54. உண்மையாளரின் உயர் அந்தஸ்து!
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் உண்மையே பேசிக் கொண்டிருகிறான். இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!
மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக் கொண்டிருக்கிறான். இறுதியில் அல்லாஹ்விடத்தில் மகாப் பொய்யன் என்று எழுதப்படுகிறான்! (நூல்: புகாரி, முஸ்லிம்)
தெளிவுரை
இந்நபிமொழி, ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள அறிவிப்பின்படி – ‘உண்மையைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று தொடங்குகிறது. உண்மை பேசுவதன் சிறப்பு, அதன் நல்முடிவு குறித்து இந்நபிமொழி எடுத்துரைக்கிறது. பொய் பேசுங்கள். அப்பொழுது தான் உலகில் வாழ முடியும். பொய் பேசினால்தான் எதுவொன்றிலும் நல்ல லாபம் ஈட்டலாம் என்று சிலர் சொல்லலாம்! ஆனால் பொய் பேசிச் சம்பாதிக்கும் பணத்தில் எந்த அபிவிரித்தியும் கிடையாது. பொய் பேசிச் சம்பாதிக்கும் செல்வம் தற்காலிகமானது – சீக்கிரம் அழியக் கூடியது என்பது மட்டுமல்ல, நம்மை நீடித்த அழிவில் ஆழ்த்தக் கூடியதும் கூட! உண்மை பேசுவது தான் நிலையான லாபத்திற்கும் நன்மைக்கும் வழிவகுக்கக்கூடியது!
முன்னர் கூறியதுபோன்று – பொய்யான சொல் என்பது போல் பொய்யான செயல் என்றும் கூறப்படும்!. பொய்யான செயலுக்கு நயவஞ்சகனின் செயல் எடுத்துக்காட்டாகும். நயவஞ்சகன் தன்னை ஓர் விசுவாசியென வெளிக்காட்டிக் கொள்கிறான். எல்லோருடன் சேர்ந்து அவனும் தொழுகிறான். நோன்பு நோற்கிறான். செல்வத்தை எடுத்து இறைவழியில் செலவும் செய்கிறான்! அவன் ஹஜ் செய்வதைக் கூட காணலாம்!
அவனுடைய இந்தச் செயல்களைக் காண்போர் அவற்றின் வெளிரங்கத்தைப் பார்த்துப் புகழ்வார்கள்! ஆனால் அவை இறைவழிபாடாக ஒருபோதும் ஆகமாட்டா! ஏனெனில் அவன் வழங்குகிற தர்மமும் நிறைவேற்றுகிற வழிபாடுகளும் அவனது அகத்தின் நிலைக்கு மாறுபடுகிறது! ஏனெனில் அவன் இறைவனை விசுவாசம் கொள்ளவில்லை என்பதே உண்மை! எனவே அவனும் பொய்யன்தான்! அவனுடைய வணக்க வழிபாடுகளும் பொய்யானவைதான்! பிறகு நபி (ஸல்) அவர்கள் உண்மையின் படிப்படியான நல் விளைவுகளை இவ்வாறு விளக்கித் தருகிறார்கள்!
‘நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயல்புரிய வழிகாட்டுகிறது. புண்ணியச்செயல் புரிவது சுவனத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையே பேசுகிறான். இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!’
புண்ணியமான செயல்கள் என்றால் நன்மையை – நற்கூலியை ஈட்டித் தருகிற செயல்கள். அத்தகைய செயல்களை நிறைவேற்றுவது மனிதனைச் சுவனத்தின் பக்கம் இட்டுச்செல்லும்! மறுவுலக வாழ்க்கையில் சுவனத்தை அடைய வேண்டும் என்பதுதானே இலட்சியங்களுக்கெல்லாம் இலட்சியம்! இதனால்தான் ஒவ்வொருவரும் அல்லாஹ்விடம் சுவனத்தைக் கேட்குமாறும் நரகத்தை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறும் கட்டளை இடப்படுகிறது!
அல்லாஹ் கூறுகிறான்: ‘(மறுமை நாளில்) எவன் நரக நெருப்பில் இருந்து காப்பாற்றப்பட்டு சுவனத்தில் நுழைவிக்கப்படுகிறானோ அவனே உண்மையில் வெற்றி பெற்றவன் ஆவான்! இவ்வுலக வாழ்வென்பது ஏமாற்றக்கூடிய அற்ப இன்பமேயன்றி வேறில்லை!’ (3:185)
நபியவர்கள் தொடர்ந்து சொல்கிறார்கள்: ஒருமனிதன் உண்மையே பேசிக் கொண்டு வருகிறான். இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!
