றை இஸ்லாம் மார்க்கத்திலுள்ள செயல்களாக எப்படிக் கூற முடியும்? நபி (ஸல்) அவர்களும், முன்னர் வந்த நபிமார்களும், இவர்களுள் எவருமே மனிதன், மலக்கு, காலஞ்சென்ற நபி இவர்களைக் கொண்டெல்லாம் ஷபாஅத்தையும், வஸீலாவையும் வேண்டலாமென்றோ அவ்லியாக்கள், ஸாலிஹீன்கள் மேலும் கண்களை விட்டும் மறைந்திருக்கும் நாதாக்கள் இவர்களை அழைத்து தம் தேவைகளைக் கேட்கலாமென்றோ அனுமதி வழங்கவில்லை. *இப்படியிருக்க அல்லாஹ்வின் மலக்கே நீங்கள் அல்லாஹ்விடம் எனக்காக ஷபாஅத்தை வேண்டுங்கள். எங்கள் குற்றங்களை பொறுத்துத்தர அவனிடம் பிரார்த்தியுங்கள். என்னை நேரான வழியில் நடத்தவும், எனக்கருள் புரியவும், ஆரோக்கியத்தைத் தரவும் இறைவனை இறைஞ்சுங்கள் என்று கேட்பது முற்றிலும் கூடாத செய்கையாகும்.

அன்றி ‘அல்லாஹ்வின் நபியே! தூதரே! எனக்கு துஆச் செய்யுங்கள். எனக்காக பிழை பொறுக்கத் தேடுங்கள். எனக்கு உதவி செய்யவும், ஆரோக்கியத்தை அருளவும் அல்லாஹ்வைக் கேளுங்கள் என முன்னோர்கள் பிரார்த்தித்தது கிடையாது. என் பாவங்களையும், உணவு பற்றாக்குரை, எதிரிகளின் அட்டகாசங்கள், எனக்குத் தீமை செய்த இன்னாரைப் பற்றியெல்லாம் உங்களிடம் முறையிட்டு வேண்டுகிறேன். எனக்குதவுங்கள் என்றெல்லாம் முன்னோர்கள் எவரும் நபிமார்களிடமோ, வலிமார்களிடமோ, மலக்குகளிடமோ கேட்கவில்லை. ‘நபியே! வலியே! மலக்கே! என்று அழைத்து, நான் உங்கள் பக்கத்தில் விருந்தாளியாக வந்து நிற்கிறேன். உங்கள் அண்டை வீட்டாரும் நானே. தாங்களை யார் வேண்டி உதவி கோரினாலும், உதவி செய்யும் தன்மை நிறைந்த தாங்கள் ஏழையான எனக்குப் பாதுகாப்பைத் தேடுங்கள். பாதுகாப்பைத் தேடப்படுகிறவர்களில் தங்களை விடச் சிறந்தவர்கள் எவரும் இல்லை. எனக்குப் பாதுகாவலைத் தாருங்கள் என்று முன்னோர்கள் எவரும் கேட்டதில்லை. எழுதப்பட்ட காகிதங்களைச் சமாதிகளில் தொங்க விட்டும், குறிப்புத் தாள்களில் இன்னார் பாதுகாவல் கேட்கிறார் என்று வரைந்து விட்டுச் செல்லுதலும் முன்னோர்களிடம் இருக்கவில்லை. **இவற்றுள் சில கிறிஸ்தவக் கோவில்களிலும் நடக்கிறது. யூதர்களிலும் இப்பழக்கமுண்டு.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவற்றைப் போதிக்கவில்லையென்பது முஸ்லிம்களின் ஏகமனதான தீர்ப்பாகும். முன்னர் தோன்றிய நபிமார்களும் இவற்றை தம் சமுதாயத்திற்கு விதித்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயமாகும். இது விஷயத்தில் வேதத்தையுடைவர்களிடத்து தங்கள் நபிமார்களிடமிருந்து கிடைத்த எந்த சான்றுகளையும் காண முடியாது. முஸ்லிம்களிடத்திலும் இது விஷயத்தில் நபியைப் பின்பற்றி அறிவிக்கப்பட்ட சான்றுகளில்லை. மேற்கூறப்பட்ட தீவினைகளை நபித்தோழர்களும், தாபியீன்களும் செய்ததில்லை. தீனிலும், துன்யாவிலும் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் காலஞ் சென்றதன் பின் பல வகையான சோதனைகள் ஸஹாபாக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. வறட்சியால் சோதிக்கப்பட்டார்கள். உனவு பற்றாக்குறையாலும், எதிரிகள் பயத்தாலும் சோதிக்கப்பட்டனர். இந்நிலைகளிலெல்லாம் பெருமானாரின் கப்றிலே வந்து தம் சோதனைகளைப் பற்றி முறையிடவில்லை. ‘நாயகமவர்களே! தாங்கள் சமூகத்துக்கு ஏற்பட்ட சோதனைகள் விலக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவர்கள் உதவியைப் பெறவும், அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கவும் நீங்கள் அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று அவர்கள் கூறவில்லை. முஸ்லிம்களின் இமாம்களும், குறிப்பாக நான்கு இமாம்கள் இவற்றை நல்லவையென மதிக்கவில்லை.

