ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4)

உண்மை

அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் உண்மையாளர்களுடன் இணைந்திருங்கள்!’ (9:119)

வேறோரிடத்தில், ‘…உண்மை பேசக்கூடிய ஆண்களும் பெண்களும்…(33:35)

இன்னோர் இடத்தில், ‘அல்லாஹ்விடம் அவர்கள் அளித்த வாக்குறுதியில் உண்மையாளர்களாய் அவர்கள் நடந்திருந்தால் அது அவர்களுக்கு நல்லதாய் இருந்திருக்கும்!’ (47:21)

தெளிவுரை

அகராதியில் உண்மை (ஸித்க்) எனும் சொல்லின் பொருள், ஒருசெய்தி யதார்த்தத்திற்கு ஒத்திருத்ததல் என்பதாகும். நீங்கள் அறிவிக்கும் செய்தி யதார்த்தத்தில் நடைபெற்றிருந்தால் அது உண்மைச் செய்தியே! எடுத்துக்காட்டாக, இன்று வெள்ளிக்கிழமை என்று நீங்கள் அறிவிக்கும்பொழுது யதார்த்தத்தில் அது வெள்ளிக்கிழமையாக இருந்தால் அது உண்மைச் செய்தி!

இது சொல்லால் வெளிப்படுத்தும் செய்தியின் நிலை!

இதேபோன்றுதான் செயல் மூலம் வெளிப்படுத்தும் செய்தியும்! அதாவது ஒரு மனிதனின் செயல் யதார்த்தத்திற்கும் அவனது உள்ளத்து எண்ணத்திற்கும் ஒத்திருந்தால் அது உண்மையாகும்! எனவே முகஸ்துதிக்காகச் செயல்படுபவன் உண்மையாளன் அல்லன். ஏனெனில் அவன் தன்னை ஒரு வணக்கசாலியாகக் வெளிக்காட்டுகிறான். ஆனால் அவனது உள்ளத்து நிலை அதற்கு முரண்படுவதால் உண்மையான வணக்கசாலியாக அவன் திகழமுடியாது! 

இறைவனுக்கு இணைகற்பிப்பவனும் அதாவது சிலைவணக்கம் செய்பவனும் உண்மையானவன் அல்லன். ஏனெனில் வெளித்தோற்றத்தில் அவன் இறைவனை வணங்குவதுபோல் தெரிகிறது! ஆனால் யதார்த்தத்தில் அவன் வணங்குவது இறைவனை அல்ல!

நயவஞ்சகனும் உண்மையாளன் அல்லன். ஏனெனில் இறை விசுவாசம் கொண்டிருப்பது போல் வெளிக்காட்டிக் கொள்கிறான். ஆனால் அவன் இறை விசுவாசம் கொள்ளவில்லை!

தொழுகை, நோன்பு போன்ற வணக்கவழிபாடுகளில் பித்அத் எனும் நூதனத்தை அனுஷ்டிப்பவனும் உண்மையாளன் அல்லன். ஏனெனில் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி வணக்க வழிபாடு செய்வதாக அவன் வெளிக்காட்டிக் கொள்கிறான். ஆனால் யதார்த்தத்தில் நபியவர்களை அவன் பின்பற்றவில்லை!

உண்மைதான் இறைவிசுவாசிகளின் அடையாளம். அதன் எதிர்ப்பதமாகிய பொய் என்பது நயவஞ்சகர்களின் அடையாளம்!

உண்மையின் சிறப்பு குறித்தும் அதனைப் பேணி வாழ்வதால் கிடைக்கும் நன்மை, உயர்வு ஆகியவை குறித்தும் பல வசனங்களை இமாம் நவவி (ரஹ்)அவர்கள் எடுத்துரைத்தார்கள். அவற்றுள் ஒன்றுதான் ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் உண்மையாளர்களுடன் இணைந்திருங்கள்!’ (9 : 119) என்பதும்.

இந்த வசனம் – கஅப் பின் மாலிக் (ரலி)அவர்களும் அவர்களின் இரு தோழர்களும் தபூக் யுத்தத்தில் கலந்துகொள்ளாமல் பின்தங்கியிருந்த பொழுது இறக்கியருளப்பட்டதாகும். கஅப் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸும் அதன் கீழ் அந்த வரலாற்றின் விரிவான விளக்கமும் முன்னர் தௌபா – பாவமீட்சியின் பாடத்தில் சென்றுள்ளது!

This entry was posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) and tagged . Bookmark the permalink.