ஷிர்க் தோன்றக்கூடிய இடங்களில் சில….

இஸ்லாமிய உலகில் பரவியிருக்கும் ஷிர்க்குகள் வெளியாகக்கூடிய இடங்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களில் மாபெரும் துன்பமாகும். முஸ்லிம்களிடத்தில் தௌஹீதை முன்வைக்கின்றவர்கள் சந்திக்கும் சோதனைகள் கஷ்டங்கள் முதலானவைகளும். இதல்லாத இன்னும் பல நோவினைகளும் இதன் காரணமாகத்தான். முஸ்லிம்களிடத்தில் நம்பிக்கையிலும் நடத்தையிலும் ஷிர்க் வெளியாகின்றது.

அதிகமான முஸ்லிம் நாடுகளில் உள்ள ஷிர்க் நடைபெறக்கூடிய இடங்கள் இதற்குச் சான்றாய் அமைந்துள்ளதைக் காணலாம். இதனை அதிகமான முஸ்லிம்கள் இஸ்லாம் என்றே கருதுகிறார்கள். இதனால்தான் ‘இஸ்லாம் ஷிர்க்கை ஒழிப்பதற்காகவே வந்துள்ளது’ என்பதை அறிந்திருந்தும், அந்த ஷிர்க்குகளை அவர்கள் மறுக்கிறார்களில்லை. அவர்கள் இஸ்லாம் என்று கருதிக் கொண்டிருப்பவற்றில் சில பின்வருமாறு:-

அல்லாஹ் அல்லாதவர்களிடம் துஆக் கேட்டல்:- மௌலிது வைபவங்களில் படிக்கக்கூடிய கவிகள், பாட்டுக்கள் போன்றவற்றில் இது அமைந்துள்ளதைக் காணலாம். மக்கள் படிக்கின்ற பாடல்களைப் பின்வருமாறு செவிதாழ்த்தியுள்ளேன்.

‘ரஸூல் மார்களுக்குத் தலைவரே! என்னைத் தாங்கிக் கொள்பவரே!

நீங்கள் தான் அல்லாஹ்வுடைய வாசலும் நான் நம்பிக்கை வைக்கத் தகுதியுள்ளவரும் ஆவீர்கள்.

ரஸூலுல்லாஹ்வே! இம்மையிலும் மறுமையிலும் என்னைக் கை தாங்குங்கள்.

சமூகமளிப்பவர்களில் தலைவரே! எனது துன்பத்தை உங்களைத் தவிர வேறெவரும் மாற்றமாட்டார்.

இவ்வாறான ஒன்றை (நபியவர்களால் தனது மௌத்துக்குப் பின்னால் செவிதாழ்த்த முடியாது, அவ்வாறு) நபியவர்கள் செவிதாழ்த்தினாலும் இதனைவிட்டு நீங்கியே இருப்பார்கள். ஏனென்றால் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவரும் கஷ்டத்தை, இலகுவானதாக மாற்ற முடியாது.

இதுபோலவே பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் புத்தகங்களிலும் இப்படியான பாடல்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். அவற்றிலே (மௌத்துக்குப்பின் மறுமை ஏற்படுவதற்கிடையில்) எந்தவித உதவியும் செய்யச் சக்தியற்ற ரஸூல்மார்கள், நபிமார்கள், அவுலியாக்கள், ஸாலிஹீன்கள் போன்றோரிடம் உதவி கேட்பதாகவும் அமைந்துள்ளது.

பள்ளிவாசல்களில் அவுலியாக்கள் நல்லடியார்கள் ஆகியோர்களை அடக்கம் செய்தல்:- முஸ்லிம்கள் வாழுகின்ற அதிகமான பகுதிகளிலுள்ள சில பள்ளிவாசல்களினுள் கப்றுகள் இருப்பதைக் காணலாம். அவற்றின் மீது கட்டிடங்கள் கட்டி, குப்பாக்கள் (கோபுரங்கள்) கட்டப்பட்டுள்ளன. அவற்றில் அடக்கம் செய்யப்பட்டிருப்போரிடம், சிலர் தமது தேவைகளைக் கேட்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் இதனைப் பின்வருமாறு கூறித் தடைசெய்துள்ளார்கள்.

‘அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் சபிப்பானாக! அவர்கள் தமது நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக எடுத்துக் கொண்டனர்’. ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

பள்ளிவாசல்களினுள் நபிமார்களை அடக்கஞ்செய்வதையே இஸ்லாம் அனுமதிக்கவில்லையென்றால், மஷாயிகுகள், உலமாக்கள் போன்றோர்களை அடக்கஞ்செய்வது எவ்வாறு அனுமதிக்கப்படும்? அல்லாஹ்விடம் கேட்கவேண்டியதை, அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் கேட்பது ஷிர்க் என்பதையும், மரணித்தவர்களைக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்பதை இஸ்லாம் தடை செய்கின்றது என்பதையும் மக்கள் நன்கறிந்துகொண்டே அவுலியாக்கள், ஸாலிஹீன்கள் போன்றோரைப் பள்ளிவாசல்களினுள் அடக்கம் செய்கின்றனர்,

அவுலியாக்களுக்காக நேர்ச்சை செய்தல்:- சில மனிதர்கள் குர்பானிக்குரிய ஒரு மிருகத்தையோ அல்லது பணத்தையோ, அதல்லாத வேறு பொருட்களையோ தனக்கு விருப்பமான ஒரு குறிப்பிட்ட ‘வலி’ (அல்லாஹ்வுடைய நேசனு)க்காக நேர்ச்சை செய்கின்றனர். இந்த நேர்ச்சை ஷிர்க்காகும். இதனை நிறைவேற்றாமலிருப்பது கடமையாகும். ஏனென்றால் நேர்ச்சை ஓர் ‘இபாதத்’. இது அல்லாஹ் ஒருவனுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும். இதுபற்றிப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