இமாம்கள் ஹஜ்ஜின் விலக்கல்களைப் பற்றி பல நூல்கள் எழுதி இருக்கின்றனர். ஹஜ்ஜின்போது நபியின் கப்றில் சென்று தம் சமூகத்தாரின் தேவைகளை முறையிடுதல் ஸுன்னத் என்றோ, நபியிடம் வஸீலா தேடலாம், சிபாரிசு தேடலாம் அவர்கள் உம்மத்(சமூகத்)துக்கு ஏற்பட்ட ஆத்மீக-இலௌகீக வியாதிகள் அடங்களையும், மேலும் வறுமை, உணவுபஞ்சம் வறட்சி, எதிரிகள் பயம், அக்கிரமக்காரர்களின் தீங்குகள், மக்கள் அதிகமாகப் புரிகின்ற குற்றங்கள் இவற்றைப் பற்றியோ அல்லது ஒரு தேவையைப் பற்றியோ நபியிடம் முறையிட்டுப் பிரார்த்திகலாமென்று எந்த இமாமும் தம் கிரந்தங்களில் எழுதி வைக்கவில்லை. ஏனெனில் இவை பித்அத் (இஸ்லாமிய மார்க்கத்திலில்லாத நூதன வழிபாடு)களாகும். ஸுன்னத், வாஜிப் அல்லாத வழிபாடுகளை யார் புரிந்தாலும் அவற்றிற்கு சட்ட அறிஞர்கள் ‘அல்பித்அத்துஸ் ஸய்யிஆ’ என சொல்கிறார்கள். பித்அத்துக்கு நபியவர்கள் வழிகேடு என்று தீர்ப்பி வழங்கியிருக்கிறார்கள்.

