இந்த நூலின் முன்னுரையில், மேலை நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் நிலைமையையும், இஸ்லாத்தின் எதிர்காலத்தையும் சுருக்கமாக விவாதித்தோம். இந்தப் பகுதியில் உலகின் ஏனைய பாகங்களிலுள்ள மனிதர்களின் நிலைமையையும், சாதாரணமாக மனிதர்களின் நிலைமை எத்தன்மையதாக இருக்கின்றது என்பதையும், உலகைப்பற்றி இஸ்லாம் சொல்லும் நியதிகள் என்னவென்றும் பார்ப்போம்.
தற்போது மனிதனின் நிலை மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகவே இருக்கின்றது. நல்லெண்ணமும், நல்லதை விரும்புபவர்களும் நிச்சயமாக இதில் கவணம் செலுத்தியேயாக வேண்டும். இறை சிந்தனையுடையவர்கள் இதில் பாராமுகமாக இருந்திட முடியாது.
இப்படிச் சொல்வதனால் தற்போதைய மனிதனின் நிலை நம்பிக்கை இழந்துவிடும் அளவு மோசமானதல்ல. ஆகவே நாம் நம்பிக்கை இழந்து விடவும் வேண்டாம், விரக்தியடைந்து விடவும் வேண்டாம்.
நன்னம்பிக்கையோடு இருப்பதும், தன்னம்பிக்கையோடு இருப்பதும் இஸ்லாத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். (சான்றாக திருக்குர்ஆனின் 12:87, 65:3 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்)
நாம் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகள், அன்றைய நாட்களில் நாம் எதிர்நோக்கிய பிரச்சினைகளிலிருந்து மாறுபட்டவைகளல்ல. இன்று நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சிக்கலானவை, சிரமமானவை, ஆபத்துக்கள் நிறைந்தவை என்பது உண்மையே! இந்த வகையில் நாம் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் அன்றைய பிரச்சினைகளைவிட பன்மடங்கு மிகைத்தவைகள் என்பதில் ஐயமில்லை. ஆனால் இப்போதைய பிரச்சினைகளுக்கும் அப்போதைய பிரச்சினைகளுக்கும் உள்ள வித்தியாசம் பிரச்சினையின் அளவில் அல்ல, பிரச்சினையின் போக்கில் அல்ல, பிரச்சினையின் வகையில் அல்ல, பிரச்சினையின் தரத்திலேதான்.
அன்று நாம் என்னென்ன பிரச்சினைகளை எதிர் நோக்கினோமோ அதே விதமான பிரச்சினைகளைத்தான் நாம் இன்றும் எதிர் நோக்குகின்றோம். அவற்றின் பரிணாமம் மட்டும்தான் சற்று வித்தியாசமாக இருக்கின்றது.
தங்களுக்கு அறிமுகமில்லாத புதிய பிரச்சினைகளைஅணுகுவதில் மேற்கொள்ளப்பட்ட சகிப்புத்தன்மையற்ற மனப்பான்மைதான், உலகில் நீண்ட நெடுங்காலமாக நிகழ்ந்து வரும் குழப்பங்களுக்கு காரணமாகும். இந்த மனப்பான்மைதான் இனவெறி, நிறவெறி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வுகள், மதவெறி இன்னும் இதுபோன்ற மாச்சரியங்களுக்கு வழி வகுத்திருக்கின்றது.
மனித இனம் என்றுமில்லாத ஒரு நெருக்கடியில் – குழப்பத்தில் இருக்கின்றது என்பதை மிகச்சிலரே மறுப்பார்கள். உலக வாழ்க்கையின் தேவைகளைத் தேடுவதில் மனிதன் அடைந்திருக்கும் முன்னேற்றம் மகத்தானது. ஆனால் அதே அளவு அவனது ஒழுக்க நிலைகளும், ஆன்மீக வளர்ச்சியும் முன்னேறவில்லை. இப்படி அவனுடைய உலகாயத புற முன்னேற்றங்களுக்கும், ஆன்மீகம், ஒழுக்கம் போன்ற அக முன்னேற்றங்களுக்கும் இடையேயுள்ள இடைவெளிதான் இன்று மனித இனம் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கும், குழப்பங்களுக்கும் காரணம்.