மற்றோர் அறிவிப்பில், ஒரு மனிதன் தொடர்ந்து உண்மை பேசி வருகிறான். மேலும் உண்மையே பேசவேண்டுமென்று துடிக்கிறான். இறுதியாக அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான் என்று உள்ளது!
கருத்து இதுதான்: உண்மையே பேசிவர வேண்டும். அதில் முழுக்கவனமும் நாட்டமும் வேண்டும். அப்பொழுதுதான் உண்மையாளன் என்று அவனை அல்லாஹ் ஒப்புக்கொள்வான்! ‘உண்மையாளர்’ எனும் நிலை, அல்லாஹ்வின் பேரருள் பொழியப்பட்ட மேன்மக்களின் வரிசையில் இரண்டாவது அந்தஸ்தில் உள்ளது. அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்:
‘அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படிகிறவர்கள் யாரோ அவர்கள், அல்லாஹ் அருள் புரிந்துள்ள நபிமார்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள், உத்தமர்கள் ஆகியோருடன் இருப்பர்!‘(4: 69)
உண்மையாளர்கள் அனைவரினும் சிறந்தவர் – மகத்துவமிக்கவர் யார் எனில் இறைவிசுவாசத்தில் -நபியவர்களை உண்மைப்படுத்துவதில் சிறந்து விளங்குபவரே ஆவார்! அத்தகைய உயர் சிறப்புக்குரியவர்கள் நபித்தோழர் அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள்தாம்! ஆம்! நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தபொழுது அதை ஏற்பதில் அனைவருக்கும் முன்னிலையில் இருந்தவர்கள் அவர்கள்தாம்! அதில் அவர்களுக்கு எவ்வித தயக்கமோ கலக்கமோ இல்லை! அன்றிலிருந்து இறைவிசுவாசத்தில் -அதன் உறுதிப்பாட்டில் அபூ பக்ர் (ரலி) அவர்கள் தன்னிகரற்றவர்களாய்த் திகழ்ந்தார்கள்!
இதோ! நபிகளார் (ஸல்) அவர்கள் தாம் கண்டுவந்த மிஃராஜ் எனும் விண்ணேற்ற நிகழ்ச்சியை மக்களிடையே அறிவித்தபொழுது எதிரிகள் அதைப் பொய் என்று தூற்றினர். முஹம்மதே! ஓரிரவிலேயே எப்படி இங்கெல்லாம் சென்று வந்தீர்? மக்காவில் இருந்து பைத்துல் மகதிஸ் வரை ஒரே நாளில் எப்படி பயணம் சென்று திரும்பிவர முடியும்? பிறகு அங்கு இருந்து வானுலம் ஏறிச் சென்றதாகவும் சொல்கிறீரே! இது எப்படி சாத்தியமாகும்? என்று ஏளனமாகக் கேட்டனர்! அந்த உடனேயே அபூ பக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களிடம் ஓடோடிச் சென்று, உங்கள் நண்பர் சொல்வதைக் கேட்டீர்களா? இப்படி இப்படியெல்லாம் சொல்கிறாரே அதையுமா நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்? என்று இடைமறித்துக் கேட்டு வழியிலேயே மடக்கப் பார்த்தார்கள்! ஆனால் அதற்கு அபூ பக்ர் (ரலி) அவர்கள், ‘என் அன்புத் தோழர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு மொழிந்தார்கள் எனில், அது உண்மைதான்’ என்று உறுதியுடன் – அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வண்ணம் பதில் அளித்தார்கள்! அப்பொழுதான் ஸித்தீக் உண்மையாளர் எனும் சிறப்புப் பட்டத்தை அபூபக்ர் அவர்களுக்கு உறுதிப்படுத்தினார்கள் நபியவர்கள்!
பொய் பேசுவதன் தீய விளைவு என்ன?
‘பொய் என்பது தீமைபுரிய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது! – மற்றோர் அறிவிப்பு, பொய்யைக் குறித்து உங்களை எச்சரிக்கை செய்கிறேன் என்று தொடங்குகிறது!’