சில புதிய நூதன வழிபாடுகளைக் குறித்து அவை விரும்பத்தகுந்த அனுஷ்டானங்கள் (அல்பித்அத்துல் ஹஸனா, மார்க்கத்தில் விரும்பப்படும் புதிய வழிபாடுகள்) என்று சிலர் விளக்கம் கொடுக்கிறார்கள். அல்பித்அத்துல் ஹஸனா என்று ஒரு செயலை கூறவேண்டுமானால் அச் செய்கைகளைப் பற்றி அது முஸ்தஹப் என்று காட்டும் ஆதாரங்கள் ஷரீஅத்தில் காணப்பட வேண்டும். எந்த செய்கைக்கு ஸுன்னத், வாஜிப் என்ற விதிகள் நிரூபிக்கப்படவில்லையோ, அவை ஒருபோதும் அல்லாஹ்வைச் சமீபிக்கிற நல்ல வழிபாடாகக் கூறப்பட மாட்டாது. நபியவர்களின் ஏவல்களுக்குற்பட்ட நற்கருமங்களல்லாத வேறு ஒரு செய்கையைப் புரிந்து விட்டு அது நல்ல அனுஷ்டானம் என எவன் கருதுகிறானோ அவனை வழிகெட்ட மூடன், ஷைத்தானின் தோழன், ஷைத்தானின் பாதையை விரும்புகிறவன் என்று சொல்ல வேண்டும். இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு கோடிட்டுக் காட்டினார்கள். பிறகு தம் வல, இடப்புறங்களிலும் பற்பல கோடுகளைக் கிழித்து விட்டுக் கூறினார்கள்: இதோ இந்தக் கோடுதான் அல்லாஹ்வின் பக்கம் சேர்த்து வைக்கின்ற நேரான வழியாகும். இட, வல பக்கங்களில் வரையப்பட்ட கோடுகளைப் பார்த்து இவையனைத்துமே ஷைத்தானின் பாதைகள் என்றும், இப்பாதைகள் ஒவ்வொன்றிலும் ஷைத்தான் நின்று மக்களை வழிதிருப்பிக் கொண்டிருக்கிறான். அவன் மக்களை ஆட்கொண்டு விட்டான் என்று கூறிவிட்டு திருமறையில் வரும் இந்த ஆயத்தை ஓதினார்கள். “நிச்சயமாக இதுதான் என்னுடைய நேரான வழியாகும். இதனையே நீங்கள் பின்பற்றுங்கள். மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அல்லாஹ்வுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்து விடும்…” (6:153)

மலக்குகளாகட்டும், நபிமார்கள், வலிமார்கள், நன்மக்கள் எவராயினும் சரியே அவர்கள் காலமான பிறகு அவர்களின் சமாதியில் சென்று சிபாரிசைத் தேடுவதும் வஸீலா பாவமன்னிப்பு மற்றும் இதர தேட்டங்களையெல்லாம் வேண்டுவதும், கப்றுகளில் சென்று மய்யித்திடம் பிரார்த்திப்பதும் மற்றும் இதைப் போன்ற அனைத்துமே மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத மாபெரும் கொடிய பாவமான ஷிர்க்கும் தப்பான வழிபாடுகளுமாகும். இவ்விஷயத்தில் மேலே தரப்பட்டுள்ள விளக்கத்தை ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டும். ஏனெனில் இவை இஸ்லாத்தின் அடிப்படை விளக்கமாகும். அல்லாஹ், ரஸூலை நம்பிய ஒவ்வொரு முஸ்லிமும் மேற்கூறப்பட்ட இச்சட்டங்களை விளங்கியிருத்தல் வேண்டும். இறந்தவர்களைக் கொண்டு ஷபாஅத் தேடும் விஷயத்திலும் வஸீலாவை வேண்டும் விஷயத்திலும் ‘கூடாது’ என்பதுதான் சட்டம் என்று உண்மையான முஸ்லிம் ஏற்க வேண்டும்***.

முஸ்லிம்கள் அனைவருக்கும் அப்பட்டமாகத் தெரிகிற நபியவர்களின் வழிமுறைகளுக்கும் (ஸுன்னத் துக்கும்) இஸ்லாத்தில் முந்திக் கொண்டு விசுவாசம் கொண்ட அன்ஸாரிகள், முஹாஜிரீன்கள் அவர்களை மெய்யாகப் பின்பற்றியவர்கள் அனைவருடைய அபிப்பிராயங்களுக்கும் நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாப் பெருமக்கள் இவர்களின் ஏகமனதான முடிவுக்கும் (இஜ்மாவுக்கும்) மாறாக நடக்கிறவர்களை ஒருபோதும் பின்பற்ற முடியாது.

இதுவரையிலும் கூறிய விளக்கங்களிலிருந்து இறந்தவர்களிடம் சென்று பாவமன்னிப்புக்காகப் பிரார்த்திப்பதையும், அவர்களிடம் வஸீலா தேடுவதையும், சிபாரிசு வேண்டுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். நபியவர்கள் எதைச் செய்யக்கூடாதென தடுத்துள்ளார்களோ அது வணக்க வழிபாடாகவும் ஆகமுடியாது. அது ஸுன்னத், வாஜிப் பொன்ற சட்டங்களுக்குள் அடங்கிய சட்டமும் அல்ல. முஹாஜிரீன்கள், அன்சாரிகளின் போக்குமல்ல. இவர்களைப் பின்பற்றியவர்களின் போக்குமல்ல. மாறாக இது இஜ்மாஉக்கு மாற்றமான செய்கையாகும்.