மனிதன் உலக வாழ்வின் தேவைகளைத் தேடுவதில் அடைந்திருக்கும் முன்னேற்றம், அவனது ஒழுக்கம், ஆன்மீகம் ஆகிய அக வளர்ச்சியோடு சமநிலையில் இருக்க வேண்டும். ஒருபக்க வளர்ச்சியினால் எந்த பலனும் இல்லை. இந்த சமநிலை நிச்சயம் இருந்தாக வேண்டும் என சொல்வது எளிது. ஆனால் இந்த சமநிலையை ஏற்படுத்தித் தருவது அத்துணை எளிதானது அல்ல. அதே நேரத்தில் இந்த சமநிலை ஏற்படுத்த முடியாததுமல்ல.
கடந்த காலங்களில் ‘மனிதன் உயிர் வாழ உணவு மட்டும் போதாது’ என்றொரு முதுமொழி வழக்கிலிருந்தது. இதன் பொருள் மனிதன் உயிர்வாழ உணவு மட்டுமின்றி சில ஆன்மீக நாட்டங்களும், ஒழுக்க நெறிகளும் தேவை என்பதேயாகும். ஆனால் இந்த முதுமொழியை மக்கள் தவறாகப் பயன்படுத்தினர். இந்த முதுமொழியைக் காரணங்காட்டி மனிதன் உணவுப் பொருட்களை தேடுவதற்கு எந்த முயற்சிகளையும் எடுக்க வேண்டியதில்லை. அவன் ஆன்மீக நாட்டங்களில் (அருந்தவங்களில்) ஈடுபட்டால் போதும் என்று போதிக்க ஆரம்பித்து விட்டனர். இதைப்போலவே இறைநம்பிக்கை, நம்பிக்கை என்பதையும் தவறாகப் புரிந்து கொண்டனர். இறைவனை நம்புகின்ற மனிதனுக்கு எந்த தனியுரிமையும் இல்லை, அதுபோலவே அவனுக்கு சுயமாக செயல்படும் சுதந்திரமும் இல்லை, அவன் எல்லாம் இறைவன் விட்டப்படி நடக்கட்டும் என்று சோம்பி இருந்திட வேண்டும் என்றெல்லாம் தவறான பொருள்கள் தரப்பட்டன.
ஆன்மீகத் துறைக்கு தரப்படும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம், அதே அளவு, அளவுக்கு மீறிய முக்கியத்துவத்தை உலகியல் தேவைகளுக்கு தருகின்ற விதத்திலேயே முடியும். ஆன்மீக நாட்டங்களுக்கு அத்துமீறிய முக்கியத்துவத்தைத் தருவது மூடநம்பிக்கையிலேயே முடியும். அத்துடன் அது எண்ணற்ற குழப்பங்களையும் விளைவிக்கும்.
ஆதுபோலவே உலக தேவைகளுக்கு (உலகியலுக்கு) தரப்படும் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம், ஆடம்பரங்களையும், ஆபாசங்களையும் விளைவிக்கும். அளவுக்கு மீறிய சுதந்திரம் எதையும் செய்யலாம் என்ற ஆணவத்தையும், அகங்காரங்களையும் ஏற்படுத்தும். அறிவுலக சிந்தனையாளர்களின் போக்கு கடந்த சில நூற்றாண்டுகளாக இதையே உறுதிப்படுத்துகின்றது.
விண்வெளியில் செய்யப்பட்டுள்ள விந்தையான ஆராய்ச்சிகள் தான் இன்றைய உலகின் சூடான செய்தியாக இருந்து வருகின்றது. விண்வெளியில் மனிதன் உயர்ந்திடும் வேகம்தான் இன்றைய உலகின் விறுவிறுப்பான செய்திகளாக இருக்கின்றன. இதற்கு இணையாக விறுவிறுப்பூட்டும் செய்தியாக மனிதனின் மன ஆழத்தில் நிகழ்கின்ற ஆன்மீக ஆராய்ச்சிகளாகும்.