ஃபுஜூர் (தீமை செய்தல்) எனும் அரபி வார்த்தையின் அகராதிப் பொருள், அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் – அதை மீறிச் செயல்படுதல் என்பதாகும். தீமைகளிலேயே மிகவும் கொடுமையானது இறைவனை நிராகரிப்பதுதான்! அவன் மீது விசுவாசம் கொள்ள மறுப்பதுதான்! குர்ஆன் ஓரிடத்தில் குறிப்பிடுகிறது:
‘அவர்கள்தான் இறைவனை நிராகரிக்கக் கூடியவர்கள். தீமைகள் செய்பவர்கள்!‘ (80 : 42)
பொய் பேசிக்கொண்டிருப்பவன் அல்லாஹ்விடத்தில் மகாப்பொய்யன் என்று எழுதப்பட்டு விடுகிறான் என்று இந்நபிமொழியில் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டிருப்பதால் பொய் பேசுவது ஹராம் -தடைசெய்யப்பட்டது மட்டுமல்ல, அறிஞர்கள் சிலர் கூறுவதுபோன்று – பெரும் பாவங்களுள் ஒன்றாகவே அது கணிக்கப்பட்டுள்ளது!
மிகக்கொடுமையான பாவமெனும் பொய் எது எனில், இன்று சிலரிடம் உள்ளதே- அதாவது, மக்களை வீணாகச் சிரிக்கவைக்கும் நோக்கத்துடன் பொய்களை அள்ளி வீசுகிறார்களே அதுதான்! மற்றொரு நபிமொழியில் இது குறித்து கடும் எச்சரிக்கை வந்துள்ளது. அது வருமாறு:
‘அத்தகைய மனிதனுக்கு நாசம் உண்டாவதாகுக! அவன் பேசும்பொழுது பொய்யுரைக்கிறான். அதன் மூலம் மக்களைச் சிரிக்க வைப்பதற்காகவே (இப்படிச் செய்கிறான்!) அத்தகைய மனிதனுக்கு நாசம் உண்டாவதாக!’ (அபூ தாவூத், திர்மிதி)
பாருங்கள்! பொய் பேசுவது பற்றி எவ்வளவு கடுமையாக எச்சரிக்கை செய்கிறார்கள் நபியவர்கள்! அதேநேரத்தில் அதனை எவ்வளவு லேசாகக் கருதுகிறார்கள் மக்கள்!
மற்றொரு கடுமையான பொய் ஒன்றும் உண்டு! அதுதான் பிறரின் உரிமைகளை அபகரித்து உண்பதற்காகப் பொய் பேசுவது! எடுத்துக் காட்டாக, பிறருக்கு வழங்க வேண்டிய உரிமையை ஒருவன் மறுப்பது, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் எதுவும் தர வேண்டியதில்ல என்று பொய் சத்தியம் செய்வது! அல்லது நீ இவ்வளவு தொகை என்னிடம் கடன் வாங்கியிருந்தாய்., அதனை இன்னும் தரவில்லை என்று பொய் சத்தியம் செய்து பிறரின் சொத்தை அபகரிக்கப்பது! இது குறித்து கடுமையாக எச்சரிக்கை செய்யும் நபிமொழி வருமாறு:
‘ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தை (அநியாயமாகப்) பறித்துக் கொள்வதற்காக (ஒருபிரமாண வாக்கு மூலத்தின்போது) துணிவுடன் யார் பொய் சத்தியம் செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தான் அவனை மறுமை நாளில் அவர் சத்திப்பார்!’ (நூல்: புகாரி)
கேள்விகள்:
1) உண்மை, பொய் இவை பற்றிய விளக்கம் எழுதவும்!
2) உண்மையாளர் பெறும் உயர் அந்தஸ்து என்ன? அதற்கு அளிக்கப்பட்ட உதாரணம் என்ன?
3) பொய்களின் வகைகளை எழுதவும்.
4) பொய் பேசுபவன் அடையும் தீய கதி பற்றி விவரிக்கவும். அது பற்றி வந்துள்ள ஒரு நபிமொழியை எழுதவும்.
5) சொல் – செயல் இவற்றில் பொய் மற்றும் உண்மை அமைவதெப்படி? உதாரணங்களுடன் எழுதவும்.
6) அபூ பக்ர் (ரலி) அவர்கள் ஸித்தீக் – உண்மையாளர் எனும் சிறப்புப் பட்டத்தைப்பெற்றது எப்பொழுது? மிஃராஜின் போது தான் வழங்கப்பட்டதா?
7) அறிவிப்பாளர் வரலாறு சுருக்கமாக எழுதவும்.