இமாம் முஸ்லிமின் ஸஹீஹான ஹதீஸில் வருகிறது: ‘மரணத்திற்கு ஐந்து தினங்களுக்கு முன்னர் நபியவர்கள் கூறினார்கள். உங்களுக்கு முன்னுள்ள சமூகத்தினர் கப்றுகளை மசூதிகளாக்கியிருந்தார்கள். நீங்கள் கப்றுகளை மசூதிகளாக்காதீர்கள். அதை விட்டும் உங்களை தடுக்கிறேன்’.**** ஆயிஷா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸில் மரணத்திற்கு முன்னர் நபியவர்கள் கூறினார்கள்: ‘யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! இவர்கள் தங்களின் நபிமார்களின் கப்றுகளை பள்ளிகளாக்கினர். மேலும் றாவி கூறுகிறார்: நபியவர்கள் இவர்களின் இச்செய்கையைப் பற்றி அச்சுறுத்தினார்கள். இதை நபிகள் (ஸல்) அவர்கள் சொல்லவில்லையென்று சொன்னால் நபிகளின் கப்றும் உயர்த்தப்பட்டிருக்கும். ஆனால் நபிகள் தம் கப்றை பள்ளியாக்குவதை வெறுத்திருந்தார்கள்.

*திருமறை, ஹதீஸ், மத்ஹபுடைய இமாம்களின் சான்றுகள் ஆகியவற்றை மூலாதாரமாக வைத்துத்தான் இவர்கள் புரிகிறார்களா இல்லவே இல்லை. மக்களின் ஏகமனதான தீர்மானங்களை அடிப்படையாக்கி இவற்றை அவர்கள் புரியவில்லை. மாறாகத் தம் மந்தின் விருப்பத்திற்கொப்பச் செயல்படுகிறார்கள். இச்செய்கைகளை இஸ்லாமிய சமயம் போதிக்கின்ற வாஜிபான அல்லது ஸுன்னத்தான அமல்கள் என்று யாரும் கூறவில்லை. முஸ்லிம்களால் அறியப்பட்ட சட்டங்கள் எத்தனையோ இருக்கின்றன. முஸ்லிம் சமுதாயத்தின் அனைத்து இமாம்களால் வகுத்துக் காட்டப்பட்ட இலட்சோப இலட்சம் சட்டங்களில் இறந்தோரைக் கொண்டு உதவி தேடுவதைப் பற்றியும், இறந்தோரைக் கொண்டு ஷபாஅத் வேண்டுவது பற்றியும் அது வாஜிப் அல்லது ஸுன்னத் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

**ஒரு காகிதத்தில் அல்லது தகட்டில் அரபியில் ஏதோதோ எழுதி சுருட்டி தாயத்து கட்டுதல், இவையெல்லாம் இன்று வரையிலும் மதத்தின் பெயரால் செய்யப்பட்டு வருகின்ற மௌட்டீகச் செயல்களாகும். இத்தீவினைகளை நபி (ஸல்) அவர்களோ அல்லது இதர நபிமார்களோ தம் சமுதாய மக்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளார்களா? இவற்றைச் செய்கிறார்களென்றால் அவர்களில் அனுப்பப்பட்ட நபிமார்கள் அல்லது அந்த நபிமார்களின் தோழர்கள் இவற்றை எடுத்துக் காட்டியதனால் தான் செய்கிறார்கள் என்று நிரூபிக்க முடியுமா? இல்லவே இல்லை. மாறாக அந்நிய ஜாதிகளைப் பின்பற்றி நம் முஸ்லிம்களும் இத்தகைய தீவினைகளில் ஈடுபடுகிறார்கள்.