இந்த இரண்டு விதமான ஆராய்ச்சிகளுக்கும் இடையில் ஒரு சமநிலையில்லை. இந்த சமநிலையின்மை மிகவும் அச்சமூட்டக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. காரணம், இந்த இரண்டு விதமான ஆராய்ச்சிகளுக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பில்லை என்பது மட்டுமல்ல, ஒன்றுக்கொன்று எதிர் திசையிலேயே போய்க் கொண்டிருக்கின்றன. இப்படி இவைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல், எதிர் திசையில் போய்க் கொண்டிருப்பதுதான் பெரும்பாலோரை அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றது. இது மக்களை குழப்பத்தில் தள்ளிவிடும். இந்தக் குழப்பம் சமுதாயத்தின் பிரச்சினைகளை சிக்கல் நிறைந்ததாக்கிவிடும். பின்னர் மனிதனின் வாழ்க்கையை பெருமளவில் பாதித்து விடும்.
மனித இனத்தை இந்தச் சிக்கல்களிலிருந்தும், குழப்பங்களிலிருந்தும் காப்பாற்றிட முடியும். அதற்கு நாம், (விண்வெளித்துறையில்) விஞ்ஞானத் துறையில் மனிதன் செய்திருக்கும் ஆராய்ச்சிகளையும், ஆன்மீகத் துறையில் அவன் மேற்கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளையும் ஏதாவதொரு வழியில் இணைத்து விட்டால் போதும். இந்த இரண்டு ஆராய்ச்சிகளுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி விடுவதே மனிதனின் அச்சத்தை அகற்றிவிடும். மனிதன் உயிர்வாழ உணவு மட்டும் போதாது. சில ஆன்மீக நாட்டங்களும், தேட்டங்களும் தேவை என்பது உண்மைதான். அதே நேரத்தில் மனிதன் இறை வணக்கத்தால் மட்டுமே உயிர் வாழ்பவனும் அல்ல.
மனிதன் உலகியல் தேவைகளை உடையவன். அதே நேரத்தில் ஆன்மீக நாட்டங்களையும் கொண்டவன். உலகியல் தேவைகள், ஆன்மீக நாட்டங்கள் இவை இரண்டும் சேர்ந்தது தான் மனிதன். அவன் இவைகளில் ஏதேனும் ஒன்றால் மட்டுமே ஆனவன் என்பது மடமை.
நாம் ஏற்கனவே சொன்னதுபோல் இன்றைய உலகம் எண்ணற்ற பிரச்சினைகளால் குழம்பிப்போய் இருக்கின்றது. இந்த பிரச்சினைகளுக்குக் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டவைகளும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு தரப்பட்ட தீர்வுகளும் குழப்பத்தை கொந்தளிக்கச் செய்துள்ளன. சிலர் ’இந்த உலகத்திற்கு அன்பு ஒன்றே தேவை’ என்று அன்று பாடிய பல்லவியையே இன்றும் பாடிக் கொண்டிருக்கின்றனர். வேறு சில மனிதர்களுக்கு இப்போது தேவை ‘புனர்ஜென்மமே’ எனக் கூறுகின்றனர். வேறு பலர், மார்க்சிஸம் வேண்டுமென முழங்குகின்றனர். பலர் மனிதாபிமானமே மகத்தான மருந்து என வைத்தியம் கூறுகின்றனர். இன்னும் பலர் விஞ்ஞானம் வந்தால் ‘விட்டது தொல்லை’ என்கின்றனர். இன்னொரு கூட்டத்தினர் ஒரு இரட்சகரின் வரவுக்காக காத்திருக்கின்றனர். இன்னொரு பெருங்கூட்டத்தினர் எந்த நம்பிக்கையும் இல்லாமல் விரக்தியடைந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால் இன்றைய உலகுக்குத் தேவையானது இவற்றில் எதுவுமில்லை. இப்போது மனித இனத்தின் அவசர தேவை, அவன் தன்னையும், தான் வாழும் உலகையும் புரிந்து கொள்ள வேண்டியதுதான். அவன் தனது திறமைகளையும் சக்திகளையும் புரிந்து கொள்ள வேண்டும், அவன் தனது வரையறைகளை புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் தனது நிலையும், இடமும் என்ன என்பதை மனிதன் தெரிந்து கொள்ள வேண்டும். தனக்கும் இந்த உலகில் இருக்கும் ஏனையவற்றிற்கும் உள்ள உறவும், தொடர்பும் என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட ‘அறிவே’ மனிதனது இப்போதைய தேவை.
