அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:
“மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகின்றது. அதனைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்; அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்களென) அழைக்கின்றீர்களோ, அவையாவும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும், ஓர் ஈயைக் கூட சிருஷ்டிக்க முடியாது. (ஈயை சிருஷ்டிப்பதென்ன?) ஓர் ஈ அவர்களுடைய யாதொரு பொருளை எடுத்துக் கொண்ட போதிலும் அதனிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவற்றால் முடியாது. (ஏனென்றால், அவற்றைத் தெய்வங்களென) அழைப்போரும், அவர்களால் தெய்வங்களென அழைக்கப்படுபவர்களும் பலஹீனமானவர்களே!” (22:73)
கஷ்டத்திலும் துன்பத்திலும் உங்களுக்கு உதவ வேண்டும் என நீங்கள் அழைக்கும் அவுலியாக்கள் அதனைச் செய்ய சக்தியற்றவர்கள் என்பதை ஓர் உதாரணத்தின் மூலம் எல்லா மனிதர்களும் கேட்கக் கூடியவாறு அல்லாஹ் கூறியுள்ளான். அவுலியாக்களான அவர்களோ, அல்லாஹ்வுடைய படைப்புகளிலிருந்து ஓர் ஈயைத் தானும் படைக்கச் சக்தியற்றவர்கள்.
மரணித்து அடக்கம் செய்யப்படிருக்கும் அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் உணவிலிருந்தோ, அல்லது பானத்திலிருந்தோ ஏதேனுமொன்றை அந்த ஈ அபகரித்துக் கொண்டால் அதனை மீட்டு எடுக்கவும் அவர்களால் முடியாது. இவர்களுடைய பலஹீனத்துக்கு இதுவே ஓர் அத்தாட்சியாகும்.
ஈயோ பலஹீனமான ஒன்று. இதனுடைய சக்தியை விட மரணித்த அவர்கள் பலஹீனமானவர்கள். நீங்கள் எவ்வாறுதான் அவர்களை உதவிக்கு அழைப்பீர்கள்?
அல்லாஹ் அல்லாத நபிமார்களையும், அவுலியாக்களையும் உதவிக்கு அழைக்கின்றவர்களுக்கு எதிரான மிகக் கடுமையான ஒரு மறுப்பாகவே இந்த உதாரணம் அமைந்துள்ளது.
அல்லாஹ் அல்லாதவர்களை உதவிக்கு அழைப்பவர்களுக்கு மற்றுமொரு உதாரணத்தை அல்லாஹ் கூறுகிறான்.
“(நாம் பிரார்த்தனை செய்து) அழைக்கத் தகுதியுடையோன் அவனே. (அல்லாஹ்தான்) எவர்கள் அவனையன்றி (மற்றைய பொய்யான தெய்வங்களைப் பிரார்த்தை செய்து) அழைக்கின்றார்களோ அவர்களுக்கு, அவை யாதொரு விடையும் அளிக்கா.
(அல்லாஹ்வையன்றி மற்றவற்றை அழைப்போரின் உதாரணம்;) தண்ணீர் (தானாகவே) தன்வாயில் சென்றுவிட வேண்டுமென்று கருதி தன் இரு கைகளையும் (நீட்டி அள்ளிக் குடிக்காமல்) விரித்துக் கொண்டே இருப்பவனைப் போல் இருக்கிறது. (அதனை அவன் தன் கையைக் கொண்டு அள்ளிக் குடிக்கும் வரையில் அவனுடைய) வாயை அது அடைந்து விடாது. (பொய்யான தெய்வங்களிடம்) நிராகரிப்போர் செய்யும் பிரார்த்தனை (இத்தகைய) வழிகேடாகவே இருக்கிறது” (13:14)
‘துஆ’ என்றால் அது ‘இபாதத்’ (வணக்கம்) என்றும், அது அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் இந்த (13:14) வசனம் தெளிவுபடுத்துகிறது. (இணைவைக்கின்ற) இவர்கள் தான், அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கின்றனர். அவர்களால் இவர்கள் எந்தப்பயனையும் அடையப் போவதில்லை. எதனைக் கொண்டும் இவர்களுக்கு அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள். இதிலே அவர்களுக்கு உதாரணமாவது, கிணற்று ஓரத்தில் நின்று கொண்டு கையை நீட்டாமலேயே அதிலிருந்து கையினால் தண்ணீரைக் குடிக்க முயற்சிப்பது போன்றதாகும். இதற்கு ஒருகாலும் அவன் சக்திபெற மாட்டான் என்று ஓர் உதாரணத்தின் மூலம் அல்லாஹ் விளக்குகிறான்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுவதை இப்னுகதீர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு பதிந்து வைத்துள்ளார்கள். ‘அவன் தண்ணீரை நோக்கி தன்பால் வருமாறு அழைத்துச் சாடைகாட்டுபவனைப் போன்றவனாவான். அது அவனிடம் வரவே மாட்டாது’.
பின்பு அல்லாஹ், தன்னல்லாதவர்களை உதவிக்கு அழைப்பவர்கள் மீது குஃப்ரை (இறைநிராகரிப்பை)க் கொண்டு தீர்ப்பளித்துள்ளான். ‘நிராகரிப்போர் செய்யும் பிரார்த்தனை வழிகேடாகவே இருக்கின்றது’ என்று அல்லாஹ் கூறுவதற்கமைவாக அவர்கள் வழிகேட்டிலேயே இருக்கின்றனர்.
முஸ்லிம் சகோதரனே! அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பதிலிருந்து நீ விலகிக் கொள்வாயாக! அவ்வாறு அழைத்தால் நீ நிராகரித்து வழிகேட்டிலாகி விடுவாய். ஏகத்துவக் கொள்கையுள்ள மூமினாக நீ ஆகுவதற்காக, யாவற்றின் மீதும் சக்தியுள்ளவனான அல்லாஹ்வை மட்டுமே பிரார்த்தனை செய்து அழைப்பாயாக!
இன்ஷா அல்லாஹ் தொடரும்.