நாம் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதிலிருந்து நீங்குவது எப்படி?

நாம், ஷிர்க்கில் மூன்று வகைகளைத் தவிர்ப்பதைக் கொண்டல்லாமல், அல்லாஹ்வுக்கு இணைவைப்பதிலிருந்து நீங்கியவர்களாக ஆகமாட்டோம்.

இரட்சகனு (அல்லாஹ்வு)டைய செயல்களில் இணைவைத்தல்:-

படைக்கக் கூடியதாகவோ, நிர்வகிக்கக் கூடியதாகவோ அல்லாஹ்வுடன் வேறெவரும் இருப்பதாக நம்புதல். இந்த நம்பிக்கை, அல்லாஹ் உலக நிர்வாகங்களில் சிலவற்றை சில அவுலியாக்களிடம் ஒப்படைத்துள்ளதாக, சில சூபிய்யாக்கள் நம்புவது போன்றாகும். இந்த நம்பிக்கை இஸ்லாத்துக்கு முன்னிருந்த முஷ்ரிக்குகளிடம் கூட இருந்ததில்லை.

‘நிச்சயமாக அல்லாஹ்வுக்கு சில அடியார்கள் இருக்கின்றனர். அவர்கள் ஏதாவதொன்றை நோக்கி ‘ஆகு’ என்று சொன்னால், அது ஆகி விடும்’ என்று ஒரு சூபி சொல்லுகிறார். அல்காபி பி-ர்ரத்தி அலல்-வஹ்ஹாபி என்ற பெயருடன் அந்த சூபி இயற்றிய நூலொன்றில் இதனைக் கூறுகிறார். இவருடைய கூற்றை குர்ஆன் பொய்யாக்குகின்றது.

“என்னே! அவனது (அல்லாஹ்வினது) ஆற்றல்! அவன் யாதொரு பொருளை (ப் படைக்க)க் கருதினால், அவன் கட்டளையிடுவதெல்லாம் ‘ஆகுக’ எனக் கூறுவதுதான் (தாமதம்) உடனே அது ஆகிவிடும்” (36:82)

“படைத்தலும், (அதன்) ஆட்சியும் அவனுக்குடையதல்லவா?” (7:54)

வணக்கத் (இபாதத்)திலும் துஆவிலும் இணைவைத்தல்:-

இது, அல்லாஹ் அல்லாத நபிமார்கள், நல்லடியார்கள் போன்றோருக்கு வழிபட்டு, அவர்களிடம் துஆக் கேட்பதாகும். இந்த வணக்கம் அவர்களைக் கொண்டு இரட்சிப்புத் தேடுதல், இன்பத்திலும் துன்பத்திலும் அவர்களிடம் பிரார்த்தித்தல் போன்றாகும்.

கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த முஸ்லிம் உம்மத் (சமுதாயத்)தில் அதிகமானவர்களுடைய பெரும்பாவங்களை, இந்த(க் குருட்டு) நம்பிக்கையை உறுதிப் படுத்தக்கூடிய சில மஷாயிகுகள் ‘வஸீலா’ என்ற பெயரைக் கொண்டு பொறுப்பேற்பதாகக் கூறுகின்றனர். ‘வஸீலா’ என்றால் அல்லாஹ்விடத்தில், ஒரு துணையைக் கொண்டு கேட்பதாகும் என்றும் கூறுகின்றனர். தம்மை அவ்வாறான துணைவர்கள் என்று நம்பச் செய்துள்ளார்கள். அப்பாவி மக்களும் அதனை நம்பியுள்ளனர்.

‘அல்-மதத்’ யாரஸூலல்லாஹ்! (உதவியளிக்கும் ரஸூலுல்லாஹ்வே!) யாமுஹ்யித்தீன்! (முஹ்யித்தீனே!) யா-பதவி! (பத(DHA)வியே!) என்றெல்லாம் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுவதற்கு அந்த மஷாயிகுகள் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

இந்த வேண்டுதல், அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வணக்கம் புரிவதாகும். இது ஒரு துஆ. ‘துஆ என்பது வணக்கமாகும்’ (திர்மிதி). வணக்கத்தை அல்லாஹ் அல்லாத எவருக்கும் புரியலாகாது. அல்லாஹ் அல்லாத எவரிடமும் உதவி தேடக்கூடாது. இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

“(அல்லாஹ்) பொருள்களையும் மக்களையும் தந்து உங்களுக்கு உதவி புரிவான்” (71:12)

தீர்ப்பளிக்கின்றவனோ, அல்லது தீர்ப்பளிக்கப்படுகின்றவனோ அல்லாஹ்வுடைய சட்டம் பொருத்தமற்றது என்று கருதுவானென்றால் அல்லது அல்லாஹ்வுடைய சட்டம் அல்லாததைக் கொண்டு தீர்ப்பளிப்பதை ஆகுமாக்கினால், இது ஆட்சியிலுள்ள வழிபாட்டில் (இபாதத்தில்) இணைவைப்பதாகும். இதுகூட ஷிர்க்கைச் சேர்ந்ததே!