இப்போதைய கேள்வி, இஸ்லாம் எப்படி இந்த அறிவை மனிதனுக்குத் தந்திட முடியும் என்பதுதான். இந்தக் கேள்விக்குப் பதிலாக நாம் இதுவரை இஸ்லாத்தின் அடிப்படைகள் என்று பார்த்தவைகளை நினைவு கூர்வது நலம். இன்னும் சிலவற்றை நாம் விரிவாகப் பார்க்க வேண்டும். இந்த விளக்கங்கள் மனிதனின் தற்போதைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதைக் கோடிட்டுக் காட்டும்.
எதிலும் ஒரு நடுநிலையோடும், சமநிலையோடும், நிதானத்தோடும் நடந்திட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தனித்தன்மைகளுள் ஒன்றாகும். இஸ்லாம் மனித இயல்பினை புரிந்து வைத்துள்ள விதத்திலும், வாழ்வுக்கு அது தரும் பொருளிலும், இறைவனைப் பற்றி அது தரும் உண்மையான கொள்கைகளிலும், இந்த சமநிலை – நிதானநிலை இவை தெளிவாக விரவிக் கிடக்கக் காணலாம். ஒருதலைப்பட்சமாக அமைந்த கொள்கையாகிய ’மனிதாபிமான’த்தை இஸ்லாம் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதில்லை. ஏனெனில் இந்த மனிதாபிமான அணுகுமுறை இப்போது எல்லா வரையறைகளையும் கடந்து போய்க் கொண்டு இருக்கின்றது. மனிதாபிமான அணுகுமுறை தனது எல்லைகளைக் கடந்து மனிதனை துதிக்கின்ற அளவுக்குப் போய்விட்டது. மனிதனோடு சம்பந்தப்பட்ட ஏனையவற்றையெல்லாம் மறந்து விடுகின்றது.
இஸ்லாம் எப்படி ‘மனிதன் பாவி’ ‘மனிதன் பிறக்கும்போதே பாவத்தோடு பிறந்தவன்’ என்ற கொள்கையை வெறுக்கின்றதோ, அதேபோல், வாழ்க்கை வெறுப்புக்குரியது, அற்பமானது, வேதனையானது என்ற கொள்கைகளையும் கண்டிக்கின்றது. அதேநேரத்தில் இந்த ‘உலக வாழ்க்கையே எல்லாம்’ இருக்கும்வரை அனுபவிப்போம், வாழ்க்கையில் நமக்கு எந்த பொறுப்புமில்லை என்ற கொள்கைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை.
இஸ்லாம் வாழ்க்கைக்கு குதர்க்கமற்ற ஒரு நேரடியான பொருளையே தருகின்றது. வாழ்க்கைக்கென ஒரு இலட்சியம் இருக்கின்றதென கூறுகின்றது. அது இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானதல்ல என்று சொல்வதெல்லாம், இந்த உலக வாழ்க்கையை மறு உலக வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் போதுதான். அது இந்த உலகமே எல்லாம் என்றும் கூறுவதில்லை. அதற்காக இந்த உலகத்தையே துறந்து, துறவு கொண்டு, அடுத்த உலகத்தை மட்டுமே நாடுங்கள் என்றும் கூறுவதில்லை. அது இந்த உலகில் மனிதனின் நிலை என்ன என்பதை எடுத்துக் கூறுகின்றது. அதேபோல் அடுத்த உலகமாம் மறுமையைப் பற்றியும் மனிதனுக்கு அறிவுறுத்துகின்றது. இப்படி இரண்டு உலகத்தைப் பற்றிய கருத்தை மனிதனுக்குத் தந்து அவனது செயல்களை முறைப்படுத்துவதே நியாயமானது. இது ஒன்றே மனிதன் நிதானமாக இயங்க வகை செய்யும். அது இரண்டு உலக வாழ்வையும் பற்றிய அறிவை மனிதனுக்குத் தருவதன் நோக்கம், இரண்டு உலகிலும் மனிதன் தனது நலனை அதிகப்படுத்திக் கொள்வதற்கேயாகும். (சான்றாக குர்ஆன்: : 7:33, 17:18-21, 28:77, 57:20-21 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்)
திருக்குர்ஆனிலிருக்கும் பல வசனங்கள், மனிதவாழ்வின் இயல்புகளை விளக்குகின்றன. அவைகளுள் 2:27-39 வசனங்கள் தரும் தெளிவுகளை சுருக்கமாகக் கீழே தருகின்றோம்.
1. இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது. அவனால் பாதுகாக்கப்பட்டு வருவது. அவனால் பராமரிக்கப்பட்டு வருவது. அவனால் உணவளிக்கப்பட்டு வருவது. அவன் இந்த உலகத்தை ஒரு சிறந்த நோக்கத்திற்காகவே படைத்தான். வரலாற்று நிகழ்ச்சிகளும், திருப்பங்களும் அவனது விருப்பத்தின் விளைவாக நிகழ்பவைகளே! அவை அவன் வகுத்த நியதிகளின்படி நிகழ்பவைகளே! அவைகள் தற்செயலாக இடம் பெறுபவைகளல்ல. அதுபோலவே அவைகள் எந்த நியதியினையும் பின்பற்றாமல் நடப்பவைகளுமல்ல.
2. மனிதனையும் இறைவனே படைத்தான். மனிதன் பூமியில் இறைவனின் பிரதிநிதியாக இருக்கும்படி இறைவனால் பணிக்கப்பட்டுள்ளான். அவன் இந்த உலகை ஆராய்ந்து தனது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். தனக்கு தரப்பட்டிருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தித் தன்னுள் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனிதன் இவைகளையெல்லாம் அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே உலகில் இருப்பவைகள் அனைத்தும் படைக்கப்பட்டுள்ளன. உலகில் இருப்பவைகள் அவனுக்காகவே படைக்கப்பட்டன. அவைகள் மனிதனுக்கு சேவை செய்திட வேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளன. பூமியில் இருப்பவைகள் மட்டுமல்ல, வானத்தில் இருப்பவைகளையும் இறைவன் மனிதனுக்காகவே படைத்து அவனுக்கே வசப்படுத்தித் தந்துள்ளான். இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு சிறைக் கூடமல்ல. அவன் இந்த உலகில், முன்னால் செய்த தவறுக்கு தண்டனையாக அனுப்பப்பட்டவனுமல்ல. அவன் வேறொரு உலகிலிருந்து வெளியேற்றப்பட்டு இந்த உலகுக்கு வந்தவனுமல்ல. அவனது வாழ்க்கை எதேச்சையான ஒரு நிகழ்ச்சியுமல்ல. அவனது படைப்பிற்குப் பின்னால் எந்த நியதியுமில்லை என்பது உண்மையுமல்ல.
3. அறிவு (பகுத்தறிவு) மனிதனுக்குத் தரப்பட்ட தனித்தன்மையாகும். அது அவனது பண்புகளின் ஒரு பெரும் பகுதியாகும். அவனது வாழ்க்கைக்கு அது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இந்த அறிவுதான் மனிதனுக்கு, இறைவனின் ‘பிரதிநிதி’ என்ற கண்ணியத்தைப் பெற்றுத் தந்தது. இந்த அறிவு அவனுக்கு தரப்பட்டிருப்பதால் தான் அவனுக்கு வானவர்களும் உதவி செய்ய வருகின்றார்கள். வானவர்களும் அவனை மதிக்கின்றார்கள்.
