’பாபம்’ என்ன என்பதை புரிந்து கொள்வதில் எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன. பாபம் முதன்முதலில் ஆதம், ஹவ்வா என்ற ஆதிப் பெற்றோர்கள் சுவர்க்கத்தில் இருக்கும் போதுதான் ஆரம்பமானது எனக் கருதப்பட்டு வருகின்றது. அங்கே நடந்த பாப சம்பவம்தான் அவர்களை அங்கே இருந்து கீழே (பூமிக்கு)) தள்ளியது. இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் மனிதர்கள் அனைவரும் பாவிகள் என அழைக்கப்படுகின்றார்கள். இப்படி மனிதர்கள் பாபம் எதுவும் செய்யாதபோது, அவர்கள் பாவிகள் என்று அழைக்கப்படுவது எண்ணற்ற குழப்பங்களை விளைவித்தது.
ஆனால் இஸ்லாம் இந்தக் குழப்பங்களுக்கு அப்பாற்பட்டது. இஸ்லாம் இதுவரை எந்தக் கோட்பாடும் தராததொரு கோட்பாட்டை தருகின்றது. அதுவே உண்மை நிறைந்தது.
திருமறை பின்வருமாறு கூறுகின்றது: ஆதம், ஹவ்வா ஆகிய இருவரையும் இறைவன் சுவர்க்கத்தில் இருக்கும்படியும், அங்கு கிடைப்பவற்றை புசிக்கும்படியும் பணித்தான். அங்கு அவர்களுக்கு இறைவனின் அருள் கொடைகளை பூரணமாக அள்ளித் தருவதாகவும் இறைவன் வாக்களித்தான். அதே நேரத்தில் அவர்களுக்கு ஒரு தடையையும் விதித்தான். அதாவது அவர்கள் இருவரும் ஒரு குறிப்பிட்ட மரத்தின் பக்கம் போகக்கூடாது என்பதே அந்தத்தடை. பின்னர் ஷைத்தான் அவர்களைத் தூண்டி அவர்கள் அந்த சுகவாழ்வை இழக்கும்படிச் செய்தான். பின்னர் அவர்கள் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். பூமியில் வாழ்ந்து, இறந்து, மீண்டும் இறுதித் தீர்ப்பு நாளில் எழுப்பப்படக் கூடியவர்களாக ஆயினர். தங்களது தவறை உணர்ந்த அவர்கள் இறைவனிடம் இறைஞ்சினார்கள். இறைவனும் மன்னித்தான். (அல்குர்ஆன்: 2:35-38, 7:19-25, 19:25, 20:117-123)
மேலே விவரித்த சம்பவம் எண்ணற்ற உண்மைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மனிதனின் ஆசைகளுக்கு முடிவே இல்லை. சுவர்க்கத்தையே அவன் முன் கொண்டு வந்தால்கூட அவன் திருப்தி அடைவதில்லை. ஆதம், ஹவ்வா ஆகியோர்கள் செய்ததைப்போல் ஒரு தவற்றினை செய்து விடுவது மனிதனின் மனதை மரத்துப்போக செய்வதில்லை. அவன் ஆன்மீக உயர்நிலைகளை அடைய முடியாமல் அவைகள் தடுத்திடுவதில்லை. அவன் ஒழுக்க நிலைகளில் உயர்வதற்கு அவை தடையாக அமைவதுமில்லை. மனிதனின் அறிவும், மனமும் பாவத்தை உணர்ந்து கொள்ளும் தன்மை உடையவையே! அவைகள் அவன் செய்யும் தவறுகளையும் உணர்ந்து கொள்ளும். அவனது குறைகளையும் அவைகள் உணர்ந்து கொள்ளும். இவற்றையெல்லாம் விட அவை யாரிடம் அவன் தனது தவறுகளை பொறுத்தருளும்படி இறைஞ்சிட வேண்டும் என்பதை உணர்த்தும் தன்மை படைத்தவைகளே! அதேபோல் யாரிடம் மனிதன் தனக்கு நேர்வழி காட்டும்படி கோரிட வேண்டும் என்பதையும் அவனுக்குச் சொல்லி விடும் மனிதனின் அறிவும், மனமும்.
