இதுவரை நாம் தினமும் நிறைவேற்றிட வேண்டிய தொழுகைகளைப் பார்த்தோம். இப்போது வாரம் ஒருமுறை நிறைவேற்ற வேண்டிய வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகையைப் பார்ப்போம்.
ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றி வரும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்தத் தொழுகையையும் கண்டிப்பாக நிறைவேற்றிட வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இதைத் தவறவிடக் கூடாது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று இந்தத் தொழுகை நடைபெறும். இது பின்வரும் வகைகளில் முக்கியமானதாகும்.
1. இந்தத் தொழுகை, முஸ்லிம்கள் கூட்டான முறையில் தங்களுடைய பக்தி உணர்வை வெளிப்படுத்துவதற்காக இறைவனால் பணிக்கப்பட்டுள்ளது.
2. அது, சென்ற வாரத்து ஆன்மீகக் கணக்குகளை மீள்பார்வை செய்து, வருகின்ற வாரத்திற்கு ஆயத்தம் செய்வதற்காகக் குறிப்பிடப்படுகின்ற நாளாகும்.
3. ஒழுக்கம், ஆன்மீகம் இவற்றின் அடிப்படையில் முஸ்லிம்கள் தங்களுடைய பிணைப்புகளையும், ஒற்றுமையையும் உறுதிப்படுத்தி புத்துணர்வு ஊட்டிக் கொள்வதற்கான அழகிய ஏற்பாடாகும்.
4. எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுடைய அழைப்பிற்கு முஸ்லிம்கள் எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
வெள்ளிக்கிழமைத் தொழுகையின் முக்கிய அம்சங்கள்:
1. ஜும்ஆத் தொழுகை, லுஹர் தொழுகைக்கான நேரத்தில் நிறைவேற்றப்படுகின்றது. இதனை நிறைவேற்றியவர் வெள்ளிக்கிழமை லுஹர் தொழுகையை நிறைவேற்ற வேண்டியதில்லை.
2. இதனை கூட்டாகவே நிறைவேற்ற வேண்டும். இதனைத் தனியாக எவரும் தொழ முடியாது.
3. இந்தத் தொழுகையை (ஜும்ஆத் தொழுகையை)த் தவற விட்டால் ஈடு செய்ய முடியாது. தவற விட்டவர் லுஹர் தொழுகையைத் தொழ வேண்டும்.
4. வெள்ளிக்கிழமையன்று முஸ்லிம்கள் ஏனைய நாட்களைப் போலவே தங்களது கடமைகளைச் செய்யலாம். இதற்குத் தடையேதும் கிடையாது. ஆனால் அவர்கள் ஜும்ஆத் தொழுகைக்கு குறித்த நேரத்தில் வந்து விட வேண்டும். தொழுகை முடிந்தவுடன் மீண்டும் தங்களுடைய வழக்கமான பணிகளில் ஈடுபடலாம்.
5. வெள்ளிக்கிழமைத் தொழுகையை பள்ளிவாசல் இருந்தால் அங்கேயே நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் கூடுவதற்கு வசதியான எந்த இடத்திலும் தொழலாம். (உதாரணம்: வீடு, மைதானம், பூங்கா)
6. தொழுகை நேரம் வந்தவுடன் அதற்கான (அதான்) அழைப்பு விடுக்கப்படுகின்றது. பிறகு நான்கு (4) ரக்அத் சுன்னத் தொழுகை நிறைவேற்றப்படுகின்றது. சுன்னத் தொழுகையை தனித்தனியாக நிறைவேற்ற வேண்டும். இது முடிந்தவுடன் இமாம் கூட்டத்தினரை நோக்கி நின்று ஒரு சொற்பொழிவாற்றுவார். இது (குத்பா) இத்தொழுகையின் முக்கியமான பகுதியாகும்.
இமாம் குத்பா ஓதிக் கொண்டிருக்கும்போது யாரும் பேச கூடாது. அனைவரும் அமைதியாக அமர்ந்து சொற்பொழிவைக் கடைசிவரை கவனமாக கேட்க வேண்டும்.
7. ‘குத்பா’ என்ற இந்த சொற்பொழிவு இரண்டு பாகங்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் இறைவனைப் புகழ்ந்து, முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவனின் ஆசி கிடைக்க வேண்டும் என்ற இறைஞ்சுதலோடு தொடங்குகின்றது.
முதல் பாகத்தில், அறிவுரைகளும் எச்சரிக்கைகளும் வழங்குவதன் பொருட்டு, குர்ஆனிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியை எடுத்து ஓதி, அதற்கான விளக்கவுரை கூறப்படுகின்றது. இந்த முதற்பாகம் முடிந்தவுடன் இமாம் சற்று நேரம் அமர்ந்துவிட்டு மீண்டும் எழுந்து இரண்டாவது பாகத்தை தொடங்குவார். சொற்பொழிவின் இருபாகங்களிலும் முஸ்லிம்களின் பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசலாம். இரண்டாவது பாகத்தில் இமாம் முஸ்லிம்களின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்கிறார்.
8. இகாமத் சொல்லப்பட்ட பிறகு இமாம் பாத்திஹா ஸூராவையும், குர்ஆனின் ஒரு பகுதியையும் உரத்த குரலில் ஓதி ஜமாஅத் தொழுகையை நடத்தி வைப்பார். இதோடு கட்டாயத் தொழுகை முற்றுப் பெறுகிறது. பின்னர் தனியாக இரண்டு ரக்அத் சுன்னத் தொழுகையைத் தொழ வேண்டும். சுன்னத் தொழுகையின்போது ஓதுபனவற்றை மெல்லிய குரலில் ஓத வேண்டும்.
ஜும்ஆத் தொழுகையிலும், பெருநாள் தொழுகையிலும் கலந்து கொள்பவர்கள் தூய்மையாகவும், இயன்றவரை சிறந்த ஆடைகள் அணிந்தும் இருத்தல் வேண்டும்.