அல்லாஹ்வுடைய ஸிபத்துகளில் இணைவைத்தல்:-

அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான மறைவானவற்றைப் பற்றிய அறிவு போன்ற சில பண்புகள், நபிமார்கள் அவுலியாக்கள் போன்றோருக்கு இருப்பதாக நம்புதல், ஸிபத்துகளில் இணைவைப்பதாகும். இந்த வகை சூபியாக்களிடமுமவர்களைப் போன்றவர்களிடமும் இருக்கின்றன. புர்தாவை இயற்றிய ‘பூஸரி’ அவர்கள் ஒரு பாடலில் கூறுவது இந்த வகையான ஷிர்க்குக்கு ஒரு சான்றாய் அமைந்துள்ளதைக் காணலாம்.

‘நபியே! இம்மையும் அதன் சக்களத்தி (மறுமை)யும் உங்களது கொடையாகும். ‘லவ்ஹுல் மஹ்பூழ்’ அல்லாஹ்வுடைய கலம் ஆகியவை உங்களுடைய அறிவிலுள்ளதாகும்’.

கவிஞர் இந்தப்பாடலில் ‘துன்யா’ (இம்மை) என்ற சொல்லைத் தொடர்ந்து ‘ளர்ரத்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். அந்தச் சொல்லின் சரியான அர்த்தம் ஒரு கணவன் முதலாவது மனைவி இருக்கும்போது மணக்கும் இரண்டாவது மனைவி என்பதாகும். இம்மையை முதலாவது மனைவி போலவும், மறுமையை இரண்டாவது மனைவி போலவும் கவிஞர் கற்பனை செய்து பாடியுள்ளார். எனவே இங்கு ‘ளர்ரத்’ என்ற சொல்லுக்கு மறுமை என்பதே பொருளாகும்.

அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான சில அதிகாரங்கள் நபியவர்களுக்கும் உண்டு என்பதாக கவிஞர் மிகைப்படுத்திக் கூறியுள்ளார். இது ஷிர்க்காகும்.

நபி (ஸல்) அவர்களை (அவர்களுடைய மௌத்துக்குப் பின்னால்) விளிப்பான நிலையில் கண்டதாகக் கூறுகின்ற தஜ்ஜால் (குழப்பக்காரர்)களுடைய வழிகேடும் இந்த வகையைச் சேர்ந்ததாகும்.

மறைவான பல விஷயங்களை நபியவர்களிடம் கேட்கின்றனர். இவர்களுடைய சில விவகாரங்களை நபியவர்கள் நிர்வகிக்க வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். குர்ஆன் சொல்லுகின்றவாறு நபியவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இப்படியானவற்றை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

“(நபியே!) நீர் கூறும்: அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்து கொள்ள எனக்குச் சக்தியில்லை. நான் மறைவானவற்றை அறிய முடியுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன். யாதொரு தீங்குமே என்னை அணுகியிராது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும் மூமின்களுக்கு நன்மாராயங் கூறுபவனுமேயன்றி வேறில்லை” (7:188)

இவ்வுலகில் உயிருடனிருக்கும்போதே மறைவானவற்றை அறிய முடியாதவர்களாக நபியவர்கள் இருந்தார்களென்றால், மரணத்துக்குப் பின் அவற்றை எவ்வாறு அறியமுடியும்?

ஓர் அடிமைப்பெண் ‘எங்களிடத்தில் ஒரு நபி இருக்கிறார். நாளை என்ன நடைபெறும் என்பதையும் அவர் அறிவார்’ என்று ஒரு பாடலைப் படித்தாள். இதனைச் செவியுற்ற நபியவர்கள் இவ்வாறு படிப்பதைத் தடை செய்தார்கள்’ ஆதாரம்: புகாரி.

அல்லாஹ் சிலவேளை நபிமார்கள் ரஸூல்மார்களுக்கு மறைவான சிலவற்றை அறிவித்துக் கொடுப்பான். அவனால் அறிவித்துக் கொடுக்கப்பட்டதன்றி வேறெதுவும் அவர்களுக்குத் தெரியாது. இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

“(அல்லாஹ்வாகிய) அவன்தான் இரகசியங்களை நன்கறிந்தவன். அவனுடைய இரகசியங்களை, அவன் ஒருவருக்கும் வெளிப்படுத்துவதுமில்லை; ஆனால் (தன்னுடைய) தெரிந்தெடுத்த தூதருக்குத் தவிர. (அதனை அவன் அவருக்கு அறிவிக்கக் கூடும். அவன் அறிவிக்கும் சமயத்தில்) நிச்சயமாக அவன் அவருக்கு முன்னும் பின்னும் (ஒரு மலக்கைப்) பாதுகாவலராக அனுப்பி வைக்கிறான்” (72:26,27)

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.