1. தொழுகைக்காக வந்திருப்பவர்களில் ஒருவரை முன் நிறுத்தி (இமாமாகக் கொண்டு) அவரைப் பின்பற்றித் தொழுவதே கூட்டுத் தொழுகை. இமாம் மார்க்க சட்டதிட்டங்களில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இறையச்சம் மிக்கவராயிருக்க வேண்டும்.
2. இமாம் அனைவருக்கும் முன்பாக கிப்லாவை நோக்கி நிற்பார். மற்றவர்கள் அவர்க்குப் பின்னால் அணியணியாக நிற்க வேண்டும். கூட்டுத் தொழுகையை இரண்டுப் பேரைக் கொண்டும் நடத்தலாம். இமாமும் இன்னொருவரும் இருந்தாலும் போதுமானது.
3. பஜ்ருத் தொழுகையிலும், இஷாத் தொழுகையிலும் இமாம் பாத்திஹா ஸூராவையும், அதைத் தொடர்ந்து குர்ஆனின் ஏதேனும் ஒரு பகுதியை சற்று உரத்த குரலில் ஓதுவார். இமாம் இவ்வாறு குர்ஆனை ஓதும்போது பின்பற்றித் தொழுபவர்கள் கவனமாகவும், பணிவுடனும் அதைச் செவிமடுக்க வேண்டும்.
4. இமாம் பாத்திஹா ஸூராவை ஓதி முடித்தவுடன் பின்பற்றித் தொழுபவர்கள் ‘ஆமீன்’ என்று சொல்ல வேண்டும். இமாம் ருகூவிலிருந்து எழுந்து நின்ற பிறகு ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமித’ என்று சொல்வார். (தனக்கு நன்றியுடையவர் எல்லோரையும் இறைவன் ஏற்றுக் கொள்வான்.) இதற்குப் பதிலாக பின்பற்றித் தொழுபவர்கள் ‘ரப்பனா லகல் ஹம்து’ (இறைவா! உனக்கே புகழ் உரியது.) என்று சொல்ல வேண்டும்.
5. பின்பற்றுபவர்கள் இமாம் செய்யும் செய்கைகளை அவர் செய்த பிறகே செய்ய வேண்டும். எந்த செய்கையிலும் இமாமை முந்தினால், முந்தியவருடைய தொழுகை முறிந்து விடும்.
6. இமாம் என்ற முறையில் கூட்டுத் தொழுகையை நடத்துவதாக இமாம் நிய்யத் (மனதால் எண்ணுவது) செய்து கொண்டாலன்றி தொழுகை நிறைவேறாது. பின்பற்றுபவர்களும் அந்த இமாமை பின்பற்றி தாங்கள் அந்தத் தொழுகையை தொழுவதாக நிய்யத் செய்திட வேண்டும்.
7. ஜமாஅத் தொழுகை தொடங்கிய பிறகு ஒருவர் வந்தால், ஒன்றிரண்டு ரக்அத்துகள் பிந்தி விட்டாலும் ஜமாஅத்தோடு சேர்ந்து இமாமைப் பின்பற்றித் தொழ வேண்டும். இமாம் தொழுகையை முடித்து ஸலாம் சொன்னவுடன், பிந்தி வந்தவர் ஸலாம் சொல்லாது, தான் விட்ட ரக்அத்துகளை தொழுது முடிக்க வேண்டும். ருகூஉ நிலையில் ஒருவர் ஜமாஅத்தோடு சேர்ந்து கொண்டால் அந்த ரக்அத்தையும் அவர் தொழுததாகக் கருதப்படுவார். ஆனால் ருகூஉ நிலைக்குப் பிறகு எந்த நிலையில் அவர் ஜமாஅத்தோடு சேர்ந்தாலும் அவர் அந்த ரக்அத்தை தவற விட்டவராவார். இமாம் தொழுது முடித்த பிறகு அந்த ரக்அத்தை அவர் தனியாக நிறைவேற்ற வேண்டும்.
8. ஜமாஅத்தோடு சேர்ந்து தொழும் வாய்ப்பு இருக்கும்போது அதைத் தவற விடக் கூடாது. கூட்டுத் தொழுகையானது கருத்திலும் செயலிலுமுள்ள ஒற்றுமை, முஸ்லிம்களின் பக்தி, பணிவு, அவர்களிடையேயுள்ள பிணைப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றைக் காட்டுகின்ற ஓர் அழகிய செயல்முறையாகும்.
இஸ்லாம் பணித்துள்ள கூட்டுத் தொழுகையானது இனப் பாகுபாடு, ஜாதி வேறுபாடு, மனிதர்களிடையே உள்ள மாச்சரியங்கள் ஆகியவற்றிலிருந்து எழுகின்ற பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக விளங்குகின்றது.
இஸ்லாம் கற்றுத்தரும் கூட்டுத் தொழுகையில், அரசன் – குடிகள், ஏழை – பணக்காரன், வெள்ளையர் – கருப்பர், பிரபுக்கள் – பாட்டாளிகள், முன் வரிசையினர் – பின் வரிசையினர் என்பன போன்ற பாகுபாடுகள் கிடையாது. இவை போன்ற உலகியல் பாகுபாடுகள் எதுவுமில்லாமல் தோளோடு தோள் நின்று கட்டுப்பாடாக முஸ்லிம்கள் தொழுகையை நிறைவேற்றுகின்றார்கள்.