“(மூமின்களாகிய) அவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளை நிறைவேற்றி வைக்கின்றனர். நீண்ட வேதனையுடைய நாளைக்கும் பயப்படுகின்றனர்” (76:7)

அறுக்கின்றபோது அல்லாஹ்வுக்காக என்று ‘நிய்யத்’ வைத்தாலும் இந்தச்செயல்பாடு இணைவைப்பவர்களின் செயல்பாட்டைத் தழுவியதாகும். அவர்கள் தங்களுடைய நேர்ச்சைகளைத் தங்களது சிலைகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடங்களில் வைத்தே நிறைவேற்றுவார்கள். இதற்கொப்பாகவே முஸ்லிம்கள், தங்களது அவுலியாக்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடங்களில் நிறைவேற்றுவார்கள். இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

‘அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப் பலியிடுகின்றவனை அல்லாஹ் சபிக்கிறான்’ ஆதாரம்: முஸ்லிம்.

முஹ்யித்தீன் அப்துல்காதிர் – அல்ஜீலானிய்யீ, ரிபாஈ, பதவி (ரஹ்-ஹிம்) ஹுஸைன் (ரலி) போன்றோரின் கப்றுகளை ‘தவாப்’ செய்தல்:- இவர்களின் கப்றுகளை மக்கள் ‘தவாப்’ (வலம் வருதல்) செய்கின்றனர். தவாப் என்பது ஓர் ‘இபாதத்’தாகும். அல்லாஹ்வுடைய கட்டளைக்கமைய கஃபத்துல்லாஹ்வைச் சூழ மட்டுமே தவாப் செய்ய வேண்டும். வேறெந்த ஒன்றையும் ‘தவாப்’ செய்யக்கூடாது. குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

“அவர்கள் புராதன ஆலயத்தை (கஃபத்துல்லாவை)த் ‘தவாப்’ செய்யவும்” (22:29)

கப்றுகளை நோக்கித் தொழுவது அனுமதிக்கப்பட்டதல்ல:- இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

‘கப்றின் மீது அமரவோ, அதனை நோக்கித் தொழவோ வேண்டாம்’ ஆதாரம்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்களுடைய பின்வரும் சொல்லுக்கமைவாக ‘பரக்கத்’தை நாடிக் கப்றடிகளுக்கு யாத்திரை மேற்கொள்வதோ தடை செய்யப்பட்டுள்ளது.

‘மூன்று பள்ளிவாசல்களுக்கன்றி (வேறெந்த இடத்திற்கும் நேர்ச்சை செய்து) யாத்திரை மேற்கொள்ளக் கூடாது. ஒன்று: மஸ்ஜிதுல் ஹறாம் (கஃபத்துல்லாஹ்). இரண்டு: எனது இந்தப் பள்ளிவாசல் (மஸ்ஜிதுந்நபவி). மூன்று: மஸ்ஜிதுல் அக்ஸா என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

நாம் மதினா செல்ல விரும்பினால், (நபியவர்கள் கட்டிய பள்ளிவாசல்) மஸ்ஜிதுந்நபவியைத் தரிசிப்பதற்காகவும், (அதன் அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ள) நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்வதற்காகவும் செல்கிறோம் என்று சொல்லுவது சரியான சொல்லாகும்.

குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரணாக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களைக் கொண்டு தீர்ப்பு வழங்குவது சரியானதென்று நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதிருப்பது, குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரண்பட்டவற்றைக் கொண்டு தீர்ப்பளிப்பது போன்றாகும்.

இதற்கு உதாரணம் சில மஷாயிகுகள் வெளியாக்கும் மார்க்கத்தீர்ப்புக் (பத்வாக்)கள் போன்றாகும். இவை, இஸ்லாத்தின் மூலகருத்துக்களுக்கு முரண்படுகின்றன. இது, எதிர்த்துப் போராடவேண்டுமென அல்லாஹ் பிரகடனப்படுத்திய பாவச்செயலான வட்டியை ஆகுமென்று கூறுவது போன்றாகும்.

குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரண்படுகின்றவாறு கட்டளை பிறப்பிக்கின்ற, அதிகாரிகள், அறிஞர்கள், உலமாக்கள், மஷாயிகுகள் போன்றோருக்கு வழிபடுதல்:- நபி (ஸல்) அவர்களுடைய சொல்லுக்கமைவாக, இது வழிபாட்டில் ஷிர்க்காகும்.

‘படைத்தவனுக்கு மாறுசெய்யும் வகையில் படைக்கப்பட்டவனுக்கு வழிபடக்கூடாது’ ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

இதுபற்றி அல்லாஹ்வும் பின்வருமாறு கூறுகின்றான். “அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹை (ஈஸாவை)யும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும் ஒரே ஆண்டவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே, அவர்கள் (யாவரும்) ஏவப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ்வையன்றி வேறெந்த நாயனுமில்லை. அவர்கள் இணைவைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன்” (9:31)

இவ்வசனத்துக்கு ஹுதைபா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள். ‘யூதர்களிலுள்ள அறிஞர்கள் ஹலாலாக்கியதையும், அவர்கள் ஹறாமாக்கியதையும் சரியென ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு வழிபடுவது கொண்டு ‘இபாதத்’ செய்வதே மேற்படி வசனத்தின் கருத்தாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.