இவைகளெல்லாம் விட உயர்ந்ததொரு உண்மையை நாம் மேலே குறிப்பிட்ட சம்பவத்திலிருந்து உணர்ந்து கொள்ள வேண்டும். அதாவது இறைவன், மனிதனால் தன் முன் வைக்கப்படும் அத்தனை உண்மையான வேண்டுதல்களையும் செவியேற்று, மன்னித்தருள தயாராக இருக்கின்றான். இறைவன் மனிதனுக்கு உதவி செய்வதற்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றான். அவனுடைய அருள் எங்கும் வியாபித்து நிற்பது, அவனது மன்னிக்கும் கருணை அனைத்தையும் அடக்கியது. (திருமறையின் வசனம் 7:156-ஐப் பார்க்கவும்)
ஆதம், ஹவ்வா ஆகியோர் குறித்து நாம் மேலே சொன்ன சம்பவத்திலிருந்து நாம் இன்னொன்றையும் உணர்ந்திட வேண்டும். பெண்கள் ஆண்களை விட அதிகமாக பாபம் செய்தவர்கள், மனிதர்கள் பிறக்கும்போதே பாவத்தோடு பிறந்தவர்கள், நம் முன்னோர்கள் செய்த பாவம் நம்மையும் தொற்றிக் கொண்டு வரும், என்பன போன்ற தத்துவங்கள் இஸ்லாத்தில் இல்லை.
மனிதன் பாவத்தின் விளைவாக, பாவத்தில் பிறந்தவனே, நம் முன்னோர்கள் செய்த பாவங்கள் நம்மையும் பழிவாங்கும், மனிதன் பிறக்கும்போதே பாவத்தோடு பிறந்தவன் என்பன போன்ற கருத்துக்களுக்கு இஸ்லாத்தில் கிஞ்சித்தும் இடமில்லை.
திருக்குர்ஆனும் (30:30), முஹம்மத் (ஸல்) அவர்களும் தந்த போதனைகளின்படி மனிதன் பிறக்கும்போது ‘பித்ரத்’ என்ற புனிதமான பாவங்களற்ற இயற்கை நிலையிலேயே பிறக்கின்றான். வேறு வார்த்தையில் சொல்வதானால், மனிதன் பிறக்கும்போது இறைவனுக்கு முற்றிலும் அடிபணியும் (முஸ்லிமாக) ஒரு புனிதனாகவே பிறக்கின்றான். மனிதன் பிறந்த பிறகு அவன் அடையும் மாற்றங்கள் அனைத்தும் வெளி சூழ்நிலைகளால் அவன் மீது திணிக்கப்பட்டவைகளே! நவீன சிந்தனையின் கீழ் அதனை இவ்வாறு சித்தரிக்கலாம். மனிதன் மாறும் தன்மையுடையவன். மனித இயல்புகளை மாற்றலாம். சமுதாயம் என்ற ஆலையில் மனிதன் அடையும் மாற்றங்களையே அவன் தனது வாழ்க்கையில் பிரதிபலிக்கின்றான். மனிதனை மாற்றுவதில் வீட்டுச் சூழ்நிலைகள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. மனிதன் வாழும் சூழ்நிலை குறிப்பாக வீட்டுச் சூழ்நிலை மனித வாழ்வின் நோக்கையும், போக்கையும் மாற்றுவதில் முக்கியமான பங்கு வகிக்கின்றது. இப்படிச் சொல்வதனால் மனித எல்லா சுதந்திரங்களையும் இழந்து விடுகின்றான் என்பதல்ல பொருள். நல்லவை அல்லது கெட்டவை இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அவனுக்கு இருக்கவே செய்கின்றது.
அதுபோலவே மனிதன் சூழ்நிலைகளை காரணங்காட்டி தனது பொறுப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. மாறாக இது அவன் பிறவியிலேயே பாவம் செய்தவன் என்ற எண்ணத்திலிருந்து அவனை விடுவிக்கின்றது. அதுபோலவே அவன் தான் இனி எப்படித்தான் புனிதனாக நடந்தாலும் பலனில்லை என்ற விரக்தியிலிருந்து அவனை விடுவிக்கின்றது.