***மார்க்க விஷயத்தில் அபிப்பிராயங்களை கூறுகின்ற இஸ்லாமியர்களின் இமாம்களான (முஜ்தஹித்கள்) எவருமே ஆதரவு கொடுக்காத எந்த சட்டத்தையும் உண்மையான முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள். குறிப்பிட்ட ஒரு அறிஞர் இது விஷயமாக வேறு அபிப்பிராயங்களைக் கூறுகிறாரென்றால் அந்த அறிஞரை நாம் பின்பற்றுவது அவசியமில்லை. இவருடைய இந்த அபிப்பிராயத்தை நாம் எடுக்க வேண்டுமென்பது தேவையில்லை. நபியவர்களுடைய ஹதீஸுக்கும் மாபெரிய நான்கு மத்ஹபுடைய இமாம்களின் ஏகோபித்த அபிப்பிராயங்களுக்கும், அந்த அறிஞர் விபரீதமாக நடந்துக் கொண்டார் என்பது கருத்தாகும். எனவே நபி (ஸல்) அவர்களுக்கு விபரீதமான இந்தக் கருத்தில் ஒருபோதும் மனிதனைப் பின்பற்றத் தேவையில்லை. அறிஞர் என்று கூறக்கூடிய எவரும் இது விஷயத்தில் நபிகள் கூறியதற்கு மாறு செய்யவில்லை.

ஆனால் பிற்காலத்தில் வந்த சில மக்கள் தம்மை அறிஞர்கள் என்று கூறி இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் போக்குக்கு விபரீதமாக நடந்து கொண்டார்கள். அப்படியென்றால் இவர்களின் அபிப்பிராயத்தை முஸ்லிம்கள் பின்பற்ற முடியுமா? பெருமானார் (ஸல்) அவர்கள் காலம் சென்ற பின் அவர்களை அழைத்து மேலும் வலிமார்களையும், ஸாலிஹீன்களையும் பிரார்த்தித்து வஸீலா தேடலாமென்றும், அவர்களிடம் ஷபாஅத்தை வேண்டலாமென்றும் வாதிடுபவர்களுக்கு ஷரீஅத்தில் சான்றுகள் இருக்கின்றனவா? இல்லவேயில்லை. இப்படிப்பட்டவர்களையும், நபியவர்களின் போக்குக்கு மாறு செய்பவர்களையும் இமாமாக (முஜ்தஹிதாக) என்ன முடியுமா? ஒருபோதும் இவரை அறிஞர் என்று கூறுவதற்கில்லை. தான்தோன்றித்தனமாக யாரோ கூறிச் சென்ற மூடத்தனத்தை கண்மூடித்தனமாக ஆதரவு அளிப்பவனுக்கு அல்லாஹ்விடம் நிறைய தண்டனைகளுண்டு. ஏனென்றால் அறிவும், தக்க ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வின் விஷயத்தில் போராடுகிறவனுக்கு இவன் ஒப்பாவான்.

****இதற்கு பித்அத் என்றே கூறவேண்டும். முஸ்லிம்களின் இமாம்கள் யாரும் பித்அத்திற்கு துணைநிற்க மாட்டார்கள். நபிமார்கள், ஸாலிஹீன்கள் இவர்களின் சமாதிகளைக் கட்டிஉயர்த்தி அதில் விளக்கேற்றி அலங்கரித்து இறைவனைத் தொழும் பள்ளிவாசல்களைப் போன்று வணக்கஸ்தலமாக்குவதை வன்மையாக நபிகள் கண்டித்து (அது ஹறாம்) கூடாத தீயசெயல் எனத் தடுத்துள்ளார்கள். கப்றுகளை அழகு படுத்துவதெல்லாம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. பிற மதத்தவர்களைப் போல பெருமானாரின் சமூகமும் கப்று விஷயத்தில் வழிகேட்டிலாகி விடக்கூடாது என்பதனால் மரணத்தின் தறுவாயில் கூட நபிகள் (ஸல்) அவர்கள் இதைப் பயங்கரமாக எச்சரித்து உள்ளார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்… 

This entry was posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள். Bookmark the permalink.