4. இந்த பூமியில் துவங்கப்பெற்ற முதல் வாழ்க்கை பாவத்தில் தோன்றியதல்ல. அதுபோலவே இறைவனுக்கு எதிராக செய்த புரட்சியினால் ஏற்பட்டதுமல்ல. ஆதம், ஹவ்வா ஆகியோர் தடுக்கப்பட்டதை தீண்டியதும், தீண்டியதற்கு தண்டனைப் பெற்றதும், தண்டனையை மன்னிக்க மன்றாடியதும், மன்றாட்டம் பலன் தந்ததும், மனிதனுக்கும், ஷைத்தானுக்கும் இடையேயுள்ள விரோத குரோதங்களும் இறைவனைப் பொறுத்தவரை வியப்பிற்குரியவையல்ல. வரலாற்றின் ஓட்டத்தில் தற்செயலாக நிகழ்ந்தவையுமல்ல. இவைகளெல்லம் முதல் மனிதனை பயிற்றுவிப்பதற்காவும், நமக்கெல்லாம் பாடமாக அமைவதற்காகவும் நிகழ்த்தப்பட்டவைகள் என்றே புலப்படுகின்றது. அந்த முதல் மனிதனுக்கு வாழ்வையும், அழிவையும் உணர்த்துவதற்காகவும், ஒழுக்கத் துறையில் ஏற்படும் தோல்வியையும், இறைவனை நாடினால் தோல்வியைத் தொடர்ந்து வெற்றி பெறலாம் என்பதை விளக்கிடவும், படைத்தவனிடம் பாவமன்னிப்பு கோரிடுவதின் மாண்புகளை மனிதனுக்கு கற்றுத் தந்திடவும் நிகழ்த்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியேயாகும். இதன் வழி மனிதன் சோதனைகளையும், தோல்விகளையும் தாங்கிடும் மனவலிமையைப் பெறலாம்.
5. முதல் தம்பதியருள் ஹவ்வா பலவீனமானவர்கள் என்பது உண்மயல்ல. அவர்கள் தான் ஆதம் (அலை) அவர்களை தீண்டக் கூடாததை தீண்டிடத் தூண்டினார்கள் என்பதும் உண்மையல்ல. அவர்கள் சுவர்க்கத்திலிருந்து தூக்கியெறியப்பட்டதற்கான காரணம் ஹவ்வா அவர்களுமல்ல, அவர்கள் இரண்டு பேருமே தூண்டப்பட்டார்கள். இரண்டு பேருமே இறைவனின் கோபத்திற்கு உரியவரானார்கள். இரண்டு பேருமே வருந்தினார்கள். திருந்தினார்கள். மன்னிப்புக் கோரினார்கள். இரண்டு பேருமே மன்னிக்கப்பட்டார்கள். இறைவனின் அருள் இருவருக்குமே கிடைத்தது. இஃது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இதுதான் ஹவ்வாவையும் அவர்களைத் தொடர்ந்து பெண்ணினத்தையும் பழிச் சொல்லிலிருந்து விடுவிக்கின்றது. ஹவ்வாவே ஆதமைத் தூண்டினார்கள் என்ற கருத்தை வளர்த்துப் பெண்களைப் பாவங்களின் பிறப்பிடம் எனப் பழித்து வரும் பாதகச் செயலிலிருந்து காப்பாற்றுவதும் இந்தக் கருத்துத்தான்.
பெண்களே ஒழுக்கத்தில் குறைந்தவர்கள் என்ற கருத்து ஆதாரமற்றது. ஒழுக்க நிலைகளில் ஆண்கள் உயர்ந்தவர்கள், பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்து நியாயமற்றது. அநீதியானது. இங்கே திருக்குர்ஆன் ஒன்றைத் தெளிவாகச் சொல்கின்றது. ஆண்களும், பெண்களும் நல்லொழுக்கத்தில் சிறந்து விளங்கும் தகுதியை சம அளவில் பெற்றவர்களே! அவர்கள் இருவரும் பலவீனங்களும் பெற்றவர்கள்தான் (சம அளவில்) ’பாபம்-இஸ்லாம் தரும் விளக்கம்’ என்ற பகுதியை பார்க்கவும்.
6. மனிதன் சுதந்திரமானவன். அவன் தனது விருப்பங்களின் வழி நடந்திட சுதந்திரம் பெற்றவன். மனிதனின் சிறப்பம்சமும் இதுவேயாகும். மனிதன் இறைவனிடம் மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும் என்ற கொள்கை இந்த அடிப்படையில் அமைந்ததே! இந்த சுதந்திரம் மனிதனுக்குத் தரப்படவில்லை என்றால், மனிதனின் படைப்பு அர்த்தமற்றதாக ஆகிவிடும். இறைவன் மனிதனுடன் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தம் பலனற்றதாகவும் ஆகிவிடும். இந்தச் சுதந்திரமில்லை என்றால் மனிதன் இறைவன் முன் பதில் சொல்லத் தேவையான திறமைகள் இல்லாதவனாக ஆகிவிடுவான். இதை நாம் கற்பனை செய்தும் பார்த்திட முடியாது.