இறைவன் எப்போதும் நீதியானவன், ஞானம் நிறைந்தவன், கருணை நிறைந்தவன், அன்பு நிறைந்தவன், பூரணமானவன். இதுவே இறைமையின் இலக்கணமாகும். இறைவன் தன்னுடைய ஆவியை மனிதனுக்கு ஈந்து மனிதனை படைத்திருக்கின்றான். (திருக்குர்ஆன்: 15:29, 32:9, 66:12 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்)
இறைவன் நன்மையின் இருப்பிடமானவன், அவன் நித்தியன், நிரந்தரமானவன், அவனது ஆவி பூரணமானது, நன்மைகள் நிறைந்தது. இந்த பூரணமான ஆவியை, இந்த தன்மை நிறைந்த ஆவியை மனிதனுக்கு தந்துதான் மனிதனை படைத்திருக்கின்றான் இறைவன். ஆகவே மனிதன் தான் பெற்றிருக்கும் ஆவியின் பண்புகளில் சிலவற்றையாவது பெற்றே இருப்பான் என்பதே உண்மை! இன்னும் மனிதன் இயல்பாகவே நன்மை செய்வதில் நாட்டமுள்ளவனாகவே இருப்பான்.
ஆனால் மனிதனை இறைவன் தன்னை வணங்குவதற்காகவே படைத்தான். மனிதன் இறைவனுக்கு இணையான படைப்பல்ல. இறைவன் மனிதனை தனக்கு இணையாக இருப்பதற்காக படைத்திடவுமில்லை. அதுபோலவே மனிதன் இறைவனை எதிர்த்திடுவதற்காக படைக்கப்பட்டவனல்ல. மனிதன் இறைவனை எதிர்த்து நின்றிடும் சக்தி படைத்தவனல்ல.
மனிதன் எவ்வளவுதான் சில நல்ல இயல்புகளை தன்னுள் கொண்டவனாக இருந்தாலும், இறைவனின் ஆவியைப் பெற்றவனாக இருந்தாலும் அவன் இறைவனை விட தாழ்ந்தவனே. இறைவனிடம் இருக்கும் நல்ல இயல்புகளில் சிலவற்றை மனிதன் பெற்றிருக்கின்றான் எனக் கூறி அவனை இறைவனுக்கு இணையாக்கிட முடியாது.
மனிதன் படைத்தவனின் பூரணத்தன்மைகளில் சிலவற்றைப் பெற்றிருக்கலாம். ஆனால் அவன் படைத்தவனுக்கு இணையானவல்ல.
மனிதன் பெற்றிருக்கும் பண்புகளும், குணங்களும், அவன் இறப்பவன், நிலையற்றவன், வரையறைக்குட்பட்ட தகுதியும், திறனையும் பெற்றவன் என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டவைகளே! மனிதன் பலவீனங்கள் நிறைந்தவன். குறைகள் அவனிடம் உண்டு. அவன் தவறிழைக்கும் தன்மை கொண்டவன்.
மனிதனிடம் குறைகள் உண்டு, அவன் தவறிழைக்கும் தன்மை கொண்டவன் எனச் சொல்லுவதால் அவன் பாவம் செய்தவன் எனப் பொருள் கொள்ளக்கூடாது. அவன் தவறிழைக்கும் தன்மைகளைக் கொண்டவன் என்பதனால் அவன் தவறிழைத்தவன் என்றும் பொருளல்ல. இஸ்லாம் இதை அனுமதிப்பதில்லை. மனிதன் குறைகளைக் கொண்டவன் தான். ஆனால் அவன் உதவியற்றவனல்ல. மனிதன் தனது குறைகளுக்கு ஆட்பட்டு அழிந்து போகட்டும் என்று இறைவன் விட்டுவிடவில்லை. மனிதன் இறைவனால் நேர்வழி காட்டப்படுகின்றான். இறைவனால் வழங்கப்பட்டுள்ள பகுத்தறிவின் துணை அவனுக்குண்டு. நல்லவைகள் தீயவைகள் இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுகின்ற சுதந்திரம் அவனுக்குண்டு. இவற்றின் துணைகளைக் கொண்டு அவன் பூரணத்துவத்தை நெருங்க முயலலாம். அப்போதும் அவன் இறைவனின் அளவுக்கு முழுமையான பூரணத்துவத்தை அடைந்திட முடியாது.
