நம்பிக்கையுடன் நன்மை செய்வோருக்கான நாளைய கூலி!

52:17. நிச்சயமாக, பயபக்தியுடைவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.

52:18. அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாக இருப்பார்கள் – அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.

52:19. (அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.”

52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களுடைய (ஹூருல் ஈன்கள்-என்னும் பெண்களை) மணமுடித்து வைப்போம்.

52:21. எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும் , நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் – ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.

52:22. இன்னும் அவர்கள் விரும்பும் கனி வகைகளையும், இறைச்சியையும் நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்.

52:23. (அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர்; ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதுமில்லை.

52:24. அவர்களுக்கு (ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).

52:25. அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.

52:26. “இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனைப் பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.

52:27. ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மைக் காப்பாற்றினான்.

52:28. நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்; நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன்; பெருங்கிருபையுடையவன்.

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.