7. உயிர் (வாழ்க்கை) இறைவனிடமிருந்து வந்ததே! அது நிரந்தரமான ஒன்றில்லை. அதற்காக அது இந்த உலகத்தோடு முடிந்து விடுவது என்றும் பொருளல்ல. அது இந்த உலகைப் பொறுத்தவரை அடுத்த உலகிற்குப் போகின்ற ஒரு பயணத்தில் இருக்கின்றது என சொல்லலாம். பின்னர் எல்லோரும் இறைவனிடமே மீள வேண்டும்.
8. மனிதன் இறைவன் முன் பதில் சொல்லிட வேண்டியவன். அவன் செய்த பாவத்திற்கு மட்டுமே அவன் பதில் சொல்ல வேண்டும். பாவம் எவரோடும் தொற்றிக் கொண்டு வருவதுமில்லை. ஒருவர் செய்த பாவத்தை இன்னொருவருக்கு மாற்றிடவும் முடியாது. அது ஒரு குறிப்பிட்ட குலத்திற்கோ அல்லது இனத்திற்கோ குத்தகையானதுமல்ல. ஒவ்வொரு மனிதனும் அவனது செயல்களுக்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும். இப்படிச் சொல்வதனால் இஸ்லாம் சமுதாயத்தைவிட தனி மனிதனுக்கே அதிக முக்கியத்துவத்தைத் தருகின்றது என்பதல்ல பொருள். சமுதாயத்திலிருந்து – கூட்டு வாழ்க்கையிலிருந்து தனி மனிதனைப் பிரித்து விட்டால் அவன் எந்த முக்கியத்துவமும் இல்லாதவனாக ஆகிவிடுகின்றான். தனி மனிதன் தனது செயல்களுக்கு இறைவனிடம் பதில் சொல்லிட வேண்டும் என்பதன் பொருள் என்னவெனில், தனி மனிதன் பல்வேறு பணிகளை – கடமைகளை நிறைவு செய்திட வேண்டியவன். அவன் தனது கண்ணியத்திற்கு களங்கம் வராமலும், தன்னுடைய தனித்தன்மைகளைப் பாதுகாக்கின்ற வகையிலேயும், இறைவனின் உரிமைகளை நிறைவேற்றுகின்ற வகையிலேயும், சமுதாய வாழ்வில் தனது பங்கை நிறைவேற்றுகின்ற வகையிலேயும் தனது பணிகளை – கடமைகளை நிறைவேற்றிட வேண்டும்.
9. மனிதன் கண்ணியமிக்கதொரு படைப்பினம். அவன் இறைவனின் ஆவியைக் கொண்டிருக்கின்றான் என்ற உண்மையிலிருந்தே அவனது கண்ணியம் பிறக்கின்றது. இதிலிருக்கும் இன்னொரு உண்மை என்னவென்றால், இந்தக் கண்ணியம் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டும்தான் என்பதில்லை. இந்தக் கண்ணியம் மனிதர்கள் அனைவருக்கும் சொந்தமானது. இந்தக் கண்ணியம் மனிதர்களின் பிறப்புரிமையாகும். ஒவ்வொரு மனிதனும் இந்த மண்ணின் மதிப்புமிக்கப் பிரஜையாவார்.
10. திருமறையின் இந்தப் பகுதி (2:27-39) இறுதியாக இறைவன் ஒருவனே என்றும், மனிதர்கள் அனைவரும் ஒரே இனமே என்றும் உறுதி கூறுகின்றது. மனிதனின் மிகச் சிறந்த பண்புகள் இறையச்சமும் அறிவுடைமையாகும். மனிதன் நேரான-நிறைவான-அறிவைப் பெற்று அதை இறைவன் காட்டிய வழியில் செலுத்திடுவானேயானால் அவனது வாழ்க்கை சிறப்பாக அமையும். மறுமையில் நற்கூலியைப் பெறுவான்.