நன்மை, தீமை ஆகிய இரு சக்திகளின் ஒழியாப் போராட்டமே வாழ்க்கைப் போராட்டமாகும். இந்த இரு சக்திகளுமே வாழ்க்கையை விறுவிறுப்பாக்கின்றன. மனிதனை எப்போது செயல்பட்டுக் கொண்டிருக்க தூண்டுகின்றன. மனிதன் தீமைகளை எதிர்த்துப் போராடி வெற்றிபெற்று திரும்புவதைக் கண்டு இறைவன் மகிழ்ச்சி அடைகின்றான். மனிதன் பெறும் ஆன்மீக, ஒழுக்க வெற்றிகள் இறைவனுக்கு திருப்தியைத் தருகின்றன.
இஸ்லாம் வழங்கும் ஒழுக்க நெறிகலிஅ வைத்துப் பார்த்திடும்போது, மனிதன் குறைகளை உடையவனாக இருப்பதோ அல்லது மனிதன் தவறிழைக்கும் இயல்பினை உடையவனாக இருப்பதோ பாவமாகாது. அவன் இறப்புக்கு உட்பட்டவன். அவன் சில வரையறைகளை உடையவன் என்ற வகையில் தவறிழைப்பது அவனது இயற்கையான இயல்பேயாகும். ஆனால் தவறுகளை திருத்திக் கொள்ளும் வாய்ப்புக்கள் இருந்தும், வழிகாட்டுதல்கள் இருந்தும், அவன் தன்னை திருத்திக் கொள்ளவில்லை என்றால் அது பாவமாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பூரணத்துவத்தை நெருங்கும் வாய்ப்புக்கள் இருந்தும் அதை அவன் பயன்படுத்திக் கொள்ளவில்லையானால் அது பாவமாகும். ஆகவே பாவம் என்பது:
1). வேண்டுமென்றே செய்யப்படுகின்ற ஒரு தவறு அல்லது தீமை.
2). இறைவனின் நியதிகளை – சட்டதிட்டங்களை மறுக்கின்ற ஒரு செயல் அல்லது எண்ணம்.
3). இறைவனின் உரிமைகளை மீறுகின்ற ஒரு செயல் அல்லது மனிதனின் உரிமைகளை மீறுகின்ற ஒரு செயல்.
4). ஆத்மாவுக்கு அல்லது உடலுக்கு ஊறு விளைவிக்கின்ற ஒரு செயல்.
5). திரும்பத் திரும்பச் செய்யப்படும் தவறு அல்லது தீங்கு.
6). சாதாரணமாக தவிர்த்திடும் வாய்ப்புக்கள் இருந்தும் திரும்பத் திரும்பச் செய்யப்படும் தவறுகள் அல்லது தீமைகள் (இவைகளே பாவமாகும்).
இவைகள் தாம் பாவத்தின் பல்வேறு பகுதிகள். இவைகள் மனிதனுடன் பிறப்பவைகள் அல்ல. அதுபோலவே மனிதன் தனது மூதாதையர்களிடமிருந்து தத்தெடுப்பவைகளும் அல்ல. மனிதனிடம் பாவம் செய்கின்ற சக்தி இருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் இந்த சக்தி, மனிதனிடம் காணப்படும் நன்மை செய்கின்ற சக்தியை விட வலுவானதல்ல. அதுபோலவே இந்த சக்தி அவனிடம் காணப்படும் இறையுணர்வை விஞ்சியதுமல்ல. மனிதன் தன்னிடம் இருக்கும் பாவம் செய்கின்ற சக்தியை வளர்த்து, தன்னிடம் இருக்கும் நல்லுணர்வுகளையும், நல்ல சக்திகளையும் சாகடித்து, பாவம் செய்ய முற்படுவானேயானால் அவன் தன்னுடைய புனிதத் தன்மையை களங்கப்படுத்திக் கொள்கின்றான் என்றே பொருள். இப்படி தன்னுடைய நல்ல இயல்புகளை, சக்திகளை சாகடித்தமைக்கும், தன்னிடம் மிகக் குறைவாக இருந்த பாவம் செய்கின்ற சக்தியை முயன்று வளர்த்தமைக்கும் அவன் இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
இறைவனுக்கு எதிராகச் செய்யப்படும் பாவங்கள், மனிதனுக்கு எதிராக செய்யப்படும் பாவங்கள் என்று இருவகை பாவங்கள் இருப்பதனால் இஸ்லாமும் பாவங்களை இரு வகைகளாகப் பிரிக்கின்றது. அவை பெரிய பாவங்கள், சிறிய பாவங்கள் எனப்படும்.
இறைவனுக்கு எதிராக செய்யப்படும் பாவங்களில் ஒன்றைத் தவிர ஏனைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். ஆனால் பாவத்தை செய்தவர் உண்மையிலேயே மனம் வருந்தி மன்னிப்பிற்காக மன்றாட வேண்டும். திருக்குர்ஆன், இணை வைத்தல் (ஷிர்க்) என்ற பாவத்தை இறைவன் மன்னிக்கவே மாட்டான் எனக் கூறுகின்றது. ஆனால் இறைவன் ஏனைய பாவங்களை மன்னிப்பான். அவன் தான் விரும்பியவர்களுக்கு நிறைவான மன்னிப்பைத் தருவான். இருந்தும் இணை வைப்பவர்கள் தங்கள் பாவத்தை உணர்ந்து திருந்தி மன்னிப்புத் தேடி மன்றாடுவார்களேயானால் இறைவன் அவர்களையும் மன்னிப்பான், தான் விரும்பினால்.
மனிதர்களுக்கு எதிராக செய்யப்படும் பாவங்களை பொருத்தவரை, அந்தப் பாவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பாவம் செய்தவர்களை மன்னித்தால் மட்டுமே இறைவனும் (அவன் விரும்பினால்) மன்னிப்பான். அல்லது பாவம் செய்தவர், இழப்பிற்குள்ளானவருக்கு வேண்டிய நஷ்டஈடு செய்தால் அல்லது தண்டனையை அனுபவித்தால், இறைவனால் மன்னிக்கப்படலாம்.
முடிவாக, பாவம் என்பது நாமாக முயன்று தேடிக் கொள்வதேயன்றி, நம்மோடு பிறப்போடு ஒட்டிக்கொண்டு வருவதல்ல. அது சில முயற்சிகளின் முடிவேயன்றி தானாக நிகழ்வதில்லை. அது தவிர்க்க முடியக் கூடியதே அல்லாமல், தவிர்க்க முடியாததல்ல.
பாவம் என்பது இறைவனின் இணையற்ற சட்டத்தை மீறுவதேயாகும். தன்னுடைய இயற்கையான இயல்பால் தூண்டப்பட்டு, தான் முயன்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தன்னால் கட்டுப்படுத்த முடியாத சில உணர்வுகளால் உந்தப்பட்டு, (பாவம்) எதையேனும் செய்து விடுவானேயானால் அது இஸ்லாத்தில் பாவம் எனக் கருதப்பட மாட்டாது.
ஆனால் மனிதன் தன்னை பாவங்களிலிருந்து காத்துக் கொள்ளுகின்ற சக்தியை இறைவனிடமிருந்து பெற்றே இருக்கின்றான். இல்லையேல் இறைவன் எப்படி மனிதனை அவன் செய்கின்ற பாவங்களுக்கு பொறுப்பாக்க முடியும்? நன்மைகளை செய்கின்ற சக்தியை மனிதனுக்கு மிகையாக தந்திருப்பதாலும், பாவம் செய்வதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளுகின்ற சக்தியை மனிதனுக்குத் தந்திருப்பதாலும், எது பாவம், எது தவறு, எது சரியானது என்பனவற்றை எடுத்துச் சொல்லி இருப்பதாலுமே இறைவன் மனிதன் அத்துமீறி செய்கின்ற பாவங்களுக்கு மனிதனை பொறுப்பாக்குகின்றான் – தண்டிக்கின்றான்.